சமூகப் பார்வை – 35

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

சிக்கனமும் அதைத் தொடர்ந்த சேமிப்பும் தனிமனிதருக்கும் சரி, நாட்டுக்கும் சரி மிக அவசியம். சேமிப்பானது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. முன்னேற்றத்துக்கு அடித்தளமிடுகிறது. இருப்பினும், நாம் அதை அடிக்கடி மறந்துவிடுகிறோம்.

கடந்த 1924ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் உலகின் பல சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டையொட்டி, சிக்கனம் குறித்து மக்கள் அறிய வேண்டுமென்பதற்காக, உலகச் சிக்கன தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலிய பேராசிரியரான பிலிப்போ ரவிசா இந்தக் கருத்தாக்கத்தை உருவாக்கினார். உலகச் சிக்கன தினம் அக்டோபர் 31ஆம் தேதி என்றபோதிலும், இந்தியாவில் இத்தினம் அக்டோபர் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தனிநபர் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் சேமிப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்தத் தினத்தை நாம் அனுசரிக்கிறோம்.

முக்கியத்துவம்

சிக்கனம் சேமிப்புக்கு வழிகாட்டுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது சேமிப்புகள்தான். பொருளாதாரத்தில், சேமிப்பு என்பது வளர்ச்சி இலக்குகளை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடன் வாங்கிய மூலதனத்தின் மூலம் அடையப்படும் வளர்ச்சியை விட உள்நாட்டுச் சேமிப்பின் மூலம் அடையப்படும் பொருளாதார வளர்ச்சி நிலையானது. சேமிப்பு என்பது நிறைவான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று.. ஒழுக்கமான முறையில் சேமிப்பது மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை வழங்குகிறது. நமது சிக்கனம் பிறரின் பசியைப் போக்கும் வல்லமை கொண்டது. நவீன பொருளாதாரமுறை நம்மிடையே சிக்கனத்துக்கான எண்ணத்தையும், சேமிப்பிற்கான அவசியத்தையும் நினைவூட்டுகிறது. சிக்கனம் என்றால் பணசேமிப்பு என்பதையும் தாண்டி, தண்ணீரில் சிக்கனம், எரிபொருள் சிக்கனம், உணவை வீணாக்காதிருத்தல், மின்சாரத்தில் சிக்கனம் எனப் பலதுறைகளிலும் அவசியமாகிறது.

இந்தியப் பாரம்பரியம்

சேமிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டது இந்தியா. நமது எதிர்காலப் பாதுகாப்புக்காகச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச அளவில் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டு, பல்வேறு வளர்ந்த நாடுகளும் நிதிப் பிரச்சனையால் ஆட்டம்கண்ட போது, நம் நாட்டு மக்களின் அபரிமிதமான சேமிப்பு பழக்கமே இந்தியாவை அந்தப் பிரச்சனையில் இருந்து காப்பாற்றியது.

இந்தியா, சுதந்திரத்திற்குப் பிறகு ஏறக்குறைய இருபது ஆண்டுகள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது. இருப்பினும், 1960களில் இருந்து, சேமிப்புக்கான முயற்சிகள் தொடங்கின. உலக வங்கியின் கூற்றுப்படி, 1960இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேமிப்பு 6 சதவிகிதமாக இருந்தது. இது 1963இல் 9.6 சதவிகிதமாகவும், 1970இல் 11.4 சதவிகிதமாகவும் உயர்ந்தது. 2010இல் தேசிய சேமிப்பு 34.4 சதவிகிதமாகவும் அதிகரித்தது. கடந்த 30 ஆண்டுகளில், இந்திய சேமிப்பாளரின் அணுகுமுறை வியத்தகு முறையில் மாறியுள்ளது.

இந்தியர்களில் சேமிப்பில் 77 சதவிகிதம் வீடு, வயல் போன்ற அசையா சொத்துக்களில் உள்ளது. 7 சதவிகிதச் சொத்துக்கள் வாகனங்கள், கால்நடைகள் மற்றும் விவசாய இயந்திரங்கள் மற்றும் பண்ணை அல்லாத வணிக உபகரணங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. 11 சதவிகிதச் சொத்துத் தங்கத்தில் உள்ளது. மீதமுள்ள 5 சதவிகிதம் நிரந்தர வைப்புகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள், பங்குகள், பரஸ்பர நிதிகள், ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதியக் கணக்குகள் போன்றவற்றில் உள்ளன. இந்திய வங்கிகளின் டெபாசிட், 2017-18ஆம் ஆண்டில் சுமார் ரூ 110 லட்சம் கோடியாக இருந்து, 2020-21 ஆம் ஆண்டில் ரூ 151 லட்சம் கோடியாக உயர்ந்தது.

இந்தியாவில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பெரும்பாலான தனியார் நிறுவன நிரந்தர ஊழியர்கள் தங்களின் ஓய்வுகால வாழ்க்கைக்காக ஏதேனும் ஒருவழியில் சேமிக்கின்றனர். அதற்கு அரசும் உதவுகிறது. அதேபோல, தனியார் நிறுவனங்களில் தாற்காலிக ஊழியர்களாக இருப்பவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் தங்களின் வருவாய்க்கு ஏற்ப ஏதோ சேமித்தே வருகின்றனர். என்றாலும்47% இந்தியர்கள் ஓய்வு காலத்துக்குச் சேமிக்கத் தொடங்கவில்லை என்றும், இது சர்வதேச சராசரியான 46% சதவிகிதத்தைவிட அதிகம்’’ என்றும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் இயங்கி வரும் வங்கி நிறுவனம் ஒன்றின் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

அதிகரிக்கும் செலவினம்

2000க்குப் பிறகு இந்தியர்கள் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் தாராளமாகச் செலவழிப்பது அதிகரித்தது. பிராண்டட் தயாரிப்புகளை வாங்குவது, சுற்றுலா பயணம், அடிக்கடி உணவு விடுதிகளில் உண்பது போன்ற பழக்க வழக்கங்கள் அதிகரித்தன. அமெரிக்கர்களைப் போல இளம் வயதில் கார்கள் மற்றும் பெரிய வீடுகளை வாங்குவதற்கும், வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கவும் ஏன் வங்கிகள் மூலம் கடன் வாங்கக்கூடாது என்ற கேள்வி இளைஞர்களிடம் தற்போது இருக்கிறது. இது ஒரு ஆபத்தான போக்கு. அக்டோபர் 2008 முதல் மார்ச் 2009 வரை கணிசமான நடுத்தர வகுப்பினர் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாகத் தங்கள் எதிர்காலம் குறித்துப் பயந்து, தங்கள் EMI கடன்களைக் குறைக்கச் சொத்துக்களை விற்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்தியாவில் தனிநபரின் செலவு 1960 இல் 260 அமெரிக்க டாலராக இருந்தது. இது 2000 இல் 489 டாலராக ஆக உயர்ந்தது, அதன் பிறகு அது 2016இல் 1013 ஆக 107 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த 16 ஆண்டுகளில் நுகர்வோர் செலவு முந்தைய 40 ஆண்டுகளில் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2020 மார்ச் மாதத்திலிருந்து 2021க்கு இடைப்பட்டக் காலத்தில் கடன் வியத்தகு அளவில் வளர்ந்தது. 250 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டதோடு 160 மில்லியனுக்கும் அதிகமான பேரைக் கடும் வறுமையில் தள்ளியது.

அதேபோல 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் குடும்ப சேமிப்புகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. அதாவது  கடந்த நிதியாண்டில் 7.2 சதவிகிதமாக இருந்த குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு தற்போது 5.1 சதவிகிதமாக சரிந்துள்ளது. அதே போல்,  குடும்பங்களின் கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்புகள் கடந்த நிதியாண்டில் (2021-22) 3.8 சதவிகிதமாக இருந்தது. தற்போது (2022-23) அது 5.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கல்வி சார்ந்த பணவீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 11 முதல் 12% வரை  உயர்ந்துள்ளது.  செலவழிக்கவேண்டியதுதான். அதற்காக மேற்குலகின் சுலபமாகச் செலவழிக்கும் நுகர்வுக் கலாசாரத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது.

மேலும், குறைந்த தனிநபர் வருமானம், மோசமான செயல்திறன் மற்றும் பொதுத்துறையின் குறைவான பங்களிப்பு, கிராமப்புறத்துறையின் சேமிப்புத் திறனை முழுமையாகப் பயன்படுத்தாதது. போன்றவை இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைவதற்கான கூடுதல் காரணங்கள்.

வருமானம் குறைவாக இருப்பவர்கள்தான் சிக்கனமாக வாழ வேண்டும் என்றல்ல. எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகளை முறையாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இதைத்தான் “அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். (479)” என்கிறார் வள்ளுவர். இன்றைய சூழலில் சேமிப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசவேண்டியது அவசியமாகிறது.

சேமிப்புக்கான திட்டமிடல்

(1) குடும்பத்துக்கு ஓராண்டுக்கு ஆகும் முக்கியச் செலவுகளைப் பட்டியலிடுங்கள். குழந்தைகளின் கல்விக் கட்டணம், சொத்து வாங்குவது, திருமணம் போன்ற சுப நிகழ்வுகள், குடும்பம் நடத்த ஆகும் மாதாந்திர செலவுகள் ஆகியவற்றை அதில் எழுதுங்கள். அதனை உங்கள் வருமானத்துடன் தொடர்புபடுத்திப் பாருங்கள். அதில் தேவையற்ற செலவுகளை நீக்குங்கள்.

(2) உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட், “செலவுக்குப் பிறகு மிச்சமிருப்பதைச் சேமிக்கலாம் எனக் கருதாதீர்கள். சேமித்த பிறகு மிச்சமிருப்பதைச் செலவிடுங்கள்” என்று தன் பொருளாதார வெற்றிக்கான காரணத்தைச் சொல்வார். அதாவது நமது முதல் செலவே சேமிப்பாக இருக்க வேண்டும். மாதந்தோறும் வருமானத்தில் குறைந்தபட்சம் 20 சதவிகிதத்தைச் சேமிக்கத் திட்டமிடுங்கள்.

(3) சில நேரங்களில் நமது வருவாயும், அதன்மூலம் உருவாக்கப்படும் சேமிப்பும் நமது தேவைகளுக்குப் போதுமானவையாக இல்லாமல் போகலாம். அப்போது நாம் அதிகச் சேமிப்புக்காகக் கூடுதல் உழைப்பையும், திறனையும் செலவிடவேண்டி இருக்கும். அதற்கும் தயாராகுங்கள்.

(4) மருத்துவம் உள்ளிட்ட எதிர்பாராத செலவுகளுக்காகக் குறைந்தபட்சம் ஆறு மாத வருமானத்தை அவசரகால நிதி என்ற பெயரில் தனியாக வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருங்கள்.

(5) ஒரு செலவைச் செய்வதற்கு முன் அது அவசியமா, அது தேவையா என யோசித்துப் பிறகு செலவு செய்யுங்கள்.

(6) பணத்தைச் சேமித்துப் பெருக்க நினைப்பவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்தல் அவசியம். உயிர்காப்பு மருத்துவம் போன்ற தவிர்க்க இயலாத தேவைகளுக்காக அன்றி வேறு தேவைகளுக்காகச் சேமிப்பில் கை வைக்கக்கூடாது.

எது சரியான சேமிப்பு

(1) எந்த முதலீட்டில் அதிகப் பாதுகாப்பும் அதிக வட்டியும் வருகிறதோ அதில் சேமிக்கத் தொடங்க வேண்டும். (2) நாம் சேமிக்கும் திட்டமானது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவன வழிமுறையாக இருக்கவேண்டும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுத் தவறான நிறுவனங்களில் முதலீடு செய்வது தவறு. (3) மூன்று மாதத்துக்கு ஒரு முறை வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து வரவேண்டும். நாம் சேமிப்புச் செய்து வரும் வங்கி, நிறுவனங்களின் போக்கினைக் கவனிக்கவேண்டும். இதற்கேற்ப நமது முதலீடுகளில் உரிய மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும். (4) நாம் சேமிக்கும் பணத்தின் வட்டியானது, ஆண்டுப் பண வீக்க விகிதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். இன்றையத் தேதிக்கு நமது சேமிப்புக்கு வட்டியானது குறைந்தபட்சம் 7 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் வகையில் நமக்கான சேமிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். (5) நாம் சேமிக்கும் வழிமுறைகள் ஒரே ஒரு திட்டத்தை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது. வங்கியில் தொடர் வைப்பு, மாதச் சீட்டு முறை, பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர திட்டத்தில் சேமிப்பது, வருங்கால வைப்பு நிதியில் சேமிப்பது, நகைச் சேமிப்புத் திட்டம் எனப் பல்வேறு முறைகளில் பிரித்துச் சேமிக்க வேண்டும்.

சேமிப்புப் பழக்கத்தை உண்டாக்குதல்

(1) குழந்தைகளுக்குப் பணத்தின் மதிப்பைச் சிறுவயதிலிருந்தே சொல்லித்தரவேண்டும்.

(2) குழந்தைகள் பெயரில் சேமிப்புக் கணக்கை வங்கியில் ஆரம்பித்து, அதனை அவர்களே நிர்வகிக்கச் செய்யலாம்.

(3) வீட்டுக்காகப் பொருட்களை வாங்கக் கடைகளுக்குச் செல்லும் போது, குழந்தைகளிடம் பணத்தைக் கொடுத்து அவர்களையே பொருட்களை வாங்க உதவலாம். இது அவர்களிடையே பொறுப்புணர்ச்சியைக் கூட்டும்.

 சேமிப்புப்பழக்கம் நமக்குத் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உற்சாகமான அடுத்தகட்ட நகர்வுக்கு வழிவகுக்கும். எனவே… சேமியுங்கள். =