பிரபஞ்சம் காப்போம் – 03

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

நாம் நீல கிரகத்தில் வாழ்கிறோம். யோசிக்கிறீர்களா? பூமியின் மேற்பரப்பில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதியில் கடல் வியாபித்திருக்கிறது. மேலும் பூமியின் 97 சதவிகிதத்துக்கும் அதிகமான தண்ணீரை அது கொண்டுள்ளது. கடல்கள் நமக்கு உணவளிக்கின்றன, நமது காலநிலையை ஒழுங்குபடுத்துகின்றன, மேலும் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் கடல் மற்றும் கடலோர பல்லுயிரியலை நம்பியுள்ளனர். என்றாலும் கடல்மீது நமக்குக் கரிசனம் இல்லை. மாசுபடுத்திக்கொண்டே இருக்கிறோம்.

கடல் மாசுக்குக் காரணம்

விவசாயக் கழிவுகளாக வரும் பூச்சிகொல்லிகள், சுத்திகரிக்கப்படாத ஆலைக்கழிவுகள், குடியிருப்புக் குப்பைகள் போன்றவை சாக்கடைகள், கழிவுநீர் வாய்க்கால்கள், ஆறுகள் மூலம் கடலை அடைகின்றன. கடல் மாசுபாட்டில் 80 சதவிகிதம் நிலம் சார்ந்த செயல்பாடுகளால் ஏற்படுகின்றன. கப்பல்களின் எண்ணெய் கசிவுகளும், கடலில் கொட்டப்படும் ஆபத்தான இரசாயன கழிவுகளும், அதிகப்படியான மீன்பிடித்தலும் கடல் மாசினை ஏற்படுத்துகின்றன. (ஐ.நா.வின் உணவு – வேளாண்மை அமைப்பின் (FAO) அறிக்கையின்படி, உலகின் கடல் வளங்களில் அதிகப்படியாகவே 30 சதவிகிதம் சுரண்டப்பட்டுவருகின்றன). மேலும் காலநிலை மாற்றமும், ஆழ்கடல் சுரங்கமும் கடல் மாசிற்குக் காரணமாகின்றன. ஆழ்கடல் சுரங்கம் என்பது ஒரு புதிய கனிம மீட்புச் செயல்முறையாகும், இது ஒப்பீட்டளவில் புதிய வகைச் சுரங்கம் என்பதால், அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. ஆனால் ஆழ்கடல் சுரங்கச் செயல்பாடும் தீங்கு விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. கடல் மாசுபடுவதைக் கணக்கிட்ட சமீப ஆய்வு, 40 சதவிகித அளவில் கடல் மாசடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய சரிபாதி மக்கள் கடற்கரை அருகிலேயே வாழ்பவர்கள் என்பதால், கடல் மாசுபாடு என்பது மனிதவாழ்விற்கு மிகப்பெரிய மிரட்டலாகும்.

பிளாஸ்டிக் பயங்கரம்

கடல் மாசுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கியக் காரணம். கடலில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளில் 80% நிலத்திலிருந்து வருகிறது, 20% கடலில் பயணிக்கும் கப்பல்களிலிருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கின்றன. 2030க்குள் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) கணித்துள்ளது. கடலில் பிளாஸ்டிக் மாசைக் கொட்டுவதில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் என்பது வேதனைக்குரியது. பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டி கடலை மாசுபடுத்தும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் (356,371 மெட்ரிக் டன்). இந்தியா (126,513 மெ.டன்), மலேசியா (73,098 மெ.டன்), சீனா (70,707 மெ.டன்), இந்தோனேசியா (56,333 மெ.டன்), மியான்மர் (40,000 மெ.டன்), பிரேசில் (37,799 மெ.டன்), வியட்நாம் (28,221 மெ.டன்), வங்கதேசம் (24,640 மெ.டன்), தாய்லாந்து (22,806 மெ.டன்) முன்னணியில் உள்ளன.

இதில் முரண்பாடு என்னவென்றால், இந்த நாடுகள் பிளாஸ்டிக்கை அதிகம் பயன்படுத்துவதில்லை, ஆனால் அதே நேரத்தில் இந்த நாடுகளில் தரமான கழிவு மேலாண்மை அமைப்பு இல்லை. ஆய்வின்படி, சிறிய புவியியல் பகுதி, நீண்ட கடற்கரை, அதிக மழை மற்றும் மோசமான கழிவு மேலாண்மை அமைப்புகளைக் கொண்ட நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளைக் கடலில் கொட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக, மலேசியாவை விடச் சீனா 10 மடங்கு பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், மலேசியாவின் மொத்த பிளாஸ்டிக் கழிவுகளில் 9% கடலுக்குச் செல்கிறது, சீனாவின் 0.6% உடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகம்.

கொலையும் தற்கொலையும்

கடலுக்குள் புகும், பிளாஸ்டிக்குகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தூளாகிவிடும். இதில் 5 மி.மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட மைக்ரோ பிளாஸ்டிக் என்னும் நுண்ணியப் பிளாஸ்டிக்குகளை மீன்கள், ஆமைகள் போன்ற கடல் உயிரினங்கள் உண்கின்றன. இவை அவற்றின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியன் பறவைகள், ஒரு லட்சம் கடல் பாலூட்டிகள் மற்றும் எண்ணற்ற மீன்கள் கொல்லப்படுகின்றனவாம். சுமார் 51 டிரில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கடலில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மனித ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கத்தை நாம் இன்னும் முழுமையாக மதிப்பிடவில்லை.

கடந்த வருடம் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், அங்குப் பிடிக்கப்படும் மீன்களில் மூன்றில் ஒரு மீனின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பிளாஸ்டிக் அதன் குடலிலேயே தங்கிவிடுகின்றன. அந்த மீன்களை நாம் சாப்பிடும் போது, அந்தப் பிளாஸ்டிக் நம் வயிற்றுக்குள் போகிறது.

“மீன்களின் குடலைத் தான் நீக்கிவிடுகிறோமே?” என்று கேட்கலாம். சில மீன்களின் குடலில் பிளாஸ்டிக் செரித்தாலும், அந்தப் பிளாஸ்டிக்கின் ரசாயனங்கள் அதன் உடலில் தங்கும். அதை மனிதர்கள் சாப்பிடும் போது, அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். தற்போதைய நிலை தொடர்ந்தால், 2050இல் 99 சதவிகிதக் கடற்பறவைகள் பிளாஸ்டிக் சாப்பிட்டிருக்கும். மேலும், கடலில் மீன்களின் எண்ணிக்கையைவிடப் பிளாஸ்டிக் குப்பைகள் தான் அதிகமிருக்கும்.

நாம் கொலையும் செய்கிறோம். எப்படி என்கிறீர்களா? நாம் வீசியேறிந்து கடலில்சேரும் பிளாஸ்டிக் கவர் ஒரு ஆமையின் முகத்தில் சிக்குகிறது என வைத்துக் கொள்வோம். மூச்சுத் திணறி அந்த ஆழ்கடலில் அமைதியாய் மரணித்து விடும். இது கொலை. அடுத்ததாக, பிளாஸ்டிக்குகளைச் சாப்பிடும் மீன்களை, அதன் ரசாயனங்களோடு நாம் சாப்பிடுகிறோம். இது தற்கொலை.

பாதிப்புகள்

கடல் மாசால் யூட்ரோஃபிகேஷன் (தூர்ந்து போதல்) ஏற்படும். யூட்ரோஃபிகேஷன் என்பது மிதமிஞ்சிய தாவர வளர்ச்சியால் (Algae) நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றமாகும். இது தண்ணீரின் தரத்தை மாற்றித் தீவிரமான கார, அமிலத் தன்மை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைகிறது. யூட்ரோஃபிகேஷன், மீன் உள்ளிட்ட நீரில் வாழும் மீன் உள்ளிட்ட சிறுஉயிரினங்கள், மற்றும் சிப்பி ஆகியவற்றுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. ஜெர்மனியில் உள்ள ஜியோமர் ஹெல்ம்ஹோல்ட்ஸ் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தின், கடல்சார் உயிர்வேதியியல் பேராசிரியரான ஆண்ட்ரியாஸ் ஓஷ்லீஸ் கூறுகையில், “கடல் அமிலமயமாக்கலை விட ஆக்ஸிஜனேற்றம் ஒரு பெரிய பிரச்சனையாகும்” என்கிறார். விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில், வங்காள விரிகுடா உட்பட ஐந்து கடல்கள் யூட்ரோஃபிகேஷன் மூலம் மிகவும் ஆபத்தில் உள்ளன என்கின்றனர்.

கப்பல்கள் ஏற்படுத்தும் எண்ணெய்க் கசிவு பவளப்பாறைகளைப் பலவீனப்படுத்துகிறது. எண்ணெய்க் கசிவானது கடல் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்போது, சூரிய ஒளி கடல் தாவரங்களை அடைவதைத் தடுக்கிறது மற்றும் ஒளிச்சேர்க்கை செயல்முறையைப் பாதிக்கிறது. தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் உள்ளடக்கத்தைக் குறைக்கிறது. கடலில் உள்ள பெரும்பாலான குப்பைகள் சிதைவடையாமல் பல ஆண்டுகளாகக் கடலில் இருக்கும். இதன் காரணமாகவும், ஆக்ஸிஜன் அளவு குறையும். இதன் விளைவாக, திமிங்கலம், ஆமைகள், சுறாக்கள், டால்பின்கள், போன்ற கடல் விலங்குகள் நீண்ட காலம் உயிர்வாழும் வாய்ப்பும் குறைகிறது.

பூச்சிக்கொல்லிகளின் இரசாயனங்கள் கடல்வாழ் விலங்குகளின் கொழுப்புத் திசுக்களில் குவிந்து, அவற்றின் இனப்பெருக்க அமைப்பில் பாதிப்புக்கு வழிவகுக்கும். சிறிய விலங்குகள் வெளியேற்றப்பட்ட இரசாயனங்களை உட்கொள்கின்றன, பின்னர் அவை பெரிய விலங்குகளால் உண்ணப்படுகின்றன, இது முழு உணவுச் சங்கிலியையும் பாதிக்கிறது.

கடலின் தேவை

கடல் என்பது நமது உயிர்க்கோளத்தின் உயிர்நாடி. மழைக்கு மிக முக்கியக் காரணம் கடல்தான். அதன் சுழற்சியால் மழை கிடைக்கிறது. கடலைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. கடலை நாம் எந்த அளவு நன்றாகப் பராமரிக்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு நோயற்ற வாழ்வையும், உணவையும், தொழிலையும் மற்றும் சுற்றுலா என்ற பெயரில் மகிழ்ச்சியையும் திரும்பத் தருகிறது. நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனின் பெரும்பகுதியைக் கடல்களே உருவாக்குகின்றன; கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கின்றன. ஆயிரக்கணக்கான மீன்பிடி, கடலோரச் சமூகங்களின் வாழ்வாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் இன்றியமையாதவையாக உள்ளன.

மீன்வளம், சுற்றுலா, கனிமங்கள், மருந்துகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற பல பொருளாதார நன்மைகளுடன், பெருங்கடல்களின் மொத்த வருமானம் ஆண்டுக்கு 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது உலகின் 7ஆவது பெரிய பொருளாதாரத்திற்குச் சமம். ஊட்டச்சத்து, மருந்துகள், கனிமங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைக் கடல் வழங்குகிறது. நமது கடல்கள் தான் அசல் “சூப்பர் – நெடுஞ்சாலை” ஆகும், இது பொருளாதாரங்களை ஒன்றாக இணைக்கிறது மற்றும் உலகம் முழுவதும் பொருட்களையும் மக்களையும் கொண்டு செல்கிறது. மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வெப்பத்தையும், உலகின் கார்பன் உமிழ்வுகளில் மூன்றில் ஒரு பகுதியையும் சேமித்து வைத்துள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் இருந்தும், கடல்களும் அவற்றின் வளங்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றன; பல அச்சுறுத்தல்களை நாள்தோறும் எதிர்கொள்கின்றன.

என்ன செய்யலாம்

நமக்குக் கடலையும், கடற்கரையையும் பாதுகாக்க, சட்டங்களும், திட்டங்களும் உள்ளன. அதனைப் பின்பற்றுவோம். முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு, தொழில்துறை மற்றும் உற்பத்தி, கழிவுகளைக் குறைத்தல், இயற்கையைச் சார்ந்து வாழ்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடைசெய்வதில் தீவிரம் காட்டுதல், மற்றும் கடலை சுத்தப்படுத்த கூட்டு முயற்சியில் உலகளாவிய ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் போன்றவை கடல் மாசடைவதைக் கட்டுப்படுத்தும். கடற்கரையோரங்களில் திட்டமிடப்படும் எந்தவொரு திட்டங்களும் கடலையும் கடற்புரத்தையும் சேதப்படுத்தாமலே இருக்க வேண்டும். கடல் பகுதியில் தொழிற்சாலை, பொழுதுபோக்கு அம்சங்கள், துறைமுகம் அமைப்பது வரை பல விஷயங்களில் அக்கறை கொண்டு செயல் பட வேண்டும்.

கடலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 8 – ஆம் தேதி உலகப் பெருங்கடல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை நாம் கடலைக் காப்பாற்றுவதற்கான பிரச்சார தினமாகக் கொள்வோம். பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளைக் கடலில் கொட்டுவதைத் தடுப்பதற்கான இயக்கத்தை முன்னெடுப்போம். விவசாயிகளைச் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து இயற்கை விவசாய முறைகளுக்கு மாற வலியுறுத்துவோம். நிலம் சார்ந்த மக்களையும், கடல்சார்ந்த மக்களையும் இது உங்கள் பூமி நீங்கள்தான் காக்கவேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். வாரி வழங்கும் கடல் தாயைக் காப்பது நம் கடன். =