வழிகாட்டும் ஆளுமை – 14

திரு. நந்தகுமார் IRS

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்” என்பார்கள் பெரியோர்கள். ஆம் திறமைகளைப் பாராட்ட வேண்டும். திறமைகளைப் ஊக்குவிக்க வேண்டும். நம்மில் எத்தனை பேர் திறமைகளைப் பாராட்டுகிறோம், திறமைகளைத் தட்டிக் கொடுக்கிறோம், திறமையை தூண்டி விடுகிறோம் அல்லது திறமையை வெளிக்காட்டும் போது முறையான  பின்னூட்டம் கொடுக்கிறோம்.

திறமைகளை அறிதல் மட்டுமின்றி அதற்கான பின்னூட்டம் தேவைப்படுகிறது. நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்தால் நிறையப் போட்டிகள் நடத்துவார்கள். அந்தப் போட்டி நிகழ்ச்சிகளில்  தோற்ற உடன் உடனடியாக அவர்கள் அதிகப்படியான எதிர்வினைகளை முகத்தில் காட்டுவார்கள். அது பார்ப்பவர்களை வெகுவாக ஊக்குவிக்காது.

ஏதேனும் ஒரு விஷயத்தினை முயற்சிக்கும் போது நிச்சயமாக நாம் தோல்விகளை ருசிக்க நேரிடும். நம்முடைய திறமைகள் தனித்துவமானதாக இருந்தால் பிரச்சனை இல்லை. அதில் நமக்கு போட்டியும் இல்லை. ஆனால் அது தனித்துவமாக இல்லை என்பதனால் தான் இது போன்ற போட்டிகள், தோல்விகள், வெற்றிகள் என்று நாம் சந்திக்க நேரிடும்.

பெற்றோர்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் மேல் அதிகாரியாக இருந்தாலும் சரி, ஒரு திறமை என்று வரும் பொழுது அதனை உள்ளபடியே உளமாறப் பாராட்ட வேண்டும். அதேபோல திறமைகளைப் பாராட்டும் பொழுதும் அல்லது ஊக்குவிக்கும் போதும் அவர்களுக்கு முறையான ஒரு அணுகுமுறையாக இருக்க வேண்டும். எதையும் அதிகமாகவோ அல்லது மிகைப்படுத்தியோ  அவர்களை அதிக நம்பிக்கைக்கு அழைத்துச் செல்லக் கூடாது. அதுபோல அதிக நம்பிக்கை வந்து விட்டால் எதிலும் முறையான கவனத்தை செலுத்த முடியாது. ‘‘நான் தான் இதனை செய்தேன் ஆனால் எனக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை’’ என்று அவர்கள் கூறிக்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

பலருக்கு திறமைகளை அரங்கேற்றியவுடன் அதில் கிடைக்கும் தோல்விகளையோ அல்லது விமர்சனங்களையோ தாங்கிக் கொள்ளும் மனநிலை இருப்பதில்லை. திறமைகளை அங்கீகரிக்கும் விதத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு விஷயம் நன்றாக இருந்திருந்தால், இதனால் தான் அது நன்றாக இருந்தது என்று நாம் சுட்டிக் காட்ட வேண்டும். அதேபோல் ஒரு விஷயம் சரியாக அந்த இடத்தில் வரவில்லை என்று சொன்னால் ஏன் அது முறையாக, சரியாக வரவில்லை என்பதையும் நாம் குறிப்பிட்டு அதனை திருத்திக் கொள்ள வழி வகுக்க வேண்டும். அவர்கள் எந்தெந்த தவறுகளை செய்தார்கள் என்பதை மிகவும் தெளிவாக அவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். நல்லவற்றை பாராட்டு வேண்டும் அதே வேளையில் செய்யும் தவறுகளை இன்னும் துல்லியமாக அவர்களிடம் சுட்டிக் காட்ட வேண்டும். அவ்வாறு நாம் தவறுகளைச் சுட்டிக் காட்டும் போது அவர்களுடைய திறமைகளை மீண்டும் அவர்கள் வளர்த்துக் கொள்ள வசதியாக, நல்ல களமாக அமையும்.

உலகில் இருக்கக்கூடிய நாம் அனைவருக்கும் ஏதோ ஒரு திறமை நமக்குள் ஒளிந்திருக்கின்றது. ஆனால் அதனை பலர் வெளி கொணர்வதே இல்லை. உள்ளபடியே பிறக்கும்பொழுது பலரிடம் பல திறமைகள் உள்ளது. ஆனால் அதனை அவர்கள் முறையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அமையவில்லை. என் அப்பா அழகாக அடிக்கடி கூறுவார் “செல்வம் வைத்திருப்பவனுக்கு சொந்தமில்லை, மாறாக அதனை அனுபவிப்பவனுக்கே சொந்தம்” என்பார். ஆம் அதுபோல  திறமைகளை வைத்திருப்பது முக்கியமல்ல, மாறாக திறமையை முறையாக வெளிப்படுத்துவது தான் முக்கியம். உதாரணத்திற்கு உங்கள் பையன் ஒரு சிறந்த ஓட்டப்பந்தய வீரனாக இருக்கிறான் என்று சொன்னால். அவனுக்கு முறையான ஊக்குவித்தல் இருக்க வேண்டும். அவன் பயிற்சிக்கு செல்லும் பொழுது, பயிற்சியின் போது அவனை முறையாக கைத்தட்டி உற்சாகப்படுத்தி அவனை ஊக்குவிக்க வேண்டும்.

எல்லா திறமைகளும் ஒவ்வொரு விதைகள் போன்றனவே. அந்த விதை சரியான மண்ணில் நாம் விதைத்தால் தான் அது மிகப்பெரிய விருட்சமாக வளரும்.  அந்த மண் தான் நம்முடைய குடும்பம், நம்முடைய சமுதாயம்.   எப்படி அந்த விதை வளர்வதற்கு தண்ணீர் தேவைப்படுகிறதோ, உரம் தேவைப்படுகிறதோ அது போல தான் நம்முடைய ஊக்குவித்தலும், நம்முடைய பாராட்டுக்களும். அதுபோல இந்த நல்ல நல்ல மண்ணும் முறையான தண்ணீரும், உரமும் கிடைத்துவிட்டால் அனைத்து திறமைகளும் வெகு விரைவில் மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கும். அதேபோல் இந்த திறமைகளை வெளிகாட்டுதற்கான முறையான சூழல் அமைய வேண்டும். எவ்வாறு சூரிய ஒளியும் தேவைப்படுகிறதோ,  அதுபோல முறையான திறமைகளை காட்டுவதற்கான சூழலும் அமைய வேண்டும்.  நம்மில் பலர் யாரேனும் ஒரு விஷயத்தை தவறாக செய்துவிட்டால் அதனை கிண்டல் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் ஒரு நல்ல திறமையை நாம் ஊக்குவிப்பதற்கு தயங்குகிறோம். திறமைகளை ஊக்குவிப்பதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயமாக உங்களுக்கும் ஒரு உந்துதலாக இருக்கும்.  அவர்களுக்கும் ஒரு உந்து சக்தியாக அமையும். இவ்வாறு நான் மற்றவர்களை ஊக்குவிக்கும் போது தான் எனக்கான காலமும் தயாராகும். எனக்கும் இது போன்ற பாராட்டுக்களும் ஊக்குவித்தலும் கிடைக்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஒரு ஏணியாகவும் இது அமையும். எனவே நம் அனைவருக்கும் திறமைகளை ஊக்கப்படுத்தும் ஒரு ஆளுமை நிச்சயமாக நமக்கு வேண்டும். அப்படி உங்களுக்கு இது தெரியவில்லை என்று சொன்னால் இனி தினமும் அதனை நாம் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த திறமையை கண்டாலும் உடனடியாக அதனை வெகுவாகப் பாராட்ட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களிடமிருந்தும் நமக்கு கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளும் அமையும். வாழ்த்துகள்!!! 