சமூகப் பார்வை – 31
திரு.ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
அனைவருக்கும் உணவு” என்று பேசி வந்த நாம், இப்போது உணவுப் பாதுகாப்புக் குறித்துப் பேசும் நிலையில் இருக்கிறோம். ஏன் உணவுப் பாதுகாப்புக் குறித்துப் பேசவேண்டும்? உலகில் 10 பேரில் ஒருவர் அசுத்தமான உணவைச் சாப்பிட்ட பிறகு நோய்வாய்ப்படுகிறார். இதில் ஒவ்வொரு ஆண்டும் 4,20,000 பேர் இறக்கின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பாதுகாப்பற்ற உணவின் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பேற்படுகிறது என உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது. மேலும், பாதுகாப்பற்ற உணவுகளால் வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய்கள் வரை 200 நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உணவுப் பாதுகாப்பு என்றால்..
ஒரு தனிநபரின் வாழ்வாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படை உணவு. சுவாசிக்கக் காற்று எவ்வளவு இன்றியமையாததோ, அதே அளவு உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். அதுவும் பாதுகாப்பான உணவு அவசியம். உணவுப் பாதுகாப்பு என்பது சுத்தமான உணவு என்பது மட்டுமல்ல. அது விரிவான பொருள் தரக்கூடிய சொல்லாடல். “எல்லா மக்களும், எல்லா நேரமும், அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்திற்கேற்ற சத்துள்ள, பாதுகாப்பான மற்றும் போதுமான உணவைப் பெறுவது. இது உடல் ரீதியாகவும், சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எப்போது சாத்தியமாகிறதோ அப்போதுதான் உணவுப் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.” என்று உணவு மற்றும் வேளாண் குழுமம் (Food and Agricultural Organisation) சொல்கிறது.
மேலும் உணவுப் பாதுகாப்பு என்பது உணவு கிடைக்கும் தன்மை, உணவைப் பெறும் தன்மை, உணவை உட்கிரகிக்கும் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. உணவு கிடைக்கும் தன்மை என்பது உணவுப் பொருள்களின் உற்பத்தி, இருப்பு நிலை, இறக்குமதி மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கிடையே உணவுப் பொருள்களைப் பகிர்தல் ஆகியவற்றைப் பொறுத்து அமைகின்றது. உணவைப் பெறும் தன்மை Access of Food) என்பது மக்களின் வாங்கும் சக்தியைப் பொறுத்தது. உணவை உட்கிரகிக்கும் தன்மை (Absorption of Food) என்பது சத்தான உணவுகளை உட்கொள்ளும் தன்மையைப் பொறுத்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது சுகாதாரமான குடிநீர், கழிப்பிட வசதி போன்ற உணவு சாராத காரணிகளையும் (Non-food factory) சார்ந்து இருக்கின்றது என்கிறார்கள் ஆய்வாளர்கள்..
உணவுப் பாதுகாப்பு ஏன் முக்கியம்
பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள், ரசாயனப் பொருட்கள் போன்றவை அசுத்தமான உணவு அல்லது தண்ணீரின் மூலம் உடலுக்குள் நுழைந்து ஆபத்தை விளைவிக்கின்றன. வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பான உணவை போதுமான அளவு உட்கொள்வது அவசியம்.
பாதுகாப்பற்ற உணவு, பெண்கள், குழந்தைகள், மற்றும் புலம்பெயர்ந்தோரை அதிகம் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக உலக அளவில், உணவுப் பாதுகாப்பின்மையை அதிகமாக அனுபவிப்பவர்கள் பெண்களே. உலகெங்கிலும் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இன்னும் அவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கவில்லை, மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை ஆண் பெண் விகிதம் அதிகமாக உள்ளது.
எது நல்ல உணவு
இன்றைக்கு நம் உணவுப்பழக்கமே மாறிவிட்டது. “சுள்”ளென்ற காரத்துடன் தூக்கலான உப்புடன் கூடிய துரித மற்றும் பாக்கெட்டுகளில் நிரப்பப்பட்ட உணவே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. துரித உணவுகளை உட்கொள்வது கிட்டத்தட்ட உலகளாவிய நிகழ்வாகிவிட்டது. இந்தியாவின், துரித உணவுத் தொழில் ஒவ்வொரு ஆண்டும் 40 சதவிகிதம் என்ற அளவில் விரிவடைந்து வருகிறது. இங்கு தனிநபர் ஒருவர் ஆண்டு மொத்த செலவினங்களில் 2.1 சதவிகிதம் துரித உணவுக்காகச் செலவிடுகிறார். இந்தத் துரித உணவுச் செலவுப்பட்டியலில் இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது.
கவர்ச்சிகரமான தோற்றமும் விளம்பரமும் மக்களைத் துரித உணவுகள் பக்கம் ஈர்க்கிறது. ஆனால் இந்த உணவுகள் உடல் நலத்துக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகத் துரித உணவினால் எடை அதிகரிப்பு, உடல் பருமன், மனச்சோர்வு, பசியின்மை, செரிமானப் பாதிப்பு, கார்டியோவாஸ்குலர் பிரச்சனைகள், அதிகக் கொழுப்புச்சத்து, சர்க்கரை நோய், சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் நோய், புற்றுநோய், பல் பாதிப்பு, தோல் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம்.
இந்தியாவில்
உலக மக்கள்தொகையில் 12 சதவிகிதத்தினர் அதாவது 928 மில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைக்கவில்லை என்கிறார்கள். ஒவ்வொரு அக்டோபரிலும் கன்சர்ன் வேர்ல்டுவைடு மற்றும் Welthungerhilfe ஆகிய நிறுவனங்கள் கூட்டாக உலகளாவிய பசி குறியீட்டை (Global Hunger Index) வெளியிடுகிறது.
2022ஆம் ஆண்டில் 121 நாடுகள் அடங்கிய உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் இந்தியாவின் தரவரிசை 107 ஆகும். 2021 இல் இது 101 ஆக இருந்தது..
மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், “உணவு என்பது பசியையோ ருசியையோ மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பற்றியதும் ஆகும்,” என்கிறார். மேலும், “இந்தியாவில் வாழும் 135 கோடி மக்களில், 196 மில்லியன் பேர் தீவிர பசியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். 180 மில்லியன் பேர் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள். 47 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள். 500 மில்லியன் பேர் நுண் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள் மற்றும் 100 மில்லியன் பேர் உணவு தொடர்பான நோய்களால் அவதிப்படுவர்கள்’’ என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் நிகழ்ச்சியில் டாக்டர். ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி குறைவா?
இந்திய மக்கள் பசியால், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படுகிறார்களே, அப்படியென்றால் இந்தியாவில் உணவு உற்பத்தி குறைவாக உள்ளதா என்ற கேள்வி எழலாம். சமீபத்திய ஆண்டுகளில் தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) பரிந்துரைக்கும் உணவு அளவான (Recommended Dietary Allowances), தனிநபருக்கு நாள் ஒன்றிற்கு 420 கிராம் தானியங்கள் மற்றும் 40 கிராம் பருப்பு என்பதைக் காட்டிலும், இந்தியாவில் உணவு தானியங்களின் உற்பத்தி அதிகமாகவே உள்ளது. இருந்தபோதிலும் வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவை தொடர்கின்றன. உணவு உற்பத்தி செய்வதில் உலகில் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் தான், உலகிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் அதிகம்பேர் வாழ்கின்றனர்.
இதற்குக் காரணம் இந்தியாவில், ஏழை -பணக்காரர்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம். இங்கு பெரும் பணக்காரர்களாக இருக்கும் 1 சதவிகிதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவிகிதம் குவிந்திருப்பதாகவும். அடித்தட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை வெறும் 3 சதவிகிதம் சொத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் “ஆக்ஸ்பேம்” ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. போதிய உற்பத்தியிருந்தும், ஏழை மக்கள் வாங்க முடியாத அளவுக்குப் பொருளாதாரம் குறுக்கே நிற்கிறது. இப்படி, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பின் தன்மை முரண்பாடுகளுடன் உள்ளது.
சவால்கள்
உணவு உற்பத்தியின் முக்கிய அங்கம் ஆரோக்கியமான மண். வேளாண்மையில் பயன்படுத்தப்பட்ட அபரிமிதமான இரசாயனங்கள், காடழிப்பு, இயற்கைப் பேரழிவுகள், நிலத்தை முறையற்றவகையில் பயன்படுத்துதல் போன்றவற்றால் மண் பாழாகி, நிலையான உணவு உற்பத்திக்கு ஒரு சவாலாக உள்ளது. அதுபோலக் கடந்த 15 ஆண்டுகளில், பத்துக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான பூச்சி மற்றும் களை தாக்குதல்களை இந்தியா சந்தித்துள்ளது. 2018இல் கிட்டத்தட்ட முழு மக்காச்சோள பயிர் பூச்சிதாக்குதலால் அழிந்தது. இதனால், 2019இல் இந்தியா மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. 2020ஆம் ஆண்டில், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாவட்டங்களில் வெட்டுக்கிளி தாக்குதல்கள் பதிவாகின. மேலும், உணவுப் பாதுகாப்பிற்கான கடுமையான நிர்வாகக் கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. உணவு தானியங்களையும் சமைத்த உணவுகளையும் வீணடிப்பது உலகளாவிய ஒரு வழக்கமாக உள்ளது.
ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் அதன் கூட்டு நிறுவனம் இணைந்து “உலக அளவில் வீணாகும் உணவுகள்” பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகளவில் 93 கோடி டன்கள் அளவிற்கு உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் வீணாகும் உணவின் அளவு ஆண்டுக்கு 6.8 கோடி டன்கள் ஆகும். அமெரிக்காவில் ஆண்டுக்கு 1.9 கோடி டன்களும், சீனாவில் 9.1 கோடி டன்களும் வீணாகின்றன.
ஒருபக்கம் பட்டினியால் மக்கள் வாட, மறுபக்கம் வீணாக்குதல் தொடர்கிறது.
என்ன செய்யலாம்
இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளின் நிலங்களில் உற்பத்தியினைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வேளாண் உற்பத்திப் பொருள்கள் நல்ல விலைக்குக் கொள்முதல் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பயிர்களுக்கும் விலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதத்தில் வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். மேலும், உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், நீர்நிலை மேலாண்மையைத் தீவிரப்படுத்துதல், நானோ யூரியாவைப் பயன்படுத்துதல் மற்றும் நுண்ணீர் பாசன வசதிகளை அதிகரித்தல் போன்றவற்றைக் கடைபிடிக்கவேண்டும். இதனால் குறைந்த செலவில் உற்பத்தி பெருகும்.
நல்ல சுகாதார நடைமுறைகள், உணவு மூலம் பரவும் நோய்களின் தோற்றத்தையும் பரவலையும் குறைக்க உதவுகின்றன. வளர்ந்த நாடுகளில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் உணவுப்பழக்க நோயை அனுபவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் சுத்தமான உணவுப் பொருட்களை வாங்கி வீட்டிலேயே சுகாதாரமான உணவை சமைத்து உண்ண வேண்டும். முக்கியமாகத் தேவைக்கு மட்டுமே உண்டு, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பற்றிக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதும், துரித உணவுகளால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைப் பற்றி அவர்களுக்குப் பள்ளி மட்டத்திலிருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கியமாகிறது. உணவுப் பாதுகாப்பு என்பது தனிநபருக்கு மட்டுமல்ல. நாட்டின் வளமைக்கும் அவசியமானதாகிறது.
(சூன் 7 சர்வதேச உணவுப் பாதுகாப்பு தினம்)