சாதனையாளர் பக்கம்

மதுரை ஆர். கணேசன்

 

பெரிதினும் பெரிதான கல்வியுடன் இணைந்த கலை, இரண்டுமே மாணவர்கள் தங்களுடைய இரண்டு கண்களாக பாவித்துக் கொண்டால் வரும் காலத்தில் கல்வியால் சொந்தக் காலில் நிற்கலாம் கலையால் பேரும் புகழும் அடைய முடியும்..!   

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் “..சிலம்பம்..” அரசுப் பள்ளிகளிலிலும் தனியார் இடங்களிலும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இக்கலைகளில் சாதிக்கும் மாணவர்களின் சாதனைகள் எல்லைகளற்றது..! 

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தைச் சேர்ந்த மாணவி M.I.ஃபர்ஹத் ஜபீன் இங்குள்ள முஹம்மது சதக் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்து வருகிறார். சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்திப் பலசாதனைகள் படைத்து வருகிறார். 

2022 நவம்பரில் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் முதல் பரிசு பெற்றுத் தங்கப்பதக்கம் மற்றும் டிசம்பரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதல் பரிசு பெற்றுத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2023 – பிப்ரவரியில் சத்திரக் குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அடுத்து இதே ஆண்டில் ஆகஸ்ட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடை பெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இரட்டைக்கம்பு பிரிவில் முதல்பரிசு தங்கப்பதக்கம் மற்றும் இதே ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டம் சிபிஎஸ்சி, மெட்ரிக்  பள்ளிகளுக்கு இடை யேயான சிலம்பம் போட்டியில் இரட்டைக்கம்பு பிரிவில் முதல் பரிசும் தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

“..இராமநாதபுரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து மூன்று மணி நேரம் நிற்காமல் சிலம்பம் சுற்றியதற்கு கலாம் புக்ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனைச் சான்றிதழ் வழங்கினர். மேலும் மூன்று மணி நேரம் கண்களைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி இரண்டாவது உலக சாதனையும்
2022 – ஆம் ஆண்டில் நிகழ்த்திச் சாதனை படைத்திருக்கிறார்..” என்பது குறிப்பிடத்தக்கது.

சிலம்பக் கலையின் சாதனைகளைப் பாராட்டி மெக்சிகோ தொலசா பல்கலைக்கழகம் சார்பில் யுகலா பாரதி விருது மற்றும் உத்ரா அறக்கட்டளை சார்பில் மண்ணின் மைந்தர் விருது, யோகா அறக்கட்டளைச் சாதனையாளர் விருது, சீமையின் சிங்கப்பெண் உள்பட இதுவரை எட்டு விருதுகள் பெற்றுள்ளார்.

தேசியக் கல்வி தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி “..நம்பிக்கை நட்சத்திர விருது..” வழங்கிக் கௌரவித்திருக்கிறார்.

சிலம்பம் பயிற்சியாளர் மேத்யூ இம்மானுவேல்..

“..எங்களது நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சிப் பள்ளியில் கடந்த மூன்று வருடமாக மாணவி .ஃபர்ஹத் ஜபீன் சிலம்பம் கற்றுக் கொள்கிறார் ஒவ்வொரு முறையும் சொல்லக்கூடிய விஷயத்தை உடனே புரிந்து கொள்கிறார். 

ஒருவேளை தன்னால் முடியவில்லை என்றாலும் தொடர்ந்து பயிற்சியில் கவனமாக கேட்டு அதனைச் செய்து விடுகிறார். மாணவி ஃபர்ஹத் ஜபீன் வீட்டில், இவரது பெற்றோர் விளையாட்டில் ஈடுபட பெரிதும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

பெற்றோர்களின் ஊக்கமும், மாணவியின் தன்னம்பிக்கையும், தைரியமும் தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கின்றன. இன்னும் பல சாதனைகள் படைத்து வாழ்க்கையிலிலும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..”  

மாணவி M.I.ஃபர்ஹத் ஜபீன்..,

“..நான் ஏழாம் வகுப்புத் தேர்ச்சி பெற்று எட்டாம் வகுப்பிற்கு செல்கிறேன்.முதலில் என்னோட அம்மா கூடைப்பந்து, இறகுப்பந்து போன்ற வகுப்பில் சேர்த்து விட்டார்கள். ஆனால் என்னோட கவனமெல்லாம் அருகில் நடக்கும் சிலம்பப் பயிற்சி நடக்கும் களத்திலே இருந்தது.

அப்புறம் எங்க அம்மா என் விருப்பத்தின் படியே நான்காம் வகுப்புப் படிக்கும் போது இராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டார்.

சிலம்ப ஆசான் மேத்யூ இம்மானுவேல் தொடர்ந்து பயிற்சி அளித்தார். நானும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொன்டேன். மாவட்டம் முதல் மாநில மற்றும் தேசியம் ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல பதக்கங்களையும் வென்றிருக்கிறேன் மற்றும் பலவிருதுகளையும் பெற்றிருக்கிறேன்.

எனக்குச் சிலம்பம் மட்டுமின்றி ஒத்தக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், வாள் அடிமுறையும் தெரியும். அத்துடன் தமிழ், ஆங்கிலம், இந்தி, அரபிக் போன்ற மொழிகள் பேசத்தெரியும் மற்றும் கராத்தே, ரோலர் ஸ்கேட்டிங், செஸ், கேரம் கற்றுக்கொண்டு வருகிறேன்.      

சிலம்பம் மாதிரி எல்லாக் கலைகளையும் தன்னம்பிக்கையை விடாமல் பயப்படாமல் கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றியோ தோல்வியோ முதலில் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

எதையும் எதிர்கொள்ளும் மனோதைரியம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிலம்பம் போன்ற கலைகள் கற்றுக் கொள்ளும் போது, நமக்குள் புத்துணர்வும், தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். 

என்னுடைய அனைத்து வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள்  எனது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிலம்ப மாஸ்டர் ஆகீயோர்  தான். இவர்கள் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு எங்க சிலம்ப மாஸ்டர் மாதிரி ஆகணும் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கணும் சிலம்பக்கலையை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கணும் அத்துடன் பணம் வசதி இல்லாவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கணும் மிகவும் முக்கியமாக இந்தக் கலையை அழியாமல் பார்த்துக் கொள்வேன்…”

இப்படி நம்பிக்கையோடு பேசும், பல சாதனைகளை நிகழ்த்தி வரும் சிலம்ப வீராங்கனை மென்மேலும் வெற்றிகள் பல பெற்றுச் சிறக்க ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது.=