கற்றல் எளிது -04

திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

நீங்கள் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டியிருக்கிறீர்களா? சிறு வயதில் நாம் எல்லோருமே படம் வரைந்து வண்ணம் தீட்டியிருப்போம். இப்போது மனப்பயிற்சியாக மீண்டும் வண்ணம் தீட்டுவோம். ஒரு வீடு, ஒரு மலை இரண்டும் அடங்கிய ஓர் ஓவியத்திற்கு மனதிற்குள்ளேயே வண்ணம் தீட்டப்போகிறீர்கள். முதலில் என்ன செய்வீர்கள்? வீட்டிற்கு ஒரு வண்ணம், மலைக்கு ஒரு வண்ணத்தைத் தேர்வு செய்வீர்கள். அடுத்தாக வண்ணம் தீட்டத் தொடங்குவீர்கள்.

ஓவியத்தில் உள்ள வீட்டிற்கு வண்ணம் தீட்டும்போது உங்கள் கவனம் வீட்டின் மீது மட்டுமே இருக்கும். மலையைக் கவனிப்பீர்களா? நிச்சயம் மாட்டீர்கள். வீட்டை முடித்துவிட்டுத்தான் மலைக்குச் செல்வீர்கள். அதேபோல வீட்டிற்கு வண்ணம் தீட்டி முடித்தவுடன் எடுத்த எடுப்பில் மலையின் மீது கவனத்தைக் குவிக்க மாட்டீர்கள். முதலில் வீட்டின் மீதான உங்கள் கவனத்தை வெளியே எடுத்து ஒட்டுமொத்த ஓவியத்தையும் ஒருமுறை பார்ப்பீர்கள். இப்படி ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அதுவரை தீட்டப்பட்ட வண்ணத்தில் எதாவது தவறு இருக்கிறதா என்று உங்களுக்குப் புலப்படும். எல்லாம் திருப்திகரமாக இருக்கிறது என்று உறுதி செய்துகொண்டபின்தான் மலை மீது உங்கள் கவனம் செல்லும். நம் மூளை இந்த விதத்தில்தான் செயல்படுகிறது. 

சென்ற அத்தியாயத்தில் மூளையின் கவன நிலை, தளர்வு நிலை குறித்துப் பார்த்தோம். கவன நிலை என்பது கவனத்துடன் ஒரு பாடத்தைப் படிப்பது, தளர்வு நிலை என்பது அதிலிருந்து கவனத்தை எடுத்துவிட்டு வேறு விஷயங்களில் கவனத்தைச் செலுத்துவது. நம் மூளையைக் கவன நிலை, தளர்வு நிலை என இரண்டிலும் மாறி மாறி செலுத்தினால் நாம் எந்த ஒரு பாடத்தையும் சுலபமாக / நிறைவாக கற்க முடியும் என்று பார்த்தோம். அதற்குப் பின்னாலான அறிவியலைத்தான் நாம் மேற்கூறிய எடுத்துக்காட்டில் பார்க்கிறோம்.

வீடு, மலை இரண்டும் உள்ள ஓர் ஓவியத்தில் வீட்டிற்கு வண்ணம் தீட்டும்போது அதில் மட்டும் உங்கள் கவனம் இருக்கிறது அல்லவா? அப்போது பக்கத்தில் இருக்கும் மலை உங்கள் கண்ணுக்குத் தெரியாது. இதுதான் கவன நிலை. வண்ணம் தீட்டியவுடன் வீட்டிலிருந்து கவனத்தை எடுத்துவிட்டு அதே ஓவியத்தை மேலிருந்து அணுகுகிறோம் இல்லையா? இதுதான் தளர்வு நிலை.

நாம் கவன நிலையில் மட்டும் செல்லும்போது நம் மூளை ஒரே இடத்தில் ஆணி அடித்துத் தங்கி விடுகிறது. அதனால் பிற விஷயங்களை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம். இதுவே தளர்வு நிலைக்குச் செல்லும்போதுதான் நாம் கவனிக்கத் தவறிய விஷயங்கள் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன. இதுதான் விஷயம்.

மூளையில் ஓர் ஒற்றையடிப்பாதை

அதேபோல இந்தக் கவன நிலையை ஒற்றையடிப் பாதை எனும் உவமையை வைத்தும் புரிந்துகொள்ளலாம். பொதுவாகக் கிராமப்புறங்களில் ஒற்றையடிப் பாதைகள் நிறையவே இருக்கும். அவை எப்படி உருவாகின எனக் கவனித்திருக்கிறீர்களா?

முதலில் ஒற்றையடிப் பாதை உள்ள இடம் செடி, கொடிகளால் புதர் மண்டிப்போய்த்தான் இருந்திருக்கும். பிறகு அதில் மனிதர்கள் நடக்கத் தொடங்கும்போது ஒரு மெல்லிய பாதை உருவாகியிருக்கும். பின் நடமாட்டம் தொடரும்போது நிரந்தர வழியாக அது மாறிவிடும்.

இதேபோல நீங்கள் கவன நிலையில் ஒரு பாடத்தைப் படிக்கும்போது உங்கள் மூளையில் அறிவுப் பாதையை (knowledge trail) உருவாக்கத் தொடங்குகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து அந்தப் பாடத்தைப் பயிற்சி செய்யும்போது அந்தப் பாதை நிரந்தரமானதாக மாறிவிடுகிறது. இதனால் அடுத்தமுறை நீங்கள் அந்தப் பாடத்தைத் தொடங்கும்போது உங்கள் எண்ணம் ஏற்கெனவே போடப்பட்ட பாதையில் பயணித்து எளிதாகவும் விரைவாகவும் அந்தப் பாடம் குறித்த தகவல்களை மனதில் பதிய வைக்கிறது.

கவன நிலையில் பயிலும்போது உங்கள் மூளை கணிதத்திற்கு ஒரு பாதை, ஆங்கிலத்திற்கு ஒரு பாதை, அறிவியலுக்கு ஒரு பாதை என்று ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு பாதையை உருவாக்கி வைக்கிறது. நீங்கள் எந்தப் பாடம் பயில்கிறீர்களோ அதற்கு ஏற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து உங்கள் எண்ணம் பயணிக்கிறது.

அதேபோல கவன நிலை முடிந்தவுடன் தளர்வு நிலைக்குச் செல்ல வேண்டியதும் அவசியம். ஒரே பாதை பல்வேறு இடங்களுக்குச் செல்லாது அல்லவா? ஆனால் நாம் செல்ல வேண்டிய இடமோ பல்வேறு பாதைகளைக் கடந்து வருகிறது. அதனால் உங்கள் மூளையில் போடப்பட்ட வெவ்வேறு அறிவுப் பாதையை இணைப்பதற்கு நாம் தளர்வு நிலைக்குச் செல்ல வேண்டியது அவசியமாகிறது

சரி, தளர்வு நிலைக்கு எப்படிச் செல்வது? வெகு சுலபம். ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு ரிலாக்ஸாகி விட்டால் போதும். ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்கலாம். இல்லை ஒரு குட்டித் தூக்கம்கூட போடலாம். (பெரிய பெரிய சிந்தனையாளர்களுக்கு உயர்ந்த சிந்தனைகள் அனைத்தும் தூங்கும்போது தோன்றியிருக்கிறது என்பதுதான் உண்மை)

கடினமான கணக்கைப் பூர்த்தி செய்ய முடியாமல் விழிக்கும்போது சட்டென்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு மீண்டும் முயன்று பாருங்கள். அதுவரை இருந்த சிக்கலைத் தீர்க்கப் புதிய வழியை உங்கள் மூளை கண்டுபிடித்து வைத்திருக்கும்.

காரணம், நாம் தளர்வு நிலைக்குச் செல்லும்போது அதற்கு முன் நாம் எந்த விஷயத்தில் கவனம் செலுத்தினோமோ அதுகுறித்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான சாத்தியங்களை மூளை பின்னணியில் முயன்று கொண்டிருக்கும். நாம் மீண்டும் சென்று அந்த விஷயத்தில் கவனத்தைக் குவிக்கும்போது அதற்கான வழியை எளிதாக உருவாக்கிவிடும்.

நம் மூளையைத் தளர்வு நிலையில் செலுத்த என்னென்ன செய்யலாம் என விஞ்ஞானிகள் பட்டியல் ஒன்றைத் தருகின்றனர். இவற்றைப் பின்பற்றி நாம் மூளையைத் தளர்வு நிலைக்கு எடுத்துச் செல்லலாம்.

விளையாட்டு, ஓட்டப் பயிற்சி, நடைப்பயிற்சி நீச்சல் பயிற்சியில் ஈடுபடலாம்.

நடனம் ஆடலாம்.

ஊர் சுற்றிவிட்டு வரலாம்

ஒரு குளியல் போடலாம் (குளிக்கும்போது நிறையச் சிந்தனைகள் நமக்குத் தோன்றுவதைக் கவனித்திருப்பீர்கள்)

இசை கேட்கலாம் (பாடலாக இல்லாமல் வரிகளற்ற வெறும் இசை இன்னும் சிறப்பு)

தியானம் செய்யலாம்.

குட்டித் தூக்கம் போடலாம் (மிகச்சிறந்த தளர்வுநிலை பயிற்சி இதுதான்!)

இவ்வாறு மூளையைத் தளர்வு நிலைக்கு நாம் அனுப்பி வைக்கலாம். இங்கே குறிப்பிடக்கூடிய இன்னொரு விஷயம் நாம் ஒரு பாடத்தைப் பயிலும்போது கவன நிலையிலிருந்து தளர்வு நிலைக்குச் சென்றவுடன், சிறிது நேரத்தில் மீண்டும் கவன நிலைக்குத் திரும்பி விட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம், நாளை பார்த்துக்கொள்ளலாம் என அந்தப் பாடத்தை விட்டுவிட்டால் நம் மூளை கவனம் செலுத்திய விஷயத்தை மறந்துவிடும். நீங்கள் கவனம் செலுத்தும் விஷயத்தை முழுதாக முடித்தவுடன் மட்டுமே அடுத்த செயலுக்குச் செல்லுங்கள்.

சில மாணவர்களுக்குப் பாடங்களை எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறாது. கவன நிலை, தளர்வு நிலை என எதற்குச் சென்றாலும் வேலைக்கு ஆகாது. ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலத் தோன்றும். இந்தச் சிக்கலிலிருந்து எப்படி வெளியேறுவது? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். =