ஐந்து ஆறைவிடப் பெரியது 12

திரு.முகில்

ழைக்காடுகள். பூமியில் நாம் வாழுவதற்குத் தேவையான ஆக்ஸிஜனை அதிக அளவு (சுமார் 28%) உற்பத்தி செய்பவை மழைக்காடுகளே. உலகின் ஒட்டுமொத்தப் பரப்பளவில் மழைக்காடுகள் சுமார் ஆறு சதவிகிதமே இருக்கின்றன. அந்த ஆறு சதவிகிதத்தில்தான் உலகின் பாதிக்கும் மேற்பட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன. புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுவது இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

மழைக்காடுகளை உலகின் உணவுக்கிடங்கு என்றும் சொல்லலாம். மனித குலத்துக்குத் தேவையான மருந்துகளில் 25% மழைக்காடுகளில் இருந்தே பெறப்படுகின்றன. பூமியின் நீர்ச்சுழற்சியினைச் சமநிலைப்படுத்துவதும் இந்தக் காடுகளே. இந்தக் காடுகளில் விழும் இலையானது தரையில் பெரிய பஞ்சு போன்ற அமைப்பாகச் செயல்பட்டு, நீரை உறிஞ்சி, ஓடைகளையும், அவற்றிலிருந்து ஆறுகளையும் உருவாக்குகின்றன. இவையே உலகின் நன்னீர் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றன.

அமேசான், உலகின் மிகப்பெரிய மழைக்காடு. காங்கோவில், உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு அமைந்துள்ளது. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வளமான மழைக்காடுகள் அமைந்துள்ளன. இந்த மழைக்காடுகளை வளப்படுத்துவதிலும் பெருக்குவதிலும் விலங்குகளில் யானைகளின் பங்கு மிக முக்கியமானது. யானைகள் போடும் சாணத்தின் மூலமாக விதைகள் எங்கெங்கும் பரவி வனத்தை வளர்த்தெடுக்கின்றன. அதேபோல பறவைகளில் இருவாச்சி என்ற Hornbill, தம் எச்சங்களின் மூலமாக மழைக்காடுகளை உயிர்ப்பிக்கின்றன. பெருகச் செய்கின்றன.

பறவைகளே ஓர் இடத்தின் சூழலியல் தன்மையை உரக்கச் சொல்லும் இயற்கையின் தூதுவர்கள். எங்கே ஒரு பறவை இனம் வருவது நின்று போகிறதோ, அல்லது அழிந்து போகிறதோ அங்கே சூழலியல் தன்மை சிதைந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். எங்கே ஒரு பறவை இனம் பல காலம் கழித்து திரும்ப வருகிறதோ, அங்கே மீண்டும் இயற்கையின் சூழல் உயிர் கொள்கிறது என்று பொருள். எந்த மழைக்காடுகளில் இருவாச்சிப் பறவைகள் இயல்பாகப் பெருகி வாழ்கின்றனவோ, அங்கே இந்த பூமிக்கான நீரும் ஆக்ஸிஜனும் இன்ன பிற வளங்களும் நிறைந்திருக்கின்றன, அங்கே இயற்கைச் சூழல் மிக ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உணரலாம்.

ஆம், மனிதர்கள் இல்லாமல் போனாலும் உலகம் அதுபாட்டுக்கு இருக்கும். இருவாச்சிகள் இல்லாமல் போனால் உலகம் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

உலகில் 54 வகை இருவாச்சிப் பறவைகள் இருக்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன. தென்னிந்தியாவில் 4 வகை இருவாச்சிகள் காணப்படுகின்றன.

மலை இருவாச்சி, மலபார் இருவாச்சி, சாம்பல் நிற இருவாச்சி, மலபார் பாத இருவாச்சி ஆகிய இந்த நான்குமே மேற்குத் தொடர்ச்சி மலையையும் மழைக்காடுகளையும் சார்ந்து வாழ்கின்றன. மழைக்காடுகளைக் குறிக்கும் அற்புதமான ஒரு தமிழ்ச்சொல் ‘பொழில்’. மழை பொழியும் காடு என்று பொருள். தென்னிந்தியாவின் பொழிலை பொழிவு பெறச் செய்யும் மலை இருவாச்சி என்ற Great Hornbill பறவையின் வாழ்க்கையைக் கொஞ்சம் வாழ்ந்து பார்ப்போம்.

இருவாச்சி குடும்பப் பறவைகளிலேயே மிகப்பெரியது மலை இருவாச்சி. இதன் ஆயுள்காலம் சுமார் 50 ஆண்டுகள். இதன் தனிச்சிறப்பு நீளமான வளைந்த அலகும், தலைக்கு மேல் அமைந்திருக்கும் குதிரை லாட வடிவ, கவசம் போன்ற தொப்பியும். முதிர்ச்சியடைந்த இருவாச்சிகளுக்கு மட்டும்தான் இந்தத் தொப்பி இருக்கும். அலகும் தொப்பியும் சேர்ந்து பார்க்கும்போது இரண்டு வாய்கள் கொண்ட பறவை போலத் தெரிவதால் ‘இருவாய்ச்சி’ அல்லது ‘இருவாய்க் குருவி’ என்ற பெயர் இதற்கு அமைந்தது. அது பேச்சுவழக்கில் ‘இருவாச்சி’ ஆகிப்போனது.

பறவை இனங்களில் ‘தல’யான மலை இருவாச்சியின் நீளம் சுமார் நான்கு அடி. இறக்கைகளை விரித்த நிலையில் இதன் அகலம் சுமார் ஐந்து அடி. இவை அமைதியான மழைக்காடுகளில் பறக்கையில் இறக்கைகளை அசைக்கும்போது அந்தச் சத்தத்தை நீண்ட தூரத்தில் இருந்து உணர முடியும். சில முறை மட்டும் இறக்கைகளை அசைத்துவிட்டு, நீண்ட தொலைவுக்கு காற்றில் மிதக்கும் இருவாச்சிகள் பறக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

இருவாச்சிகள் தம் வாழ்விடமாக உயரமான மரங்களைத்தான் தேர்ந்தெடுக்கின்றன. இயற்கையான மரப்பொந்துகளில் வாழ்கின்றன. அல்லது மரங்கொத்திகள், மரத்தில் ஏற்கெனவே போட்டு வைத்திருக்கும் துளைகளை இருவாச்சிகள் எடுத்துக் கொள்கின்றன. ‘தம்பி மரங்கொத்தி, வீடு அருமையா இருக்கு. அண்ணன் எடுத்துக்கிறேம்பா!’

ஆண் இருவாச்சிகளின் விழிப்படலம் ரத்தச் சிவப்பாக இருக்கும். பெண் இருவாச்சிகளின் விழிப்படலம் நீலமும் வெள்ளையும் கலந்து இருக்கும். அந்த விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவாகிவிட்டால் போதும். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று இறுதி வரை அந்த இருவாச்சி ஜோடி வாழும். ஆம், இருவாச்சிகளின் காதல் கதை எதையும் தாண்டிப் புனிதமானது.

ஆண் இருவாச்சியானது பெண்ணைக் கவர பழமோ, பூச்சிகளோ, வேறு இரையோ எடுத்து வந்து கொடுக்கும். அதைப் பெண் ஆனது ஏற்றுக் கொண்டால் அங்கே ஓர் ஆனந்த ராகம் ஆரம்பம். பெண் இருவாச்சியானது ஆண் துணையைத் தேர்வு செய்தவுடன், ‘வா, பறக்கலாம்’ என்று குறிப்பால் உணர்த்தும். இரண்டும் காதல் ஜோடியாக வானில் உயர உயர உயரப் பறக்கும். தம் நீண்ட அலகுகளை ஒன்றோடொன்று கவ்விக் கொண்டு கீழ் நோக்கி வேகமாக வரும். அலகுகளால் ஆன அழகான காதல் மொழி! நீயும் நானும் நாம் ஆன பின், நமக்கென வம்சம் வளர்ப்பதுதானே அடுத்த கட்டம். ஒவ்வோர் உயிரினத்தின் வாழ்வியல் நோக்கமும் அதுதானே.

பெண் இருவாச்சி, இனப்பெருக்கக் காலத்தில் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மரப்பொந்தினுள் நுழைந்து விடும். அங்கே தன் இறகுகளை உதிர்த்து மெத்தைபோல ஆக்கிக் கொள்ளும். முட்டைகள் அலுங்காமல் குலுங்காமல் இருக்க இந்த ஏற்பாடு. அடுத்த பல மாதங்களுக்கு பெண்ணானது வெளியே வராது. வந்தாலும் அதனால் பறக்க இயலாது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆண் இருவாச்சி, பொந்தின் வாசலை தனது எச்சில், களிமண், மரச்சிதைவுகள் கொண்டு மூடி விடும். பெண் தனது அலகை வெளியே நீட்டி உணவை வாங்கிக் கொள்ளும் அளவுக்கான ஒரு சிறு துளையை மட்டும் விட்டுவைக்கும். உள்ளிருந்து கழிவுகளை வெளியேற்ற பொந்தின் அடிப்பகுதியில் இன்னும் ஒரு சிறு துளை அமைக்கப்பட்டிருக்கும். சுத்தம் முக்கியம்.

பெண் இருவாச்சி மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். அவற்றை ஒரு மாதம்போல அடைகாக்கும். அப்போது இரை தேடுவதற்கு ஆண் இருவாச்சி மட்டுமே வெளியில் செல்லும். பொறுப்பான குடும்பத்தலைவன். என்னை நம்பி வந்தவளுக்கு நானே எல்லாம். எந்தச் சூழலிலும் அவளைக் கைவிட மாட்டேன்.

எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்காக எந்தக் கஷ்டத்தையும் பொறுத்துக் கொள்வேன். ஆணானது, அடுத்த சில மாதங்களுக்கு கணவனாக, தகப்பனாக, பாதுகாவலனாக எல்லா வேலைகளையும் செவ்வனே செய்யும். ஓய்வையோ உறக்கத்தையோ பொருட்படுத்தாது.

ஒவ்வொரு முறை இரைதேடக் கிளம்புவதற்கு முன்பும், ஆண் இருவாச்சி தன் அலகால் மரத்தில் தட்டித் தட்டி சத்தம் கொடுக்கும். ‘அம்மாடி, நா போய்ட்டு வர்றேன். பத்திரமா இருந்துக்கோ’ என்று அதற்குப் பொருள்.

பெண்ணுக்கு மட்டுமென்றால் ஒரு சில முறை இரை தேடி எடுத்து வந்தால் போதும். குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியே வந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் பலமுறை இரை தேடிச் செல்ல வேண்டும். தன் வயிற்றையும் நிரப்பிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பும் தனது குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா என்று நாலாபுறமும் நிதானமாகப் பார்த்துவிட்டே ஆணானது சிறகுகளை விரிக்கும்.

இருவாச்சிகளின் விருப்பத்துக்குரிய உணவு பழங்கள். ஆல், அத்திப் பழங்கள் அதன் ஆல் டைம் விருப்பம். சுவையான பழங்களைத் தேர்ந்தெடுத்து, சுவையற்ற பழங்களைக் கழித்து விடுவதில் இருவாச்சிப் பறவைகள் கில்லாடிகள். ‘ஒரு நல்ல பழத்தைப் பாத்து எடுக்கத் தெரியுதா’ என்று எந்த ஆணும், பெண் இருவாச்சியிடம் திட்டு வாங்குவதில்லை. எந்தெந்தப் பருவங்களில் என்னென்ன பழங்கள் கிடைக்கின்றனவோ, அவற்றைத் தேடித்தேடி விரும்பி உண்கின்றன. தம் குடும்பத்துக்கும் சேகரித்துச் சென்று ஊட்டுகின்றன. அந்தந்த பருவங்களில் கிடைப்பதை உண்பதே ஆரோக்கியம் என்பதை மனிதனுக்குச் சொல்லாமல் சொல்கின்றன.

இருவாச்சிகள் உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிர்ப்புத்தன்மை கொண்டவை. உடனே முளைக்கும் தன்மை கொண்டவை. இந்த எச்சங்களால்தான் வனத்தில் மரங்கள் பெருகுகின்றன. மழைக்காடுகள் உயிர்ப்புடன் வளர்கின்றன. இப்படியும் சொல்லலாம், தம்மை வாழவைக்கும் மழைக்காடுகளுக்கு இருவாச்சிகள் செய்யும் நன்றிக் கடன் இது. இயற்கையிடம் நன்றி மறந்த ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தான்.

இருவாச்சியின் குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்க மூன்று மாதங்கள் ஆகலாம். அதே சமயத்தில் தாய்ப்பறவைக்கும் உதிர்ந்த இறகுகள் முளைக்க வேண்டும். அதற்குக் கூடுதல் ஊட்டச்சத்து வேண்டும். ஆகவே, ஆண் இருவாச்சியானது பழங்களை மட்டும் பறித்து வராமல் குட்டிப்பாம்புகள், ஓணான், தவளை, வேறு பறவைகளின் குஞ்சுகள், பூச்சிகள் என்று அசைவத்தைத் தேடி கூடுதல் நேரம் உழைக்கும். இறக்கைகள் முளைத்து அவை பறக்கத் தயாராகிவிட்டால் ஆண் இருவாச்சியானது பொந்தின் வாசலை உடைக்கும். இருவாச்சி குடும்பமானது வெளியே வரும். குஞ்சுகளுக்குத் தந்தையும் தாயும் இணைந்து சிறகடிக்கக் கற்றுக் கொடுக்கும். அந்த வனத்தை அறிமுகப்படுத்தும். அவை மகிழ்ச்சியாக வாழும்.

இங்கே ஒரு சோக க்ளைமாக்ஸுக்கான வாய்ப்பு உண்டு. பொந்துக்குள் குடும்பம் இருக்க, இரைதேடிச் செல்லும் ஆண் இருவாச்சியானது திரும்பி வராமலும் போகலாம். காரணம், இயற்கையாக நேரும் ஏதாவது விபத்தில் அதற்கு மரணம் சம்பவிக்கலாம். அல்லது இயற்கையின் எதிரியான மனிதன், இருவாச்சியை வேட்டையாடலாம். ஆம், நீண்ட அலகுக்காகவும், தலைப்பகுதி தொப்பிக்காகவும் இருவாச்சிப் பறவைகளை மனிதன் வேட்டையாடிக் கொல்கிறான். ஆண் இருவாச்சியானது  இறந்து போனால், கூட்டுக்குள் காத்திருக்கும் அதன் இணையும் குஞ்சுகளும் ஒருபோதும் வெளியே வராது. ஆண் வந்து அழைக்கும் வரை அவை அங்கேயே காத்திருக்கும். உணவின்றி. பின்பு உணர்வின்றி அந்தப் பொந்துக்குள்ளேயே மடிந்து போகும்.

ஆக, ஓர் ஆண் இருவாச்சியின் மரணம் என்பது அதன் முடிவு மட்டுமல்ல, ஒரு இருவாச்சி குடும்பத்தின் மரணம். இருவாச்சிகளின் மரணம் என்பது அந்தப் பறவை இனத்தின் முடிவு மட்டும் அல்ல, மழைக்காடுகளின் மரணம். மழைக்காடுகளின் மரணம், இந்த பூமியின் நுரையீரல்கள் செயலிழந்து போனதற்குச் சமம். (எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் எழுதியிருக்கும் முகப்பில் இருவாச்சி புகைப்படத்துடன் கூடிய ‘மழைக்காடுகளின் மரணம்’ என்ற நூலை அனைவரும் வாசிக்கச் சொல்லி இங்கே பரிந்துரைக்கிறேன்.)

மேற்குத் தொடர்ச்சி மலையே தென்னிந்திய நதிகளின் ஆதாரம். இந்தியாவின் பாதிப்பரப்பளவுக்கான பருவ நிலையைத் தீர்மானிப்பதும் மேற்குத் தொடர்ச்சி மலையே. அங்கே தேயிலை, காப்பித் தோட்டங்கள், சுரங்கம், தொழிற்சாலை, சாலை வசதி, சுற்றுலா வசதி என்று மூன்றில் இரண்டு பங்கு மழைக்காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. ஆக, இருவாச்சிப் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. ஒட்டு மொத்த வளர்ச்சி என்பதை யோசித்துச் செயல்படும்போது ஒரு பறவை இனத்தின் வாழ்க்கையை எல்லாம் கணக்கில் கொள்ளக்கூடாது என்று சில மேதாவிகள் வாதிடக்கூடும். இயற்கையை மீறி மனிதனால் எதுவும் செய்திட இயலாது. இயற்கை ஒருநாள் தன்னை மீட்டெடுக்க விஸ்வரூபம் எடுக்கும்போது மனிதனும் இப்படித்தான் ஏதுமின்றிப் போவான்.

தென்மேற்கு ஆசியப் பகுதிகளில் வாழும் இபான் இனப் பழங்குடியினர், Rhinoceros hornbill என்ற வகை இருவாச்சியை பறவைகளின் அரசனாகக் கருதி வழிபடுகின்றனர். அந்த இருவாச்சி அரசன், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே பாலமாக இருப்பதாக நம்புகின்றனர். Wreathed Hornbill என்ற வகை இருவாச்சிப் பறவைகள், இறந்து போன முன்னோர்களின் ஆத்மாவாக உருவெடுத்திருப்பவை. அவையே பூமியில் தங்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கைகள் நகைப்புக்கு உரியன அல்ல. இதையெல்லாம் ஒரு பழங்குடி இதயத்தால் மட்டுமே உணர இயலும். எந்த ஒரு விலங்கும் பறவையும் பழங்குடிகளுக்குப் பெரும் தீங்கு விளைவிப்பதில்லை, மனிதனைப் போல. ஏனெனில் அவையும் பழங்குடி இதயங்களோடுதாம் இந்த பூமியில் வாழ்கின்றன. எல்லோருக்கும் கொஞ்சமாவது பழங்குடிகளின் இதயம் வாய்க்கப் பெற்றால் மட்டுமே இந்த இயற்கை பிழைத்து நிலைக்கும். =