சமூகப் பார்வை – 26


திரு. ப.திருமலை
மூத்த பத்திரிகையாளர்

 “தியாகிகளான தலைவர்களாலே சுதந்திரமென்பதை அடைந்தோமே.. ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல் பலருக்கும் பயன் பெறச் செய்வோமே” என்ற திரைப்படப்பாடல் வரிகளை நம்மில் பலர் கேட்டிருப்போம். தியாகத் தலைவர் என்றவுடன் நம் மனதில் நிழலாடுபவர் காந்திஜி. இந்த தேசத்தைக் கட்டமைத்த தலைவர்களில் பிரதானமானவர். அவர் மறைந்து 74 ஆண்டுகளாகிவிட்டன. என்றாலும் என்றும், எப்போதும் அவர் தேவைக்குரியவராக இருக்கிறார் என்பதுதான் நிஜம்.

நாட்டின் விடுதலை இயக்கத்தை அன்பு நெறியில், சத்தியவழியில் நடத்தி வெற்றி கண்டவர் காந்திஜி. அன்பும் அறமும் தழைத்திருக்கின்ற, ஏற்றத்தாழ்வில்லாத, எல்லோரும் நலமாக, வளமாக வாழும் சமுதாயத்தை உருவாக்குவதே அவரது இலட்சியமாக இருந்தது. அவர் வாழ்ந்த வாழ்க்கை தனிமனிதன் எப்படிப் பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென்பதற்கும், பொதுவாழ்வில் எப்படி நேர்மைத் திறத்தோடு இருக்க வேண்டுமென்பதற்கும் வழிகாட்டியது. ஆனால், இன்றைய சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. “இப்படிப்பட்ட ஒருவர் எலும்போடும் சதையோடும் இந்த மண்ணுலகில் வாழ்ந்தார் என்பதை வரக்கூடிய சந்ததியினர் நம்பக்கூட மாட்டார்கள்”, என்று அன்று அறிவியல் தத்துவ ஞானியான ஐன்ஸ்டின், காந்திஜி குறித்துக் கூறினார். அது இன்று உண்மையாகிக் கொண்டிருக்கிறது. இந்த மண்மீதும், மக்கள் மீதும், மனிதத்தின்மீதும் அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது. இன்றைக்கு அனைத்து தளங்களிலும் அவரது கருத்துகள் தேவைக்குரியனவாக உள்ளன.

கல்வி

ஏழாண்டு ஆதாரக் கல்வியைக் கட்டணமின்றி அரசே தரத்தோடு வழங்க வேண்டும் என்பதும், அக்கல்வி தாய்மொழியில் வழங்கப்படவேண்டும் என்பதும் காந்தியக் கல்வியின் முக்கிய அம்சங்கள். கல்வியில், மழலையர் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை ஆங்கில மயம். படித்த இளைஞர்கள் வேலை தேடிக் கொண்டிருக்கின்றனர். “இந்தியாவில் பட்டினியால் வாடுகின்ற கோடிக்கணக்கான மக்களைப் பற்றிக் கவலைப்படாத அதிலிருந்து அவர்களை விடுவிக்கும் வழிமுறையைக் கண்டறியாத கல்வி “தேசியக் கல்வியல்ல” (யங் இந்தியா 17.06.1926) என்கிறார் காந்திஜி. ஆனால் இன்றைக்கு “ஒரு தேசம்.. ஒரு மொழி” என்ற வார்த்தைகள் மக்களைப் பதற்றத்தின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது.

அரசியல்

அவரது அரசியல் என்பது மக்கள் நலனை மையப்படுத்தியது. “நான் உங்களுக்கெல்லாம் ஒரு மந்திரத் தாயத்து அளிக்கிறேன். ஒரு விஷயத்தில் முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போது நீங்கள் பார்த்த, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்தப் பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா? என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.” என்கிறார். (1947 ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் காந்திஜி ஆங்கிலத்தில் தம் கைப்பட எழுதிய குறிப்பு இது.) இன்றைக்குத் தமிழகத்தில் அணு உலைகள், மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என அழிவுத் திட்டங்களைக் குவிக்க நினைப்பவர்கள், காந்தியை நினைவில் நிறுத்தியிருந்தால், நிறுத்தினால் இதெல்லாம் வந்திருக்காது. இனி வராது.

“நிறையக் குறைகளைக் கொண்ட நான்” என்ற எண்ணம் காந்திக்கு இறுதிவரை இருந்தது. எந்த எளிய மனிதரும் அவரைச் சந்தித்துவிட முடியும். இந்த நிலையுடன் இன்றைய அரசியல் தலைவர்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் நாம் காந்தியைப் புரிந்து கொள்ள முடியும்.

நல்லிணக்க வாதி

காந்திஜி அடிப்படையில் இறைப்பற்றாளர். தன்னை ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் அவருக்குப் பெருமையும் உண்டு. ஆனால் அவர் அனைத்து மதங்களையும் நேசித்தார். “காந்திஜி சொல்லும் ராமராஜ்யத்தின் ராமர், அவரது மனதிலிருந்தது, காந்தியின் ராமருக்குப் பெரிய கோயில்கள் தேவை இல்லை. அது உயரிய சிந்தனைகளால் உருவானதே அன்றி, பிறரிடம் பறைசாற்றவோ, விளம்பரத்துக்காகவோ அல்ல. காந்திஜியின் ராமரை அல்லா என்றும் சொல்லலாம்” என்கிறார் ராமச்சந்திர குஹா (Gandhi Before India, India After Gandhi, Gandhi: The Years That Changed the World நூல்களின் ஆசிரியர்) இஸ்லாமியர்கள் மத்தியில் பேசும்போது, ராமராஜ்யத்தை `குதாய் ராஜ்யம்’ என்றும், கிறிஸ்தவர்களிடையே பேசும்போது `கிங்டம் ஆஃப் காட்’ (Kingdom of God) என்றும் காந்தி குறிப்பிட்டார். ராமராஜ்யம் என்பதில் `ராம்’ என்பது `குதா’, `காட்’ என்பனவற்றின் இன்னொரு பெயர்தான் என்றார் காந்திஜி. அவரது, பிரார்த்தனைக் கூட்டங்கள் கூட, சர்வ சமய பிரார்த்தனைக் கூட்டங்களாக இருந்தன. அங்கே கீதையும் குரானும் ஒருசேர ஓதப்பட்டன.

ஆலயங்களுக்குச் செல்வதில்கூட காந்திக்குப் பெரிய நாட்டம் கிடையாது. “`காந்திஜி பூரிக்குப் போயிருக்கிறார். ஆனால், ஜெகந்நாதர் ஆலயத்துக்குப் போனதில்லை. தஞ்சாவூர் போயிருக்கிறார். ஆனால், பிரகதீஸ்வர் கோயிலில் அவர் பாதம் பட்டதில்லை” என்று ராமச்சந்திர குஹா சொல்கிறார், “மதத்தை (சமயத்தை) அது இருப்பதுபோல இருக்காவிட்டால் போதும். அது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம்” என்று 1940இல் கூறினார். 1942இல், “சமயம் ஒரு தனிப்பட்ட விஷயம், அரசியலில் அதற்கு ஒரு இடமும் இல்லை,” என்றார். 1947இல் “அரசு முழுமையான சமயச் சார்பற்ற அரசாக இருக்கக் கடமைப்பட்டுள்ளது.” என்று தனது விருப்பத்தினை வெளிப்படுத்தினார். காந்திஜியின் மதம் என்பது அன்பையும் அறத்தையும் அடிப்படையாகக் கொண்டது, அங்கு ஏற்றத் தாழ்வுகளுக்கும், வெறுப்பிற்கும் இடம் இல்லை.

“அனைத்து மதங்களும் உண்மை என்று எப்படி உங்களால் நம்ப முடிகிறது?” என்று காந்திஜியிடம் கேட்கப்பட்டபோது, “ஒரு மரத்தின் எந்த இரு இலைகளும் ஒன்றுபோல இருப்பதில்லையே! அதேபோலத்தான் அவரவருக்கு ஏற்றாற்போல் கடவுளை வழிபடுகிறார்கள். இதற்கிடையில் மற்றவர்களைக் காட்டிலும் நான் சிறப்பாக வழிபடுகிறேன் என்று தீர்ப்பளிக்க நான் யார்? என எதிர்க்கேள்வி எழுப்புகிறார் எல்லா மதங்களும் ஒன்றே என்று சொல்லி கடைசியில் அனைத்தையும் ஹிந்து மதத்துக்குக் கொண்டுவந்து முடிச்சுப் போடவில்லை அவர். அவரவர் மத நம்பிக்கையும் பழக்க வழக்கங்களும் அவரவருக்கு என்ற பார்வையைக் கொண்டிருந்தார். இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், சமணம் என ஒவ்வொன்றிலிருந்தும் நற்சிந்தனைகளை உள்வாங்கித் தன்னைத் தானே வார்த்தெடுத்தார். தத்துவார்த்தச் சிந்தனையோடு மதங்களை ஜனநாயகப்படுத்த முயன்றார்.

ஏற்ற தாழ்வற்ற நிலை

காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்தபோது ஒருமுறை ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து டர்பன் நகருக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார். அவரை வழியனுப்ப வந்த போலக் என்ற அவரது ஐரோப்பிய நண்பர், பயணத்தின் போது காந்தி படிப்பதற்காக ஜான் ரஸ்கின் என்ற சிந்தனையாளர் எழுதிய Unto the last (கடையனுக்கும் கடைத்தேற்றம்) என்ற ஒரு சிறு நூலைக் கொடுத்தார் அந்த நூல் குறித்து காந்தி தனது சத்திய சோதனையில், “அந்த நூலைப்படிக்க ஆரம்பித்தபின்னர் கீழே வைக்கவே முடியவில்லை. அது என் உள்ளம் முழுவதையும் கவர்ந்து கொண்டது. அதைப் படித்து முடித்த அன்று இரவு முழுவதும் என்னால் தூங்கவே முடியவில்லை. அந்த நூலில் கண்ட உன்னத லட்சியங்களுக்கு ஏற்ற வகையில் என் வாழ்க்கையை மாற்றிக்கொள்வது என்று தீர்மானித்தேன். விடிந்ததும், இந்தக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவரத் தயாரானேன்” என்கிறார். அக் கொள்கையின்படி “வாழத்தீர்மானித்தேன்” என்ற அளவில் மாத்திரம் அல்ல “வாழத் தயாரானேன்” என்றார். அந்த நூலின் மையக்கருத்துகளைக் கிரகித்துக் கொண்டு அவற்றை “சர்வோதயம்” என்ற தலைப்பில் காந்தி வெளியிட்டார்.

காந்தியின் சர்வோதய சமுதாயம் என்பது, அது ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கடுக்காக மேற்செல்லும் அதிகார கோபுரமாக இருக்காது. ஒன்றைச் சுற்றி மற்றொன்றாகப் பரந்துவிரியும் சமுத்திர அலைவட்டமாக இருக்கும். பரஸ்பர உதவியும் ஒத்துழைப்பும் இணைப்பாக இருக்கும். அரசியலும் பொருளாதாரமும் பரவல் முறையில் அமைந்திருக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளோர் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கி அனுபவிக்கும் சுதேசி தர்மம் நிலவும். அடிப்படைத் தேவைகளில் சுயதேவைப் பூர்த்தியுள்ள சமூகமாக இருக்கும். உபயோகத்திற்காகத்தான் உற்பத்தியே தவிர வியாபாரத்துக்காக அல்ல.

பெருமளவில் உற்பத்தி என்பதற்குப் பதில் பெருவாரியான மக்களால் நடைபெறும் உற்பத்தி இருக்கும். போட்டிப் பொருளாதாரம் இராது. மனிதனை ஆட்கொள்ளும் அளவுக்கு, அவனுக்கு வேலையில்லாமற் செய்யும் அளவுக்கு இயந்திர பயன்பாடு இருக்காது. மனிதனுக்கு அடிமை செய்யும் கருவியாக இயந்திரம் உருமாறும். உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்கும் ஒரே மாதிரியான மரியாதை இருக்கும். பொருளாதார சமத்துவம், ஆண் பெண் சமத்துவம், சாதி பேதமின்மை, சர்வ சமய சமரச நோக்கு, ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உணர்வு இவை சர்வோதய சமுதாயத்தின் இலக்கணமாக விளங்கும். வாழ்க்கைக்கான கல்வி, தொழில் மூலம் கல்வி, தாய்மொழி மூலம் கல்வி என்ற இயற்கையான கல்வி முறை இருக்கும்.

அது மனித மேன்மைகளைப் பேணிக்காக்கவும், சமுதாய உணர்வினை வளர்க்கவும் பயன்படும் சத்தியமும் அகிம்சையும் அங்குக் கோலோச்சும். இவ்விரண்டுமே சர்வோதயத்தின் உரைகல். உலகமே எதிர்த்தாலும் அஞ்சாமையுடன் சத்தியாக்கிரகம் செய்யும் வல்லமை தனி மனிதர்களிடையிலும் சமுதாயத்திடமும் காணப்படும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கடமையாற்றி தனக்குத்தானே விடுதலை தேடும் முறை இருக்கும். மத்தியில் அதிகாரம் குவிதலுக்குத் தேவையிருக்காது. அப்படியே ஆட்சி இருந்தாலும் இருப்பதே தெரியாத அளவுக்குக் குறைந்த அளவில் ஆட்சி இருக்கும். இத்தகைய சர்வோதய சமுதாயம் அமைப்பதே காந்திஜியின் இலட்சியம். ஆனால் இன்றுவரை சமத்துவ சமுதாயம் உருவாக்குவதற்கான முயற்சிகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன. ,

மதுவுக்கு எதிராகத் தொடர்ந்து பேசியவர். மதுவால் அதிக இளம் விதவைகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் உள்ளது. பெண்களையும் குழந்தைகளையும் போற்றியவர். தீண்டாமையைப் பாவச்செயல் என்றவர். ஆனால், இன்றைக்குத் தீண்டாமையின் உச்சமாகக் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கும் செயல் நடந்தேறியிருக்கிறது.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்க்கை முறையில் எண்ணற்ற மாற்றங்கள். ஆனால், வறுமை, குடும்ப வன்முறை, சாதிச் சண்டைகள், சமயப் பூசல்கள், மாநிலங்களுக்கிடையில் ஆதிக்கப் போட்டிகள், சந்தைகளைக் கைப்பற்றக் குறுக்கு வழிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, நகரமயமாதல், இயற்கை வளங்கள் சுரண்டல் என முரண்பட்ட காட்சிகளைக் காண்கிறோம்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன் ஷார்ப், அகிம்சை வழிமுறைகள் பற்றி உலகளாவிய ஆய்வுகளைச் செய்து வரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர். இன்று உலக அரங்கில் அகிம்சைப் போராட்டங்களின் முக்கியமான ஆளுமை அவர். ” பாலிடிக்ஸ் ஆப் நான் வயலன்ட் ஆக்ஷன்” எனும் புத்தகத்தை எழுதியவர். “இனி வரும் நூற்றாண்டுகளிலும் உலகம் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளைக் காந்தியின் அணுகுமுறையை, கருத்துக்களைக் கைக்கொள்ளுதலின் மூலமே தீர்வுகாணமுடியும்” என்கிறார். சத்தியமான வார்த்தைகள் இவை. என்றும்.. எப்போதும் தேவைப்படுகிறார் காந்தி.

(ஜனவரி 30 : காந்தி மறைந்தநாள், தியாகிகள் தினம், சர்வோதய தினம்)