சமூகப் பார்வை – 23

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

ப்போதெல்லாம் நாம், நலம் விசாரிப்பவர்களில் பெரும்பாலானோர் “ஏதோ இருக்கேங்க..” என்றுதான் சொல்கிறார்களேயொழிய “நல்லா இருக்கேங்க..”என மகிழ்ச்சி பொங்க சொல்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பலரது மனதுக்குள் ஏதோ வருத்தம் குடிசை போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது. மக்களில் கணிசமானோர் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த மன அழுத்தம் என்பது மனநோய்க்கான நுழைவு வாயில் என்பதை மறந்து விடவேண்டாம். இது தொடர்ந்தால் நம் மனநலம் பாதிக்கப்படும் அபாயம் உண்டு.

மனஅழுத்தம்  ஏற்படக் காரணம்?

காலையில் எழுந்து வேலைக்குப் புறப்படுவதில் தொடங்குகிறது மனஅழுத்தம். தொலைந்து போன கூட்டுக்குடும்ப முறை, சிதைந்து போன உறவு முறைகள், இயந்திரமயமான வாழ்க்கை முறை, பணியாற்றும் இடத்தில் வேலைப் பளு, தன் வேலை, தன் வீடு என்ற குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி, யாரும் இல்லையே என்ற பாதுகாப்பற்ற உணர்வு, குடிப்பழக்கம் இப்படிப் பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம். வரும் வருவாயில் சிக்கனமாகக் குடும்பம் நடத்தும் குடும்பத்திற்குச் சமையல் வாயு சிலிண்டர் விலை உயர்வு, வீட்டுவரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவையும் மன அழுத்தத்தைத் தரலாம். இளைஞர்களைப் பொறுத்தவரை முதலில் பெற்றோர்களின் வளர்ப்பு முறை, இரண்டாவது கல்வி கற்பதில் உண்டாகும் குறைபாடுகள், அதன் காரணமாக ஏற்படும் அழுத்தங்கள், மூன்றாவதாக நண்பர்களின் தாக்கங்கள், நான்காவதாக வளர் இளம்பருவங்களுக்குச் சரியான வடிகால் கிடைக்காதது ஆகியவை மன அழுத்தம் ஏற்படக் காரணம் என்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் நம் சிந்தனை, சுற்றுப்புறம், உடல்நலக்குறைவு ஆகியவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

மனிதர்கள் எல்லாருக்கும் சிக்கல்களும், சிரமங்களும் வரும். அதனால் அழுத்தம் எட்டிப்பார்க்கும். இது இயல்புதான். ஆனால், மன அழுத்தத்தினால் ஒருவருடைய வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சிரமங்களை ஏற்றுக்கொண்டு சமாளித்து வாழப்பழகிவிட்டால் பிரச்சனை இல்லை. இந்த அழுத்தம் தொடர்ந்தால் தான் சிக்கல்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள்

இன்றைக்குக் குழந்தைகளும் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என்பதுதான் கவலைக்குரிய விஷயம். “நான் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன். முடியவில்லை. குழந்தையை டாக்டராக்கியே தீருவேன்” எனக் கங்கணங்கட்டிக்கொண்டு சில பெற்றோர் களம் இறங்குவார்கள். தங்களால் முடியாததைத் தங்கள் குழந்தை மூலம் செய்ய நினைப்பது மிக மோசமான மன அழுத்தத்தைக் குழந்தைகளுக்கு உண்டாக்கும். குழந்தையின் ஆர்வம், ஈடுபாடு அறிந்து அதில் குழந்தையை உற்சாகப்படுத்த வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சியோடு கூடிய கல்வியைக் குழந்தை தொடரும். குழந்தையின் திறமை, பெற்றோர்களின் எதிர்பார்ப்பு இரண்டுக்கும் இடைவெளிதான் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.

சில பெற்றோர்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்கிறேன் என்ற பெயரில் தங்கள் குழந்தைகளைத் தங்கள் கைக்குள்ளேயே வளர்க்கிறார்கள். இதுவும் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். இதனால் குழந்தைகள் பின்னாளில் சிறு பிரச்சனைக்குக் கூட முடிவெடுக்க முடியாமல் திணறி விடுவார்கள். குழந்தை சைக்கிள் ஓட்டப் பழகுகிறது. கீழே விழுந்துவிட்டால், இனி சைக்கிள் ஓட்டவேண்டாம் எனச் சொல்வதை விட விழாமல் சைக்கிள் ஓட்ட என்ன செய்யவேண்டும் எனச் சொல்லிக்கொடுப்பதும், விழுந்தாலும் அவர்களே எழுவதற்கு வழிகாட்டுவதும்தான் சிறந்த வளர்ப்பாக இருக்க முடியும்.

பாதிப்பு

மன அழுத்தத்தால் ஏற்பாடும் பாதிப்புக் குறித்து மனநல ஆலோசகரிடம் கேட்டபோது, “ஒருவர் மன அழுத்தத்தோடு இருந்தால் மூச்சு விடுவதற்குச் சிரமப்படுவார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், ரத்த ஓட்டம் சீராக இருக்காது. மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை அழித்துவிடும். மன அழுத்தத்தால் தசை மற்றும் எலும்பு பகுதிகளும் பாதிப்படையும். இரத்த ஓட்டம் அதிகமாகும். மனம் திரும்பப் பழைய நிலைக்கு வந்துவிட்டால், சரியாகிவிடும். ஆனால் தொடர்ந்து ஒரு நபர் ஒரே விஷயத்தாலோ அல்லது ஒரே அளவில் மன அழுத்தத்தில் இருந்தால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் உண்டு. மன அழுத்தத்தினால் நாளமில்லா அமைப்புப் பாதிக்கப்படும். மன அழுத்தம் ஏற்படும்போது இரைப்பை குடலில் பாதிப்புகளும் ஏற்படும். சரியான செரிமானம் இருக்காது. மன அழுத்தத்தின் போது உணவுப் பழக்கம் மாறும். அதை இரைப்பை ஏற்காது. இதனால் வயிறு வலி, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மன அழுத்தத்தின் விளைவாக இனப்பெருக்க அமைப்புகள் பாதிக்கப்படும். தொடர் மன அழுத்தத்தால் டெஸ்டோஸ்டெரோன் மற்றும் ஸ்பெர்ம் உற்பத்தியாவது பாதிக்கப்படும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படும்” என்றார்.

மனச் சோர்வு

தொடர் மன அழுத்தம் மனசோர்வை ஏற்படுத்தும். “எனக்கு மனச்சோர்வு அதிகமாக இருக்கிறது” எனச் சொல்பவர்களைக் காண்கிறோம். இவ்வாறு சொல்வதை முதலில் கைவிடுங்கள் என்கிறார்கள் டாக்டர்கள். “அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவது, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவது. உத்வேகம் குறைந்து காணப்படுவது முன்னே இயங்கியது போல ஆர்வமோ அல்லது ஈடுபாடோ அற்ற தன்மை, காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது, சோர்வு, வாழ்க்கை குறித்த நிர்கதியான ஒரு கைவிடப்பட்ட எண்ணம், இவை இரு வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து இருப்பது போன்ற சூழலை மனச்சோர்வு நோய் என்று சொல்கிறோம்” என்கிறார்கள் டாக்டர்கள்.

தனித்துவம், அவர்களுடைய ஆளுமைத் தன்மை, அவர்களுடைய ஆற்றல்கள் அவர்கள் சவால்களை எதிர்கொள்கின்ற விதம், என ஒரு தனிமனிதரை பொறுத்தது. இரண்டாவது வாழ்க்கைச் சூழல்கள், மூன்றாவது உள்ளிருந்து ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்கள். எனவே மனச்சோர்விற்கான காரணங்கள் வேறுபடுகின்றன. ஒருவருக்கு மனச்சோர்வு உள்ளது என்பதை மருத்துவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தற்கொலைகள்

வயது, வசதி வாய்ப்புகள் என எதையும் பாராமல் பலரையும் குறிவைக்கும் மன அழுத்தமானது தொடர்ந்தால், அது சில நேரங்களில் தற்கொலை வரை கொண்டுபோய் நிறுத்துகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் பதின் பருவத்தில் உள்ள மாணவ, மாணவியர் தற்கொலை அதிகம். இந்த நிகழ்வுகள் கல்வி குறித்தும் கல்வி நிலையங்கள் குறித்தும் பல தீவிரக் கேள்விகளை எழுப்பியுள்ளன. “கடந்த பத்து வருடங்களில் மாணவர்களில் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகிலேயே மாணவர்கள் தற்கொலை அதிகம் நடக்கும் நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது” என்கிறார்கள் சமூகச் செயல்பாட்டாளர்கள்.

தமிழ்நாட்டில், ஜூலை 13 முதல் 27ஆம் தேதிக்குள் 7 பேர் உயிரிழந்திருந்தனர். இதில் இரண்டு பேர் பள்ளிக்கூடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள ஐந்து பேர் வீட்டிலேயோ,வெளியிலோ உயிரிழந்தனர். பள்ளிக்கூடங்களில் மாணவிகள் இறந்த நிகழ்வுகளில் பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டாலும், மற்ற மரணங்கள் பெற்றோர் தரும் அழுத்தம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களாலேயே நிகழ்ந்திருக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைப்படி 2020ஆம் ஆண்டில் 12,526 மாணவ, மாணவியர் தற்கொலை  செய்துகொண்டனர், 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 13,089 ஆக உயர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டிலிருந்து பார்த்தால் மாணவ மாணவியர்களின் தற்கொலை மரணம் 32.15 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாணவர்களுக்கு எனப் பிரத்யேக மன நல ஆலோசகர்களைப் பள்ளிக்கூடங்களில் நியமிப்பது குறித்துத் தமிழ்நாடு அரசு ஆராய்ந்து வருகிறது. எத்தனை பள்ளிக்கூடங்களில் இதெல்லாம் சாத்தியம்? எனத் தெரியவில்லை.

மன அழுத்தத்தை சரி செய்தல்

ஒரு விஷயத்தைக் குறித்துப் பதற்றப்படும்போதுதான் மன அழுத்தம் நம்முள் நுழைகிறது. பத்து மணி அலுவலகத்துக்கு 9.45க்குப் புறப்படும்போது, டிராபிக் இல்லாமல் இருக்கணும், வண்டி மக்கர் பண்ணக்கூடாது எனத் தேவையில்லாத கவலைகள் அணிவகுக்கும். இந்த மன அழுத்தத்தைக் குறைக்க அலுவலகத்துக்கு முன்னதாகக் கிளம்பலாம். அடுத்தமாதம் உறவினர் திருமணம் வெளியூரில் இருக்கிறது. போகவேண்டும், மொய் செய்யவேண்டும் செலவுக்கு என்ன செய்யலாம் என யோசிக்கும் போதே கிறுகிறுக்கும். மனஅழுத்தம் ஏற்படும். நடுத்தரக் குடும்பங்கள் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்தான் இது. அதற்கு, அடுத்த மாதத்துக்காக இந்த மாத செலவில் எதைக் குறைக்கலாம், சேமிக்கலாம் எனத் திட்டமிடலாம். இது சாத்தியமாகாவிட்டால் கூடப் பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடாது.

எதைக் குறித்து நாம் பயப்படுகிறோமோ, எதைக் குறித்துப் பதற்றப்படுகிறோமோ, அதை எப்படிச் சரி செய்வது, எப்படி அதில் வெற்றியடைவது என்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவு மன அழுத்தம் ஏற்படாதவாறு சிந்தனையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், மன அழுத்தத்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள்தான் பாதிப்பாகவும் மாறும்.

தீர்வு

விரக்தி, வேதனையில் இருப்போர் தங்கள் மனதில் உள்ளவற்றை நம்பிக்கையான நபரிடம் பகிர்ந்துகொள்ளலாம். மனக்குழப்பங்கள் வெளியேறினால் வேதனை குறையும். மனநல மருத்துவரைத்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குடும்ப மருத்துவரை முதலில் சென்று பாருங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் அவர் அனுப்பி வைப்பார்.

`இதனை வெளியில் சொன்னால் அவமானம்’ என நினைப்பதைவிட `உயிர் முக்கியம்’ என நினைக்க வேண்டும். உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 25 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களுக்கு ஏற்படுகின்ற மன நல பிரச்சனைக்குச் சிகிச்சை பெற்றுவருகிறார்கள் என்கிறது புள்ளிவிபரம்.

2022ஆம் ஆண்டின் உலக மனநல தினத்தின் கருப்பொருள் ‘அனைவருக்கும் மனநலம் மற்றும் நல்வாழ்வை உலகளாவிய முன்னுரிமையாக ஆக்குவது’ என்பதாகும். எனவே, வேதனையோடு நம்மிடம் தங்கள் துயரினைச் சொல்ல வருபவர்களின் குரலை காதுகொடுத்துக் கேளுங்கள். “பார்த்துக்கிடலாம்” “சரியாயிடும்” “நாங்களெல்லாம் இருக்கோமில்ல..” என ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள் போதும். ஒருவரின் உயிரினைக் காப்பாற்றிய புண்ணியத்தைப் பெறுவீர்கள். யாருக்குச் பிரச்சனை இல்லை..? அளவு வேண்டுமானால் கூடக் குறைய இருக்கும். எனவே தற்கொலை முடிவை தவிருங்கள். வாழநினைப்போம்.. வாழுவோம்..

(‘அக்டோபர் – 10’ மனநலன் தினம்)