சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 06
‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
‘‘நான் இனி நடக்கவே மாட்டேன்’’ என்று என் மருத்துவர் என்னிடம் கூறினார். நான் மிகுந்த மன வேதனையுடன் என் அம்மாவைப் பார்த்தேன். என் அம்மா, ‘‘நீ நடப்பாய், ஓடுவாய், சாதிப்பாய்’’ என்று கூறினார்கள். நான் என் அம்மாவை நம்பினேன். என் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் என்னை அன்போடு பார்த்துக் கொண்டார்கள். எனது கால் கட்டையை அடிக்கடி அகற்றி, எனது நடக்க இயலாத காலுக்கு மசாஜ் செய்வார்கள். ஆம், ஆறு வயதில் என்னால் குதிக்க முடிந்தது. எட்டு வயதில் கால் கட்டையுடன் நகர முடிந்தது. பதினோரு வயதில் என்னால் கூடைப் பந்து விளையாட முடிந்தது. என் தாய் என்னை விளையாட்டு வீராங்கனையாக ஊக்கமூட்டினார்’’ என்று தன் வாழ்வைப் பகிர்ந்து கொள்கிறார் தடகளச் சாதனையாளர் வில்மா ருடால்ப்.
22 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் 20 – ஆவது குழந்தையாகப் பிறந்தவர் வில்மா ருடால்ப். குழந்தைப் பருவத்தில் நிமோனியா மற்றும் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர். ஐந்து வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஆட்கொண்டு நடக்க இயலாமல் கடினப் பட்டவர். இச்சூழலில் தான் மருத்துவர் நடக்கவே முடியாது என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து, அவரது தாயாரின் ஊக்குவிப்பாலும், குடும்ப உறுப்பினர்களின் உதவியாலும் தொடர்ந்து முயற்சித்து முன்னேறி உலக சாதனை படைத்தார்.
1940 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 – ஆம் தேதி பிறந்த வில்மா க்ளோடியன் ருடால்ப் தனது இளமைக்காலங்களை பக்கவாதம், கட்டுகள் அணிந்த கால்கள், நிமோனியா காய்ச்சல் என்று பல உடல் உபாதைகளில் கழித்தார். ஆயினும் விளையாட்டில் சாதிக்க வேண்டும், மற்றவர்களைப் போல ஓடி, ஆடி மகிழ்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இவரது ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று ஊக்கமூட்டித் துணை நின்றார், இவரது தாயார் பிளான்ச். தந்தை எட் இரயில்வே போர்ட்டராகவும், இரண்டாம் மனைவியான தாய் பிளான்ச் சில இல்லங்களில் பணிப்பெண்ணாகவும் பணிசெய்து குடும்பத்தைக் காத்தனர்.
நிறவெறி அதிகம் இருந்த அந்தக் காலக்கட்டத்தில் சரியான மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறாத வில்மாவுக்கு, தங்கள் கருப்பின மக்களின் பாரம்பரிய மருத்துவத்தைக் கொண்டே தாய் சிகிச்சை கொடுத்து வந்தார். அதே சமயம் தன் மகளால் விளையாட்டில் ஜொலிக்க முடியும் என்று ஊக்கம் தந்தார். அதற்காக பயிற்சிகளுக்கும் அனுப்பினார். தாயின் ஊக்கத்தை மிகவும் சாதகமாக எடுத்துக் கொண்டு முன்னேறினார் வில்மா ருடால்ப்.
பன்னிரெண்டு வயது வரை நடப்பதற்கே சிரமப்பட்டார் வில்மா ருடால்ப். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு மருத்துவ வசதி குறைவாகவே இருந்தது. அவர்கள் வசித்த கிளார்க்ஸ்வில்லியிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தொலைவிலிருந்த, கருப்பின மக்களுக்கான மெஹரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கடி அழைத்துச் சென்றார் தாயார்.
வாராந்திரப் பேருந்தில் சென்று பலவீனமான காலின் வலுவை அதிகரிக்க கடும் சிகிச்சையை மேற்கொண்டனர். ஒரு நாளுக்கு நான்கு முறை காலின் கட்டுகளை அவிழ்த்து மசாஜ் செய்து காலினை வலிமை பெறச் செய்தார்கள் ருடால்பின் உடன் பிறந்தவர்கள். இந்த சிகிச்சைகள் மற்றும் கண்காணிப்பே வில்மா ருடால்ப் எலும்புகளுக்கான ஷு இல்லாமல் நடக்க உதவியது.
பள்ளி சென்று கற்க முடியாததால் ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே பெற்றார் வில்மா. அதன்பிறகு ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான பார்ட் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது கூடைப் பந்து விளையாட்டில் ஜொலித்தார். மிகச் சிறப்பான புள்ளிகளைப் பெற்ற இவரை, கூடைப் பந்து பயிற்சியாளர் ‘ஸ்கீட்டர்’ என்று அழைத்தார். மிக வேகமாக கொசுவைப் போல ஓடுவதால் இப்பெயரைத் தந்தார். தனது பள்ளிக்காக விளையாடும் போது, டென்னிசி மாநிலத்தின் தடகளப் பயிற்சியாளரான எட் டெம்பின், ருடால்ப்பின் வேகத்தைக் கண்டு, இவர் மிகச்சிறந்த தடகள வீரராக வரலாம் என்று கணித்தார். எனவே அதற்கான பயிற்சி பெற ஊக்குவித்தார் டெம்பிள்.
பதினான்கு வயது நிரம்பிய போது டென்னிசி மாநில கோடைக்காலப் பயிற்சிக்கு அழைத்தார் டெம்பிள். பிலடெல்பியாவில் நடந்த பல தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றார் ருடால்ப்.
1956ஆம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள சியாட்டிலில் ஒலிம்பிக் போட்டியாளர்கள் போட்டியில் கலந்து கொண்டு ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வானார். 1956 – ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில், மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டப் பிரிவில் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம் வென்றார். 16 வயதில் ஒரு சாதனையாகவே இது அமைந்தது மட்டுமல்லாமல் இளம் வயது முதல் உடல் நோய்களால் பாதிக்கப்பட்ட ருடால்புக்கு இது மிகப்பெரிய முதல் வெற்றியாகும்.
உலகின் வேகப் பெண்மணி
1958 – ஆம் ஆண்டில் ருடால்ப் டென்னிசி மாநிலத் தடகளக் குழுவில் சேர்ந்தார். டெம்பிள் தொடர்ந்து பயிற்சி கொடுத்தார். தொடர்ந்து அமெரிக்காவில் நடந்த பல ஓட்டப் பந்தயங்களிலும் சிறப்பான வெற்றி பெற்றுத் தனது ஓட்டத்தினை தொடர்ந்தார்.
1960 – ஆம் ஆண்டு ரோமாபுரியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகிச் சென்றார். மூன்று போட்டிகளில் பங்குபெற்றார். 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவை அந்தப் போட்டிகள். மூன்றிலும் தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்தார் வில்மா ருடால்ப். ஒரே ஒலிம்பிக் போட்டியில் மூன்று தடகளப் பிரிவுகளில் மூன்று தங்கப்பதக்கம் வென்ற முதல் அமெரிக்கப் பெண்மணி என்று புகழ்ப் பெற்றார்.
200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அதற்கு முந்தைய சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்தார். உலக வரலாற்றில் அதிவேகப் பெண்மணி என்று புகழ்ப் பெற்றார். புகழ்பெற்ற தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் தனது முன்மாதிரி என்று குறிப்பிட்டார் வில்மா ருடால்ப்.
உலகின் பல்வேறு நாட்டினரும் அவருக்குப் பாராட்டிப் பெயரிட்டார்கள். பிரெஞ்சு நாட்டினர் ‘தி பிளாக் பெர்ல்’, ‘கருப்பு முத்து’ என்று அழைத்தனர். இத்தாலி நாட்டினர் ‘தி பிளாக் கெஸல்’ என்றும் வாழ்த்தினர். உலக வரலாற்றில் முதன்முதலாக அந்த ஆண்டு ‘ஒலிம்பிக் போட்டி தான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆகையால் உலகம் வாழ்த்திய நட்சத்திரமாக ஜொலித்தார் வில்மா ருடால்ப். தொடர்ந்து உலகின் பல இடங்களில் நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்துகொண்டு உலக சாதனைகளைப் படைத்தார்.
1962 – ஆம் ஆண்டு ஓட்டப் பந்தயங்களில் இருந்து ஓய்வுபெற்ற வில்மா ருடால்ப், கல்லூரி சென்று இளங்கலைப் பட்டம் பெற்றுவிட்டு ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக விளங்கினார்.
அபேபே பிகிலா
ஒலிம்பிக் வீரர்கள் வரலாற்றில் இத்தாலியில் நடந்த, 1960 – ஆம் ஆண்டு ரோம் நகர ஒலிம்பிக் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மூன்று தங்கப் பதக்கங்கள் வென்று உலக சாதனை படைத்தார் வில்மா ருடால்ப். அதே ஒலிம்பிக் போட்டியில் மற்றொரு கருப்பர் இன இளைஞர் உலக சாதனை படைத்தார். அவர் தான் அபேபே பிகிலா.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்த ஒலிம்பிக்கில் ஏழை நாடுகளாகக் கருதப்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் தயக்கம் காட்டிய காலம் அந்தக் காலம்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியா நாட்டின் அரசு, தனது நாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று விரும்பியது.
எத்தியோப்பியா நாட்டின் அரசருக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காக சில காவலர்கள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்களுக்குப் பயிற்சி தருவதற்கு என்றே ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒன்னி நிஸ்கனென் என்பவரை அரசர் நியமித்திருந்தார். இந்தப் பிரிவில் ஐந்தாவது காலாட்படையில் பணி செய்தவர் அபேபே பிகிலா. தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதற்கு பயிற்சியளிக்கப்பட்டனர் இந்தக் குழுவினர். அவர்களது ஓடும் திறமையைக் கவனித்த ஒன்னி நிஸ்கனென், அபேபே பிகிலாவை மாரத்தான் ஓட்டப் போட்டிக்குப் பரிந்துரைத்தார்.
1956 – ஆம் ஆண்டில் எத்தியோப்பிய ஆயுதப் படையின் சிறந்த ஓட்டப் பந்தய வீரர் வாமி பிராட்டுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார் அபேபே. இதுவே இவரது ஓட்டப் பந்தய வரலாற்றின் தொடக்கமானது.
1960 – ஆம் ஆண்டு அடிஸ் அபாபா என்ற இடத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்றார் அபேபே பிகிலா. ஒரு மாதம் கழித்து மீண்டும் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அதற்கு முந்தைய ஒலிம்பிக் போட்டியின் நேரத்தைவிடக் குறைவான நேரத்தில் ஓடி வெற்றி பெற்றார். இதனைக் கவனித்த பயிற்சியாளர் ஒன்னி நிஸ்கனென், அபேபே பிகிலாவை ஒலிம்பிக் போட்டிக்கு அழைத்துச் செல்ல விரும்பினார்.
ஆனால் எத்தியோப்பியாவிலிருந்து தடகளப் போட்டியில் கலந்துகொள்ள பத்து வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் அபேபே பிகிலா ஒரு நபர் அல்ல. ரோம் நகருக்குக் கிளம்பும் முன்பு எத்தியோப்பியாவின் சிறந்த வீரரான வாமி பிராட்டுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அபேபே பிகிலாவை அவருக்குப் பதிலாக அழைத்துச் சென்றார் ஒன்னி நிஸ்கனென் என்றும் கூறுகின்றார்கள்.
எப்படியோ ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் ஓடிட அபேபே பிகிலா ரோம் நகர் வந்துவிட்டார். அடிடாஸ் ஷுக்கள் விற்கும் நிறுவனம் இந்த எத்தியோப்பிய வீரர்களுக்கு ஷுக்கள் தந்தது. ஆனால் அதில் எதுவும் பிகிலேவுக்குப் பொருந்தவில்லை. ரோம் நகர் கோடை வெப்பத்தால் கொதித்துக் கொண்டிருந்த நேரம். புதிதாக ஏதாவது ஒரு ஷுவை அணிந்து காலில் ெகாப்புளம் வந்தால் ஆபத்து என்று எண்ணிய அபேபே பிகிலா ஷு இல்லாமல் ஓடிட முடிவு செய்தார்.
மாரத்தான் ஓட்டம் என்பது சாதாரண தூரம் அல்ல. 26 மைல்கள் கொண்ட அந்த நீண்ட தூரத்தை வெறும் காலில், கரடுமுரடான ரோம் நகரை ஒட்டிய சாலைகளில் ஓடுவதற்குத் துணிந்தார் இந்த வீரர். அவரது பயிற்சியாளர் ஒன்னி நிஸ்கனென் அவரிடம் அதற்கு முந்தைய போட்டிகளில் முன்னணியில் நிற்கும் மெராக்கோ நாட்டு வீரர் ராடி பென் அப்டெஸ்ஸலாம் என்பவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று அறிவுரை தந்தார்.
போட்டி ஆரம்பமானது. முதலில் பலரும் பிகிலேவுக்கு முன்னே ஓடினார்கள். தொடர்ந்து முன்னேறினார் அபேபே பிகிலே. முப்பது கிலோ மீட்டர் தூரம் வந்த போது ஐவர் ஓடிக் கொண்டிருந்தார்கள். இதில் யார் பென் அப்டெஸ்ஸலாம் என்பது அபேபேவுக்குத் தெரியாது. ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினார். கடைசி ஐநூறு மீட்டர் தொலைவு வந்த போது வேகமாக ஓடி எல்லைக்கோட்டைத் தொட்டார் அபேபே பிகிலா. 2 மணி 15 நிமிடம் 16 நொடிகளில் முதலிடம் பெற்றார். அப்டெஸ்ஸலாம் 2 மணி 15 நிமிடம் 41 விநாடிகளில் இரண்டாமிடம் பெற்றார். அப்போது தான் தான் அதற்கு முந்தைய உலக நாயகனை வென்றதைக் கண்டுகொண்டார் அபேபே.
தனது எல்லைக்கோட்டை தொட்ட பின்பும் இன்னும் ஒன்பது மைல் தூரம் ஓடியிருக்க முடியும் என்றார். வெறும் காலில் இரண்டு மணி நேர ஓட்டம், உலக சாதனை, தங்கப் பதக்கம் என்று உலகினரின் பார்வையில் பதிந்தார் அபேபே பிகிலா. மாரத்தான் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்ற ஆப்பிரிக்கர் என்ற பெருமையும் பெற்றார். பத்திரிகையாளர்கள் குவிந்து ‘‘ஏன் வெறும் காலில் ஓடினீர்கள்?’’ என்று கேட்டார்கள். ‘‘எத்தியோப்பியர்கள் மன பலமும், தைரியமும் வாய்ந்தவர்கள். அவர்களால் வெற்றியை வெறும் காலில் ஓடியே ெபற்றிட முடியும் என்பதை நிரூபிக்கவே ஓடினேன்’’ என்றார்.
அவரது வெற்றி பல நூறு ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு உந்து சக்தியாக அமைந்தது. இன்று ஒலிம்பிக் போட்டிகளில் ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்த பல வீரர்கள் தங்கம் வென்று தடகளத்தில் சாதனைப் படைக்க இது தொடக்கமாக அமைந்தது. தொடர்ந்து 1964 – ஆம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியிலும் தங்கம் வென்றார் அபேபே பிகிலா. ஆனால், இந்தப் போட்டிக்கு செல்வதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பு குடல் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார். ஆயினும் இரண்டாம் முறை வென்று இரண்டாம் முறையாக எத்தியோப்பியாவுக்குத் தங்கம் வென்று திரும்பினார்.
இவரைப் பாராட்டிய எத்தியோப்பிய பேரரசர் பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் வழங்கினார். அவரது பெயர் கொண்ட பல பள்ளிகளும், விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டன.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களாகக் கருதப்பட்ட கருப்பர் இனத்திலிருந்து இரண்டு சாதனையாளர்களை இங்கே கண்டோம்.
20 – வயதில் உலக சாதனை நிகழ்த்தி, உலகின் அதிவேக ஓட்டக்காரர் என்று பெயர் பெற்ற வில்மா ருடால்ப், பல்வேறு தடைகளை உடல் உபாதைகளை வென்ற வீராங்கனை. 24 – வயதில் மாரத்தானில் வெறுங்காலில் ஓடி மகத்தான சாதனைகளைப் படைத்த அபேபே பிகிலா ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு முன்மாதிரி. இவர்கள் இருவருமே சவால்களை வென்று சாதித்தவர்கள். முயன்றால், முயற்சித்தால் நம்மால் முடியும் என்று சிந்தித்துச் செயலாற்றியவர்கள். இன்றளவும் இவர்களது சாதனைகள் உலகில் பேசப்படுகின்றது, எழுதப்படுகின்றது, பாராட்டப்படுகின்றது. வரலாறு இவர்களை நினைப்பதற்குக் காரணம் இவர்களது வெற்றிச் சுவடுகள் தான். இந்த ஒலிம்பிக் வீரர்களின் உன்னத வெற்றி இளையோர்கள் உள்ளத்துக்கு ஊக்கமாகி ஒளிரட்டும்.=