இளைஞர் உலகம்

உறவு

பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588

அசட்டை முகத்தவரின் பொதுமைப் பண்புகள் பற்றிப் பார்த்து வருகிறோம். இதுவரை இவர் 1. மனம் திறந்து பேசாதவர், 2. எளிதில் உணர்ச்சி வசப்படுபவர், 3. மற்றவர்களை தன்னைவிட உயர்வாகக் கருதுபவர், 4. அடிமை வேலை செய்வதில் ஆனந்தம் கொள்பவர், 5. திருப்திகரமாக கடமையை செய்பவர் என்ற ஐந்து பண்புகளைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் இன்னும் சில பண்புகளைக் காண்போம்.

6. சமூக உறவில் இரட்டைத்தன்மை

அசட்டை முகத்தினர் சமூக உறவை விரும்பாதவர் போல் வெளி உலகிற்கு காட்டுவார்கள். இது இவர்களது அழுமுகத்தவர் பண்பின் தாக்கமாகும். ஆனால் இவர்கள் அழுமுகமும் சிரிமுகமும் கொண்ட கலவையாதலால் இவர்களுக்குள் உண்மையில் சமூக உறவுக்கான ஏக்கம் இருக்கும். இதைப் பார்ப்பவர்கள் இவர்கள் இரட்டை வேடம் போடுவதாக நினைப்பார்கள் – இவர்களை தவறாக எடைபோடும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் இவர்களது அசட்டை முக உளப்பாங்குதான் இத்தகைய செயல்பாட்டை இவர்கள் கொண்டிருக்கச் செய்கிறது.

வாழ்வது என்பது உறவுகொண்டு வாழ்வது என்பர். உறவுகளில் சமூக உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தான் எந்த மனிதனும் தனித்தீவு கிடையாது (No man is an island) என்பார்கள். நாம் யாவரும் ஏதாவது ஒருவகையில் யாரையாவது சார்ந்து கொண்டுதான் வாழமுடியும். அதனால்தான் பைபிள் ‘‘மனிதன் தனியாக இருப்பது நல்லதன்று’’ என்கிறது. அதிலும் இளமைப்பருவத்தில் சமூக உறவு நன்னடத்தைக்கு, நன்மை பல புரிவதற்கு உதவலாம். படிக்கும் காலங்களில் சேர்ந்து பாடங்களை கற்றல் (combined study) கல்வி சம்மந்தமான முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையலாம். நல்ல நட்பு, சமூகத் திறன்களின் வளர்ச்சிக்கு உதவலாம். அதுபோலவே சமூக உறவு இளையோர் ஒத்துழைப்புக்கான வழிகளை கண்டடைய உதவலாம். மேலும் தகவல்களைப் பெறவும், பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வழிகளையும், ஒத்த வயதுடையோரின் எதிர்மறையான அழுத்தங்களை எதிர்த்து நிற்கும் துணிச்சலைப் பெறவும் சமூக உறவு இளைஞர்களைப் பயிற்றுவிக்கிறது. சமூக உறவு இளமைப் பருவத்தில் தலைமைப் பண்புகளை வெளிக்கொண்டுவர உதவுகிறது.

கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது, எதிர்காலத்தில் அவர்கள் நாட்டுக்குத் தலைமை வகிக்க உதவுகிறது. நமது அரசியல் தலைவர்களில் பலர் தங்கள் கல்லூரி நாட்களில் மாணவர் சங்க நிர்வாகிகளாக இருந்தவர்களே. எடுத்துக்காட்டாக நமது அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற பெனாசிர் புட்டோ ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவியாக இருந்தவர் தான்.

மனிதன், குறிப்பாக இளையோர் சுதந்திர நபர்களாக இருக்க விரும்புகின்றனர். தனக்கென ஒரு பாணியை தேர்ந்து கொண்டு நடக்க முயலுகின்றனர். தனித்து முடிவுகளை எடுக்க முயலுகின்றனர். இது நல்லது போன்று தோன்றினாலும் பெற்றோர், பெரியோர் வழிநடத்தல் இல்லாமல் தீர்மானங்களை எடுக்கும் இளையோர் வழிதவறிப் போக வாய்ப்புகள் அதிகம். இங்கு பெற்றோரின் உணர்வுப்பூர்வமான உதவி கிடைக்காததால் திசை மாறும் இளையோர்களையும் பார்க்கிறோம். அசட்டை முக உளப்பாங்கு உடைய இளையோரை அடையாளம் கண்டு ெபற்றோர் அவர்கள் ஏக்கங்களை நிறைவேற்ற வேண்டும்.

  1. பணிசெய்யும் திறன் கொண்டவர்கள்

ஏற்கெனவே இவர்கள் அடிமை வேலை செய்வதில் ஆனந்தம் கொள்பவர்கள் எனப் பார்த்தோம். அது இவர்களை ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற சிந்தனை கொள்ள வைக்கிறது. பணி ஏற்பதில் அல்ல, பணிபுரிவதில் ஆர்வம் காட்டுபவர்கள் அசட்டை மனப்பாங்கைக் கொண்டவர்கள். அகிலம் போற்றும் அன்னை தெரசா சபைக்கு “அன்பின் பணியாளர் சபை” (Sisters of Charity) என்று பெயர். அவருடைய பணி உலகறிந்ததே. “உலகில் யாரும் நான் அனாதை என இறக்கக் கூடாது” என்ற உயர் இலட்சியத்தைக் கொண்டு பணிசெய்தார் அவர். பணி என்பது பணத்திற்காக செய்வதன்று. மனிதநேயத்தால், அன்பால் ஆட்கொள்ளப்பட்டு இலவசமாக தியாக மனப்பான்மையோடு பிறர் நல்வாழ்வுக்காக ஆற்றப்படுவதுதான் பணி. இத்தகைய பணிசெய்ய முன்வருபவர் சிலரே.

ஒருமுறை கல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் விளையாட்டில் கலந்துகொண்ட பிரபல இந்திய கிரிக்கெட் வீரர், அந்த விளையாட்டில் தனக்குக் கிடைத்த பெரும் தொகையோடு அன்னை தெரசாவைப் பார்க்கச் சென்றார். அன்னை அவரை வரவேற்றார். அப்போது அன்னை தொழுநோயாளிகளின் புண்களைக் கழுவி துைடத்து அவற்றில் மருந்து தடவிக் கொண்டிருந்தார். கிரிக்கெட் வீரர் பணத்தை அன்னையிடம் கொடுக்க முயன்றார். ஆனால் அன்னை அந்தப் பணத்தை வாங்கவில்லை. மாறாக தனது நோயாளிகளிடம் ஒரு 30 நிமிடம் செலவழித்துவிட்டு போகும்படி கேட்டுக் கொண்டார். கிரிக்கெட் வீரர் முகம் சுளித்து அன்னைக்கு வணக்கம் செலுத்திவிட்டு திரும்பிவிட்டார். அன்னையைப் போல் பணிசெய்வது எளிதான காரியம் அல்ல என உணர்ந்து கொண்டார். l