ஐந்து ஆறைவிடப் பெரியது! – 03

திரு.முகில்

ஜினிகாந்த் அவர்கள் மேடையில் சொல்லும் குட்டிக்கதைகளுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. ஜெயிலர் திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் அவர் சொன்ன குட்டிக்கதை பலத்த வரவேற்பைப் பெற்றது. அதன் சுருக்கமான வடிவம்…

‘காட்டில் சிறிய மிருகங்கள் எப்போதும் பெரிய மிருகங்களை தொல்லை செய்து கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு சிறிய காகம் எப்போதும் பெரிய கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்போதுமே அமைதியாகவே இருக்கும். பறக்கும்போது கழுகைப் பார்த்து காகம் உயரமாகப் பறக்க நினைக்கும். காகத்தால் அது முடியவே முடியாது. ஆனால், கழுகு தன் இறக்கையைக்கூட ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்தில் பறந்துகொண்டே இருக்கும்.’

ஆக, இந்தக் குட்டிக்கதையின்படி ஒப்பீட்டளவில் காகத்தைவிட கழுகு உயர்ந்தது என்று கருத்து போதிக்கப்படுகிறது. எல்லா உயிர்களுமே அதனளவில் உயர்ந்தவை. எனில், இயற்கையாவே உடல் வடிவமைப்பில் மாறுபாடுகள் கொண்ட கழுகையும் காகத்தையும் ஏன் ஒப்பிட வேண்டும்? ‘பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்று சூப்பர் ஹிட் பன்ச்கூட விலங்கினங்களின் இயல்பைப் புரிந்து கொள்ளாமல் ஒப்பிட்டுப் பேசப்பட்ட மோசமான வசனம்தான்.

சரி, ஏன் எப்போதும் காகத்தையும் பன்றியையும் தாழ்த்தி, அவற்றுடன் மற்ற உயிரினங்களை ஒப்பிட்டு உயர்த்திக் காட்டுகிறார்கள்? முக்கியமான ஒரு காரணம், அவை ‘கருப்பு’ நிறத்தில் இருக்கின்றன. சினிமாவில் நகைச்சுவை என்ற பெயரில் அங்கவையையும் சங்கவையையும் ஈவு இரக்கமின்றிக் கேலி செய்து அவமானப்படுத்த முடியும். ஏனெனில் அவர்களது நிறம் கருப்பு. கருப்பினத்தவர்களை அடிமையாக்க முடியும். அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க முடியும். ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை கருப்பே தாழ்த்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட நிறம். ஆனால், ஆதி மனிதனின் நிறமே கருப்புதான். மற்றொரெல்லாம் கருப்பிலிருந்து வந்தவர்களே. ஆக, தவறான கருத்துகளையும் கதைகளையும் ஒப்பீடுகளையும் யார் சொன்னாலும் அது குறித்துச் சிந்தித்து, புறக்கணிக்கும் பகுத்தறிவே எப்போதும் நமக்குத் தேவை. காகத்தின் புகழ்பாடவிருக்கும் இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுதான். இதை வாசித்து முடிக்கும்போது நமக்குள் இயல்பாகவே இந்தச் சொற்கள் தோன்றலாம் – லவ் யூ காக்கா!

தூத்துக்குடி வட்டாரத்தில் சொல்லப்படும் பழங்கதை ஒன்றின் சுருக்கம் இது. காகம் ஒன்று, பெருமழையில் தனது மண் வீட்டை இழந்து நிற்கிறது. கல்வீட்டில் வாழும் குருவியிடம் தங்குதற்கு இடம் கேட்கிறது. குருவியும் தனது அடுக்களையில் இடம் தருகிறது. காகம் அங்கே சோற்றுப் பானையில் உள்ள சோற்றைத் தின்றுவிட்டு, பானைக்குள்ளேயே எச்சமிட்டுவிட்டுச் செல்கிறது. தன் குஞ்சுகளுக்கு உணவெடுக்க வந்த குருவி, காகத்தின் செயலைப் பார்த்துக் கோபமடைகிறது. பழி வாங்க நினைக்கிறது. திரும்பி வரும் காகம் தண்ணீர் கேட்கிறது. குளிக்க வெந்நீர் வைத்திருக்கும் குருவி, தந்திரமாக பானையைக் காண்பிக்கிறது. தாகம் தணிக்கச் செல்லும் காகம், வெந்நீர்ப் பானைக்குள் விழுந்து துடிதுடித்து இறக்கிறது.

இது ‘சூழலும் சாதியும்’ என்ற நூலில் எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர் நக்கீரன் அவர்கள் பதிவு செய்துள்ள கதை. இது எதை உணர்த்துகிறது என்பதையும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இங்கே குருவி என்பது உயர்சாதிப் பறவையாகவும், காகம் என்பது தாழ்த்தப்பட்ட சாதியாகவும் உருவகப்படுத்தப்படுகின்றன. காரணம், காகத்தின் நிறம் கருப்பு. காகத்துக்கு மற்ற பறவைகளுடன் சமமாகப் பழகும் தகுதி கிடையாது. அது தொட்ட உணவு தீட்டு. அது வெறுத்து ஒதுக்கத்தக்கது. கதையில் காகம் இறந்துபோனது நியாயமாக அதற்குக் கிடைக்க வேண்டிய தண்டனையே. இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்து மதத்தில் காகம், எல்லோரும் அச்சப்படக்கூடிய சனி பகவானின் வாகனம். எமதர்மனின் குறியீடு. இறந்துபோனவர்களுக்கான பிண்டத்தை உண்ணும் பறவை. மிருகபட்சி சாஸ்திரத்தில் காகம், அதர்ம உயிரினம். இவைதவிர காகம் பறப்பது, எச்சமிடுவது, கரைவது குறித்த ஏகப்பட்ட சகுன, ஜோதிட, மூடநம்பிக்கைக் கருத்துகள் மூட்டையாக மூட்டையாக இருக்கின்றன.

அவற்றையெல்லாம் சீண்ட வேண்டாம். மகாகவி பாரதியின் ஒரே ஒரு வரி நம் நினைவில் நின்றால் போதும். காக்கை, குருவி எங்கள் சாதி! பாரதி மட்டுமல்ல, காகத்தை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் கொண்டாடவே செய்கின்றன.

ஐங்குறுநூற்றில் காக்கையின் புகழ் மிளிர்கிறது. ‘மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை…’ என்று தொடங்கும் பாடல், தாய் ஒருத்தி காகத்திடம் வைக்கும் வேண்டுகோளாக அமைகிறது. ‘மாசில்லாத கரிய இறக்கைகளை உடைய காகமே! நீ உன் உறவுகளோடு உண்ணும் உயர்ந்த பண்பைக் கொண்டிருக்கிறாய். நீங்கள் வயிறார உண்பதற்குப் பச்சை ஊன் கறிகளைக் கொண்டு சமைத்த அரிசிச் சோற்றைப் பொன் தட்டில் தருவேன். நீ எனக்கோர் உதவி செய்ய வேண்டும். என் மகளின் காதலன் வீரம் செறிந்த ஆண்மகன். அவன், எனது அழகிய மகளை அழைத்துக் கொண்டு என்னிடம் விரைவில் வருவான் என்று கரைவாயாக!’ என்பது பாடலின் பொருள். அதாவது காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள், அல்லது நெருங்கியவர்கள் வருகையை முன்கூட்டியே காகம் கரைந்து அறிவிக்கும் என்ற நம்பிக்கை சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது.

குறுந்தொகையில் ‘திண்டேர் நள்ளி கானத் தண்டர்…’ என்றொரு செய்யுள் வருகிறது. தலைவனைப் பிரிந்து தலைவி துன்பத்தை அனுபவிக்கிறாள். தலைவனின் வருகையை அறிவிக்குமாறு காக்கை கரைகிறது. அந்தக் காக்கைக்கு நள்ளி என்னும் வள்ளலின் தோட்டத்தில் மேயும் பல பசுக்களிலிருந்து கறந்த பாலில் எடுக்கப்பட்ட நெய்யையும், தொண்டி ஊர்ப்பகுதியில் விளைந்த நெல்லரிசியில் சமைத்த சோற்றையும் கலந்து ஏழு கலங்களில் உண்ணக் கொடுத்தாலும் அது சிறிய கைம்மாறுதான் என்கிறாள் தோழி. காக்கைக்கு உணவிடும் பழக்கமும் காலம் காலமாக இருந்து வருவதுதான் என்று அழுத்தமாக உரைக்கும் இந்தப் பாடலைப் பாடிய பெண் புலவரின் பெயரும் ‘காக்கைப்பாடினியார்’ என்றே நிலைபெற்றுவிட்டது.

‘காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் – அன்னநீ ரார்க்கே உள’ என்கிறது 527வது குறள். தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு என்று காக்கையை உயரத்தில் வைக்கிறார் வள்ளுவர் எனும் தமிழ் இலக்கியத்தின் ‘நிரந்தர சூப்பர் ஸ்டார்’. ஆம், பகிர்தலே அறம்!

சரி, காகங்கள் குறித்த தனித்துவமான விஷயங்களைப் பார்ப்போம். கொங்கு வட்டார வழக்கு, சென்னை பாஷை, நெல்லைத் தமிழ் என்று நாம் பேசும் தமிழ் ஊருக்கு ஊர் மாறுபடுகிறதல்லவா. அதேபோல காகங்களுக்கும் வட்டார வழக்கு உண்டு. கா கா கா… என்று அது கரைவதிலும் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. ஆம், தூத்துக்குடி காகம் கரைவதற்கும், செங்கல்பட்டு காகம் கத்துவதற்கும் மனிதர்களால் உணர இயலாத வித்தியாசங்கள் உண்டு. அதேபோல அந்தக் கா கா காவின் ஸ்ருதியிலும் மாறுபாடுகள் உண்டு. ‘உணவு கிடைத்திருக்கிறது. எல்லோரும் வாருங்கள்’ என்று உற்சாகமாகக் கரைவதற்கும், ‘அந்த ஆபத்து நம்மை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கிறது. ஓடி ஒளியுங்கள்’ என்று பயத்துடன் கத்துவதற்கும், ‘அன்பே மனைவி காகமே, நீ எங்கே இருக்கிறாய்?’ என்று காதலுடன் தேடி மருகுவதற்கும் காகங்கள், கா கா காவுக்குள்ளேயே சில பல ஸ்வரங்களை ஒளித்து வைக்கின்றன.

காகங்கள் மற்ற எந்தப் பறவைகளைவிடவும் புத்திசாலிகள். அதன் மூளை அளவு மற்ற பறவைகளைவிட (கிளி மட்டும் விதிவிலக்கு) பெரியது என்பது பொது அறிவுத் தகவல். கிடைக்கும் பொருள்களை, ‘கருவி’யாகப் பயன்படுத்தும் திறன் காகத்துக்கு உண்டு. ஒரு குச்சி கிடைத்தால் அதைக் கொண்டு தூரத்தில் இருக்கும் இரையை எடுப்பது, அதைக் கூராக்கி இரையைக் குத்தி எடுப்பது போன்ற தனித்துவமான செயல்களை காகங்கள் செய்கின்றன. சற்றே கடினமான உணவை வைத்தால், வீட்டுக்கு வரும் காகங்கள் கரைந்து நம்மை அழைக்கின்றன. அருகிலேயே இன்னொரு கிண்ணத்தில் தண்ணீர் வைக்கச் சொல்லிக் கேட்கின்றன. உணவைக் கொத்தி எடுத்து தண்ணீரில் நனைத்து ஊறவைத்து உண்கின்றன. சாலையோரக் காகங்கள், எளிதில் உடைக்க முடியாத கொட்டை வகைகள் கிடைத்தால் சிவப்பு சிக்னலுக்காகக் காத்திருக்கின்றன. அந்தக் கொட்டைகளைச் சாலையில் போடுகின்றன. பச்சை விழுந்து வாகனங்கள் நகர்கின்றன. அடுத்து சிவப்பு விழுந்ததும் வாகனச் சக்கரங்களால் உடைக்கப்பட்ட கொட்டைக்குள் இருக்கும் பருப்பை எடுத்து உண்கின்றன. ஸ்மார்ட் தலைமுறைக் காகங்கள்.

காகங்கள் சமூகமாக வாழ்பவை. தன் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவை. குறிப்பிடத்தகுந்த விஷயம், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று காகத்திடம் சொன்னால் அதற்குப் புரியாது. ஆனால், இயல்பாகவே காகத்தின் மரபணுவிலேயே அந்தக் கொள்கை புதைந்திருக்கிறது. பெண் காகம் முட்டையிட்டு அடைகாக்கும் நாற்பது சொச்ச நாள்களும் அது கூட்டை விட்டு நகராது. ஆண் காகம் அதற்கு ‘ராணி மரியாதை’ கொடுத்து உபசரிக்கும். குயில் முட்டைகளையும், அதிலிருந்து வெளி வரும் குயில் குஞ்சுகளையும்கூட, ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. குயில் குஞ்சும் தன் குஞ்சே!’ என்று வேறுபாடு பார்க்காமல் இன்றி வளர்த்துவிடும். ஒரு காகம் இறந்துவிட்டால், அதன் சமூகத்தைச் சேர்ந்த மற்ற காகங்கள் ஒன்றுகூடி பெரும் ஒலி எழுப்புதைக் கேட்டிருக்கலாம். அதை ‘காகங்களின் ஒப்பாரி’ என்றும் அழைக்கலாம்.

நம் ஊர்களில் தூய்மைப் பணியாளர்களின் நண்பர்கள் காகங்களே. சீருடை அணியாத தூய்மைப் பணியாளர்கள். எலியோ, பாம்போ, தவளையோ, இன்னபிறவோ செத்துக் கிடந்தால் அவற்றைப் பாதைகளிலிருந்து அகற்றும் அரிய வேலையை காகங்கள் செய்கின்றன. அதற்கு மனிதன் காகத்துக்குக் கொடுத்திருக்கும் வஞ்சம் நிறைந்த பட்டம், ‘ஆகாயத் தோட்டி.’ ஏன், ‘ஆகாயச் சேவகன்’ என்று புகழ்ந்தால் நாக்கு சுளுக்கிக் கொள்ளுமா என்ன? இனி அவ்வாறே அழைப்போம். ஒருவரது தொழிலைக் கொண்டு இழிவு செய்வோரைத் திருத்துவோம்.

கண்ட இடத்தில் துப்புவது, குப்பை போடுவது, தேவையில்லாதவற்றை வீசி எறிவது என்று சமூகப் பொறுப்பே இல்லாத மனிதன் காகங்களிடம்தாம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு உதாரணம். பிரான்ஸின் வரலாற்றுப் பூங்கா (Puy du Fou) ஒன்றில் ஆறு காகங்கள் ‘தூய்மைப் பணியாளர்களாக’ வேலை செய்து கொண்டிருக்கின்றன. அங்கே வரும் பார்வையாளர்கள் அலட்சியமாகக் கீழே போடும் சிகரெட் துண்டுகள், டிஷ்யூ காகிதங்கள், இன்ன பிற குப்பைகளை, இந்தக் காகங்கள் கொத்தி வைத்து உரிய பெட்டியில் போடுகின்றன. சம்பளமாக அதே பெட்டியில் இன்னொரு பக்கம் வைக்கப்பட்டிருக்கும் கொட்டைகளையும் பருப்புகளையும் எடுத்துக் கொள்கின்றன. கழிவுகளைத் தூய்மையாக்கும் காகங்களின் இயல்பான குணத்தைப் பயன்படுத்தி, பூங்கா நிர்வாகிகள் ஆறு காகங்களுக்கு இவ்விதம் பயிற்சி கொடுத்து பணியமர்த்தியிருக்கிறார்கள். தம் பணியின் மூலம் அங்கே வரும் மனிதர்களுக்கு இந்தக் காகங்கள் செய்தி சொல்கின்றன. ‘முட்டாளே! குப்பையைக் கண்ட இடத்தில் போடாதே!’

இன்னொரு ஆறு காகங்களின் கதையையும் சொல்லியாக வேண்டும். இவை ஆறும் Raven என்றழைக்கப்படும் அண்டங்காக்கைகள். லண்டனின் புகழ்பெற்ற டவர் வளாகத்தில் வசித்தவை. தலைமுறை தலைமுறையாக வசித்துக் கொண்டிருப்பவை. இதன் பின் ஒரு வரலாறு இருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை ஆண்ட கிங் இரண்டாம் சார்லஸ் காலத்து கதை. லண்டன் டவரில் பொருத்தப்பட்டிருந்த டெலஸ்கோப்பில் அண்டங்காக்கைகள் எச்சமிட்டுக் கொண்டே இருந்தன. தொலைநோக்கியால் பார்க்க விடாமல் குறுக்கே மறுக்கே பறந்து கொண்டே இருந்தன. ‘காக்கைகளைத் துரத்தி விடுங்கள் அல்லது கொன்று விடுங்கள்’ என்று கிங் சொல்ல, ஜோதிடர் ஒருவர் மறுப்பு சொன்னார். ‘காக்கையைக் கொன்றால் அரச குடும்பத்துக்கு ஆகாது. லண்டன் டவர் சரிந்து விடும். ராஜ்ஜியமே வீழ்ந்து விடும்’ என்று விதவிதமாக எச்சரித்தார். பயந்து போன கிங், அண்டங்காக்கைகளை அன்புடனும் அக்கறையுடனும் பராமரிக்கச் சொன்னார். அந்தத் தொட்டுத் தொடரும் அண்டங்காக்கைப் பாரம்பரியம் இன்று வரை நீடிக்கிறது. காலம் காலமாக குறைந்தபட்சம் ஆறு அண்டங்காக்கைகளாவது லண்டன் கோபுரவாசிகளாக இருந்தே ஆகவேண்டும். அதில் ஒன்று மறைந்தாலோ, குறைந்தாலோ ராஜ குடும்பத்துக்கு ஆகாது என்ற பீதியுடனே இன்று வரை திரிகிறார்கள். இந்தக் காக்கைகளைப் பராமரிக்க Raven Master ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காவலர்களும் இருக்கிறார்கள். செத்த காக்கைகளுக்குப் பதிலாக, தகுதியான புதிய காக்கைகள் கோபுரவாசிகள் ஆக்கப்படுகின்றன. காக்கைகள் வெகு தூரம் பறந்துபோய்விடக்கூடாது என்பதற்காகவே அதன் இறக்கைகளையும் குறிப்பிட்ட அளவு கத்தரித்து விடுகிறார்கள். ஆக, மனிதனின் மூட நம்பிக்கையாலும் சுயநலத்தாலும் அதிகம் பாதிக்கப்படும் பறவையும் அவனுடனேயே ஒட்டி உறவாடி வாழும் காகம்தான்.

இறுதியாக காளமேகப் புலவரை அழைப்போம். தமிழ் ராப் எல்லாம் பிச்சை வாங்க வேண்டுமென்ற அளவுக்கு அந்தக் காலத்திலேயே வார்த்தைகளால் விளையாடியவர். அவரது இந்தப் பாடல் காக்கைகளுக்குச் சமர்ப்பணம்.

‘காக்கைக் காகா கூகை, கூகைக் காகா காக்கை
கோக்குக்கு காக்கைக்கு கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்கு கைக்கைக் காகா.’

பின்குறிப்பு : பாடலுக்கு அர்த்தம் வேண்டுமென்றால் காக்காவைத் தொந்தரவு செய்ய வேண்டாம். கூகுள் அல்லது ChatGPT-ஐ நாடவும்.