திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

சமூகப் பார்வை – 33

ந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமனுக்கு ஒரு அழைப்பு வந்தது, “உங்களைப் பாரத ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளோம், குறிப்பிட்ட தேதியில் நீங்கள் நேரில் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்” என அதில் குறிப்பிட்டிருந்தது. அதற்குச் சர்.சி.வி.ராமன் “நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தேதியில் என்னிடம் படிக்கும் மூன்று மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகளைச் சமர்ப்பிக்க உள்ளார்கள். எனவே அன்றைய தினம் நான் அவர்களுடன் இருக்க வேண்டி உள்ளது” என்றார். மாணவர்கள் மீது ஆசிரியர் கொண்ட அன்பு இது. உலகில் முன்னேறிய பத்து நபர்களிடம் “நீங்கள் இவ்வளவு உயர்வு பெற்றதன் காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்” என்றார்கள். அதில் எட்டு பேர் “எங்கள் உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் எங்களது ஆசிரியர்கள் தான் என்றார்கள். இது ஆசிரியர் மீது மாணவர்கள் கொண்டிருந்த மதிப்புக்கு அடையாளம். ஆசிரியர் – மாணவர் உறவு என்பது இப்படித்தான் இருந்தது. ஆசிரியர் மீது மாணவரும் மாணவர்கள் மீது ஆசிரியரும் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் பணி என்பது வேலைக்குச் செல்வதற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பணி அல்ல. சமூகத்துக்குத் தகுதியான, ஒழுக்கமும், அறநெறியும் சார்ந்த மாணவர்களை உருவாக்கும் உன்னதப் பணி. ஆசிரியர் பணியினை வேலை என்று சொல்வதை விட வேள்வி என்று சொல்லலாம். அது மாபெரும் தொண்டு, மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். ஆளுமையுடன் கூடிய தனிநபரின் எதிர்காலத்தினை வடிவமைக்க ஆசிரியரால் மட்டுமே சாத்தியம். மாணவர்களின் மனதில் எப்போதும் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி உற்சாகப்படுத்துபவராகவும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கிரியா ஊக்கிகளாகவும் ஆசிரியர் திகழ்கிறார்.

அறப்பணி

 ஒரு ஆசிரியரிடம் 10 மாணவர்கள் படித்து வந்தார்கள், அவர்களில் ஒரு மாணவர் திருடும் பழக்கம் உள்ளவர், ஏனைய ஒன்பது பேரும் அதை ஆசிரியரிடம் தெரிவித்தார்கள். மேலும் அந்த மாணவரை வகுப்பிலிருந்து அனுப்பிவிட வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு ஆசிரியர் அந்த மாணவரை வகுப்பிலிருந்து அனுப்ப முடியாது என்று சொன்னார். ஏனைய ஒன்பது மாணவர்களும் அவரை அனுப்பவில்லை என்றால் நாங்கள் வகுப்பை விட்டுச் செல்கிறோம் என்றார்கள். அதற்கு ஆசிரியர் நீங்கள் தாராளமாகச் செல்லலாம் என்றார். திருடும் பழக்கம் உள்ள மாணவரை அனுப்பாமல் எங்களை அனுப்புகிறீர்களே என்றார்கள் மாணவர்கள். அதற்கு ஆசிரியர், நான் கற்றுக் கொடுத்த கல்வியின் மூலம் நீங்கள் எது நல்லது, எது கெட்டது என்பதைத் தெரிந்து கொண்டீர்கள். ஆனால் இந்தத் திருடும் பழக்கம் உள்ள மாணவர் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. எனவே தான் அவரை அனுப்பமுடியாது. அவர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது” என்றார். இதுதான் ஆசிரியரின் அறப்பணி.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினார். அதில், “புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்கக் கற்றுத் தாருங்கள்.ஏமாற்றுவதை விடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள்.

 உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குப் புரிய வையுங்கள். போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், வெற்று புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள். சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதே வேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான் இதில் உங்களுக்குச் சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். என் அன்பு மகன் மிகவும் நல்லவன். நன்றி !” என எழுதியிருந்தார் லிங்கன். ஆசிரியர் மீது ஆபிரகாம் லிங்கன் கொண்ட நம்பிக்கை வார்த்தைகளாக வெளிப்படுகிறது. ஆசிரியரால் இதெல்லாம் செய்யமுடியுமா என்றால் அறிஞர் எமர்சன் சொல்வார் “ஆசிரியர் என்பவர் கடினமான விசயங்களை எளிதாக்கக்கூடிய ஒரு நபர்” என்று.

 இன்றைக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்து வரும் சில தகவல்கள் ஆரோக்கியமானதாக இல்லை. இதனால் ஒட்டுமொத்தமாக ஆசிரியர் சமூகமோ, ஒட்டுமொத்தமான மாணவர் சமூகமோ தங்களின் இயல்புத்தன்மையை இழந்துவிட்டது எனக் கூறமுடியாது.

யாருக்கு இழப்பு ?

இன்றைக்கு ஆசிரியர் – மாணவ உறவு முறையில் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இன்றைய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உரிய மரியாதைத் தருகிறார்களா என யோசிக்கவேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களுக்குப் பாதகமொன்றுமில்லை. நம் குழந்தைகளுக்குத் தான் இழப்பு என்பதைப் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். எனக்குக் கல்லூரியில் வகுப்பெடுத்த ஆசிரியர்களுடன் நான் (கல்லூரி வாழ்க்கையில் 40 ஆண்டுகளைக் கடந்த பின்னும்) இன்னும் தொடர்பில் இருக்கிறேன். அடிக்கடி பேசிக்கொள்கிறோம். நான் வாட்ஸ்அப்பில் ஒரு நாள், “காலை வணக்கம்” பதிவிடவில்லையென்றால்கூடப் பகலில் என்னை அழைத்து, “என்னடா.. உடம்புக்கு ஒன்றுமில்லையே..” என அக்கறையோடு கேட்கிறார்கள். எண்பது வயதினைத் தாண்டிய ஆசிரிய பெருமக்கள். இன்றைய சூழலில் பெற்ற பிள்ளைகள்கூட விசாரிப்பதில்லை.

நான் தமிழில் எழுதிய ஒரு நூலை என் ஆங்கிலப் பேராசிரியர் படித்துவிட்டு “நல்லா இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் கொண்டு வரலாம். அவ்வாறு வந்தால் தேசிய அளவில் பேசப்படும்” என்றார். அதற்கு நான், “மொழி பெயர்ப்பு செய்யும் அளவுக்கு எனக்கு ஆங்கிலப் புலமை கிடையாதே” என்றேன். சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டார். அடுத்தச் சில மாதங்களில் 400 பக்க அந்த நூலை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டு, என்னை உயரிய இடத்துக்கு நகர்த்தினார். அந்த நூல் சிறந்த நூலுக்கான விருதினையும் பெற்றது. வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நமக்கு உந்துதலாக, ஆற்றலாக, திறனாக ஒரு ஆசிரியர் என்றைக்கும் இருப்பார். ஆசிரியர்கள் என்றைக்கும் நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள்.

ஆசிரியர் விரும்பும் மாணவர்

 இன்றைய உங்கள் கல்வித் தகுதி அல்லது தொழில்முறை இருப்பை யோசித்துப்பார்த்தீர்களேயானால் ஆசிரியர்கள் இல்லாத வாழ்க்கை சூனியம் என்பதை உணரமுடியும். “நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றான் மாவீரன் அலெக்சாண்டர். ஒவ்வொருவர் வாழ்விலும் இதுதான் நிஜம். ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட பலம் மற்றும் சாதனைகளைப் பாராட்டுவதும் அங்கீகரிப்பதும், அவர்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் தன் மாணவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்றும் கற்பனை வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து உலகளாவிய கல்வியாளர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். அதனை, ஆசிரியர் மாணவர்களுக்குச் சொல்லும் “ஸ்டைலில்” சொல்லவேண்டுமானால்.. மாணவர்களே!…

 இலக்குகளைத் தெளிவாக அமையுங்கள்: நீங்கள் என்ன படிக்க விரும்புகிறீர்கள்? அதில் எத்தகைய வெற்றியினை எட்ட நினைத்துள்ளீர்கள் என வரையறை செய்யுங்கள். இது உங்களுக்கு உங்கள் கல்வி குறித்த ஒரு தெளிவினை ஏற்படுத்தும்.

துல்லியமாகத் திட்டமிடுங்கள்: இலக்கினை வகுத்துக் கொண்டால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. முதல் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்பது இலக்கு என வைத்துக் கொள்வோம். அதை அடைவது எப்படி எனத் திட்டமிடவேண்டும்.

ஆய்வுப் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்: திட்டமிடல் என்கிறபோது வாசிப்பது மட்டுமல்ல அதனை நினைவில் கொள்வது எப்படி? அது சார்ந்து வேறு என்ன புத்தகங்களைப் படிக்கலாம் என்பது போன்ற நுட்பங்களைக் கண்டறியுங்கள்.

வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்: வகுப்பில் சுறுசுறுப்பாகப் பங்கேற்பது, பாடத்தை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

தேவைப்படும்போது உதவியை நாடுங்கள்: புரிந்துகொள்வதில் உங்களுக்குச் சிரமம் ஏற்படும்போது ஆசிரியர்கள், வகுப்பு தோழர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறவும்.

நேரத்தைப் புத்திசாலித்தனமாக நிர்வகியுங்கள்: எந்த வெற்றிக்கும் நேர மேலாண்மை முக்கியமானது. படிப்பதற்கான அட்டவணையை உருவாக்கவும், தள்ளிப்போடுவதைத் தவிர்க்கவும், உங்கள் படிப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் அபிமான நடிகரின் திரைப்படத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.

சுய ஊக்கத்துடன் இருங்கள்: உங்கள் படிப்பில் கவனம் செலுத்த சுய ஊக்கத்தையும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். இது குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை அமைக்க உதவுகிறது.

ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்: உங்கள் உடல் மற்றும் மன நலம் உங்கள் கல்வி செயல்திறனை மாற்றியமைக்கும். எனவே, போதுமான அளவு தூங்குங்கள், நன்றாகச் சாப்பிடுங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஈடுபாட்டுடன் பங்கேற்பை அளியுங்கள்: பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்ட கல்வி நிகழ்வுகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கவும். பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள அமைப்புகளில் (ஸ்கவுட், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ரத்ததான கழகம் போன்றவை) இந்த நடவடிக்கைகள் தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன, உங்கள் திறன்களை மேம்படுத்துகின்றன,

நேர்மறையாகவும் விடாமுயற்சியுடனும் இருங்கள்: கல்விசார் சவால்கள் தவிர்க்க முடியாதவை, ஆனால் நேர்மறையாக இருப்பது முக்கியம். உத்வேகத்துடன் இருங்கள், கவனம் செலுத்துங்கள் மற்றும் சிரமங்களை விடாமுயற்சியுடன் எதிர்கொள்ளுங்கள்.

ஒரு சிறந்த மாணவராக இருப்பது பாடபுத்தகங்களால் மட்டுமல்ல, வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களின் மூலம் தனிப்பட்ட குணங்களின் தொகுப்பை வளர்ப்பதும் ஆகும். இந்தக் குணங்கள் மாணவர்களின் கல்விப் பயணத்தில் சிறந்து விளங்க உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் அவர்களைத் தயார்படுத்துகின்றன. ஆசிரியர்களின் கற்பனையில் இருக்கும் மாணவராக மாறுவதில் உங்களுக்குத் தயக்கமிருக்க வாய்ப்பில்லை. காரணம், ஆசிரியர் கனவு என்பது அவருக்கானது அல்ல. உங்களைச் சார்ந்தது.. உங்கள் எதிர்காலத்திற்குரியது.