ஊடகம் பழகு 04

திரு.மனோஜ் சித்தார்த்தன்

கவல் தொடர்பு சாதனமாகவும், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய சாதனை படைத்ததுடன் படித்த படிக்காத மக்களைப் பல கோணங்களில் ஈர்த்து வரும் வலிமை வாய்ந்த சக்தி தான் தொலைக்காட்சிகள்.Television என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பே தொலைக்காட்சி ஆகும்.டெலஸ்கோப் (Telexcope) எலக்ட்ரிகல் டெலஸ்கோப் (electrical Telexcope) டெலக்ராஸ்கோப் (Telectroscope) என்ற பெயர்கள் வழங்கப் பெற்று இறுதியில் டெலிவிஷன் என்ற சொல் நிலைபெற்றது. ஒளியையும் ஒலியையும் மின் காந்த அலைகளாக மாற்றி காற்றில் கலக்கச் செய்து அவை நமது கண்ணுக்கும் காதுக்கும் விருந்து படைக்கும் நோக்கில் காட்சிகளாக ஒளிபரப்படுகின்றன.

தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் அறிவியலின் ஆதிக்கம் என்ன தான் உலகைச் சுருக்கி இருந்தாலும் உலகம் முழுவதிலும்  தொலைக்காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு தற்போது வரை இருந்து கொண்டே தான் உள்ளது.மக்களையும் இவற்றையும் பிரிப்பது என்பது
முடியாத ஒன்று. இந்த உலகமே தலைகீழாய்  மாறினாலும் பரவாயில்லை நாங்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்தே தீருவோம் என்பது தான் தற்போதைய மக்களின் மனநிலை, அந்த அளவிற்கு மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு மற்றும் நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இவை முதன்மை வகிக்கின்றது. அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் உள்ள ஒரு சில குறைபாடுகள் இந்தத் தொலைக்காட்சி ஊடகத்தினை வெற்றி பாதையில் அழைத்துச் செல்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் தொலைக்காட்சிகள் முதன்மை வைக்கின்றன. செய்திகளின் உண்மைத் தன்மை மாறாமல் நடந்ததை நடந்ததாகவும் இல்லாததை இல்லை எனவும் சொல்வதில் இதற்கு நிகர் வேறு ஒன்றும் இல்லை. அந்த அளவிற்கு மக்களிடத்தில் அசைக்க முடியாத அளவிற்கு நம்பிக்கை  பெற்றுள்ளது. தொலைக்காட்சிகளின் வெற்றி எங்கு துவங்குகிறது என்றால், ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றால் அச்சு ஊடங்கங்கள் அதனை மறுநாள் தான் செய்தியாக வெளியிடும். நிகழ்வு நடந்து முடிந்து பரபரப்புகள் எல்லாம் அடங்கிய பின் காலைச் செய்தியாக அல்லது மாலைச் செய்தியாகச் செய்தித்தாள்களில் வரும். இதனால் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. ஆனால் தொலைக்காட்சிகள் என்பது அப்படி இல்லை, செய்திகள் மற்றும் தகவல்களை நொடிக்கு நொடி நேரலையாக நமது வீட்டு வரவேற்பறைக்கே கொண்டு சேர்த்து விடுகின்றது.

தொலைக்காட்சிகளின் தனித்துவம்

நாடகக்கலை கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. சமூக விழிப்புணர்வையும் விடுதலை உணர்வையும், தேச பக்தியையும், பல நல்ல சிந்தனைகளை மக்களுக்குத் தந்தவை இந்த நாடகங்கள். மக்களின் வாழ்க்கைமுறையுடன் இணைந்து இருந்த இக்கலை தொழில்நுட்ப வளர்ச்சியால் பின்பு வீழ்ச்சி அடைந்தது..தொழில்நுட்பத்தால் உருவான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகள் நவீன யுகத்தில் திரைப்படத்தைக் காட்டிலும் மக்களிடம் அதிக அளவில் ஊடுருவியுள்ளது   தொலைக்காட்சிகள் தான்.

மக்களிடம் எப்போதும் இதற்குத் தனி இடம் உண்டு. தொலைக்காட்சிகள் அறிமுகமான புதிதில் எப்போதும் மக்கள் கூட்டமும் போக்குவரத்து நெரிசலும் பிரிக்க முடியாத மவுண்ட் ரோடு எனப்படும் சென்னை அண்ணா சாலை கூட வெறிச்சோடிக் காணப்படும். மக்கள் கூட்டமாய் காணப்படும் நாடக சபாக்களில் கூட கூட்டம் குறையலாயிற்று. அதற்கு காரணம் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டியதால் தான். இதற்கு காரணம் நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளி ஒலி காட்சிகளாக தருவதால் இவற்றைப் பொழுதுபோக்கு சாதனமாகவும் செய்திகள் மற்றும் தகவல் தரும் சாதனமாகவும் மிக நம்பிக்கைகுரிய ஒன்றாக மக்கள் பார்க்கின்றனர்.

உலகில் நடக்கும் நிகழ்வுகளைச் சரியான முறையில் ஒருவருக்குக் கொண்டு சேர்க்கும் பணியினை இது திறம்படச் செய்கிறது. ஒரு குக்கிராமத்தில் வளரும் ஒரு குழந்தை மொழியினை கற்கும் முன்பே, கடல், மலை போன்ற அனைத்தையும், காட்சிப்பூர்வமாக அறிந்து கொள்ள தொலைக்காட்சிகள் மிக முக்கியக் காரணியாய் அமைகிறது. இது மக்களிடத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் ஆழ்துளைக் கிணறில் தவறி விழுந்து விட்டான் அந்தச் சிறுவனை மீட்க இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெற்றன. இதைப் பெரும்பாலான தொலைக்காட்சிகள் நேரலை செய்தன. அந்தச் சிறுவன் மீண்டு வர வேண்டிப் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ‘‘மீண்டு வா சுர்ஜித்’’  என்ற சொல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் தொலைக்காட்சிகள், ஒளிபரப்பிய நேரலை.

மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த தொலைக்காட்சிகளுக்கு நன்கு தெரியும். இது தான் இவற்றின் சக்தி. தொலைக்காட்சிகள் மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாகிவிட்டது.மேலும் தொலைக்காட்சிச் செய்திகளைத் தான் மக்களில் அதிகமானோர் பார்க்கின்றனர். தேர்தல் மற்றும் விளையாட்டுத் தொடர்பான செய்திகள் சரியான புள்ளி விபரங்களுடன் காட்சிகளாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், அனைவராலும் பார்த்து, கேட்டு உணர முடிகின்றது

தொலைக்காட்சிகளின் தோற்றம் மற்றும் ஒளிபரப்பு

1928 – ஆம் ஆண்டு பிபிசி (British Broadcasting Corporation) என்னும் பிரிட்டிஷ் வானொலியானது, முதன் முதலில் தொலைக்காட்சியினை ஆரம்பித்தது. 1929 – ஆம் ஆண்டு ஒளிபரப்பினைத் துவங்கியது.
1930 – களில் நியூயார்க்கில் ‘‘நியூயார்க் ஒளிபரப்பு நிறுவனம்’’ தொலைக்காட்சி நிறுவனத்தை ஆரம்பித்தது. 1953 – ஆம் ஆண்டு அமெரிக்கா வினைச் சேர்ந்த ‘‘ஆர்.சி.எ என்ற நிறுவனம்’’ வண்ண நிகழ்ச்சிகளை ஒளிப் பதிவு செய்து வைக்கும் முறையினைக் கண்டுபிடித்தது (இதற்கு முன்பு வரை கருப்பு வெள்ளையில் தான் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தன) 1960 – ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், ஜப்பானிலும் வண்ணத் தொலைக்காட்சி செயல்படத் தொடங்கியது. செயற்கைகோள் உதவியுடன் 1962 – ல் இந்த ஒளிப்பரப்புத் துவங்கப்பட்டது. அதற்கு முன்பு வரை தொலைக்காட்சி ஒளிபரப்பு என்பது பதிவு செய்து ஒளிபரப்பும் முறை மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘ஆரம்பப்பறவை’’ என்ற தகவல் தொடர்புக்கான செயற்கைகோள் முதன்முதலில் வானில் ஏவப்பட்டது. பின்னர் இன்டெல்செட், இண்டோ ஸ்புனீக் என்ற இருபெரும் செயற்கைகோள்கள் விண்ணில் ஏவபட்டன. இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பும் முறை போய் செயற்கைகோள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் நடைமுறை வந்ததால், எந்தத் தடங்கலும் இன்றி நிகழ்ச்சிகளைத் துல்லியமாக ஒளிபரப்பு செய்ய முடிகின்றது. இந்தியாவினைப் பொறுத்தமட்டில் தொலைக்காட்சிகளின் அறிமுகம் என்பது மிக சுவாரசியமான ஒன்று. ஆம், வறுமை ஒழிப்பு, எழுத்தறிவின்மையைப் போக்குதல், சமூக ஒற்றுமை ஆகியவற்றிக்காக முதன் முதலில் சோதனை அடிப்படையில் 15.09.1956 புது டெல்லியில் அகில இந்திய வானொலியின் (Prasar Bharati All India Radio) ஒரு பகுதியாகச் செயல்படத் துவங்கியது தொலைக்காட்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இவை, பல்வேறு வகைகளில் நாட்டு  மக்களுக்குப் பயன்படும் என நினைத்தார் பண்டிதர் ஜவகர்லால் நேரு. வாரத்தில் இரு நாட்கள் ஒரு மணிநேரம் செயல்பட்டது. இதில் 30 நிமிடம் கல்வி ஒளிபரப்பும், மீதம் உள்ள 30  நிமிடம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்புச் செய்யப்பட்டன. 1961 – ல் அக்டோபரில் கல்வி ஒளிபரப்புத் துவங்கியது. பள்ளித் தொலைக்காட்சி என்ற இப்பகுதியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

1965 ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் வேண்டு கோளை ஏற்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அறிமுகமாயின. 1966 – ஆம் ஆண்டு முதல் அனைத்து நாட்களிலும், அரை மணிநேர நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. 1967 – ல் தொலைக்காட்சி ஒளிபரப்பு, கிராமங்களை எட்டின நல்ல வரவேற்பு இருந்தது கிராமப்புற வளர்ச்சி குறித்த நிகழ்ச்சிகள் அதிகம் இடம்பெற்றன. 1976 – ல் தொலைக்காட்சியில் வர்த்தக ஒளிபரப்பு துவங்கப்பட்டது (வருவாய் ஈட்டும் நோக்கில்). இதில் திரைப்படங்கள், நாடகங்கள், ஒளியும் ஒலியும், விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவை ஒளிபரப்புச் செய்யபட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையே விளம்பரங்கள் செய்யப்பட்டு அதன் மூலம் கணிசமான வருவாய் அரசிற்கு கிடைத்தது. இதில் ஒளிபரப்புச் செய்யப்படும் செய்திகளைப் பார்ப்பதற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். மேலும், செய்தி ஒளிபரப்பு ஆகும் நேரத்தில் கும்பத்தினருடன் உட்கார்ந்து மக்கள் மாலை வேளையில் ரசித்தனர்.

செய்தி ஒளிபரப்பு ஆகும் நேரத்தில் தெருவில் நடந்து போனால் செய்திவாசிப்பாளரின் குரல் ஒவ்வொரு வீட்டைக் கடக்கும் போதும் ஓங்கி ஒலிக்கும். அந்த அளவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 1982 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 – ஆம் நாள் வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கபட்டது. அப்போதைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களால் டெல்லி செங்கோட்டையில் சுதந்தர தினம் அன்று ஆற்றிய உரை வண்ண ஒளிபரப்பு செய்யப்பட்டது.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வண்ணத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. தொலைக்காட்சிகளுக்கு மிகப் பெரிய அளவிலான தொழில்நுட்பக் கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. தினமும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள்கள் (Software)என்பது அறிமுமாகி தொலைக்காட்சி ஒளிபரப்பினை நவீனப்படுத்திக்கொண்டு உள்ளது.

ஒளிப்படக்கருவிகள்(Cameras)தொடங்கி அனைத்திலும் புதுமைகள் வந்து விட்டன. இதன் விளைவு, செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை விரைவாகவும் துல்லியமாகவும் பார்க்கும் வசதி என்பது வந்துவிட்டது. இதனால் தொழில்நுட்பங்கள் சார்ந்த புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிக் கொண்டு உள்ளது. இதனால் தொலைக்காட்சிகள் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன. நமது நாட்டில் மட்டும் தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உதவும் வகையில் செயற்கைகோள்கள் பூமியின் சுற்று பாதையில் உள்ளன. இன்று நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் தொலைக்காட்சிகளின் கண்காணிப்பில் இருக்கின்றது.

தனித்துவம் மிக்க தூர்தர்சன்

1959 – முதல் அகில இந்திய வானொலியின் ஒரு பகுதியாக இயங்கத் துவங்கிய தொலைக்காட்சி 01.04.1976 அன்று முதல் தூர்தர்சன் என்ற தனிப்பெயருடன் (Doordarshan Kendra)செயல்பட துவங்கியது. இது 1982 – ல் தேசியத் தொலைக்காட்சியாக உருப்பெற்று வண்ண ஒளிபரப்பினைத் தொடங்கியது. இன்றளவும் உலகின் பிரதான தொலைக்காட்சியாக இருக்க காரணம், இதன் வசம் இருக்கும் தொழில்நுட்பக் கட்டமைப்புகள், நாடு முழுவதிலும் அலுவலகங்கள், நவீனப் படப்பிடிப்பு தளங்கள் கொண்டு செயல்படுவதால் இது இன்றும் முதன்மை பெற்று விளங்குகின்றது. நாடு முழுவதிலும் மாநில மொழிகளில் தொலைக்காட்சிகள், அதன் படி 30 – மொழிகளில் 36 – தொலைக்காட்சி நிலையங்களை நடத்துகின்றது தூர்தர்சன்.

அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்புப் பெற்று கோடிக்கணக்கான மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. மத்தியத் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் MIB (Ministry of Information and Broadcasting) எனப்படும்  ஒரு அங்கமாக இது செயல்படுகின்றது.இந்தத் தன்னாட்சி அமைப்பின் கீழ் தான் தூர்தர்சன் செயல்படுகிறது. மேலும் அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளும், இதன் கீழ் தான் செயல்படுகின்றது. தொலைக்காட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் இவற்றின்  செயல்பாடுகளை கண்காணிப்பது தான் இதன் வேலை. சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைச் சொல்வதில் இது முதன்மை வகிக்கின்றது. நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு என்பது அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூட்டாகச் சேர்ந்து நிகழ்ச்சிகளை உருவாக்குவார்கள். எனவே சமூக முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு என்பது ஏற்பட்டுள்ளது. மேலும் தூய தமிழில் உச்சரிப்பு, செய்திகள் போன்றவை இதன் தனி சிறப்பு.

முக்கியமாக கிராம முன்னேற்றம், கல்விவளர்ச்சி குறித்த “காண்போம் கற்போம்” என்னும் நிகழ்ச்சி, கல்வி அறிவினை ஊட்டியது. மேலும் விவசாயம் மற்றும் உற்பத்தி தொடர்பான “வயலும் வாழ்வும்”, எழுத்தறிவின்மையைப் போக்கும் நோக்கில் “அறிவொளி இயக்கம்” என்னும் சிறப்பு நிகழ்ச்சி போன்றவற்றைச் சொல்லலாம். நிகழ்ச்சிகள் எப்படி  உள்ளன, அதில் உள்ள குறை நிறைகளைப் பார்வையாளர்கள் நிலைய இயக்குனர் அவர்களுக்கு கடிதம் மூலம் சொல்லும் “எதிரொலி” போன்ற நிகழ்ச்சிகள் மிகுந்த வரவேற்பு பெற்றன.கழிவறையின் அவசியம், சுகாதார இயக்கம் குறித்த விழிப்புணர்வு போன்றவை இவற்றின் தனிச் சிறப்பு. ‘‘மேளம் கொட்டி தாலி கட்டும் கல்யாணம் இது வெக்கப்பட்டு பெண்ணை விற்கும் வியாபாரம்” என வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வினை ஏற்படுத்தியது. “குச்சி குச்சி வேப்பங்குச்சி இந்த மாமா உடலுக்கும் பல்லுக்கும் நல்லது. மாமா சொத்த பல்லு தான் வராது நாம காசு வீணா போகாது” என நம் முன்னோர்கள் சொன்ன பல் துலக்கும் முறையை மறந்து செயற்கை பற் பசையை பயன்படுத்தி உடலையும் பல்லையும் கெடுத்து கொண்டு வருகிறோம் எனவே அனைவரும் இயற்கைக்கு திரும்ப வேண்டும் என்பது குறித்த மிக முக்கிய விழிப்புணர்வு விளம்பரம் போன்றவை மறக்க முடியாத ஒன்று.

வரவேற்பு பெற்ற தனியார் தொலைக்காட்சிகள்

இந்தியாவில் தொலைக்காட்சிகளின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த 60 – ஆண்டுகளையொட்டி அமைகிறது.முதலில் கருப்பு வெள்ளையில் வளர்ச்சி என்பது குறைவாகத் தான் இருந்தது அதற்கு ஒரு காரணமும் இருக்கின்றது. முதன் முதலில் தொலைக்காட்சி என்பது வசதி படைத்த செல்வந்தர்களுக்கான ஒன்றாக தான் பார்க்கப் பட்டது. பின்னர் ஆடம்பரப் பொருளாக மாறி, தற்போது இது அத்தியாவசியப் பொருளாக மாறிப்போய் உள்ளது. காலத்திற்கு ஏற்ப மாற்றம் பெற்று, தற்போது மக்களுக்கு தகவல் மற்றும் சிறந்த பொழுதுபோக்குச் சாதனமாக திகழ்கிறது. இந்த நிலையில் 1990 – ஆம் ஆண்டு இந்தியாவில் தனியார் தொலைக்காட்சிக்கு அனுமதி அளிப்பதாக மத்திய அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதன் படி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரம், தனியார் தொலைக்காட்சிகள் நமது நாட்டு செயற்கைக்கோளைப் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் மத்திய அரசு அறிவித்தது. இதனால் தனியார் தொலைக்காட்சிகள் இங்கு நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து வெளிநாடுகளில் உள்ள செயற்கைகோளின் உதவியுடன் இந்தியாவில் ஒளிபரப்பு செய்தன. அதன் படி சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தன. இதனால் நேர விரயமும், அன்னியச் செலவாணி விரயமும், கால தாமதமும் ஏற்பட்டது.

ஆனால், அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தூர்தர்சன் மட்டும் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யும் ஏகபோக உரிமையை கையில் வைத்திருந்த காரணத்தால் கிரிக்கெட் மற்றும் தேர்தல் நேரத்தில் நேரலையில் தகவல்களை தந்து வந்தது. இதற்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன இதற்கு என்ன காரணம் என்றால் 1962 – ஆம் ஆண்டு தகவல் ஒளிபரப்புச் சட்டத்தின் படி அரசு தவிர மற்ற யாருக்கும் தொலைக்காட்சிக்கு அனுமதி இல்லை என்கிற சட்ட விதியால் தான் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஒளிபரப்பு விதியில் மாற்றம் கொண்டு வர முடியவில்லை. அதன் பின் பல்வேறு நபர்களின் அழுத்தத்தால் மத்திய அரசு சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவரச் சம்மதித்தது. 1998 – இல் புதிய ஒளிபரப்பு விதிகள் கொண்டுவர பட்டன. அதன் படி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து ஒளிபரப்பு செய்து கொள்ளலாம் என்ற மிக பெரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இதனால் தனியார் தொலைக்காட்சிகளின் வளர்ச்சி அபரிவிதமாக மாறியது, இதன் காரணமாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டன.

பெரும்பாலும் பெண்களை மையமாக வைத்து அல்லது பெண்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. இதனால் வருவாய் அதிகரிப்பதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கருதுகின்றன, தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பார்வை யாளர்களைக் கவருகின்றனர். இதன் பரிமாண வளர்ச்சியால் விளையாட்டு, செய்திகள், திரைப்படங்கள், நகைச்சுவை, அறிவியல், சுற்றுலா, சமையல் என, தனித் தனியாக தொலைக்காட்சிகள் 24 மணிநேரமும் துல்லிய தரத்தில் (High-definition) நல்ல பொழுதுபோக்கு சாதனமாகவும் தகவல் களஞ்சியமாகச் செயல்படுகின்றது.

அரசுத் தொலைக்காட்சிக்கும், தனியார் தொலைக்காட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம், சில தனியார் தொலைக்காட்சிகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பு செய்து பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இத்தகைய தொலைக்காட்சிகள் ஆபாச நடனங்கள், மெகா சீரியல்கள் என்ற பெயரில் குடும்ப உறவுகளைக் கொச்சைப்படுத்தும் சில நிகழ்ச்சிகள் போன்றவை சமூகத்திற்கு எதிரானவை.

மேலும் சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவியல் தொடர்பான ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளுக்கு பொது மக்களிடம் வரவேற்பு இல்லை என்பது போன்ற பொய்யும் பொது மக்களிடம் பரப்பப் படுகின்றது இதனால் மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதற்கும் இவை வழிவகுக்கின்றது.தொலைக்காட்சிகளால் பல ஆக்கப்பூர்வமான பல நன்மைகள் நமக்கும் சமூகத்திற்கும் நடந்துள்ளது. அதனைத் தொலைக்காட்சி நிறுவனங்கள் உணர வேண்டும். நாளைய சமூகத்தைக் கட்டமைப்பது தொலைக்காட்சிகளின் கையில் தான் உள்ளது என்பதைப் புரிந்து நடந்து கொண்டாலே ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க முடியும். =