சாதனையாளர்கள் பக்கம்

பேராசிரியை ப.தேவி அறிவுசெல்வம்

பாரதத்தின் பன்முகத்தன்மை கொண்ட திருக்கோயில்களின் கட்டடக்கலைகள் பாமரனுக்கும் விளக்குகிற வடிவமைப்புகள் இறையருள் மட்டுமல்ல.. இறை விஞ்ஞானமாகவும் உலகம் முழுவதும் வியந்து பார்க்கப்படுகிறது..! 

“..உளியால் செதுக்குகிற சிற்பியிடமிருந்து கஷ்டங்களையும் வலிகளையும் பொறுமையாகவும் நிதானமாகவும் நான் ஏற்றுக்கொண்டதால் தான் முழு உருவம் பெற்றுருக்கிறேன்..” என்கிற படிப்பினையை சிற்பங்கள் பறைசாற்றுகின்றன..!

அப்படியொரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மதுரையை சேர்ந்த பேராசிரியை ப.தேவி அறிவு செல்வம், M.Pharm,Ph.D,Dip in Temple architecture தற்பொழுது பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருந்தியல் கல்லூரியில் (இருபது வருட கல்லூரி கல்விப்பணி) கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தாவர மருந்தியல் துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் தாவர மருந்தியல் துறையில் 110 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சி இதழ்களில் வெளியிட்டுருக்கிறார்.

திருக்கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பம் பற்றி 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை உலகத் தமிழர்களின் வரலாறும் வாழ்வியலும் தொகுதி 2, மாத இதழ், மின்னிதழ்கள், கருத்தரங்கள் போன்றவற்றில் வெளியிட்டுருக்கிறார்.

அத்துடன் திருக்கோயில் சிவாச்சாரியார்கள் பட்டாச்சாரியார்களுக்கு சிற்ப சாஸ்திர வகுப்பு எடுக்கும் பயிற்றுனாராகவும் உள்ளார்.

மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரம் வருடங்கள் பழமையான கோயில்கள் கல்வெட்டுகளை கண்டறிந்து அதன் முக்கியத்துவத்தை அப்பகுதி மக்களுக்கு எடுத்துரைத்து வழிபாட்டிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

(மறவபட்டி, பெரிய ஊர்சேரி, கோவிலூர், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தவ்வை). மதுரை தொல்லியல் சங்கம் முகநூல் குழு வழியாக மதுரை நடுகற்கள் என்ற நூலினை வெளியிட்டுருக்கிறார்.

மதுரை சுற்றுவட்டார பகுதியில் கள ஆய்வின் வழியாக 23 இடங்களில் 33 நடுகற்களை கண்டறிந்து அதன் விவரங்களை இந்நூலில் வெளியிட்டுருக்கிறார்.

மதுரையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆய்வு செய்திகளை சொற்பொழிவு ஆற்றியும் மற்றும் தொல்லியல் மற்றும் வரலாற்றை சான்றுகளுடன் கள ஆய்வின் வழியாகவும் எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார்.

பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவர்களுக்கு மதுரையை சுற்றி இருக்கும் வரலாற்று சின்னங்கள் பற்றிய கருத்தரங்கு மற்றும் மரபு பயணம் மற்றும் இணையங்களிலும் இலவசமாக சொல்லிக் கொடுக்கிறார்.

பேராசிரியையால் கண்டற்றியப்பட்ட பொக்கிஷங்கள்…,

மதுரையில் 60 நடுகற்கள் மற்றும் கல்வெட்டுகள், இரும்பு காலத்தை சேர்ந்ததாக கருதப்படும் 4200 வருடங்கள் தொன்மையான புலிமலை பாறை ஓவியம் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர்களின் கல்வெட்டுகள் பல நடைமுறைக்கு வந்திருக்கின்றன.

பலவருடங்களுக்குப்பிறகு 1300 வருடங்கள் தொன்மையான திருப்பரங்குன்றம் தவ்வை வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் அதேபோல பெரிய ஊர்சேரியில் உள்ள விஷமுறிவு கல்வெட்டினை காமாட்சி கோயிலாக எடுத்துக்காட்டி வழிபாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார்.

மறவபட்டி பிற்கால பாண்டியர்கள் கோயிலான பெருமாள் கோயில் வரலாற்றினை கண்டறிந்து அதனை புனரமைப்பு பணி மற்றும் அலங்காநல்லூர் அருகே கோயிலூர் பிற்கால பாண்டியர் கோயில் மற்றும் யோக நரசிம்மர் கோயில் கிபி 940சோழர்கால கல்வெட்டிற்கு கம்பி வேலி போட்டு பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

2023ல் மதுரையில் 4,200 ஆண்டு பழமையான பாறை ஓவியம் ஒன்றினை புலிமலை பகுதியில் கண்டறிந்து ஆவணப்படுத்தியிருக்கிறார் அன்னை மீனாட்சி உழவாரப்பணிக்குழு சார்பாக மாதத்திற்கு 5 கோயில்களை தூய்மை செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

மதுரையில் 70க்கும் மேலான நடுகற்களையும், கல்வெட்டுகளையும், தொல்லியல் சின்னங்களையும் கள ஆய்வின் வழியாக கண்டறிந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.

தாவரமருந்தியல் ? மரபுபயணம் ? சிற்பசாஸ்திரம் ? எல்லாவற்றிற்கும் கேள்வி-பதிலாக திருக்கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் ப.தேவி அறிவுசெல்வம் நம்மோடு மனம்திறக்கிறார்…,

பழமையான கோயில் கல்வெட்டுக்களை எப்படி கண்டறிவீர்கள் ?

சாலை விரிவாக்கம் மற்றும் பழமையான கட்டிடங்களை புரனமைக்கும் போது கல்வெட்டுக்கள் கிடைக்கும் கிராமங்களில் கல்வெட்டுக்களே தெய்வமாகவும் வணங்கப்படுகிறது அதில் எழுத்துக்கள் இருந்து அதனை வாசிக்கும் போது கல்வெட்டு விவரங்கள் தெரியவரும்.

இதுவரை எத்தனை இடங்களில் சொற்பொழிவு ஆற்றியுள்ளீர்கள் ?

மதுரை மன்னர் கல்லூரி மற்றும் சௌராஷ்டிரா பெண்கள் கல்லூரி மற்றும் பொது அமைப்புகள் என சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளேன்.

மரபு பயணம் பற்றி ?

கடந்த ஒன்பது ஆண்டுகளாக மரபு பயணம் நடத்தி வருகிறேன் இதுவரை ஐந்தாயிரம் பேர்கள் பயனடைந்துள்ளனர்.

தாவர மருந்தியல் என்றால் என்ன ?

தாவர மருந்தியல் என்பது தாவரத்தை கொண்டு மருந்தகளை தாயார் செய்து அதனை ஆய்வகத்திற்கு உட்படுத்தி பிறகு வணிக ரீதியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதே தாவர மருந்தியல் துறையின் வேலை ஆகும்.

சிற்ப சாஸ்திரம் குறித்து ?

சிற்ப சாஸ்திரம் என்பது கோயில் மற்றும் சுவாமி விக்கிரங்களை செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு நூல், பொதுவாக தமிழகத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகு கட்டுமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன அவை ஆகமங்கள் மற்றும் சிற்ப சாஸ்திரம் எனும் இலக்கண நூல்களின் அடிப்படையில் கட்டப்படுள்ளன.

அக்கோயில்களில் பூஜைகள் மற்றும் விக்கிரங்களின் பராமரிப்பு பற்றிய விளக்கங்களை கோயில் அர்ச்சர்களுக்கு தெரிவிப்பதே இந்த வகுப்பின் நோக்கமாகும்…” என்றார்.