ஐந்து ஆறைவிடப் பெரியது! – 01
முகில்
ஐந்தறிவு உயிரினங்களிடமிருந்து ஆறறிவு மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் குறித்துப் பேசும் புதிய தொடர்.
எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் நம் மூதாதையர்களை வணங்குவதுதானே முறை. குரங்களுக்குக் கும்பிடு போட்டே தொடங்குவோம். குரங்கு என்றதுமே உங்கள் நினைவுக்கு வரும் விஷயங்கள் எவை?
குரங்கின் அதீதமான சேட்டைகள், மரம் விட்டு மரம் தாவுவது, நம்மிடமிருந்து உணவைப் பறித்துத் தின்பது, உட்கார்ந்து பேன் பார்ப்பது, நம்மைப் பார்த்து பல்லைக் காட்டி முறைப்பது, தொப்பி கதை, சஞ்சீவி மலையைத் தூக்கிப் பறக்கும் ஒரு கடவுளின் உருவம், இப்படிச் சில.
அற்புதமான விஷயங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை என்றால் நாம் குரங்கை இன்னும் சரியாக உற்றுக் கவனிக்கவில்லை என்றே அர்த்தம். இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும்போது குரங்குகள் குறித்த நம் பார்வை மாறிவிடும். இது நம் மூதாதையர் மீது சத்தியம். ‘அமெரிக்கன் இனக் குரங்கு ஒன்று ஒருமுறை பிராந்தியைச் சுவைத்து விட்டது என்றால் மீண்டும் அதைத் தொடக்கூடச் செய்யாது. ஏனென்றால் அது மனிதனை விட புத்திசாலி!’ என்று திருவாசகம் உதிர்த்திருக்கும் பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வின் மீது சத்தியம்.
‘அந்தக் காலத்துல மனுசங்க குரங்குகளை எப்படி வேட்டையாடுனாங்கன்னு தெரியுமா?’ – தந்தை மகனிடம் கேட்டார்.
‘வில் அம்பு வைச்சா? இல்லேன்னா ஈட்டியா?’
‘அதெல்லாம் இல்ல. ஒரு பெரிய ஜாடி. அதுக்குள்ள குரங்குகளுக்கு பிடிச்ச மாதிரி உணவை வைச்சிருவாங்க. அந்த ஜாடியோட கழுத்துப் பகுதி ரொம்ப சின்னதா இருக்கும். உணவைத் தேடி வர்ற குரங்குகள், ஜாடிக்குள்ள கையை விடும். உள்ளங்கை நிறைய உணவை அள்ளும். ஆனா, ஜாடியோட கழுத்துப்பகுதி சின்னதா இருக்குறதால அதனால கையை உணவோட வெளிய எடுக்க முடியாது. குரங்கு உணவைக் கீழ விட்டுட்டா கையை எடுத்துடலாம். ஆனா, அது விடாது. உணவோட கையை எடுக்க முயற்சி பண்ணி மாட்டிக்கும். மனிதனுக்கு உணவாயிரும்’ என்றார் தந்தை.
‘Moral of the Story ஒரு விஷயம் கிடைக்கலைன்னா விட்டுரணும். அதைவிட பெரிய விஷயம் பின்னால கிடைக்கலாம். பிடிவாதமா இருந்து, முட்டாள்தனமா ஆபத்துல மாட்டிக்கக்கூடாது. அதானே?’ – என்று மகன் கேட்க,
‘சரியா சொன்ன.’
‘இதுல குரங்கோட முட்டாள்தனத்தைவிட, மனிதனோட நயவஞ்சகமும் சுயநலமும்தான் எனக்கு தப்பா தெரியுது அப்பா’ என்று மகன் சொல்லவும் தந்தையால் அதை ஆமோதிக்காமல் இருக்க முடியவில்லை. குரங்குகளை முட்டாளாகக் காண்பிக்கும் நீதிக்கதைகள் புழக்கத்தில் நிறையவே உண்டு. குரங்குகளின் புத்திசாலித்தனத்தை, குழு மனப்பான்மையை, தலைமைப் பண்பை, இரக்க குணத்தை, அழகான அன்பை, இன்னும் பல அற்புதங்களைப் பதிவு செய்யும் கதைகள் மிகக்குறைவே. நாம் அந்த பாசிட்டிவ் பக்கங்களை மட்டும் அவற்றின் வாழ்க்கை முறையிலிருந்து பார்க்கலாம். மனிதருக்கு மிக நெருங்கிய இனம் என்று பல மரபியல் ஆய்வுகள் பலவும் அழுத்தமாகச் சொல்லும் சிம்பன்சி குரங்குகளின் உலகத்துக்குள் செல்வோம்.
உல்ஃப்கேங் கோஹ்லெர், சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய ஆய்வாளர். சிம்பன்சிகள் குறித்த இவரது ஆய்வுகள் முக்கியமானவை. ஒருமுறை தான்சானியா காடுகளில் எளிதில் எட்டாத உயரத்தில் பழம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டார் உல்ஃப்கேங். அங்கே மூன்று அட்டைப் பெட்டிகளையும், இரண்டு கம்புகளையும் வைத்துவிட்டு மறைந்திருந்து கவனித்தார். அங்கே வந்த சிம்பன்சிகள் முதலில் பழத்தை எட்டிப் பறிக்க முயற்சி செய்தன. தாவின. ஒன்றின் மீது ஒன்று ஏறி குதித்துப் பார்த்தன. பழம் எட்டவில்லை.
அங்கிருந்த அட்டைப் பெட்டிகளையும் கம்புகளையும் பார்த்தன. இவை புதிதாக இருக்கின்றனவே, இவற்றைக் கொண்டு பழத்தை எடுக்க முடியுமா என்று யோசித்தன. பெட்டி ஒன்றின் மீதேறி தாவின. கம்பைக் கொண்டு முயற்சி செய்தன. தாம் அடைந்த தோல்விகளின் அடிப்படையில் புதிது புதிதாக யோசித்துத் திட்டம் தீட்டின. பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, கம்பைக் கொண்டு எட்டி அடித்து, பழத்தை அடைந்தன. ஆம், சிம்பன்சிகள் புதிதாகக் கிடைக்கும் விஷயத்தைக் கொண்டு, அவற்றை ஆக்கபூர்வமான கருவிகளாக எப்படிப் பயன்படுத்தலாம் என்று திட்டமிடுவதில் கில்லாடிகள். இவை பல முறை ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இளைய சிம்பன்சிகள் பெரிய சிம்பன்சிகளை மீறி எதுவும் செய்வதில்லை. ஆம், அவ்வளவு மரியாதை. அதேபோல மூத்த சிம்பன்சிகள், தமது அனுபவ அறிவை, கற்றுத் தேர்ந்த தந்திரங்களை, வாழ்வதற்குத் தேவையான வித்தைகளை, தொழில் நுட்பங்களை எல்லாம் இளைய சிம்பன்சி சமுதாயத்துக்குக் கடத்துவதை ஒரு கடமையாகவே செய்கின்றன.
நமக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிக் கொடுத்தால் அவன் நம்மைவிட பெரியவனாகிவிடுவானோ என்னும் சின்ன புத்தி சிம்பன்சிகளுக்கு இல்லை. அவை அறிவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்த வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கின்றன.
சிம்பன்சியின் தாய்ப்பாசத்தைப் புகழ இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் எத்தனைப் பாடல்கள் போட்டாலும் போதாது. முதல் சில வருடங்களுக்குத் தனது குட்டியைப் பாதுகாப்பதில், அரவணைப்பதில், அடிப்படை விஷயங்களைக் கற்றுத் தருவதில் தாய் சிம்பன்சி சலிப்படைவதே இல்லை. இதைவிட முக்கியமான விஷயம், ஏதோ ஒரு சிம்பன்சி குட்டி அநாதையாகிப் போய்விட்டால், ஏதோ ஓர் ஆண் – பெண் சிம்பன்சி ஜோடியானது அந்தக் குட்டியைத் தத்தெடுத்துக் கொள்ளும். தாம் ஈன்ற குட்டியாகவே கருதி, பேணிப் பாதுகாத்து வளர்க்கும். சிம்பன்சியின் இரக்க குணமானது இமயத்தை விடவும் உயர்ந்தது.
ஆம், இன்னொரு சிம்பன்சி இருக்கும்வரை எந்த ஒரு சிம்பன்சியும் அநாதை கிடையாது.
ஒரு சிம்பன்சி சோர்வாகவோ, கோபமாகவோ, விரக்தியிலோ இருந்தால் அதன் சக சிம்பன்சி வந்து அப்படியே அணைத்துக் கொள்ளும். கட்டிப்பிடி வைத்தியம். அதன் மனமானது சமநிலைக்கு வரும் வரை, ஆறுதல் கிடைக்கும் வரை அந்த அன்பான அரவணைப்பு நீடிக்கும். சக தோழமையின் கண்ணீரைத் துடைப்பது கடமை என்பது சிம்பன்சியின் மரபணுவில் பதிந்த பாடம். அதேபோல ஜாலியாகக் கொட்டமடித்து விளையாடுவதிலும் சிம்பன்சி தோழர்களுக்கு இணையாக வேறு யாரையும் சொல்ல முடியாது.
சிம்பன்சி புராணத்தில் கடைசியாக ஒரு புகழாரம். சிம்பன்சிகள் புதிய நுட்பங்களைக் கற்பதில் வல்லவர்கள். மாற்றி யோசிப்பதில் கில்லாடிகள். கையில் இருக்கும் பொருள்களை தமக்குத் தேவையான கருவியாக மாற்றி உபயோகிப்பதில் வித்தகர்கள். சிம்பன்சிகளுக்கு யாரும் தன்னம்பிக்கைக் கதைகள் சொல்வதில்லை. ஏனெனில் குரங்குகளின் உலகில் சிம்பன்சியே தன்னம்பிக்கையின் தல!
ஒராங்குட்டான் இனக் குரங்குகளின் ‘தல’ பற்றி பேசுவோம். பொதுவாக குரங்குக் கூட்டத்தின் தலைவனை, சக்தி வாய்ந்த ஆண் குரங்கை ‘ஆல்பா’ என்றழைப்பர். அப்படிப்பட்ட ஆல்பா குரங்கில் ‘ஒராங்குட்டான் தல’ தனித்துவமானது. அது தனது கூட்டத்தை வழிநடத்துவதில் கடமை தவறாத வீரன். கூட்டத்தினருக்கு ஆபத்தா? முன்னின்று திட்டமிட்டு ஆபத்தை முறியடிக்கப் போராடும். எதிரிகளிடமிருந்து தம் எல்லையைப் பாதுகாக்கக் கடுமையாகப் போரிடும். கூட்டத்தினருக்கான உணவைத் தேடுவதிலும் பகிர்ந்து கொள்வதிலும் பொறுப்புடன் செயல்படும். உணவைத் தேடிச் செல்லும் ஆபத்தில்லாத பாதையைக் கண்டுபிடிப்பதில் ஆல்பா ஒராங்குட்டானின் பங்கே பிரதானமானது. அதன் வார்த்தைகளுக்குக் கூட்டத்திலிருக்கும் குரங்குகள் அப்படியே அடிபணியும். ஆல்பாவின் ஓசைகளே கட்டளை. அந்தக் கட்டளையே சாசனம்!
எந்த ஒரு ஆல்பா ஒராங்குட்டானும் எப்போதும் சுயநலத்துடன் சிந்திப்பதில்லை. ஆபத்துக் காலத்தில் தனது கூட்டத்தினரை முன்னே அனுப்பி விட்டு பதுங்கி நிற்பதில்லை. தன் கூட்டத்தினரைப் பலி கொடுத்தாவது தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. கூட்டத்தினருக்காகத் தன்னையே தியாகம் செய்பவனே ஆல்பாவாக இருக்கத் தகுதி பெற்றவன் என்பது குரங்குகளுக்குத் தெரியும். ஏனெனில்…
ஒவ்வொரு ஆல்பாவும் தலைமைப் பதவியை அதிகாரமாகக் கருதுவதில்லை. அதைப் பொறுப்பாக மட்டுமே எடுத்துக் கொள்கின்றன. தலைவனுக்கு அழகு தம் மக்கள் நலனுக்காக உழைப்பது மட்டுமே என்ற ‘சுயநலமற்ற அறிவு’ குரங்குகளுக்கு உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன்பு கபுச்சின் இனக் குரங்குகளை வைத்து பிபிசி நிறுவனம் போர்ட்டோ ரிகோவின் தீவு ஒன்றில் பரிசோதனை நடத்தியது. ஆறு கபுச்சின் குரங்குகள். அவற்றின் அடையாளத்துக்காக ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாத்திரங்களது பெயர்கள் வைக்கப்பட்டன. ஒரு சிறிய சந்தை அமைக்கப்பட்டது. குரங்குகளுக்குப் பணத்தை அறிமுகப்படுத்துவதே பரிசோதனையின் நோக்கம். பணம் என்பதற்குப் பதிலாக விதவிதமான உலோக டோக்கன்களைக் கொடுத்தார்கள். கடைக்குச் சென்று ஒரு டோக்கனைக் கொடுத்தால் உண்பதற்கு ஒரு பொருளைக் கொடுப்பார்கள் என்பதாகப் பழக்கப்படுத்தினார்கள். ஆய்வாளர்கள் நினைத்ததைவிட வேகமாகவே கபுச்சின் குரங்குகள் டோக்கன் உபயோகித்து உணவுப் பொருள்களை வாங்கப் பழகிக் கொண்டன.
பரிசோதனையின் அடுத்த கட்டம். ஒரு டோக்கனுக்கு ஒரு கடையில் இரண்டு வாழைப்பழங்கள் கொடுத்தார்கள். இன்னொரு கடையில் நான்கு வாழைப்பழங்கள் கொடுத்தார்கள். ஆம், ஆஃபர். குறைந்த விலைக்குக் கூடுதலாக பழங்கள் கிடைக்கும் கடையையே குரங்குகள் நாடத் தொடங்கின. அடுத்ததாக இதை வாங்கினால் இது இலவசம் என்ற திட்டத்தையும் செயல்படுத்தினார்கள். தமக்குத் தேவையோ இல்லையோ குரங்குகள் டோக்கன் கொடுத்து இலவசமான பொருள்களை வாங்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டின. அளவுக்கு மீறி வாங்கிக் குவித்தன.
பணம் என்பது வந்துவிட்டால் ‘பறிக்கும்’ புத்தியும் அனிச்சையாக வந்து சேருமல்லவா. ஆய்வாளர்கள் வேண்டுமென்றே சில டோக்கன்களைக் கீழே போட்டு வைத்தார்கள். குரங்குகள் அதை எடுத்து வைத்துக் கொண்டன. இந்த டோக்கன்கள் மதிப்பு மிக்கவை. இவை நம்மிடம் அதிகம் இருந்தால் நல்லது. இவற்றைப் பதுக்கி வைக்க வேண்டும் என்று குரங்குகள் நினைக்கத் தொடங்கின.
சூது நிறைந்த இன்னொரு திட்டமும் செயல்படுத்தப்பட்டது. ஒரு டோக்கனுக்கு இரண்டு பழங்கள் என்பது உத்தரவாதம். ஆனால், வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பினால் ஒரு டோக்கனுக்கு மூன்று பழங்கள் கிடைக்கலாம். 50% கூடுதல் லாபம். இல்லையேல் அது ஒரே ஒரு பழமாக, 50% நஷ்டத்தில் முடியவும் வாய்ப்பு உண்டு. ஒரு டோக்கனுக்கு உத்தரவாதமாக இரண்டு பழங்கள் வாங்கிக் கொள்கிறாயா, அல்லது ரிஸ்க் எடுத்து கூடுதலாக லாபம் கிடைக்குமா என்று விளையாடிப் பார்க்க விரும்புகிறாயா?
இந்தப் பரிசோதனைக்கு உள்ளான குரங்குகள், மூன்று பழங்கள் கிடைத்தால் சந்தோஷப்பட்டன. ஒன்று கிடைத்தால் வருத்தப்பட்டன. லாபத்தை ருசித்தவை மீண்டும் ரிஸ்க் எடுக்கத் துணிந்தன. நஷ்டத்தை ருசித்தவை, இரண்டு பழங்களே போதும் என்ற மனநிலைக்கு வந்தன. சில அப்படியும் ரிஸ்க் எடுத்தன. மனிதர்களைப் போலவே குழம்பித் தவித்தன.
இன்னொரு முக்கியமான விஷயம், பழங்களைத் திருடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் குரங்குகளை அதைப் பயன்படுத்தவும் தவறவில்லை. இப்படியாகப் பல்வேறு பரிசோதனைகளின் மூலம் அந்த கபுச்சின் குரங்குகளுக்கு ‘பொருளாதாரமும் வணிகமும் சூதும்’ கற்றுக் கொடுக்கப்பட்டன. இந்தப் பரிசோதனையை நடத்திய யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லாரி சாண்டோஸ், இந்த ஆய்வு குறித்தும், குரங்குகள் மனிதர்கள் போலவே சிந்திப்பது குறித்தும் பக்கம் பக்கமாகப் பேசியுள்ளார். அதெல்லாம் கிடக்கட்டும். நாம் சக மனிதர்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.
குரங்குகளை குரங்குகளாகவே இருக்க விடுங்கள். முடிந்தால் அவற்றின் இயல்பான நற்குணங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். மனிதனின் சின்ன புத்தியை அவற்றின் மேல் திணிக்காதீர்கள்!