வெளிச்ச மனிதர்கள்!

ராஜேஷ் தாமோதர் கச்சி

புனேவின் சிவாஜிநகர்ப் பகுதியில் ஓடும் முலா-முத்தா ஆற்றங்கரையை ஒட்டித்தான் ராஜேஷ் தாமோதர் கச்சியின் வீடு அமைந்திருந்தது. அது அவருக்கு மிகவும் பழகிய ஆறு. சரியாக நடக்கத்தெரியாத வயதிலேயே அந்த ஆற்றில் நீந்த ஆரம்பித்துப் பழகிய அனுபவம் ராஜேஷுக்கு உண்டு. ஆற்றில் வெள்ளம் வந்தால் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடும். கழுத்தளவு நீரில் நடந்து சென்று பிறருக்கு உதவும் பழக்கம் சிறுவயதிலேயே ராஜேஷுக்கு ஆரம்பித்துவிட்டது. ‘அடுத்தவங்களுக்கு உதவுறதுதான் நாம கடவுளுக்குப் பண்ற சேவை!’ – இது ராஜேஷின் பாட்டி அவரிடம் அடிக்கடி சொல்லும் வாசகம். அது திருவாசகமாக அவரது மனத்தில் பதிந்துபோனது.

அப்போது ராஜேஷுக்கு பத்தொன்பது வயது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள டெங்கிள் பாலத்தின் மீது தன் நண்பர்களுடன் நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது வேகமாக ஓடும் ஆற்றின் நடுவே ஒரு செடியை ஒரு கை பற்றியிருக்க, இன்னொரு கை மட்டும் நீருக்கு வெளியே நீண்டு கொண்டிருந்தது. அது உதவி கேட்பது போலத் தெரிந்தது. ராஜேஷின் நண்பர்கள் அதிர்ச்சியாகி, பயந்து அங்கிருந்து ஓடிவிட்டனர். ஆனால், ராஜேஷ் யோசிக்கவே இல்லை. தாமதிக்காமல் நீருக்குள் குதித்தார். எதிர் நீச்சல் போட்டு அந்தக் கையை நோக்கிச் சென்றார்.

ஓர் இளம்பெண், அந்தச் செடியைப் பிடித்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். ராஜேஷ் அவளைப் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார். கண்களில் பயம் குறையாமல் நடுங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ராஜேஷின் பாட்டி, அந்தப் பெண்ணுக்கு மாற்று உடை கொடுத்தார். நெருப்பை மூட்டி அதன் அருகில் உட்காரவைத்து குளிர்காயச் செய்தார். சூடாக டீ போட்டுக் கொடுத்தார். அதற்குப் பிறகு யார் அந்தப் பெண் என்று விசாரித்தார்கள்.

‘வீட்டில் திருமண ஏற்பாடு செய்துவிட்டார்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் ஆற்றில் குதித்துவிட்டேன்’ என்றாள் அந்தப்பெண். ராஜேஷ், அந்தப் பெண்ணை அவளது வீட்டில் கொண்டுபோய்விட்டார். அவளது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ராஜேஷைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். கண்ணீருடன் நன்றி சொன்னார்கள். ‘தம்பி, நீதான் எங்க கடவுள்!’ என்றார்கள். உயிர் பிழைத்த அந்தப் பெண்ணில் கண்ணில் தெரிந்த நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் ராஜேஷை நெகிழ்த்தியது.

‘நான் மட்டும் காப்பாற்றவில்லை என்றால் என்ன ஆயிருக்கும்? இந்தக் குடும்பத்தின் சந்தோஷமே தொலைந்து போயிருக்கும் அல்லவா.’

ராஜேஷ், அப்போது உறுதியான முடிவு ஒன்றை எடுத்தார். இனி, உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரைக் கண்டாலும் அவர்களைக் காப்பாற்றுவேன். அது முதல் யாராவது ஆற்றில் தவறி விழுந்துவிட்டாலோ, அல்லது உயிரைப் போக்கிக் கொள்ளும் முடிவுடன் குதித்துவிட்டாலோ, ராஜேஷ் நொடிகூட யோசிக்கவில்லை. சடாரென ஆற்றில் குதித்து அந்த மனிதர்களின் உயிரைக் காப்பாற்றத் தொடங்கினார். உயிர் மீண்டு, வாழ்க்கை பெற்றவர்கள் சொல்லும் நன்றிதான் ராஜேஷுக்கான உத்வேகம்.

அதே பகுதியில் தள்ளுவண்டியில் பாவ் பாஜி, முட்டை புர்ஜியெல்லாம் விற்கும் சாட் கடை போட்டிருக்கிறார் ராஜேஷ். சில சமயங்களில் கடையில் வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள். பாவ் பாஜிக்கென வெங்காயத்தை வேகவேகமாக வெட்டிக் கொண்டிருப்பார் ராஜேஷ். திடீரென அவருக்கு மொபைலில் அழைப்பு வரும். ‘ராஜூ பையா! ஆத்துல ஒரு சின்னப்பையன் விழுந்துட்டான்’ என்று எதிரிலிருப்பவர்கள் பதறுவார்கள். ராஜேஷ் எதையும் யோசிக்கவே மாட்டார். அப்படியே தன் கடையை விட்டுவிட்டு, மொபைலில் பேசியபடியே ஓட ஆரம்பிப்பார். ‘எந்த இடத்துலன்னு சொல்லுங்க’ என்று கேட்டபடி ஆற்றை நோக்கி விரைவார். சரியான சமயத்தில் சென்று அந்த உயிரைக் காப்பாற்ற முடிந்தால், அவருக்கு அதைவிட மகிழ்ச்சி வேறில்லை.

உயிர்களைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பதோடு மட்டுமன்றி, தேவைப்பட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு அருகிலிருக்கும் சாஸூன் பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கிறார். தண்ணீரில் விழுந்த நபரின் குடும்பத்தினரிடம் சிகிச்சைக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் ராஜேஷே அதற்கும் தன்னால் முடிந்தவரையில் உதவியும் செய்கிறார். ‘இன்றைக்கு ஓர் உயிர் என்னால் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதுதான் எனக்கு வேண்டும்’ என்று மன நிம்மதி கொள்கிறார் ராஜேஷ். அதேசமயம் தன்னால் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் அவரை யாராலுமே தேற்றவே முடியாது.

கடந்த 25 ஆண்டுகளில் ஆற்றில் விழுந்த சுமார் 250 பேரைக் காப்பாற்றியிருக்கிறார். தவிர, ஆற்றில் மிதந்துவரும் உயிரற்ற உடல்களையும் (சுமார் 600-க்கும் மேல்) மீட்க தொடர்ந்து புனே போலீஸாருக்கு உதவி வருகிறார். மனிதர்கள் மட்டுமல்ல, ஆடு, மாடு, பறவைகள் உள்ளிட்ட எந்த உயிரினங்கள் ஆற்றில் சிக்கிக் கொண்டாலும் ராஜேஷ் நீரில் குதித்துக் காப்பாற்றுகிறார். தவிர, அந்தப் பகுதியில் நடக்கும் சாலை விபத்துகளில் சிக்கி, ரத்தத்துடன் கிடப்பவர்களைக் கண்டாலும் ராஜேஷ் யோசிக்கவே மாட்டார். ஆம்புலன்ஸ் வரட்டும் என்று காத்திருக்கவும் மாட்டார். தன் தோள் மீது தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடுகிறார். அப்படி, ராஜேஷால் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பலரும் இன்றைக்கு உயிர் மீண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ராஜேஷ் என்பவர் உயிர் கொடுத்த கடவுள்! மீண்டும் அவர்களைச் சந்திக்கும்போது ராஜேஷின் கண்களில் சந்தோஷப் புன்னகை!

ராஜேஷின் பாட்டி, அம்மா, மனைவி, மகன்கள் உள்ளிட்ட அனைவருமே அவரது இந்த தன்னலமற்ற, அதேசமயம் ஆபத்தான சேவைக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ‘இது மிகப்பெரிய சேவை. இதை எல்லோராலும் செய்துவிட முடியாது. இது எங்களுக்குப் பெருமை’ என்று ராஜேஷுக்குத் தோள் கொடுக்கிறார்கள். போலீஸார் ராஜேஷை ‘புனேவின் ஹீரோ’ என்றுதான் அழைக்கிறார்கள். பல்வேறு அமைப்புகள் ராஜேஷைப் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கின்றன. Raju : The Life Saviour என்ற ஆவணப்படம் ராஜேஷின் சேவைகள் குறித்து எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்துக்குத் தேசிய, சர்வதேச விருதுகளும் கிடைத்துள்ளன.

யாரிடமும் எப்போதும் எதையும் எதிர்பார்க்காத ராஜேஷ், ‘என் உடம்பில் உயிர் இருக்கும்வரை ஆபத்தில் சிக்கியிருக்கும் உயிர்களை மீட்கப் போராடுவேன்’ என்கிறார்.

ராஜேஷ் நம்மோடு வாழும் ரியல் சூப்பர் ஹீரோ!