ஐந்து ஆறைவிடப் பெரியது! – 02
திரு.முகில்
ஒரு புனித நூலிலிருந்து கற்றுக் கொள்வதைவிட ஓர் ஆமையிடமிருந்து அதிகமாகக் கற்றுக் கொள்கிறேன்!’ – தலாய் லாமா.
உலகின் ஆகப்பெரிய சோம்பேறி, ஒரே இடத்தில் நாள்கணக்கில் நகராமல்கூட நிற்கும் அசுவாரசியமான ஜீவராசி, தோற்றத்திலும் பெரிதாகக் கவராத உயிரினம், எடுத்தற்கெல்லாம் ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் பயந்தாங்கொள்ளி, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்துக்கே பொருந்தாத ஜந்து, இப்பேர்ப்பட்ட ‘சிறுமைகள்’ மட்டுமே நிறைந்த ஆமையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள பெருமைக்குரியதாக என்ன இருக்கிறது?
முயல், ஆமை, ரேஸ் கதையை மறந்துவிடுங்கள். நீதிக்கதைகளைத் தாண்டியும் ஆமை நமக்கு மௌனமாக போதிக்கும் இயல்பான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. நி…..தா…..ன…..மா…..க, பொ….று….மை….யா….கப் பார்க்கலாம்.
ஆமைகள் குறித்த ஒரு வித்தியாசத்தையும் தெரிந்து கொள்வது அவசியம். Turtle எனப்படும் கடல் ஆமைகள் நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. அவற்றின் உடம்பில் துடுப்புகள் உண்டு. அவை சர்வ உண்ணிகள். Tortoise எனப்படும் ஆமைகள் நிலத்தில் மட்டுமே வாழ்பவை. தாகத்துக்காக மட்டுமே நீர்ப்பரப்பை நோக்கிச் செல்பவை. அவற்றுக்கு கால்கள் மட்டுமே உண்டு. நீந்தத் தெரியாது. அவை தாவர உண்ணிகள். இந்தப் புரிதலோடு தொடர்வோம்.
ஆமையின் ஆல் டைம் மைனஸாகப் பொதுமைப் படுத்தப்படும் விஷயம் அதன் வேகம். ரொம்ப ரொம்ப ரொம்ப (இன்னும் நூறு ‘ரொம்ப’ போட்டுக் கொள்ளலாம்) Slow. நிஜம்தான். நிலத்தில் ஓர் ஆமை இருக்கிறது எனில் அது பத்து சென்டி மீட்டர் நகர்வதற்குள், நாம் பக்கத்துத் தெருவில் டீ குடித்துவிட்டு, ஒரு படம் பார்த்துவிட்டு, கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு, சில மணி நேரங்கள் மொபைலை நோண்டிவிட்டு வந்து பார்த்தால் ஆமையார் ஒன்பதாவது சென்டிமீட்டரை தன் மூக்கால் தொட முயற்சி செய்து கொண்டிருப்பார்.
அது நிலத்து ஆமையின் இயல்பு. அதன் சகலையான கடல் ஆமையின் வேகத்தைப் பற்றி பேசுவோம். மைக்கேல் பெல்ப்ஸ் தெரியுமல்லவா. உலகின் ஆகச்சிறந்த நீச்சல் வீரர். Flying Fish என்று கொண்டாடப்படுபவர். ஒலிம்பிக் போட்டிகளில் சகல விதமான நீச்சல் போட்டிகளிலும் 23 தங்கப் பதக்கங்களைக் குவித்திருக்கும் தன்னிகரற்ற சாகசக்காரர். பெல்ப்ஸுக்கும் ஒரு பேராமைக்கும் (ஆங்கிலத்தில் Leather back Turtle என்றழைக்கப்படும். உலகின் மிகப்பெரிய கடல் ஆமை இனம்) நீச்சல் போட்டி வைத்துப் பார்ப்போம். நிலத்தில் சற்றே நிதானம் காட்டும் கடல் ஆமை நீரில் ஏவுகணையாகப் பாயும். பெல்ப்ஸின் நீச்சல் வேகம் மணிக்கு 6 மைல் என்றால், பேராமையின் வேகம் மணிக்கு 22 மைல். ஒலிம்பிக் சாம்பியன் தான் வாங்கிய பதக்கங்களை எல்லாம் ஆமையின் கழுத்தில் மாட்டிவிட்டு ஒதுங்கித்தான் போக வேண்டும். இதன் மூலம் ஆமை சொல்லும் செய்தி…
மச்சி! யாரையும் வெத்துன்னு நினைக்காத. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு ஏரியால கெத்து! பூமியில பொறந்த ஒவ்வொரு உயிரினமும் வொர்த்து!
ஒரு புதிய முகவரி. பக்கத்து ஏரியாதான். தேடிச் சென்றால் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அந்தப் பொறுமை எல்லாம் நமக்கு இல்லை. ‘லொகேஷன் அனுப்பிருங்க’ என்று வாட்சப் செய்கிறோம். புதிதாக எங்காவது என்றால் சொந்த வீட்டுக்குத் திரும்பி வருவதற்கே கூகுள் மேப்ஸின் தயவு தேவைப்படும் பரிதாப நிலை. கடற்கரையில் ஆமை முட்டைகளைப் பார்த்திருப்போம். ஒரு கடல் ஆமை ஒரு குறிப்பிட்ட கடற்கரையில் மணற்பரப்பில் குழி தோண்டி முட்டையிடுகிறது. அந்த முட்டையில் இருந்து 60 நாள்களுக்குள் கடல் ஆமைக்குஞ்சுகள் வெளிவருகின்றன. முதன் முதலாகச் சுவாசிக்கின்றன.
தத்தக்கா பித்தக்கா என்று மணற்பரப்பில் நடந்து போய் கடல் நீரில் கலக்கின்றன. பல நூறு அல்லது ஆயிரம் மைல்கள் நீந்தி வேறு பெருங்கடலுக்குச் சென்று வாழ்கின்றன. பல வருடங்கள் கழித்து பருவம் எய்திய அந்தப் பெண் ஆமைகள் முட்டையிடத் தயாராகின்றன. அப்போது தாம் பிறந்த கடற்கரையைத்தான் தேடி வருகின்றன. அதன் தாய் ஆமை பிறந்ததும் அதே கடற்கரைதான். அது முட்டையிட்டதும் அதே கடற்கரைதான். பிறந்ததிலிருந்து தாய்க்கும் குஞ்சுகளுக்கும் தொடர்பே கிடையாது. இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக அதன் பரம்பரை ஆமைகள் உருவானதும் அந்தக் கடற்கரையில்தாம். தலைமுறை தலைமுறையாக அந்தக் குறிப்பிட்ட கடற்கரையுடனான பிணைப்பு அந்த ஆமைகளிடம் தொடர்கிறது. எப்படி?
ஆமையின் உடலில் மாக்னெட்டைட் (Fe3O4) எனும் இரும்புத்தாது உள்ளது. இந்தக் கனிமம்தான் அதன் உள்ளேயே இயற்கையான சிறு காந்தம்போல் செயல்படுகிறது என்பதை ஜோசப் கிரிஷ்ச்சேவிங்க், கென்னத் லொஹ்மான், காத்ரின் லொஹ்மான் ஆகிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகில் மில்லியன் கணக்கான கடற்கரைகள் இருக்கின்றன. ஆனால், ஆயிரம் மைல்களைக்கூட கடந்து ஆமைகள் தம் தாய்க்கடற்கரையைச் சரியாகக் கண்டறிந்து வருவதற்குக் காரணம் அதற்குள் இருக்கும் உயிரி காந்த முள் அவற்றுக்கு வழித்தடம் காட்டும் செயலியாகச் செயல்படுகிறது. பிறக்கும்போதே தான் பிறந்த கடற்கரையின் காந்தச் சரிவு, காந்தப்புல வீச்சு இரண்டும் அதன் நினைவில் பதிந்துவிடுகின்றன. தான் தற்போது இருக்கும் கடல் பகுதியின் காந்தச் சரிவு, காந்தப்புல வீச்சு, அங்கிருந்து தான் செல்ல வேண்டிய தாய் கடற்கரையின் காந்தச் சரிவு, காந்தப்புல வீச்சு ஆகியவற்றை ஒப்பிட்டுத் தன் வழித்தடத்தைத் தயார் செய்கிறது ஆமை.
திசைகாட்டிகள் எல்லாம் கண்டறிவதற்கு முன்பாகவே கடல் வழிப்பயணத்துக்கு ஆமைகளே சிறந்த வழிகாட்டிகள் என்பதை மனிதன் அறிந்திருந்தான். ஆகவே, பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கடல் பயணங்களில் ஆமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள், சில ஆயிரம் மைல்கள் தள்ளி தென்கிழக்கு ஆசிய ராஜ்ஜியங்களுக்குச் செல்ல கடலில் வழிகாட்டியாக இருந்தவை இருந்தவை ஆமைகளே.
‘ஆமை’ என்று சொல்லால் நாம் யாரையும் புகழ்வது கிடையாது. கேலிக்குரிய பொருளில்தான் அந்தச் சொல்லைச் சூழலுக்கேற்ப பயன்படுத்துகிறோம். ஆனால், நிலத்தில் வாழும் ஆமைகள் தாம் வாழும் வாழ்க்கையின் மூலம் நமக்குச் சொல்வது நம் ஆரோக்கியமான ஆயுளுக்கான அற்புதமான அறிவுரை.
- நிதானம் பழகு.
- நிதானமாக யோசி.
- நிதானமாகப் புசி.
- நிதானத்துடன் முயற்சி செய்.
- நிதானமாக எதிர்வினை ஆற்று.
- நிதானமாக வாழ்.
- நிறைவாக வாழ்வாய்!
நிதானமே ஆமைகள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கான முக்கியமான காரணம். ‘அதெல்லாம் சரி, தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டா ஆமையால வேகமா நிமிரக்கூட முடியாது. ரொம்பவே கஷ்டப்படும். அதையெல்லாம் ‘சூப்பர் ஹீரோ’ தரத்துக்கு ஆக்காதீங்க ப்ரோ!’ என்பவர்களுக்கு ஆமை நிதானமாகச் சொல்லும் பதில்.
என் கழுத்து வலிமையானது. அதைக் கொண்டு நிலத்தில் உந்தித்தள்ளி திரும்புவதற்குப் போராடுவேன். என்னைச் சுற்றியிருப்பவர்கள் சிரிப்பார்கள். என் போராட்டத்தைக் கண்டு கேலி செய்வார்கள். எதையும் காதில் வாங்க மாட்டேன். தேவையற்றவர்களின் அர்த்தமற்ற சொற்கள் நம் முயற்சிகளை முடமாக்கிவிடும். என் நோக்கம் திரும்பி மீள்வது மட்டுமே. அதைச் செய்வதற்கு மீண்டும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருப்பேன். திரும்பி விடுவேன். என்னைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டால் என்னால் எளிதாகத் திரும்ப முடியாது என்பது உண்மைதான். அதன் பொருள் என்னால் எப்போதும் திரும்பவே முடியாது என்பதல்ல.
ஒரு பெரிய தடையைத் தாண்டிச் செல்ல வேண்டும், அது ஒரு சுவராகக் கூட இருக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால் ஆமை அதை நோக்கி நகரத் தொடங்கும். ஒவ்வோர் அடியாக நிதானமாக எடுத்து வைக்கும். ஏற்றத்தில் தடுமாறி விழுந்தாலும், அந்த இடத்திலிருந்து மீண்டும் தொடங்கும். முயற்சியைக் கைவிடாது. நிதானமாக, பொறுமையாக ஓர் அடி என்றாலும் ஆமை முன்னோக்கிச் செல்வதை மட்டுமே சிந்திக்கும். இவ்வளவு காலம் ஆகிறதே என்று எப்போதும் சிந்திக்காது. நகர்ந்து கொண்டே இருக்கும்.
நினைத்ததை அடைய வேண்டுமென்றால் ஒருபோதும் காலத்தின் மீது கண்ணை வைக்காதே. எப்போதும் காரியத்தின் மீது மட்டும் கவனம் வை! – St. ஆமையார்.
ஏதாவது ஆபத்து என்று உணர்ந்தால் ஆமைகள் ஓட்டுக்குள் பதுங்கிக் கொள்ளும். எளிதில் வெளியே வரவே வராது. அதன் பொருள் அவை, சண்டையிடத் தெரியாத கோழைகள் என்பதல்ல. அதை ஆமையின் இயலாமையாகப் பார்க்கவும் கூடாது. ஆபத்துகள் நிறைந்த சில பொழுதுகளில் சண்டை செய்வது புத்திசாலித்தனமல்ல. பாதுகாப்பாக இருப்பதும், பொறுமை காப்பதுமே சிறந்தது. நாம் நினைத்ததைத் செய்ய காலம் கனியும். அதுவரை பொறு உயிரே என்பதே ஆமையின் ‘வாழும் கலை’ வாக்குமூலம். புகழ்பெற்ற ஆங்கில வார்த்தைகளில் சொல்வதென்றால் Survival Of The Fittest!
பெருவில் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர்கள் மோசே இன மக்கள். கடற்கரை நாகரிகம் கொண்ட மீனவர்கள். இவர்கள் கடல் ஆமையைத் தங்கள் கடவுளாகவே வழிபட்டனர். இவர்களது ஓவியம், கலைப்பொருள்கள் அனைத்திலுமே கடல் ஆமையின் உருவங்களைப் பார்க்கலாம். ஏன்?
மீன்களின், மீனவர்களின் எதிரி ஜெல்லி மீன்கள். இவை மிகவும் விஷத்தன்மை வாய்ந்தவை. மீன் குஞ்சுகளை உணவாக உண்பவை. இதனால் ஜெல்லி மீன்கள் ஒரு கடல் பகுதியில் மிகுந்தால் அங்கே மீன் வளமானது முற்றிலுமாகக் குறைந்து போகும். ஜெல்லி மீன்களின் எதிரி கடல் ஆமைகளே. அவை சாக்லேட்போல ஜெல்லி மீன்களை சுவைத்து உண்கின்றன. ஆகவே ஜெல்லி மீன்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே மோசே இன மக்கள் கடல் ஆமைகளைக் கொண்டாடி வழிபட்டார்கள். இன்னும் பல பழங்குடிகளும் ஆமைகளை வணங்கியதற்கான சான்றுகள் வரலாறெங்கும் நிறைந்திருக்கிறது. ஜெல்லி மீன் மட்டுமன்றி, கடலின் புற்கள், கடற்பஞ்சு உள்ளிட்டவற்றை உண்டு கடல் சூழலியலைக் காப்பாற்றும் ரட்சகர்களாகவும் ஆமைகள் விளங்குகின்றன.
உலகத்திலேயே கொடூரமான விஷம் கொண்ட ஜெல்லி மீன்களை விட விஷத்தன்மை வாய்ந்தது பிளாஸ்டிக். கடலில் மனிதனால் சேர்ப்பிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளை ஜெல்லி மீன்கள் என்று நினைத்து ஆமைகள் உண்கின்றன. மரிக்கின்றன. ஆம், மனிதன் ஜெல்லி மீன்களைவிடவும் விஷத்தன்மை கொண்டவன்.
1757-ம் ஆண்டு. ராணுவத் தளபதி ராபர்ட் கிளைவ் பிளாசி யுத்தத்தை வென்று பெங்கால் கவர்னராக அதிகாரத்தைக் கைப்பற்றிய நேரம். அப்போது சில பிரிட்டிஷ் வீரர்கள் அவரைப் பார்க்க வந்தனர். நான்கு ஆமைகளைப் பரிசாக அளித்தனர். ‘இந்தியப் பெருங்கடலில் அமைந்த ஆப்பிரிக்கத் தீவான அல்டப்ராவின் கடற்பகுதியில் இவற்றைப் பிடித்தோம். இவை பெரிய அளவில் வளரும் ராட்சஷ ஆமைகள். உங்கள் பிளாசி வெற்றிக்கு எங்கள் அன்புப்பரிசு’ என்றார்கள். அப்போது அந்த ஆமைகளுக்கு வயது ஆறு அல்லது ஏழு இருக்கலாம்.
ராபர்ட் கிளைவின் மாளிகை அமைந்த பாரக்பூர் தோட்டத்தில் அந்த ஆமைகள் விடப்பட்டன. மூன்று ஆமைகள் இறந்து போயின. ஒன்றே ஒன்று மட்டும் பிழைத்து வளர்ந்தது. அளவில் வளர்ந்து கொண்டே போனது. 1875 அல்லது 1876. பாரக்பூர் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட பல்வேறு உயிரினங்கள் கல்கத்தாவின் அலிபூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டன. அதில் அந்த அல்டப்ரா ராட்சஷ ஆமையும் ஒன்று. அதன் பெயர் அத்வைதா. அப்போது அதற்கு வயது சுமார் 120. அந்த உயிரியல் பூங்காவில் அத்வைதா நிதானமாக, பொறுமையாக வாழ்ந்து நிறைந்தது (2006, மார்ச் 22.) உலகின் மிக வயதான உயிரினமாகக் கருதப்பட்ட அத்வைதாவின் ஓடு கார்பன் வயதுக் கணக்கெடுப்பின்படி ஆராயப்பட்டது. அதன் வயது 255 அல்லது 256 என்று உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் கிளைவ் காலம், சிப்பாய்ப் புரட்சி, இரண்டு உலகப் போர்கள், இந்திய விடுதலை, மில்லினியம் பிறப்பு வரை பார்த்த தி கிரேட் அத்வைதாவுக்கு இணையாக இங்கே எந்த மனிதனும் வாழ்ந்ததே இல்லை.
இறுதியாக ஒரு விஷயம், டைனோசர்களின் படிமங்களோடு கடல் ஆமைகளின் படிமங்களும் கொலம்பியாவில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி பார்த்தால் அவை சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றன. சுனாமி பேரலை, விண்கல் பூமியில் மோதியது என்று டைனோசர்களின் அழிவுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எந்தக் காரணமாக இருந்தால் என்ன! எல்லாவற்றிலும் இருந்து தப்பிப் பிழைத்து பூமியில் ஆமைகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
மனிதனுக்கு முன்பே உலகில் வாழ்ந்து வரும் ஜீவன்கள் ஆமைகள். நம்மைவிட ஆமைகளுக்கே பூமியில் வாழும் உரிமை அதிகம்! =