திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

சமூகப் பார்வை – 3

இம்மாதம் குழந்தைகள் தினக் (நவ.14) கொண்டாட்டம் வருகிறது. சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் உற்சாகத்துக்குப் பதிலாகக் கவலையே நம்மை ஆட்கொள்கிறது.  நாளிதழ்களைப் புரட்டினால் பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை, சிறுமி கடத்தல், மாணவி மீது ஆசிட் வீச்சு என்பது போன்ற செய்திகள் ஆக்கிரமித்திருக்கின்றன. பாதிக்கப்படும் குழந்தைகளின் பெயர்களும் ஊர்களும் மட்டுமே மாறுகிறதே தவிர,  நடக்கும் குற்றங்களில் மாற்றமில்லை. இவற்றையெல்லாம் வாசித்துவிட்டு நம் குழந்தைகளை நினைக்கையில் “திக்” கென்றிருக்கிறது.

அனைத்து வடிவங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உதாரணமாக, திருவாடானை அருகே தனிக்குடித்தனம் செல்ல கணவன் உடன்படாததால் தனது இரண்டு குழந்தைகளை (1 மற்றும் 3 வயது) தண்ணீரில் அமுக்கிக் கொன்றிருக்கிறாள் ஒரு கொடூரத் தாய். இந்தச் செய்தியை வாசித்தபோது “காரணமில்லாமல் குழந்தைகளைக் கொலை செஞ்சுட்டாளே” எனச் சபிக்கத் தோன்றுகிறது. 

எந்தக்குழந்தை எங்கு? யாரால்?

தெருவோரக் குழந்தைகள், வேலை செய்யும் குழந்தைகள் மற்றும் நிறுவனங்களில் தங்கி வேலைபார்க்கும் குழந்தைகள் போன்றோர், பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு அதிக அளவு ஆளாகிறார்கள். துன்புறுத்தலுக்குள்ளாவதில் ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.  பாலியல் குற்றங்களை 30 சதவிகித ஆண் குழந்தைகளும் எதிர்கொள்கின்றனர்.

பள்ளிகள், பொது இடம், உறவினர்கள் வீடு எனக் குழந்தைகளுக்கு எங்கு வேண்டுமானாலும் பாலியல் தொந்தரவு நடக்கலாம். குழந்தைகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துபவர்களில், 80 சதவிகிதம் பேர் குழந்தைக்கு நன்கு அறிமுகமான நபர்களாகவே இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில்

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைப் பொறுத்தவரை, உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில், ஒவ்வொரு 155 நிமிடத்திற்கும், 16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை வன்புணர்வுக்கு ஆளாகிறது. இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஆண்டுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்படுவதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அதிர்ச்சி புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியானது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிமூன்றாயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. 

குற்றப் புள்ளிவிவரம்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  கடந்த 2018இல் குழந்தைகளுக்கு எதிராக 1.41 லட்சம் குற்ற வழக்குகள் பதிவான நிலையில் 2019இல் குழந்தைகளுக்கு எதிராக 1.48 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.  ஓராண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குற்ற வழக்குகளில் 46.6 சதவிகிதம் கடத்தல் வழக்குகள். 35.3 சதவிகிதம் பாலியல் வன்முறை குற்றங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டு ஒரு லட்சம் குழந்தைகளில் 31 பேருக்கு எதிராகக் குற்றங்கள் நடந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அது 33 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 109 குழந்தைகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்; 

2018 ஆம் ஆண்டில் 67,134 குழந்தைகள் காணாமல் போயினர். இது 2019ஆம் ஆண்டு 73,138 குழந்தைகள் (21,074 ஆண்கள், 52,049 பெண்கள் மற்றும் 15 திருநங்கைகள்) ஆக அதிகரித்தது. அதாவது ஓராண்டில் இந்த எண்ணிக்கை 8.9% அதிகரித்துள்ளது. 

சாதகமும் பாதகமும்

உலகில் குழந்தைகள் இறப்பு நிலை குறித்து ‘யுனிசெப்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 1990இல் 34 லட்சமாக இருந்தது. இது 2019இல் 8.24 லட்சமாகக் குறைந்துள்ளது. அதேபோல 1990இல் இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 89 பேர் இறந்தனர். கடந்த ஆண்டு அவர்களின் எண்ணிக்கை 28 ஆகக் குறைந்துள்ளது என்பது
சாதகமான விஷயம்.

ஐ.நா வெளியிட்ட “குழந்தைகளுக்கான நல்வாழ்வு அளிக்கும் திறன் படைத்த நாடுகள்” பட்டியலில் இந்தியாவுக்கு 131வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் சீனா 43வது இடத்தையும், இலங்கை 68வது இடத்தையும், சிங்கப்பூர் 12வது இடத்தையும், பாகிஸ்தான் 140வது இடத்தையும், வங்கதேசம் 143வது இடத்தையும் பிடித்துள்ளன. உலசு சுகாதார நிறுவனம், யுனிசெப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து உலகம் முழுவதும் 180 நாடுகளில் குழந்தைகளுக்கான நல்வாழ்வு குறித்தும் அவர்களுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் பற்றியும் இந்த ஆய்வினை மேற்கொண்டது.

என்ன செய்யலாம்

நம் சமூகத்தில் ஆண்கள் அதிகார மிக்கவர்களாகவும், பெண்கள் பலவீனமாக, அதிகாரமற்றவர்களாகவும் கட்டமைக்கப்படுகிறார்கள். இந்தக் கட்டமைப்பானது குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் உணவு, படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு, திறன் வெளிப்பாடு, வேலைகளைப் பகிர்ந்தளித்தல் என எல்லா விஷயங்களிலும் மிகப்பெரிய அளவில் வேறுபாட்டைக் காண முடியும். இருவரையும் சமமாகப் பாவித்து வளர்க்கவேண்டும்.

தனக்கு நேர்ந்தது பாலியல்தொல்லை என்று தெரியாமலேயே பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பாலியல் தொந்தரவு குறித்துப் பெற்றோர்களிடம் சொல்லக் குழந்தைகள் தயக்கம் காட்டுகிறார்கள் என்று யுனிசெப் அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் தொடர்ந்து பேசுவதும், எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு ஊக்குவிப்பதும் அவசியம். அப்போதுதான் அவர்களுக்கு நேர்ந்த கொடூரத்தை அறியமுடியும். தைரியத்தையும், பாதுகாப்பு உணர்வையும் குழந்தையிடம் ஏற்படுத்துவதைப் பெற்றோர் தங்கள் கடமையாகக்
கருதவேண்டும்.

தொடுதல் பற்றியான முழுமையான தெளிவையும், பாதுகாப்பு முறைகளையும் கற்பித்தல் அவசியம். குழந்தைகளுக்கு “குட் டச்” “பேட் டச்” சொல்லிக்கொடுப்பதற்குப் பதிலாக “பிறர் தொட அனுமதிக்கக்கூடாது” என்று சொல்லி வையுங்கள். குழந்தையைப் பாராட்டக் கன்னத்தைக் கிள்ளி, முத்தமிட்டுத்தான் பாராட்டவேண்டும் என்ற கட்டாயமில்லை. கைதட்டிப் பாராட்டலாம்.  இதைக் குறித்து சமூகம் மற்றும் பள்ளிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

மேலும், ஒரு குழந்தையைத் தொடாமலேயே பாலியல்ரீதியாகத் துன்புறுத்த முடியும். உதாரணமாக, தவறான செய்கை, ஒலி, பொருட்களைக் காட்டுதல், மறைவான பாகங்களைக் காட்டச் சொல்லுதல் அல்லது காட்டுவது, குழந்தைகள் உடை மாற்றும் பொழுது,  குளிக்கும் பொழுது மறைந்து நின்று பார்த்தல், ஆபாசப் படங்கள் காட்டுதல், ஆபாசக் கதைகளைச் சொல்லுதல், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்புதல், வாட்ஸ் அப் போன்றவற்றில் தவறான செய்திகள், படங்கள் அனுப்புதல் இதுபோன்ற செயல்கள் அனைத்துமே குழந்தையைத் தொடாமலேயே பாலியல்ரீதியாக துன்புறுத்துதல் ஆகும். பெற்றோரின் கண்காணிப்பால் மட்டுமே இதனைத் தடுக்க இயலும்.  பாலியல் குறித்த கல்வி முறைகளைப் பாடத்திட்டம் மூலமாகவும் பெற்றோர் வழியாகவும் குழந்தைகளுக்குப் புகட்டினால்தான், நம்குழந்தைகளைப்
பாதுகாக்க முடியும்.

குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவது அரசின் தலையாய கடமை. சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன. அதேபோலத் தீர்ப்புகளும் தண்டனைகள் விரைவானதாக,  இருத்தல் அவசியம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விழிப்புணர்வு முகாம்கள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் இந்தக் கருத்துக்கள் இடம் பெறுவது குழந்தைகளிடம் புரிதலை அதிகப்படுத்தும். சினிமா மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஆபாச காட்சிகளைக் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இணைய தள பதிவுகளும், அரசின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும்.

இன்று எங்கோ ஒரு மூலையில் நடக்கும் இந்த நிகழ்வு, நாளை நம் வீட்டிலும் நிகழ வாய்ப்புண்டு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தால், குழந்தைகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கலாம். குழந்தைகள் பாதுகாப்பு என்பது சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஒரு சமூகம் நினைத்தால், சட்டம் தர முடியாத பாதுகாப்பையும், வசதிகளையும் குழந்தைகளுக்குத் தர முடியும்.

இன்றைய குழந்தைதான் நாளைக்கு இந்த தேசத்தின் அடையாளம். அடையாளம், காக்கப்படுவதில் அக்கறை கொள்வோம்.