ஐந்து ஆறைவிடப் பெரியது 04
திரு.முகில்
சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பழுப்புக் கரடிகளே, பரிணாம வளர்ச்சி பெற்று, குளிர் பிரதேசத்தில் வாழ்வதற்கேற்ப உடலைத் தகவமைத்துக் கொண்டு துருவக்கரடிகளாக மாறியிருக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தும் செய்தி. வட துருவத்தில் மட்டுமே போலார் கரடிகள் என்னும் துருவக்கரடிகள் என்னும் பனிக்கரடிகள் வாழ்கின்றன. வட துருவத்தை ஒட்டிய கனடா, ரஷ்யா, அலாஸ்கா, கிரீன்லாந்து, நார்வே பகுதிகளில் உறைந்த கடல் பரப்புகளில் மட்டுமே காணக்கிடைக்கின்றன. தென் துருவத்தில் துருவக்கரடிகள் கிடையாது. இப்படி உலகத்தின் உச்சியில் உலவிக் கொண்டிருக்கும் பனிக்கரடிகள் நமக்கு என்னதான் செய்திச் சொல்கின்றன?
பிறக்கும்போது ஒரு பவுண்ட் எடைக்கும் குறைவாகவே இருக்கும். பல் கிடையாது. கண்பார்வை இருக்காது. அது பிறக்கும் சூழலில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி பாரன்ஹீட்டாகக்கூட இருக்கலாம். அம்மா கரடியின் வெதுவெதுப்பான வயிற்றுக்குள் இருந்து உறைபனிச் சூழலில் வந்து பிறக்கும் அந்தப் பனிக்கரடிக் குட்டிகளுக்கு, மிக விரைவிலேயே ஆர்டிக்கின் அசாதாரணச் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் இயற்கையான திறன் உண்டு. தாய்ப் பனிக்கரடி, பனிப்பரப்பில் குகைப் போன்ற அமைப்பை உருவாக்கி குட்டிகளை ஈன்றெடுக்கும். கொடும்பனிக்காலத்தில் பல மாதங்களுக்குக் குட்டிகளைவிட்டு நகராது. உணவு தேடவும் போகாது. பட்டினிதான் கிடக்கும். ஆனால், தனது குழந்தைகளுக்கு அதீதக் கொழுப்புச் சத்து நிறைந்த தாய்ப்பாலைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்தத் தாய்ப்பாசம், அந்தப் பனியைவிடத் தூய்மையானது. குட்டிகள், கிட்டத்தட்ட இரண்டேகால் வயது வரை தாயுடனேயே வாழும்.
வளர்ந்த ஓர் ஆண் பனிக்கரடியின் எடை அதிகபட்சம் 770 கிலோ வரை இருக்கும். பெண் பனிக்கரடியின் எடை 300 கிலோ வரை இருக்கும். உலகில் உலவும் மாமிச உண்ணிகளில், ஆபத்தான விலங்குகளில் அளவில் பெரியவை சிங்கங்களோ, புலிகளோ அல்ல, ஆண் பனிக்கரடிகள்தாம். அவை எழுந்து நின்றால் 8 அடி உயரம் கொண்டவை. அவற்றின் ஒவ்வொரு பாதமும் நாம் உணவு உண்ணும் தட்டின் அளவுக்கு அகலமானவை. ஓங்கி அடித்தால் ஒன்பதரை டன் வெயிட். ஆம், எந்த மாஸ் ஹீரோவாலும் கற்பனையாக பன்ச் டயலாக்கூட பேச முடியாத நிஜ வலிமை, பனிக்கரடிகளுக்கு உண்டு.
நிலப்பரப்பிலும் பனிப்பரப்பிலும் மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் பனிக்கரடியின் அசல் நிறம் வெள்ளை அல்ல. அதன் மேலுள்ள ரோமங்கள் நிறமற்றவை. அவை ஒளியை வெள்ளை நிறத்தில் பிரதிபலிப்பதால் பனிக்கரடிகள் பனியின் நிறத்திலேயே தோற்றமளிக்கின்றன. அவற்றின் மேல்தோலின் நிறம் கருப்புதான். கொழுப்புத் திசுக்களால் ஆன அந்த 4 இன்ச் தடிமனான தோலே மைனஸ் டிகிரி குளிரிலும் பனிக்கரடியைப் பாதுகாக்கிறது.
இங்கே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்களை எல்லாம் பனிக்கரடியின் தன் வேட்டை அத்தியாயத்தில் செதுக்கி வைத்திருக்கிறது. பனிக்கரடிகள் பொதுவாக கடலை ஒட்டிய பனிப்பிரப்பில் மட்டுமே வசிக்கின்றன. காரணம், கடல்வாழ் உயிரினங்களே அவற்றுக்கான அடிப்படை உணவு. உணவுச்சங்கிலியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆர்க்டிக் பனியில் பூக்கும் பாசி, சிறிய உயிரினங்களுக்கு உணவாகின்றன. அவை மீன்களுக்கு உணவாகின்றன. மீன்கள் சீல்களுக்கு உணவாகின்றன. சீல்கள் உணவு சங்கிலியின் மேல்நிலையில் உள்ள பனிக்கரடிகளுக்கு ஏவ்வ்வ்வ்! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் Ringed Seal என்றழைக்கப்படும் அளவில் சிறிய ஸீல்களே பனிக்கரடிகளின் விருப்பத்துக்குரிய Meal.
நீருக்குள் உலவும் இந்த ஸீல்கள் தடிமனான பனிப்பரப்பில் இருக்கும் துளைகளை நாடி வரும். அதன் வழியாக மேலே வந்து பனிப்பரப்பில் படுத்து உருண்டு புரண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆக்ஸிஜனை சுவாசித்துச் செல்லும். அந்தத் தருணத்துக்காகத்தான் பனிக்கரடி காத்திருக்கும். காத்த்த்த்த்த்த்த்த்த்து இருக்கும். அந்தக் காத்திருப்பு என்பது சில, பல மணி நேரங்களுக்குக்கூட நீளலாம். ஸீல் அங்கே வராமலே போகலாம். இருந்தாலும் பனிக்கரடி காத்துக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏ இருக்கும்.
ஒரு பனிக்கரடி ஸீலை வேட்டையாட பத்து முறை முயற்சி செய்தால், அதில் ஓரிரு முறை மட்டுமே வெற்றி பெறும். அதன் வாழ்வில் பாதி நேரத்தை ஸீலை வேட்டையாடுவதில் மட்டுமே கழிக்கிறது. சீச்சீ… இந்த ஸீலே வேண்டாம். மீனோ, பறவையோ வேறொன்றோ எளிதாகக் கிடைக்கிறதே. அது போதும் என்று பனிக்கரடி ஒருபோதும் பின் வாங்காது. ஏனென்றால் ஒரு ஸீல் அதற்கு உணவாகக் கிடைத்துவிட்டால் அது வாழ்வின் உன்னத லட்சியத்தை அடைந்த திருப்தியைத் தரும். தவிர, பனிக்கரடிகளுக்கு ஒவ்வொரு குளிர் காலத்திலும் உணவே கிடைக்காது. மாதக்கணக்கில் எதுவும் புசிக்காமல் பிழைத்திருக்க வேண்டும். எனில், இப்போதே உரியதை வேட்டையாடி உடலுக்கு அதீகக் கொழுப்புச் சத்தைக் கொடுக்கும் உணவைத் தின்று தயாராக வேண்டும். அப்படிப்பட்ட ஒரே உணவு ஸீல் மட்டுமே. பனிக்கரடி, தன் உடல் எடையில் 20% எடை கொண்ட உணவை ஒரே வேளையில் உண்ணும் திறன் கொண்டது. அதில் 84% புரதச்சத்தையும், 97% கொழுப்புச்சத்தையும் கிரகித்துக் கொள்ளும் அளவுக்கு அதன் செரிமான மண்டலம் வலிமையானது.
ஆக, பனிக்கரடியின் ஒரே குறிக்கோள், ஒரே நோக்கம், ஒரே லட்சியம், ஒரே ஆசை ஸீல் வரும்வரை காத்திருத்தல் மட்டும்தான். இது வணிகத்துக்கும் பொருந்தும். எந்தவொரு மனிதனின் லட்சியத்துக்கும் பொருந்தும். சரியான சூழல் வரும் வரை காத்திருத்தல். காலம் கனியும் வரை காத்திருத்தல். முயற்சியைக் கைவிடாமல் முனைப்போடு பொறுமையாகக் காத்திருத்தல்.
வெள்ளையாகத் தோற்றமளிக்கும் பனிக்கரடியின் நிறம், பனிப்பரப்பில் அது சற்றே உடலைக் குறுக்கி மறைந்து கொள்ள வசதியானது. ஸீல்களால் பனிக்கரடியைச் சட்டென்று அடையாளம் காண முடியாது. அதற்கேற்ப பனிக்கரடியும் தன் கருப்பு மூக்கை மட்டும் ஒரு காலால் பொத்திக் கொண்டு தேமேவென்று தேவுடு காக்கும். தவிர, பனிக்கரடியின் மோப்பசக்தி அபாரமானது ஒரு மைலுக்கு அப்பால் நீந்தும் ஸீல்களின் வாசனையையும் தன் மூக்கால் உணர்ந்துவிடும். ஒரு மீட்டர் தடிமனான பனிப்பரப்புக்குக் கீழிருக்கும் ஸீலையும் மோப்பம் பிடித்துவிடும். ‘வாடி என் செல்லக்குட்டி ஸீலே! இங்க வந்துதான ஆகணும்!’
ஸீல்கள் தண்ணீரில் அபார வேகத்துடன் நீந்தக்கூடியவை. பனிக்கரடியைவிட வேகமாக நீந்துபவை. ஆகவே ஒரு ஸீல், துளையிலிருந்து வெளியே வந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வரை பனிக்கரடி அவசரப்படாது. தன் இருப்பைக் காட்டிக் கொள்ளாது. எங்கும், எந்தவித ஆபத்தும் இல்லையென்று ஸீல் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் சமயத்தில் பனிக்கரடி பாயும். ஸீல் பனிப்பரப்பில் சறுக்கிச் சென்று நீருக்குள் குதித்து மறைவதற்குள் வேட்டையாடும். அது தட்டுத்தடுமாறி நீருக்குள் குதித்துவிட்டாலும் நொடிப்பொழுதில் பனிக்கரடியும் உள்ளே குதித்து, ஸீலைப் பிடித்து, ரத்தம் சொட்டச் சொட்ட பனிப்பரப்புக்கு மேல் இழுத்து வந்து போடும். நிதானமாகச் சாப்பிடும்.
உணவாக எது வேண்டுமானாலும் கிடைக்கலாம். அலைந்து திரிந்து ஒரு சில சிற்றுயிர்களைப் பிடித்துத் தின்னலாம். ஆனால், எதுவொன்றும் ஸீலுக்கு இணையாகாது. ஸீலே பேருணவு! அதை வேட்டையாடுதல் பேருணர்வு! அனுதினமும் அலைந்து திரிந்து ஏதோ ஒன்றைச் சம்பாதிப்பது பெரியதா, உரிய லட்சியத்தைக் காத்திருந்து வெற்றிகரமாக அடைவது சிறந்ததா? நம்பிக்கையுடன் காத்திருத்தலே சிறந்தது. உரியதை அடைந்து நீண்ட காலத்துக்குப் பிழைத்திருத்தலே அவசியமானது.
இத்தனை நூற்றாண்டுகளாக பனிக்கரடிகளே வட துருவப்பகுதிகளைப் பாதுகாத்தன என்பதும் உண்மை. அதனால், அங்கே வாழும் உயிரினங்கள் எல்லாம் அதனதன் போக்கில் தோன்றி, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்தன. உணவுச்சங்கிலி எந்தவிதமானத் தொந்தரவும் இன்றி நீடித்தது. எப்போது மனிதன் தன் சுயநலத்துக்காக அந்தப் பனிப்பரப்புக்குள் நுழைந்தானோ, அந்த உயிரினங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வேட்டையாடினானோ, கொஞ்சம்கூடப் பொறுப்பே இன்றி எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கிறேன் என்று சுற்றுச்சூழலைக் கெடுத்தானோ, வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வை அதிகமாக்கினானோ, அப்போதே துருவப்பகுதியில் தலைகீழ் மாறுதல்கள் தொடங்கிவிட்டன.
பொதுவாகவே பனிக்கரடிக்கு நீந்தப் பிடிக்கும். கடலில் ஒரு மணி நேரத்துக்கு ஆறு மைல்களை வரை அபாரமாக நீந்தக்கூடியது. பல மணி நேரங்கள்கூட தொடர்ந்து நீந்தக்கூடியது. ஆனால், இப்போதெல்லாம் வட துருவத்தின் கோடைக்காலங்களில் பனிக்கரடிகள் நாள்கணக்கில் நீந்துகின்றன. உருகிக் கரைந்து காணாமல்போல தன் பனிப்பரப்பை இழந்து, இன்னொரு பனிப்பரப்பைத் தேடி நூற்றுக்கணக்கான மைல்கள் நீந்திக் கொண்டே இருக்கின்றன. எதிர் நீச்சலடி! எதிரி மனிதன்தான் என்று உணர்ந்தபடி!
இப்போதெல்லாம் ரஷ்யாவின் சில நகரங்களுக்குள் பனிக்கரடிகள் உணவு தேடி புகுவது என்பது சாதாரணமான செய்தியாகிவிட்டது. அங்கே மனிதர்கள் பனிக்கரடிகளால் தாக்கப்படும் அபாயத்துக்காக ஊரடங்கு உத்தரவு போடப்படுவதும் சகஜமாகிவிட்டது. எப்போதுமே தன்னைச் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பும் பனிக்கரடிகள், குப்பைமேடுகளில் உணவு தேடி அலையும் பரிதாபக் காட்சிகளும் காணக்கிடைக்கின்றன. எல்லாம் மனிதன் செய்த வினை. இயற்கையின் எதிர்வினையை பாவப்பட்ட பனிக்கரடிகளும் ஸீல்களும் இன்னபிற உயிரினங்களும் அனுபவிக்கின்றன.
பனிக்கரடியின் புகைப்படமும் பொம்மையும் செல்வம் தரும். உயர்வைத் தரும். கனவில் பனிக்கரடி வந்தால் நல்லது நடக்கும் என்பதெல்லாம் சில நாட்டு மக்களின் நம்பிக்கை. சில கலாச்சாரங்களில் பனிக்கரடிகள் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. என்ன பிரயோஜனம்?
துருவப்பகுதிகளில் புவிவெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றங்களால் பனிப்பாறைகள் உருகிக்கொண்டே இருப்பதால் 2100-ஆம் ஆண்டுக்குள் துருவக்கரடிகள் முற்றிலும் அழிந்துபோக வாய்ப்பிருக்கிறது. இது சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கனடாவின் டோராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் செய்தி. 2100 என்பதுகூட அதிகம். இன்னும் முப்பது, நாற்பது ஆண்டுகளுக்குள் மனிதர்களாகிய நாம், பனிக்கரடிகளை ஒன்று விடாமல் கொன்று, பெருஞ்சாதனை படைத்துவிடுவோம். AI இருக்கிறது. இன்னும் என்னென்னமோ தொழில்நுட்பங்கள் வரும். வளரும். எதை வேண்டுமானாலும் உண்மை போலவே படைத்து, மெய்நிகர் உலகில் சஞ்சரித்துக் கொள்ளலாம். டைனோசர் போல, பனிக்கரடி என்ற ஒன்ற இருந்தது என்பதை குழந்தைகளுக்கு பொம்மையாகக் காட்டிக் கொள்ளலாம். என்ன குறைந்துவிடப்போகிறது?
வரலாற்றில் இருந்து ஒரு சம்பவம். கல்கத்தாவின் அலிபூர் உயிரியல் பூங்கா, இந்தியாவில் பிரிட்டிஷார் காலத்தில் உருவாக்கப்பட்ட முதன்மையான உயிரியல் பூங்காக்களுள் ஒன்று. அதைப் பாடுபட்டு உருவாக்கியவர் சன்யால் என்ற இந்தியர். சாதாரணப் பணியாளராக பூங்காவில் வேலைக்குச் சேர்ந்து அதன் தலைமைக் கண்காணிப்பாளராக உயர்ந்தவர். 1886 மார்ச் மாதம் அந்த உயிரியல் பூங்காவுக்கு பனிக்கரடி ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்தியாவுக்கு வந்த முதல் பனிக்கரடி அதுவே. புசுபுசுவென இருந்த அதைப் பார்த்ததும் சன்யால் மகிழ்ந்தார். வருந்தவும் செய்தார். ‘இது என்ன பாவம் செய்தது? இந்தியாவின் வெப்பநிலையில் இந்தப் பனிக்கரடியால் வாழவே முடியாதே!’
பனிக்கரடி குறித்து சன்யால் தனது கையேட்டில் எழுதியிருக்கும் வரிகள் இவை. ‘துருவக்கரடியை இதுபோன்ற வெப்பம் மிகுந்த நாட்டில் உயிரியல் பூங்கா ஒன்றில் காட்சிப்படுத்த அனுமதிக்கவே கூடாது. ஒரு ஏஜெண்ட் மூலமாக இது இங்கே விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதை எப்போதும் குளிர்சூழலில் வைத்திருப்பதற்காகவே பெரிய குளியல் தொட்டியுடன் கூடிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெப்பம் மிகுந்த நாள்களில் அதற்குரிய இடத்தில் பனிக்கட்டியைப் போட்டுக் கொண்டே இருக்கிறோம். பனியைக் கண்டதும்தான் அதன் முகத்தில் உற்சாகம் தெரிகிறது. பால், ரொட்டி, பிஸ்கட் இதற்கான காலை உணவு. மாலையில் மூன்று பவுண்ட் மட்டன் வழங்கப்படுகிறது. அவ்வப்போது மீனும் புறாவும் உண்ணத்தருகிறோம். ஆனால், துருவக்கரடி போன்ற விலங்குகளை அவை வாழும் இடத்திலிருந்து வேறொரு பிரதேசத்திற்கு மாற்றுவது சரியே அல்ல.’
அந்தப் பாவப்பட்ட துருவக்கரடியை சன்யாலால் நீண்ட காலத்துக்குப் பிழைக்க வைக்க இயலவில்லை. நவம்பர் 1887–ல் இறந்து போனது. அந்தப் பனிக்கரடி, அது வாழும் பிரதேசத்திலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டதால் இறந்து போனது. ஆனால், அவை வாழும் துருவப் பிரதேசங்களிலேயே வாழ இயலாமல் பனிக்கரடிகள் இப்போதெல்லாம் இறந்து போகின்றன. பனிப்பரப்பைத் தேடி வெகுதூரத்துக்கு நீந்த இயலாமல் பனிக்கரடிக்குட்டிகள் ஜலசமாதி ஆகின்றன.
எல்லாப் புகழும் மனிதனுக்கே! பிப்ரவரி 27, சர்வதேச துருவக்கரடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. வருங்காலத்தில் அந்த நாள் மட்டுமே எஞ்சியிருக்கும்போல.
அதோ அந்த ஆர்டிக் கடல் பரப்பில் பனிக்கரடி ஒன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நீந்திக் கொண்டிருக்கிறது. அதனிடம் மைக்கை நீட்டுவோம். ‘வணக்கம் போலார் பியர் சார், நீங்க உலகத்துக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?’
‘நீங்க குளுகுளுன்னு இருக்குறதுக்காக எங்களைப் போட்டுத் தள்ளப் பாக்குறீங்கள்ல. கார்பன்-டை-ஆக்சைடை டன் டன்னா வெளியேத்துற ஏசியை ஆஃப் பண்ணித் தொலைங்கடா நொன்னைங்களா!’ =