சமூகப் பார்வை – 32


திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

மலாலா’… இது வெறும் பெயர் அல்ல. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மந்திர வார்த்தை. பாகிஸ்தானில் குறிப்பிட்ட பகுதியில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல, தலிபான்கள் விதித்த தடையை மீறி பள்ளிக்குச் சென்ற மலாலாவுக்கு கிடைத்த பரிசு துப்பாக்கிக்குண்டுகள்.

 “அக்டோபர் 2012இல், நான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு பள்ளி பேருந்தில் திரும்பும்போது, முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய ஒருவர் பேருந்தில் ஏறி, “யார் மலாலா?” என்று கேட்டார். அவர் என் தலையின் இடது பக்கத்தில் சுட்டார். பத்து நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள ஒரு மருத்துவமனையில் நான் எழுந்தேன்”.. எனத் தனக்கு நேர்ந்த கொடூரத்தை மலாலா பதிவிட்டுள்ளார். பல கட்ட சிகிச்சைக்குப் பிறகு மீண்ட மலாலா, முதலில் பேசிய வார்த்தை “உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும்” என்பதுதான். இதையே ஐ.நா.அவையிலும் கோரிக்கையாக வைத்தார். மலாலாவின் பிறந்ததினத்தை (சூலை 12) “மலாலா தினம்” என அறிவித்தது ஐ.நா. டிசம்பர் 2014இல், மலாலா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார், மிகவும் சிறுவயதில் அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார். 2015ஆம் ஆண்டில், நாசா, சிறுகோள் ஒன்றுக்கு மலாலா என்று பெயர் சூட்டியது. 2017இல் ஐக்கிய நாடுகளின் அமைதி தூதராக நியமிக்கப்பட்டார் மலாலா. 2020இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

“இன்றும் உலகளவில் 130 மில்லியனுக்கும் அதிகமான சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போராடி வருகின்றனர். எல்லாப் பெண்களும் கல்வி கற்றவும், அறிவை வளர்க்கவும், வழிநடத்தவும் கூடிய ஒரு உலகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்” என்கிறார் மலாலா. நம்நாட்டில் பெண்கல்வி எப்படி இருக்கிறது..?

இந்தியாவில் படித்தவர்கள்

இன்றைக்கு இந்தியா, பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்குப் பெண் கல்வி மற்றும் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைகளும்தான் காரணமாகும். அதன் விளைவாகத்தான் அரசியல், வணிகம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் இன்று பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ழிஷிளி) தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 77.70% ஆகும். இதில் ஆண்களில் 84.70% பேர் கல்வியறிவு பெற்றவர்கள். பெண்களின் கல்வியறிவு 70.30%. தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு 2019-21 (ழிதிபிஷி-5), 15 முதல் 49 வயது வரையிலான பெண்களில் 71.5% பேரும், ஆண்களில் 87.4% பேரும் கல்வியறிவு பெற்றவர்கள் என்கிறது. தமிழ்நாட்டில் ஆண்கள் 87.9% பேரும் பெண்கள் 77.9 % பேரும் கல்வி கற்றவர்கள். என்றாலும் மக்கள்தொகையில் சரிபாதியாக உள்ள பெண்கள், ஆண்களுக்கு இணையாகக் கல்வியில் இல்லை என்பது வேதனைக்குரியது. வளரும் நாடுகளில், ஆண்களை விடப் பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைவாகவே உள்ளது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

பள்ளிக்கல்வி .

உயர்கல்வியில் இன்றைக்கு சற்றேறக்குறைய ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இடம்பெறுகிறார்கள். ஏஐஎஸ்ஹெச்இ (கிமிஷிபிணி) எனப்படும் அகில இந்திய கணக்கெடுப்பின் 2020-21ஆம் கல்வியாண்டிற்கான அறிக்கை அண்மையில் வெளியான நிலையில், இந்திய அளவில் தமிழகத்திலேயே அதிக அளவு பெண்கள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2020-21 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 34,411 பேர் பிஹெச்டி படிப்பில் சேர்ந்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இதில், 17,443 பேர் ஆண்கள், 16,968 பேர் பெண்கள்.

பள்ளிக்கல்வியை எடுத்துக் கொண்டால் இந்தியாவிலுள்ள 14,89,115 பள்ளிகளில் 12,28,15,680 மாணவியரும், 13,28,49,055 மாணவர்களும் படித்து வருகிறார்கள். தமிழகத்தில் ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 58,801. பள்ளி மாணவ, மாணவியரின் மொத்த எண்ணிக்கை 1,28,30,951. தமிழகப் பள்ளிகளிலும் மாணவர்களை விட மாணவியர் எண்ணிக்கை குறைவு. காரணம், பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கான தடைகள் இன்னும் முழுமையாக அகலவில்லை.

தடைகள்

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் சில இடங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைத்தான் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்வியில் மட்டுமின்றி, உடல்நலம், பொருளாதாரம், குடும்ப நிர்வாகம் போன்றவற்றிலும் பின்தங்கிய நிலையில் பெண்கள் உள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் பெண்களுக்கு இளம் வயதில் கல்வி கற்க வாய்ப்பு அளிக்காததுதான்.

இந்தியாவில் ஆண்-பெண் கல்வி விகிதமானது, மாநிலங்களில் நிலவும் சமூக, பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் வேறுபடுகிறது. நாட்டில், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவ – மாணவியரின் சதவிகிதம் 12.6 ஆக உள்ளது. இதில், மாணவியரே அதிகம். பெண் குழந்தைகள் குடும்பத்தின் சுமையாகக் கருதப்படுகிறார்கள். வறுமை சூழல் நிலவும் குடும்பத்தில் பெற்றோர்கள் தங்கள் மகளைப் படிக்க அனுப்புவதில்லை. வீட்டில் இளைய உடன்பிறப்புகளைக் கவனித்துக்கொள்வதற்கும், வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஏழைக் குடும்பங்களில் மட்டுமல்ல, நடுத்தர வர்க்க குடும்பங்களிலும்கூட “பெரும் செலவு செய்து பெண் குழந்தையைப் படிக்கவைக்கவேண்டுமா?” என்ற கேள்வி, இன்றைக்கும் ஒலிப்பதைக் கேட்கமுடியும். திருமணம் செய்துவைத்தால் தங்கள் கடமை முடிந்துவிடும் என பெற்றோர் நினைக்கிறார்கள்.

திருமணம் அதனைத் தொடர்ந்து கர்ப்பம் போன்றவை பெண் குழந்தைகளின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. யுனிசெஃப் கணக்குப்படி, உலக அளவில், தினமும் 18 வயதுக்குட்பட்ட 39,000 சிறுமிகள் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். சில சமூகங்களில், பெண் பள்ளிக்குச் செல்லவோ அல்லது சில நடவடிக்கைகளில் பங்கேற்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. பெண் குழந்தையின் திறமையும் அறிவும் குடும்பத்தினரால், சமூகத்தால் வீணடிக்கப்படுகிறது. கிராமப்புறப் பெண் குழந்தைகளுக்குக் கல்விக்கான அணுகல் குறைவாகவே உள்ளது. பள்ளிக்குச் செல்வதில் போக்குவரத்துப் பிரச்சனை, பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம் என உள்கட்டமைப்பு வசதிகள் போதாமை போன்றவையெல்லாம் சிறுமிகள், கல்வி பெறுதலுக்கான இடையூறுகளாகும். அனைத்துக்கும் மேலே, “நம்மால் முடியுமா” என்ற பெண்களின் உள்ளார்ந்த தாழ்வுத்தன்மையும் கல்வி வாய்ப்புகளில் இருந்து அவர்கள் விலகுவதற்கு வழிவகுக்கிறது.

இன்றும் பெண் சிசுக்கொலை பரவலாக உள்ளது. கடத்தல், பாலியல் வன்முறை, கருக்கொலை, கொலை, வரதட்சணை கொடுமை போன்ற பல குற்றங்கள் பெண் குழந்தைகளை மையப்படுத்திச் சூழல்வதைக் காணமுடிகிறது. இதையெல்லாம் கடந்து தான் அவர்கள் கல்வி பெறுகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கான இணக்கமான சூழல் முழுமையாக உள்ளது என்று சொல்வதற்கில்லை.

பெண்ணுக்கு கல்வி அவசியம் ஏன் ?

பெண்களின் முதன்மை உரிமைகளில் ஒன்று கல்வி. பெண்களின் கல்வியறிவு அடுத்தத் தலைமுறையைத் தீர்மானிக்கிறது. பெண்கள் கல்வி கற்பது ஒரு சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நல்வாழ்வில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும். தங்களுக்கு இழைக்கப்படும் சமூக அவலங்களையும், நியாயமற்ற நடைமுறைகளையும் எதிர்த்துப் போராடுவதற்குப் பெண்ணுக்கு கல்வியே பிரதான ஆயுதமாகும். அவர்களின் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்துக்கான பாதை கல்வியேயாகும்.

படித்த பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். சம்பாதிக்கின்றனர். இது அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது. மேலும், தனது மற்றும் குடும்பத்தின் ஆரோக்கியத்தில் கரிசனம் கொள்வதற்கும் கல்வி வாய்ப்பேற்படுத்துகிறது.  ‘படித்த பெண்கள் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தைப் பற்றி அதிகம் அறிந்திருப்பார்கள், குறைவான குழந்தைகளைப் பெறுவார்கள். மேலும் அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பார்கள்” என்கிறது உலக வங்கி

படித்த பெண்களுக்கு உலக நடப்பும், தங்கள் உரிமைகளும் தெரியும். எனவே அவர்கள் அரசியலில் பங்கேற்றால் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் தமக்காகவும், சமூகத்துக்காகவும் உழைப்பதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு ஏற்படும். குறிப்பாக அரசியலில் பெண்கள் பங்கேற்பதன் மூலம் பாலின சமத்துவத்தை உருவாக்கும் கொள்கைகளுக்கு வழிவகுக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் படித்த பெண்கள் அதிகச் சுயமரியாதை மற்றும் தங்கள் திறன்களில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். இவர்கள், அதிகச் சுதந்திர உணர்வைக் கொண்டிருப்பதற்கும், பகுத்தறிந்து முடிவுகளை எடுப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். படித்த பெண்களால் தங்கள் சமூகத்தில் நேர்மறையான வளர்ச்சியினை முன்னெடுக்கும் கருத்தினைச் சொல்ல முடியும்.

என்ன செய்யலாம்?

பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்படவேண்டும். பெண் கல்விக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள, அரசின் கொள்கைகள், சமூகத்தின் பங்கேற்பு, ஆகியவற்றை உள்ளடக்கிய பன்முக அணுகுமுறை அவசியம். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், பெண் கல்வியைச் சாத்தியமாக்கலாம்.

கல்வி நிறுவனங்களில் அதிகப் பெண் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஊழியர்களைப் பணியமர்த்துதல் வேண்டும். நிறுவனங்கள், அமைப்புகள் பெண்கள் தொடர்ந்து கல்வி கற்பற்கான சூழலையும் பொருளாதாரத்தையும் வழங்கலாம். இது பெண் குழந்தைகள் கல்வி கற்க தூண்டுதலாக அமையும்.

பள்ளிகளில் வன்முறை மற்றும் சுரண்டலில் இருந்து சிறுமிகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படவேண்டும். பாடங்கள் மற்றும் விளையாட்டுக்கு அப்பாற்பட்டு பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்க மாணவியரை ஊக்குவிப்பது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

மாணவியர் மட்டும் படிக்கும் பள்ளிகளுக்கு நிதி உதவியினை அதிகரிக்கலாம். விடுதிகளுடன் கூடிய பெண்கள் பள்ளிகளுக்குச் சிறப்பு நிதி வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான கல்வியை அளித்தால் இது, மாணவிகளுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளிக்கும். பெண்களுக்கான பாடத்திட்டம், தொடக்கப் பள்ளி அளவில் கூட, ஆண் குழந்தைகளை விட எளிமையானதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். பாடப்புத்தகங்களில் பாலின சமத்துவப் பாடத்திட்டங்கள் இடம்பெற வேண்டும், குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைத் திருமணம், வரதட்சணை போன்றவை பாலின சமத்துவமின்மைக்கான முக்கியக் காரணங்கள். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

“பெண்களுக்குக் கல்வி வேண்டும், ஏனென்றால் கல்வியைப் பேணுவதற்கு` என்ற பாரதிதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுதல் அவசியம்.