வெற்றித் திசை

முத்து ஆதவன் வை.காளிமுத்து

றம் செய விரும்பு” இது ஔவையின் மிக எளிமையான சூத்திரம். அறம் செய்ய வாய்ப்பில்லை என்றபோதும் அறம் செய்யவேண்டும் என்று விருப்பமாவது கொள், அதுவே  உள்ளத்தின் உயர்வுதான் என்பது அதன் பொருள்.

தமிழில் உள்ள அற்புதமான சொல் அறம் என்பது.அறம் என்ற சொல்லை கவனத்துடன் உச்சரித்துப்பாருங்கள். ஏதோ ஒரு சிறப்பு அச்சொல்லில் இருப்பதை உணரமுடியும்.  யோக நூல்கள் அகாரம்,உகாரம்,மகாரம் என்ற மூன்று சொற்களை சிறப்பாக குறிப்பிடுகின்றன.

(அ- அகாரம், உ-உகாரம்,ம-மகாரம்) நமது உடலில் குறிப்பாக சிரசில்  அந்த மூன்று சொல்லும் ஒரு முக்கோண வடிவில் இணைகின்றன.இடது கண் -அகாரம், வலதுகண்-உகாரம்,மூக்கின் மேல் நுனி அதாவது புருவங்களின் மத்தி (பொட்டு வைக்குமிடம்)-மகாரம் என்று அந்த முக்கோணத்தை அடையாளப்படுத்துகிறார் வள்ளல் பெருமான்.

வள்ளலார் இயற்றிய 1596 அடிகளைக்கொண்ட அருட்பெருஞ்சோதி அகவலில் தமிழில் உயிர் எழுத்துக்களான அ முதல் ஃ வரையிலான 12 எழுத்துக்களையும் 12 வரியில் வைத்துப்பாடிவிட்டுத்தான் மற்ற வரிகளைத்தொடர்கிறார். ஃ-என்பதை திருநிலை, தனிவெளி,சிவ வெளி எனும் ஓர் அருள்நிலை  பதிவளர் அருட்பெருஞ்சோதி என்று குறிப்பிடுகிறார். சிரசில் உள்ள மேலே சொன்ன முக்கோணமும், ஃ என்ற எழுத்தும் ஒன்றே என்கிறார்.

இரண்டு கண்களுக்கும் மேலே புருவ மத்தியை அருள்நிலை வளர்கின்ற இடம் என்கிறார் . புருவ மத்தியை ஆன்மீகம் ஆக்கினைச்சக்கரம் என்றும், அறிவியல் “பிட்யூட்டரி க்ளான்ட்’’ என்றும் வழங்குகின்றன.இந்துமதம் அந்த இடத்தை பொட்டுவைத்து உணர்த்துகிறது.கிருத்துவத்தில் நெற்றியில் அழுத்தி உணர்வூட்டுகிறார்கள், இஸ்லாத்தில் தொழுகையின் போது மண்டியிட்டு நெற்றியை நிலத்தில் தொட்டு உணர்வெழுப்புகிறார்கள். நெற்றிக்குள்ளே இரு காதுகளுக்கும் மத்தியத்தில் மூளைக்கு கீழாகத்தான் பிட்யூட்டரியின் உண்மையான இருப்பிடமாகும்.

 அதற்குக்கீழ்தான் நமது வாயில் மேலன்னம் இருக்கிறது. அது மிகவும் மென்மையான பகுதியாகும். நமது நாவின் நுனி அந்த மேலன்னத்தை தடவிவர  தமிழின் “சிறப்பு ழகரம்” பிறக்கிறது.கானகத்தில் தவமியற்றும் யோகிகள் பசி,தாகம் ஏற்படாமலிருக்க தன்னுடைய நாவை மேல் புறமாக மடித்து நாவின் நுனியை மேலன்னத்தில் ஒட்ட வைத்த நிலையிலேயே வைத்திருப்பார்கள் .இதை லம்பிகா யோகம் என்றழைக்கிறார்கள்.மேலன்னத்தில் ஒருவித சுரப்பி இருக்கிறது. அந்த சுரப்பி நன்றாக சுரந்தால் அவர்கள் மனதில் அன்பும்,கருணையும் இயல்பாக ஊற்றெடுக்கும். மேலும் புருவ மையத்தில் மனம் வைத்து தியானித்தால் நல்லது,கெட்டது அறிந்து நல்ல வழியில் மனம் செயல்பட்டு அறச்செயல்கள் மனிதனுக்கு இயல்பாகிறது.

“அறம்” என்று உச்சரிக்கும் போது என்ன நடக்கிறதென்று கவனித்துப்பாருங்கள். நா மேல் நோக்கி மடியும்போது அங்கு அதிர்வுகள் உருவாவதை நன்றாக உணரமுடியும். அறம் என்னும் சொல்லின் சிறப்பை கூறவே இவ்விளக்கம் அவசியமாகிறது.

வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார், பசி தீர்த்தலே மெய்யான அறம் என்கிறார். பசித்தவனுக்கு உணவே உபதேசம் என்பது அவரின் எண்ணம்.இன்று அன்னதானம் என்பது ஆடம்பரத்தின் ஒரு கூறாகிவிட்டதைக் காண்கிறோம்.உண்மையிலேயேபசி உள்ளவனுக்கு அதை உழைத்து உண்ண இயலாதவனுக்கு செய்வதே உண்மையில் அன்னதானம். அறத்தை ஆன்மீகத்தாலோ, ஆடம்பரத்தாலோ நிகழ்த்துகின்ற இக்காலத்தில் மேலே சொல்லப்பட்ட எதையும் அறியாத அறியவிரும்பாத அதை தன்னியல்பாக எந்த பகட்டும், விளம்பரமும் இன்றி எத்தனையோ பேர் செய்து வருகிறார்கள்.அவர்களாலேயே இன்னும் இவ்வுலகம் நிலை பெற்றிருக்கிறது. அவர்களில் ஒருவர் தான் வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பசாமி. கரூர்  ஜவகர் பஜாரிலுள்ள ஒரு  சந்தில் ஹோட்டல் கற்பகம் இருக்கிறது. அந்த ஹோட்டல் பத்து பேர் மட்டும் அமர்ந்து உணவருந்தக்கூடிய இடமாக இருக்கிறது.

கற்பகம் ஹோட்டலின் உரிமையாளர் கருப்பசாமி. அவரே கல்லாவையும் கவனிப்பார். உணவு பரிமாறுவதில் இருந்து அனைத்து வேலைகளும் அவரே. சமையல் வேலைக்கு மட்டும் ஆள் வைத்திருக்கிறார்.

கற்பகம் உணவு விடுதி ஒரு முட்டுச் சந்தில் இருந்தாலும், நாள் முழுவதும் சற்று சுறு, சுறுப்புடனே இயங்கி கொண்டு இருக்கிறது. உணவின் சுவை கூடுதலாக மெச்சும்படியாக இருப்பதாலும், மற்ற உணவு விடுதிகளை காட்டிலும், விலைகுறைவாகவும், தரமாகவும்,  தாராள அளவு உடையதாகவும் இருப்பதால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

கற்பக உணவு விடுதியின் கல்லா டேபிளில் எப்போதும் ஒரு சிலேடு தொங்கிக் கொண்டே இருக்கும். அந்த சிலேட்டில் காலை மற்றும் இரவு நேரம் என்றால்”நான்கு இட்லி ஒரு டீ  ” என்று எழுதப்பட்டு இருக்கும். மதிய வேளை என்றால் “ஒரு சாப்பாடு” என்று எழுதப்பட்டிருக்கும்.

அதை பார்த்து விட்டு யாரோ ஒரு வறியவர் உணவு விடுதிக்கு சென்று இட்லி சாப்பிட்டு, டீ குடித்து விட்டு சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் “சிலேட்டை” காட்டி விட்டு சென்று விடுவார்.

பின், சிறிது நேரம் கழித்து, கருப்பசாமி மீண்டும்..அந்த சிலேட்டில்  ஏதோ எழுதி தொங்க விடுவார்.

இப்பொழுது, யாரோ,ஒருவர் முன்னம்  குறிப்பிட்டதுப் போல் சாப்பிட்டு விட்டு, “சிலேட்டை” காட்டி காசு கொடுக்காமல் சென்று விடுவார்.

யாரும் அவரை ஏன்? என்று கேட்க மாட்டார்கள்.இப்படியாக ஒரு நாளைக்கு பதினைந்திலிருந்து இருபது நபர் வரையிலும் கூட சாப்பிட்டு பணம் கொடுக்காமல் சிலேட்டைக்காட்டிவிட்டுச் சென்று விடுவார்கள். இது வாடிக்கையாக கற்பகம் உணவு விடுதியில் நடக்கும் இயல்பான செயலாகும்.

புதிதாக வந்த ஒருவர் சாப்பிட்டுக்கொண்டே இதைக் கவனிக்கொண்டிருந்தார் அவருக்கு ஒரே குழப்பம்.

என்னடா இது?சிலேட்டு தொங்குது அதைப்பார்த்துவிட்டு வந்து ஒருவர் சாப்பிடுகிடுகிறார் சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்காமல் அந்த சிலேட்டைக்கைக்காட்டிவிட்டு சென்றுவிடுகிறார் என்று குழம்பினார்.

 பிறகு தான் சாப்பிட்டு முடித்து சாப்பிட்டதற்கு  பணம் கொடுக்க கல்லாவிற்கருகில் சற்று காத்திருந்தார். அப்பொழுது கருப்பசாமி பரிமாறி விட்டு கல்லாவுக்கு வந்தார்.சாப்பிட்டதற்குண்டான பணத்தைக் கொடுத்துக்கொண்டே கருப்பசாமியிடம் தன் ஐயத்தை வினவினார்.

அதற்கு கருப்பசாமி தன் முறுக்கு மீசையை வருடிக் கொண்டே “ஐயா, உங்களைப்போல் சாப்பிட வருகிறவர்கள் தான் சாப்பிட்டதற்கு பணம் கொடுத்து விட்டுப் போகும்போது இது போன்று உணவுக்கு வழி இல்லாதவர்களுக்கும் சேர்த்து பணம் கொடுத்துவிட்டுப் போவார்கள்.அப்படி அவர்கள் கொடுக்கின்ற பணத்திற்கு ஏற்ப நான் சிலேட்டில்  உணவு வகைகளை எழுதி வைப்பேன்.

அதை பார்த்து விட்டு வந்து பணம் கொடுத்து சாப்பிட இயலாதவர்கள் வந்து சாப்பிட்டு விட்டு சிலேட்டைக் கை நீட்டி காட்டிவிட்டுப் போய்விடுவார்கள். இங்கு இது வாடிக்கையான நடை முறைதான்” என்றார்.

மேலும் கருப்பசாமி தொடர்ந்து கூறியது மேலும் அவரை வியப்பில் ஆழ்த்தியது.

“அப்படி யாரும் பணம்கொடுக்கவில்லை என்றால், என் பங்குக்கு நானாக எழுதிப் போடுவேன்.

யாரேனும் வந்து சாப்பிட்டு விட்டு போவார்கள்.நான் சின்ன வயதில், ஒரு வேளை சாப்பாட்டுக்கு என்ன பாடு பட்டிருக்கிறேன் தெரியுமா?’’ என்று தன் ஈரக் கண்களை அகல விரித்து அவரிடம் சொன்னார். கருப்பசாமி இவ்வாறு சொன்னவுடன் புதிதாக வந்த வாடிக்கையாளர் அவசரமாக, தன் சட்டை பைக்குள் கை விட்டு இரு நூறு ரூபாயை எடுத்து கருப்பசாமியிடம் கொடுத்து “யாருக்குகேனும் உணவு  பகிருங்கள்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

மேலும் அந்த முட்டு சந்துக்குள் மிக இயல்பாக சில பைத்தியங்களின் நடமாட்டம் அவ்வப்பொது இருந்து கொண்டே இருக்கும்.  அவர்களுக்கு மட்டும், உணவு பொட்டலங்கள் கருப்பசாமியிடம் இருந்து கை மாறி விடும். அவர்களுக்கு பிச்சை எடுக்க தெரியாது,கேட்டு வாங்கவும் தெரியாது,

பசி என்ற உணர்வும் தெரியாது ஆனால், கையில் கிடைத்ததை உண்ண வேண்டும் என்று மட்டும் தெரியும். கருப்பசாமி இப்பொழுது  சிலேட்டில்…  “உறவுகள் மேம்பட சற்று.. உணவிடுங்கள்’’  என்று எழுதிவிட்டு “மூவருக்கு மதியம் சாப்பாடு தயார்” என்று எழுதி புன்னகையுடன் கல்லா டேபிளில் தொங்க விட்டார்.

தன் குணநலன்களை மாற்றி நல்ல குணங்களை வளர்ப்பதற்காவும்,அறச்சிந்தனை மேலோங்கவும் பலர் பலவாறான ஞான யோக, தியான வகுப்புகளில் கலந்து கொண்டும், பல குருமார்களின் உபதேசங்களைக்கேட்டும் அறவழி செல்ல மெனக்கெடுகிறார்கள். சிலநாட்கள் அவர்கள் நினைத்தது போல நடக்க பெருமுயற்சி செய்கிறார்கள். பிறகு நிலை மாறிவிடுகிறது பின்பு மீண்டும் முயல்கிறார்கள்.

ஒரு திருக்குறள் இவ்வாறு சொல்கிறது.

“நுண்ணிய நூல்பல கற்பினும் ஒருவருக்கு
தன்உண்மை அறிவே மிகும்” என்று.

 எவ்வளவு நுட்பமான நூல்களை முயன்று படித்து அறிவை வளர்க்க நினைத்தாலும் இறுதியாக தன் இயல்பான அறிவே மேலோங்கி நிற்குமாம்.

சிலருக்கு மேற் சொன்ன எவற்றையும் முயலாமல் நற்செயல்கள் அவர்களுக்கு தன்னியல்பாகவே அமைந்திருக்கும்.அவர்களின் இயல்பான வாழ்வே தவவாழ்வாக அமைந்திருக்கும். அவர்களே கர்ம யோகிகள் ஆவர். கருப்பசாமி போன்றோரே அவர்கள்.போலி சாமியார்களிடம் பணத்தை கொட்டுபவர்களும், தேவைகள் ஏதுமற்ற இறைவன் பெயரால் வேண்டுதல் வைத்து பணத்தை கொட்டுகிறவர்களும் கருப்பசாமி போன்ற கர்ம யோகிகளிடம் கொட்டுங்கள் அது பயனாகும்.உங்கள் புண்ணியக்கணக்கில் அது வரவு வைக்கப்படும்.சிந்திப்போம்!

 *ஆளுமைச்சிற்பி வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்! =