மாண்புமிகு ஆசிரியர்கள் -15

முகில்

2019 செப்டெம்பர். பஞ்சாப் மாநிலத்தின் மான்ஸா மாவட்டத்தின் புத்லதா என்ற சிற்றூரின் ரயில்வே நிலையம். அன்று இரவில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் எல்லோரும் ரயில் ஏற வந்திருந்தவர்கள் அல்ல. ஒருவரை வரவேற்பதற்காகக் காத்திருந்தார்கள். பலரும் கையில் மாலைகளுடன் நின்று கொண்டிருந்தனர். வெளியே ஜிப்ஸி ஒன்று தயாராக இருந்தது. வாத்தியக்காரர்களும் ரயில் வருவதற்காகக் காத்திருந்தனர். டெல்லியில் இருந்து வர வேண்டிய அந்த ரயில் அன்றைக்கு நான்கு மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தது. இருந்தாலும் யாரும் கிளம்பவில்லை. அவருக்காகப் பொறுமையாகக் காத்திருந்தனர்.

ஒருவழியாக ரயில் வந்தது. நிலையத்தில் இறங்கினார் அந்த நபர். பட்டாசுகள் வெடித்தன. வாத்தியங்கள் முழங்க மக்கள் ஆர்ப்பரித்தனர். மாலைகள் அவரது கழுத்தை நிறைக்க, மகிழ்ச்சிப் பெருக்குடன் அவரைத் தோள் மீது தூக்கிக் கொண்டு சென்று ஜிப்ஸி வாகனத்தில் ஏற்றினர். கொண்டாட்டமான அந்த ஊர்வலம் ஆரம்பமானது. திறந்த அந்த ஜிப்ஸியில் ஆனந்தப் பெருக்குடன் கையை ஆட்டிக் கொண்டே வந்தார் அந்த நபர்.

அவர் ஓர் அரசியல்வாதியோ, நடிகரோ அல்ல. அவர் டீவி பிரபலமோ, விளையாட்டு வீரரோ அல்ல. அவர் வேகமாக பைக் ஓட்டி யூடியுபில் ஹிட்ஸ் வாங்குபவரோ, அவர் பணத்தை வாரியிறைக்கும் செல்வந்தரோ அல்ல. அவர் ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர். நல்லாசிரியர். தேசிய விருது பெற்றுத் திரும்பிய அந்த ஊரின் ஹீரோ. அவர் பெயர், அமர்ஜித் சிங் சாஹல்.

இந்தியாவின் பல மாநிலங்களில் கிராமப்புற அரசுப் பள்ளிகளின் பொதுவான சித்திரம் எப்படிப்பட்டது? போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கிடையாது. இருந்தாலும் ஊக்கத்துடன் பாடம் நடத்துபவர்கள் குறைவு. பள்ளிக்கு ஒழுங்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உடைந்த பெஞ்சுகள். ஒழுகும் கட்டடங்கள். உயிரற்ற வகுப்பறைகள். ஒழுங்கீனமான நிர்வாகம்.

2018-ம் ஆண்டு வெளியான Annual Status of Education Report சொல்லும் தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. இந்தியாவில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் 57% மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு கணிதப் புத்தகத்தில் இருக்கும் கணக்குகளைப் போடத் தெரியவில்லை. இந்தியாவின் மேப்பை விரித்து வைத்து, ‘இதில் நீ வசிக்கும் மாநிலம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால் சுமார் 40% மாணவர்களுக்குச் சுட்டிக் காட்டத் தெரியவில்லை. மிக எளிமையான ஆங்கில வாக்கியத்தைக்கூட சுமார் 50% மாணவர்களால் வாசிக்க இயலவில்லை.

இப்பேர்ப்பட்ட இலக்கணங்கள் நிறைந்த பஞ்சாபின் ஷேகுபூர் குடால் என்ற கிராமத்தின் அரசுப்பள்ளியில் அமர்ஜித் சிங் சாஹலும் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் (2006). பின்தங்கிய ஒரு கிராமத்தில் இயங்கும் அரசுப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கான சவால்கள் என்னென்ன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டார். ஒரு சில ஆண்டுகளில் அவருக்குப் பணியிட மாற்றம். ராலி என்ற சிற்றூரில் அமைந்த அரசு ஆரம்பப்பள்ளி. அங்கே பள்ளிக்கு மாணவர்களை வரவழைப்பதே பெரும்பாடாக இருந்தது. பின்பு வகுப்பறையில் அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுப்பது கடும் சவாலாக இருந்தது. அறிவியல் ஆசிரியரான அமர்ஜித் சிங், அந்த மாணவர்களைத் தன் வழிக்குக் கொண்டுவர விளையாட்டு ஆசிரியராகவும், சர்க்கஸ் வித்தைக்காரராகவும், மேஜிக் நிபுணராகவும் பாடகராகவும் இன்னும் பல அவதாரங்கள் எடுத்தார்.

ஒருநாள் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திமிங்கலம் குறித்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் அமர்ஜித். மாணவர்களுக்கு திமிங்கலம் என்பது எவ்வளவு பிரமாண்ட விலங்கு என்பதைப் புரியவைக்க இயலவில்லை. அந்த வகுப்பின் சிறிய கரும்பலகையில் பெரிய திமிங்கலத்தை அவரால் வரைய இயலவில்லை. ஆகவே, மாணவர்களை வகுப்புக்கு வெளியே அழைத்து வந்தார். வெளிச்சுவரில் நீளமான பெரிய திமிங்கலம் ஒன்றை வரைந்தார். அந்த பிரமாண்ட விலங்கு குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் சொன்னார். மாணவர்கள் ஆர்வமாகக் கவனித்தனர். அப்போது ஒரு மாணவன் கேள்வி ஒன்றை முன்வைத்தான். ‘சார், திமிங்கலம் இவ்வளவு பெருசா இருக்குதே. அது கால்வாய்ல எல்லாம் எப்படிப் போகும் சார்?’

அமர்ஜித் ஒரு கணம் திகைத்துப் போய்விட்டார். உண்மையிலேயே அவருக்கு அந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை. என்ன சொல்வதென்றும் புரியவில்லை. ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. மாணவர்கள், பல நேரங்களில் ஆசிரியர்களைவிட புத்திசாலிகள். அவர்களுக்கு ஏற்றபடி தன்னைத் தகவமைத்துக் கொண்டு கொண்டு அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்துவதே ஓர் ஆசிரியரின் கடமை. ஆம், அந்தத் திமிங்கலம் குறித்த கேள்வியே கற்பித்தலில் அமர்ஜித் சிங் என்ற ஆசிரியரை மிகச்சரியான பாதையை நோக்கித் தூண்டி விட்டது. மேலும் இரண்டு விஷயங்களை அவர் உணர்ந்து கொண்டார். முதலாவது, ஆசிரியர் என்றைக்கும் ஒரு மாணவரே. வாழ்க்கை முழுக்கக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டாவது, மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே இருந்து கற்கும்போது அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களது சிந்தனைத்திறன் மேம்படுகிறது.

அன்று இரவே அமர்ஜித் திமிங்கலம் குறித்து மேலும் கற்றறிந்தார். அடுத்த நாள் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதைச் சொன்னார். அவர்கள் மேலும் கேள்விகள் கேட்டார்கள். அவர் புன்னகை மாறாமல் பதில் சொன்னார்.

எந்த ஒரு வகுப்பறையில் அதிகமான கேள்விகள் மாணவர்களிடமிருந்து எழுகிறதோ அதுவே நல் வகுப்பறை. அந்தக் கற்றல் முறையே மிகவும் ஆரோக்கியமானது.

பள்ளிக்கு வண்ணம் பூச வேண்டிய வேலைகள் நடக்கவிருந்தன. அமர்ஜித் கொஞ்சம் பணத்தை பெயிண்டரிடம் கொடுத்தார். ‘கூடுதலாக பல வண்ணங்களில் பெயிண்ட் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார். விராண்டாக்களின் மேற்புறத்தில் சூரியக் குடும்பம் உயிர் பெற்றது. கணித வாய்ப்பாடுகள் சுவர்களில் ஏறி அமர்ந்தன. ஆங்கில வார்த்தைகளும், அதற்கான பஞ்சாபி வார்த்தைகளும் ஜோடி சேர்ந்து எங்கெங்கும் நிறைந்தன. மாணவர்கள் பள்ளி வளாகத்தை சும்மா சுற்றித் திரியும்போதும் விளையாட்டாகக் கற்று மகிழ்ந்தார்கள்.

இன்னும் பல கனவுத் திட்டங்கள் அமர்ஜித் வசம் இருந்தன. ஆனால், அரசு தரும் நிதி போதுமானதாக இல்லை. அவரும் தன் சக்திக்கு மீறி செலவு செய்ய இயலாது என்ற பட்சத்தில் நிதி திரட்டினார். பெற்றோரிடமும் மற்றோரிடமும் கை ஏந்தினார். ‘ஐந்து ரூபாயோ, ஆயிரம் ரூபாயோ எவ்வளவு வேண்டுமானாலும் தாருங்கள். எல்லாம் நம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக மட்டுமே செலவு செய்யப்படும்’ என்று உறுதியளித்தார். அந்த ஆசிரியரின் அர்ப்பணிப்பைக் கண்டு கிராமப் பஞ்சாயத்தும் நிதி ஒதுக்கித் தந்தது. வெளிநாடு வாழ் பஞ்சாபியர்களும் தொகை அனுப்பினார்கள். அந்த அரசுப் பள்ளி ஸ்மார்ட் ஸ்கூல் ஆக தரம் உயர்ந்தது.

பள்ளியில் புதிதாகச் சிறிய நூலகம் ஒன்று சிறகுகள் விரித்தது. கணிணிக் கூடம் ஒன்று கண் சிமிட்டியது. அங்கே U வடிவத்தில் வண்ண வண்ண மேசைகள், கிரியேட்டிவாக மாணவர்களை வரவேற்றன. ப்ரொஜெக்டர் ஒன்று பாடங்களை ஒளியும் ஒலியுமாக உயிர்ப்பித்தது. அமர்ஜித் பதிவு செய்து வைத்திருக்கும் பாடங்களை எப்போது வேண்டுமானாலும் ஸ்பீக்கர்களில் கேட்டுக் கொள்ளலாம் என்னும்படியாக வசதியும் செய்யப்பட்டது. மாணவர்கள் தினமும் ஆசை ஆசையாகப் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கான கற்றல் பூங்கா ஒன்றை நிறுவினார் அமர்ஜித். அதில் பக்ராநங்கல் அணைக்கட்டின் மாதிரி, அறிவியல் சோதனைகள், எண் விளையாட்டுகள், கணிதச் சமன்பாடுகள் என்று பல்வேறு ஆக்கபூர்வமான விஷயங்கள் உருவாக்கப்பட்டன. ராலி அரசு ஆரம்பப்பள்ளி அமர்ஜித் சிங்கின் முயற்சிகளால் பஞ்சாபின் தனித்துவமான பள்ளியாக அடையாளம் பெற்றது.

அவர், ராலி அரசுப் பள்ளியை அடுத்து ஜீத்சார் பச்சோனா என்ற கிராமத்தின் அரசு ஆரம்பப்பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டார். அடுத்து போஹா மற்றும் ரங்ரியால் அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு வேலை மாறுதல் பெற்றார். ராலி அரசுப்பள்ளியைப் போலவே அடுத்த மூன்று பள்ளிகளும் ஸ்மார்ட் ஸ்கூல் ஆக மாற்றமடைந்தன. ராலி பள்ளியில் புதிதாகக் கொண்டு வந்த ஒவ்வொரு விஷயங்களையும் மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்தினார். அமர்ஜித் சிங் மட்டுமே இதுவரையில் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் தான் பணியாற்றிய பள்ளிகளுக்காகச் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் 43 மாணவர்கள் மட்டுமே பயின்ற ஜீத்சார் அரசு ஆரம்பப்பள்ளியில் ஒரே ஆண்டில் அமர்ஜித் சிங்கின் முயற்சியால்  இரு மடங்கு மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தனர். அந்தப் பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலம் வாசிப்பதற்குத் திணறினார்கள். அமர்ஜித் சிங் அவர்களுக்குப் பொறுமையாகக் கற்றுக் கொடுத்தார். அவர்கள் முயற்சி எடுத்து திணறாமல் வாசிப்பதை வீடியோவாக எடுத்தார். யூட்யூபில் ஏற்றினார். அதைப் பார்த்தவர்கள் ‘சபாஷ்’ என்பது போல பாசிட்டிவ் கமெண்டுகளை இட்டனர். அதை மாணவர்களிடம் காண்பித்தார். அந்த மழலைகளில் முகத்தில் புன்னகை. நெஞ்சில் நிறைந்தது வாழ்க்கை முழுவதுக்குமான தன்னம்பிக்கை. தயக்கத்துடன் இருந்த மற்ற மாணவர்களும் ‘நானும் வாசிக்கவா சார்? வீடியோ எடுங்க’ என்று முன் வந்தனர். சிறிய விஷயம். மிகப்பெரிய மாற்றம்.

மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் வாழும் கிராமங்களுக்காகவும் அமர்ஜித் சிங் தன்னால் இயன்ற அளவு பணியாற்றுகிறார். மக்களைச் சந்தித்து அவர்களுக்குப் பல விஷயங்களில் வழிகாட்டுகிறார். தன்னால் இயன்ற உதவிகளையும் பெற்றுத் தருகிறார். 2016-ம் ஆண்டில் பஞ்சாப் கல்வித்துறை அமைச்சரிடமிருந்து அமர்ஜித் சிங்கின் சேவைகளைப் பாராட்டி கடிதம் வந்து சேர்ந்தது. 2019-ம் ஆண்டில் மத்திய அரசின் நல்லாசிரியருக்கான தேசிய விருது அமர்ஜித் சிங்கின் கைசேர்ந்தது. அவர் டெல்லியில் தேசிய விருதை வாங்கிக் கொண்டு வந்தபோதுதான் ரயில் நிலையத்தில் மாபெரும் வரவேற்பும், கொண்டாட்டமான ஊர்வலமும் நடந்தன.

‘இப்படி ஓர் அர்ப்பணிப்பு நிறைந்த ஆசிரியரை நாங்கள் கண்டதே இல்லை. ஓர் அரசுப்பள்ளியை, தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளுடன் மாற்றிக் காட்டி பெரும் சாதனை செய்திருக்கிறார். எங்கள் குழந்தைகள் வெளி உலகுடன் நம்பிக்கையுடன் போட்டி போடும் அளவுக்கு அவர்களை மாற்றிக் காட்டியிருக்கிறார்’ – மீடியா முன் மக்கள் நெகிழ்ந்தனர்.

கொரோனா பாதிப்பு. மாணவர்களின் கல்வியை முடக்கிப் போட்ட காலம். அப்போது ரங்ரியால் கிராமத்தில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் அமர்ஜித் சிங். எல்லா மாணவர்களிடமும் ஸ்மார்ட் போன் கிடையாது. ஆன்லைன் கிளாஸ் எடுக்க இயலாத சூழல். குருத்வாராவுக்குச் சென்றார் அமர்ஜித் சிங். அங்கே இருந்தபடி மைக்கில் மாணவர்களிடம் பேச ஆரம்பித்தார். பாடங்கள் நடத்தினார். படிக்க வேண்டியவற்றை அட்டவணை போட்டுக் கொடுத்தார். ‘அன்பு மக்களே, உங்களிடம் உபயோகப்படாத ஸ்மார்ட் போன் இருந்தால் இல்லாத மாணவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்’ என்று வேண்டுகோள் வைத்தார். லாக்டவுன் நாள்களிலும் மாணவர்களுக்கு கல்வி உடனான உறவு சிதையாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார் அமர்ஜித் சிங்.

தன்னால் இயன்ற அளவு அரசுப் பள்ளிகளை எல்லாம் ஸ்மார்ட் ஸ்கூல்களாக மாற்றுவதற்காகத் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார் இந்த பஞ்சாபின் ஹீரோ.

‘இந்தியாவின் பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் அல்ல. வசதி இல்லை என்பதற்காக அவர்களுக்கு தரமான கல்வி அரசுப் பள்ளிகளில் மறுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. எல்லோரும் சேர்ந்துதான் இந்த மாற்றத்தை எல்லா இடங்களிலும் கொண்டு வர வேண்டும், நம் மாணவர்களுக்காக, நம் சமுதாயத்துக்காக, நம் தேசத்துக்காக!’ =