வெற்றியோடு விளையாடு!  – 19

டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

ருவருக்கு சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் பணி ஓய்வு பெற்ற பிறகுதான் வருகிறது. இளைஞர்களுக்கு அதுவும் சம்பாதிக்க கூடிய வயதில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்குச் சேவை மனப்பான்மை இருப்பது என்பது அரிதானது, ஆச்சரியமானது. இன்று இளைஞர்களிடையே சேவை எண்ணம் பரவலாக வளர்ந்து வருகிறது. இது இருகரம் நீட்டி வரவேற்கத்தக்கது.

அப்படி ஒரு சேவை மனப்பான்மை உள்ள இளைஞர்தான் வைரமணி.  தன்னுடைய சேவையில் இன்று வைரமாக ஜொலிக்கிறார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர். வணிகவியலில் முதுகலைப் பட்டமும் கணிப்பொறி அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 

‘குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்படுவதற்கும் அவர்களுடைய மனம் வளர்ச்சியடைவதற்கும் அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள்தான் பெரும் வரமாக இருக்கின்றன.  எந்த ஒரு பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டால் மனம் வலிமை பெறும்.  அதிலும் குறிப்பாக அபாகஸ் என்ற கணித முறைப் பயிற்சி மூளை வளர்ச்சிக்கும்,  திறன் மேம்பாட்டிற்கும் அதிக அளவில் பயன்படுவதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன’ என்று தான் வழங்கும் அபாகஸ் பயிற்சி பற்றி அறிமுகம் தருகிறார் வைரமணி.

தற்போது கோயம்புத்தூர்,  திருப்பூர் ஆகிய நகரங்களில் அபாகஸ் தலைமை அலுவலகங்களை நிறுவி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.

முக்கியமாக இந்தப் பயிற்சியை, தனது சொந்தக் கிராமமான தருமபுரி மாவட்டம் ஓ.ஜி.அள்ளி பகுதியில் இலவசமாக வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து அவரிடம் கேட்டோம்.

‘‘மாணவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் பெறவும், முக்கியத்துவம் பெறவும்,  இந்த அபாகஸ் பயிற்சி உதவுகிறது. இந்தப் பயிற்சி வெறுமனே கணிதம் சார்ந்த பயிற்சி மட்டுமல்ல.  எந்த ஒரு வேலையையும்  துல்லியமாகவும்  குறித்த நேரத்திற்குள்ளும் முடிக்க உதவும் பயிற்சியாகும்.  அபாகஸ் பயிற்சி அனைத்து விதமான மேற்படிப்புகளுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது என்பதே என் கருத்து. 

ஏனென்றால், எங்களிடம் அபாகஸ் பயிற்சி எடுத்துக் கொண்ட எத்தனையோ மாணவர்கள் இன்று நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்தப் பயிற்சியை நான்
2008-ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறேன்.  2010-முதல் எங்களுடைய கிராமத்தில் இலவசமாக வழங்கி வருகிறேன். என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.  நான் மட்டுமே இதுவரை 12 ஆயிரம் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அபாகஸ் பயிற்சி அளித்திருக்கிறேன்.  என்னிடம் பயின்ற 245 மாணவர்கள் இன்று தனிப் பயிற்சி நிலையங்களை நிறுவிச் சேவை செய்து வருகிறார்கள். அவர்களிடம் 28,500 மாணவர்கள் இதுவரை படித்திருக்கின்றனர்.

2009-ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற அபாகஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் எங்களிடம் படித்தவர்கள் அதிகம் பேர் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்கள்.  2010-ஆம் ஆண்டு தமிழ் மாநில அளவில் நடைபெற்ற தேர்வில் எங்களிடம் பயின்ற அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள். இதே அளவிலான வெற்றியை இன்று வரை தொடர்ந்து வருகிறோம்.

இப்போது தேசிய அளவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் திறன் மேம்பட பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.  வெளிநாடுகளில் உள்ள மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு காரணம் என்ன?  நம்முடைய மாணவர்கள் திறன் மேம்பட கூடுதலாக என்ன செய்யலாம்? போன்ற ஆலோசனைகளை மத்திய,  மாநில அரசாங்கங்களும், தனியார் நிறுவனங்களும் செய்து வருகின்றன.

அவர்களுடைய ஆலோசனைகளில், இளைஞர்களுக்கு அபாகஸ் பயிற்சி அளிப்பது’  ஒரு முக்கியச் செயல் திட்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து இந்தப் பயிற்சியின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

அபாகஸ் ஒரு சீசனல் ட்ரைனிங் மாதிரி தெரிந்த போது, எப்படி உங்களால் இந்த ஃபீல்டில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடிகிறது?

தன்னலமற்ற சேவை என்பதுதான் ஒரே பதில். பல நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்காக ஆங்காங்கே ஒரு சீசனில் ஆரம்பித்தார்கள்.  ஆனால் எங்களுக்குப் பணம் இரண்டாவது பட்சம்தான்.  உண்மையிலேயே மாணவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் எங்கள் மனதில் இருந்தது. அதன் அடிப்படையிலேயே இந்தப் பயிற்சியை தொடர்ந்து சேவை மனப்பான்மையில் வழங்கி வருகிறோம்.  மேலும் இந்தப் பயிற்சியின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சேர்ந்து எங்களது கல்வி மையத்தில் பயிற்சி பெறுகிறார்கள்.

எங்கள் பிராண்ட் தமிழகம் முழுவதும் வெற்றி பெற்று இருக்கிறது.  நீங்கள் சொன்னது போல நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கு அது ஒரு காரணம்.  இதனாலேயே எங்கள் பிராண்ட் பிரான்சைஸ் கேட்டு நிறையப் பேர் எங்களை அணுகுகிறார்கள்.  அனைவருக்குமே நாங்கள் அவ்வளவு சீக்கிரம் பிரான்சைஸ் கொடுத்து விடுவதில்லை.  அவர்களிடம் இருக்கும் முழுமையான சர்வீஸ் மைண்ட், அபாகஸ் குறித்த திறன், தெளிவு ஆகியவற்றைப் பார்க்கிறோம். அதற்குப் பிறகு அவர்களுக்கும் குறிப்பிட்ட காலம் பயிற்சி வழங்குகிறோம். மூன்றாவது கட்டமாகத்தான் பிரான்சைஸ் வழங்குகிறோம்.  இதன் மூலமாக மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறோம். இதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம் என்கிறார் வைரமணி.

வைரமணி போலவே அவர்களிடம் பயிற்சி பெறும் மாணவர்களும் வைரமாக ஜொலிக்க ஆளுமைச் சிற்பி வாழ்த்துகிறது. =