பண்படுத்தும் நல்மொழிகள்

ஆன்மீகச் செல்வர் ஆதிசங்கரர் ஒரு சமயம் மிகவும் நோய்வாய்ப்பட்டுக் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த விபரம் தெரியாத விஜயநகரத்து அரசர் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டுப் போகலாம் என்று, ஆதிசங்கரர் தங்கியிருந்த சிருங்கேரி மடத்துக்கு வந்தார்.

அரசரைக் கண்டதும் சீடர்கள் ஆதிசங்கரருக்கு உடல்நிலை சரியில்லை எனவே அரசரைப் பார்ப்பது சந்தேகம் என்று சொல்லிவிட்டு, அரசர் வந்துள்ள செய்தியை ஆதிசங்கரரிடம் சொன்னார்கள். அரசர் தன்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்துவிட்டாரே என்று எண்ணிய ஆதிசங்கரர் ‘அவரை வரச் சொல்லுங்கள்’ என்று கூறினார்.

ஆதிசங்கரர் அறையில் இருக்கைகள் எதுவும் இல்லை. எனவே, அரசர் அமர்வதற்கு ஒரு மரப்பலகையையும், ஆதிசங்கரர் அமர்வதற்கு ஒரு மரப்பலகையையும் சீடர்கள் போட்டார்கள்.

உள்ளே வந்த அரசர் அங்கு ஒரு பலகையில் உட்கார்ந்து கொண்டார். ஆதிசங்கரரும் அங்கு வந்தார். அவர் அடுத்திருந்த தனக்கான பலகையில் அமராமல் அதன் அருகில் அமர்ந்து கொண்டார். அதேசமயம் அந்தப் பலகையைத் தன் அருகில் வைத்துக் கொண்டார்.

விஜயநகரத்து அரசரும், ஆதிசங்கரரும் பல நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது ஆதிசங்கரர் அருகில் இருந்த பலகை ஆடிக்கொண்டேயிருந்ததை அரசர் கவனித்தார். அதேசமயம் காய்ச்சலால் அவதிப்படுவதாகச் சொன்ன ஆதிசங்கரர் காய்ச்சல் கொண்டவர் போலத் தென்படவும் இல்லை. நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகவே அரசருக்குப் பட்டது.

பேசி முடிக்கின்ற வரை அந்தப் பலகை மட்டும் ஆடிக்கொண்டிருப்பதைக் கவனித்த அரசர், ஆதிசங்கரரிடம் “ஏன் இந்தப் பலகை ஆடிக்கொண்டேயிருக்கிறது. நான் முதலில் தாங்கள் வரும்முன் பார்த்த போது அசையவில்லையே” என்று கேட்டார்.

ஆதிசங்கரர், “ஒன்றுமில்லை அரசே, உம்மைச் சந்திக்க வேண்டும் என்பதால் எனது காய்ச்சலையும் நடுக்கத்தையும் இந்தப் பலகைக்கு மாற்றிவிட்டேன். ஆகையால் அது ஆடிக்கொண்டிருக்கிறது” என்றார்.

உடனே அரசர் “குருவே, அப்படியானால் நிரந்தரமாக உங்கள் நோயை இந்தப் பலகையிடம் ஒப்படைத்துவிட்டு, நீங்கள் நலமோடு பணிசெய்யலாமே” என்று கேட்டார்.

“அரசரே, துறவியாகிய என்னைத் திருடனாகச் சொல்கிறீரா? அவரவர் செயல்களுக்கான பலனை அவரவர் தான் அனுபவிக்க வேண்டும். அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை. சென்று வாருங்கள்” என்று கூறி அரசருக்கு விடைகொடுத்தார் ஆதிசங்கரர்.

அரசர் சென்ற அடுத்த நிமிடமே உடல்நடுக்கமடைய தன் ஓய்வறையை நோக்கிச் சென்றார் ஆதிசங்கரர். பலகை தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு அமைதியானது. இப்படியொரு சம்பவத்தை ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாற்றில் நிகழ்ந்ததாகச் சொல்லுகின்றார்கள்.

இந்தச் சம்பவம் பல்வேறு ெசய்திகளை நமக்குச் சொல்லுகின்றது. அதாவது கடவுளின் பேராசீர்வாதம் பெற்ற ஆதிசங்கரரும் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். மேலும் அவரவர் வினைகளுக்கான பலனை அவரவர் அனுபவிக்க வேண்டும் என்று சொல்வதன் மூலம் தன் உடலுக்குக் காய்ச்சல் வருமாறு தான் கவனமின்றி இருந்ததையும், அதைக் கவனித்துச் சரிசெய்வது தனது கடமையென்றும் கூறுகிறார்.

ஆம், எல்லா நலன்களிலும் மேலானது உடல்நலனே என்பதை நாம் இந்தக் கொரோனா காலத்தில் நன்றாகவே உணர்ந்துவிட்டோம். மகாபாரதத்தில் தர்மரிடம் ஒரு சமயம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். அதாவது, “உலகிலேயே மிக முக்கியமான செல்வம் எது?” என்பதே அக்கேள்வி. ‘ஆரோக்கியம்தான் உலகிலேயே மிக முக்கியமான செல்வம்’ என்று பதில் தந்தாராம் தருமர்.

உலகில் மிக முக்கியமான செல்வமாகத் திகழ்வது ஆரோக்கியம் தான் என்பதை நாம் எவ்வளவு வேகமாக உணர்கின்றோமோ, எவ்வளவு வேகமாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுகின்றோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறலாம்.

“நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்” என்ற இந்த வார்த்தைகள்தான் வாழ்க்கையின் அடித்தளமாக உள்ளது. இந்தக் கணினி உலகம், இணைய உலகம், எதையும் விரைவாகப் பெறத் துடிக்கும் அவசர உலகம், நம்மையெல்லாம் ஒரு மாயை மிகுந்த வாழ்வில் ஆழ்த்தியிருக்கிறது. உடல்நலத்தைவிட மற்ற சுக, போகங்களில் திளைப்பதும், அதன்பிறகு உடல்நலன் பாதிக்கப்பட்டால் மருத்துவர்களிடம் சென்று மாத்திரை மருந்துகளால் தங்களைச் சரிசெய்து கொள்வதும் இன்று பரவலாகிவிட்டது.

நமது அக்கறையின்மையால், ஆர்வமின்மையால் இலாபம் அடைபவர்கள் கொள்ளை இலாபம் அடிக்கும் மருத்துவர்களும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், மருந்துக் கடைகளும், இவர்களுக்குத் துணைபோகும் பல்வேறு சுயநலவாதிகளும் தான்.

எளிதில் செரிக்காத உணவுகளைச் சாப்பிட்டு நமது உடலை நாம் தான் கெடுத்துக் கொள்கின்றோம். நமது உடலில் குடல் எப்படிச் செயல்படுகிறது? அதன் அளவு எவ்வளவு? அதன் அமைப்பு எப்படி இருக்கிறது? என்பதைத் தயவுகூர்ந்து வீடியோ மூலம் ஒவ்வொருவரும் காணவேண்டும்.

மெல்லிய படலமாக இருக்கும் இந்த அமைப்பு எவ்வளவு தூரம் நாம் உண்ணும் மருந்து, மாத்திரைகளாலும், கடினமான, ஒவ்வாத உணவுகளாலும் பாதிக்கப்படும் என்பதை அப்போது நம்மால் உணரமுடியும். சிக்கன்குனியா, டெங்கு, கொரோனா என்று பல நோய்கள் வந்த போதும் நம்மைக் காப்பாற்றியதும், காப்பாற்றிக் கொண்டிருப்பதும் ஆயுர்வேதம் சொல்லும் மருந்துகள்தான். இயற்கையின் நலனைப் பாதுகாத்து வந்தாலே, நமது உடலும் ஆரோக்கியமாகிவிடும் என்பது நாம் இப்போது அறிகின்ற ஒன்றாகின்றது.

உடல்நலமே, மனநலம்

ஒரு சிறுவன் தன் தந்தையிடம் ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று நச்சரித்தான். அவனது தந்தைக்கு ஞாயிறு மட்டுமே விடுமுறை நாள். பெரும்பாலும் தனது தொழில் சம்பந்தமான வார நாட்களில் வெளியூரில் இருக்கும் அவருக்கு ஞாயிறு எங்கும் செல்லப் பிடிக்காது. ஆனாலும் மகனின் தொந்தரவுக்காக அந்த ஞாயிற்றுக்கிழமை மாலைக்காட்சிக்குக் குடும்பத்தோடு செல்ல ‘டிக்கெட்’ முன்பதிவு செய்துவிட்டார்.

ஞாயிறு மாலை 6.00 மணிக்கு அவனது குடும்பத்திலிருந்த தாத்தா, பாட்டி உட்பட ஆறு பேருக்கும் படத்துக்கு டிக்கெட் எடுத்தாயிற்று. அதற்கு முந்திய நாள் அவர்களது பக்கத்து வீட்டில் ஒரு திருமணம். திருமணத்துக்கு அம்மா, மகன், மகள் மூவரும் சென்றிருந்தார்கள். அங்கே ஐஸ்கிரீம் சுவையாக இருந்ததால் மகன் அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “அதிகம் சாப்பிடாதே காய்ச்சல் வரும்” என்றார் தாய். மகன் கேட்கவில்லை. இன்னும் ஒன்றை எடுத்துச் சாப்பிட்டான்.

ஞாயிறு காலை எழுந்தவுடன் மகனுக்கு லேசான காய்ச்சல். ஏற்கெனவே சளித் தொல்லையிலிருந்த அவனுக்கு அதிக ஐஸ்கிரீம் காய்ச்சலைத் தந்தது. அம்மாவிடம் சொன்னான். அவனுக்குக் காய்ச்சல் மாத்திரை கொடுத்தார் அம்மா. தனக்குக் காய்ச்சல் என்று அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்று மகன் கெஞ்சினான். காரணம் தனக்குக் காய்ச்சல் என்றால் மாலை திரைப்படம் பார்க்கப் போக முடியாது என்ற பயம். தாயும் ‘சரிபோகட்டும்’ என்று ஒத்துக்கொண்டார்.

மதியம் வரை ஓய்வெடுத்த மகனுக்குக் காய்ச்சல் குறையவில்லை. தந்தையின் பார்வையிலிருந்து ஒரு வழியாகத் தப்பித்துக் கொண்டான். மதிய வேளையும் காய்ச்சல் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு படுத்துவிட்டான். மாலை ஐந்து மணிக்குக் கிளம்புகிற நேரமும் காய்ச்சல் குறையவில்லை. அவனது உடல் நடுங்குவதையும், முகம் அதிகமாகச் சிவந்து, சுருங்கிப் போயுள்ளதையும் கவனித்த அப்பா, “என்னடா ஆயிற்று?” என்று தொட்டுப் பார்த்த போது, உடம்பெல்லாம் கொதித்தது. அவனோ, அப்போது தந்தையிடம் “அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா, சரியாகிவிடும். ஒரு மாத்திரை போட்டால் போதும். வாங்க, படத்துக்குப் போகலாம்” என்று சொன்னான்.

இவ்வளவு காய்ச்சலோடு, பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு படம் பார்க்கப் போக, அங்கு குளிரில் இவனுக்கு காய்ச்சல் இன்னும் அதிகமானால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால், தந்தை அதற்கு அனுமதிக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை வேறு. டாக்டர்களைப் பார்ப்பதே கடினம் என்பதோடு, விஷயத்தை மறைத்ததற்காகத் தாய்க்கும், மகனுக்கும் திட்டையும் தந்துவிட்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். நீண்ட நாள் ஆசைப்பட்ட படமும் அன்று பார்க்க முடியாமல் போனது.

மகன் தன்னைக் கட்டுப்படுத்தியிருந்தால், உடலின் தன்மைக்கு ஏற்ப அடக்கி வாசித்திருந்தால் இன்று எல்லோரும் வெளியில் சென்று மகிழ்ச்சியாகப் படம் பார்த்துத் திரும்பியிருக்கலாம். ஆனால் இது இயலாமல் போனதற்கு யார் காரணம்? என்று ஆராய்ந்தால் “எல்லாவற்றுக்கும் உடல்நலமே முக்கியம்” என்பது புரியும்.

பல சமயங்களில் சொல்லக்கூடிய கூற்று “உடல் பொய் சொல்லாது, மனம் பொய் சொல்லும்” என்று. ஆம், இங்கே தனக்குக் காய்ச்சல் பெரிய விஷயமில்லை என்று மகன் கூறினான். எப்படியும் தந்தையிடம் தனக்குக் காய்ச்சல் போலக் காட்டிக் கொள்ளாமல் மறைக்கலாம் என்று அவன் எண்ணினான். ஆனால், அவனது நடுக்கமும், முகமும், உடலும் காய்ச்சலைக் காட்டிக் கொடுத்துவிட்டன. உடல் நம்மை எப்போதும் ஏமாற்றாது, நாம் தான் பல நேரங்களில் அதற்குத் துரோகம் செய்கின்றோம்.

இந்த இயற்கையோடு, அதன் சுவாசத்தோடு இணைந்திருக்கும் நாம் நமது சுவாசத்தை நிறுத்துகின்ற போது இந்த மண்ணிலேயே விழுந்துவிடுகின்றோம். “சுவாசம்” என்று சொல்லக்கூடிய உயிர் மூச்சாகிய ஆக்சிஜனைத் தாவரங்களின் மூலமாக, நீர்த்திரள்கள் மூலமாக இயற்கை நமக்குத் தந்து அன்றாடம் காத்து வருகின்றது. இயற்கை இந்தச் சுவாசம் என்கின்ற உயிர் மூச்சான பாசக் கயிற்றைக் கண்ணுக்குத் தெரியாமல் நம்மோடு இணைத்து நம்மை வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றது.

இந்த உடல் இந்தப் பாசக்கயிறான மூச்சைப் பிடித்துக் கொண்டு உலகமெல்லாம் சுற்றி வருகின்றது. சில நேரங்களில் இந்த உயிர் மூச்சு உடலில் சரிவரச் செல்ல முடியாதபடி பல்வேறு தடைகளை நமது கவனக்குறைவால் இந்த உடலுக்குச் செய்துவிடுகின்றோம். அப்போதும் சில அறுவைச் சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள் என்று நாம் சரிசெய்து கொண்டு பயணிக்கின்றோம். ஆனால், ஒரு நிலையில் நமது உடல் பலவீனமடைந்து மூச்சினை உள்ளே இழுக்க முடியாதபடி செய்து நம்மை வீழ்த்திவிடுகின்றது. இதன்மூலம் நாம் உணர வேண்டியது நமது ‘பலமும், பலவீனமும்’ இந்த உடல்தான்.

என்ன தான் பணம் பெற்றிருந்தாலும், வசதி, வாய்ப்புகள் பெற்றிருந்தாலும், செல்வாக்குப் பெற்றிருந்தாலும் உடல்நலம் பேணப்படவில்லையென்றால் வாழ்க்கை முடிந்து போகின்றது. கொரோனா காலத்தில் பல பெரிய மனிதர்களையும், நமக்கு வேண்டிய பலரையும் இழந்த போதெல்லாம் “உடல் ஆரோக்கியமே – மாபெரும் செல்வம்” என்ற கூற்று நம்மில் பதிவாகிவிட்டது. ஆயிரம் சாதனைகள் புரிய நினைத்தாலும் சிறிய உடல்நலக் குறைபாடு நம்மை வீழ்த்திவிடுகின்றது. எனவே, வாழ்வில் முதலிடம் உடல்நலனுக்குத்தான் என்பதை மீண்டும் உணரவே இந்த நோய்த் தொற்றுகள் நம்மைப் பிடித்துள்ளன என்பதையும் ஆழமாக உணர்ந்து கொள்வோம்.

பேண வேண்டிய சமநிலை

பெரிய செல்வங்களைத் தேடிப் பலரும் அவசர கதியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு வசதியானவர் மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் அவரது உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டு “என்ன உடம்பை இப்படிக் கெடுத்து வைத்துள்ளீர்கள்?” என்று கேட்டார். காரணம் பல நோய்களும் அவருக்கு இருந்தது.

மருத்துவர் சிரித்துக் கொண்டே அந்தப் பணக்காரரிடம் “ஆமாம் உங்கள் வீட்டுக் காரைச் சரியாகப் பராமரிக்கிறீர்களா?” என்று கேட்டார். “என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? தினமும் இரண்டு முறை துைடப்பேன். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்வேன்” என்றார். “சரி, உங்கள் செல்போனைக் கொடுங்கள்” என்றார் மருத்துவர்.

அதைப் பார்த்ததும், “புதிதா?” என்று கேட்டார். “இல்லை கடந்த வருடம் வாங்கியது. நேற்றுத்தான் இந்தப் புதிய கவரை அமேசானில் ஆர்டர் பண்ணி வாங்கிப் போட்டேன். உங்களுக்குப் பார்க்கப் புதிதாக உள்ளது” என்றார் நோயாளி.

“பாருங்கள், உங்கள் ஆறு இலட்ச ரூபாய் காரைப் பராமரிக்கிறீர்கள். முப்பதாயிரம் ரூபாய் செல்போனைப் பாதுகாக்கிறீர்கள். ஆனால், உங்களது விலைமதிப்பற்ற உடலைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டீர்களே!” என்று சொல்லிவிட்டு உடல்நலனைப் பேண வேண்டிய வழிகளையும், நோயின்று விடுபட மருந்துகளையும் தந்தார் மருத்துவர். இதுபோன்ற சம்பவம் நமது வாழ்விலோ, நம் குடும்பத்திலோ அல்லது நம் நண்பர்களுக்கோ ஏற்படலாம். நமக்குக்கூட இந்த அனுபவமும் இருக்கலாம்.

வாழ்க்கை மகிழ்ச்சியோடு இருக்க முதலில் நாம் நமது உடலில் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு பதவிகளில், அதிகாரத்தில் இருக்கும் பல மனிதர்கள் தினமும் உடற்பயிற்சியைத் தவறாது மேற்கொள்கின்றார்கள். காரணம், அவர்களது உடல்நல பாதிப்பு அவர்களது நிறுவனத்துக்கோ அல்லது சார்ந்திருக்கும் அமைப்புக்கோ மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கிவிடும் என்பதை இவர்கள் அறிவார்கள்.

உடல்நலத்துக்கு முக்கியத்துவம் தருவதற்கு முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அல்லது கடைப்பிடிக்க வேண்டியது உள்ளச் சமநிலை ஆகும். புத்தர் வழிகாட்டிக் கற்றுக்கொடுத்த விபசன்னா தியானத்துக்கு நீங்கள் சென்றால், அந்தப் பயிற்சியில் அதிகமாக வலியுறுத்தப்படுவது உள்ளச் சமநிலைதான்.

‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ என்கிறார் திருவள்ளுவர். ‘ஆக்கம்’ என்றாலே செல்வம், சேர்ந்தது என்றுதானே பொருள். எனவே, மனநலம் நமது உயிருக்குச் செல்வமாக உள்ளது. உயிரே போனபின்பு செல்வத்தைக் கொண்டு என்ன செய்ய? ஆனால், தமக்குச் சாவே வராது என்ற எண்ணத்தில் நமது மனிதர்களில் பலர் பேசுவதும், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதும், திருட்டுத்தனமாகச் செல்வத்தைச் சேர்ப்பதும் இன்று அதிகமாகக் காணும் செய்தியாக உள்ளது. இப்படிச் சேர்த்தவர்கள் கதி என்ன என்பதை ‘மரண ஓலங்கள்’ தெரிவித்துக் கொண்டுதான் உள்ளது.

நாம் இங்கு ஆராய வேண்டியது ேதவைக்கான உழைப்பு அவசியம்தான். தேவைக்கான சேமிப்பும், தேடலும் அவசியமானதுதான். அதேபோல உடலின் சக்திக்காக உண்பதும் அவசியமானது தான். அதேசமயம் பேராசை கொண்டு உடலைக் கெடுத்துக் கொண்டு ஓடி உழைப்பதும், சுற்றியிருப்பவர்கள் நிம்மதியைக் கெடுப்பதும் தேவையில்லாத ஒன்றே. அளவுக்கதிகமாக உண்பதும், கண்டதையும் மென்று உள்ளே தள்ளுவதும் ஆபத்தானது என்பதை உணர வேண்டும்.

கோபமாக இருந்தாலும், மகிழ்வாக இருந்தாலும், அழுவதாக இருந்தாலும், அச்சமாக இருந்தாலும், இணையத்தில் ஈடுபடுவதாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும் இப்படி எந்தத் தேவையையும் உள்ளச் சமநிலையோடு பேணக் கற்றுக்கொள்வதுதான் உடல்நலத்தில் நாம் தரும் முதல் கவனமாக அமைகின்றது.

உடல்நலனைப் பேணிட அவசியமான உழைப்பும், உடற்பயிற்சிகளும், சரியான உணவுகளும், சரியான தூக்கமும், சரியான உறவுமுறைகளும், சரியான பழக்கவழக்கங்களும், நல்ல பண்புகளும் நம்மிடம் காணப்படும் போது நாம் நலமாக இருக்கிறோம். வள்ளுவர் அழகாகச் சொல்லுகின்றார்,

“மிகையினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”

ஒருவனின் உணவாலும், செயலாலும் மருத்துவர் சொல்லும் அளவைவிட அதிகமானால் நோய் உண்டாகும் என்கிறார் வள்ளுவர். மருத்துவர் சொல்லாமலேயே மிகையானதைக் குறைத்தும், குறைவானதை அதிகரித்தும் சமநிலையில் நாம் நமது உணவுப் பழக்கவழக்கத்தை மேற்கொண்டால் நோயின்றி வாழலாமே. ‘மருந்து’ என்ற ஒரு அதிகாரத்தையே தந்து நோயாளிக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் பல அரிய செய்திகளை ஐய்யன் திருவள்ளுவர் நமக்குச் சொல்லியிருக்கின்றாரே, அனைத்து மருத்துவமனைகளிலும், கல்வி நிலையங்களிலும் வீட்டிலும் விளக்கத்தோடு வைக்க வேண்டிய அதிகாரம் இது என்று சொன்னால் மிகையில்லை. ஆகையால், ‘உடல்நலனே முதல் நலன்’ என்று முயல்வோம். நம்முடல் காத்து நல்வாழ்வு பெறுவோம்.

நம் மூதாதையர்களின் ஒவ்வொரு பொன்மொழியும் பண்படுத்தும் நல்மொழிகளாக அமைந்து நமக்கு வழிகாட்டுகின்றன. ‘வழிநடந்தால் வாழ்க்கையுண்டு’ என்று உடல், உள்ள நலம் பேணிப் பல்லாண்டு வாழ்வோம். வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!