வாழ்வியல் திறன்கள்
முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்
உலகில் அதிகம் ஒலிக்கும் ஒரு சொல் “நேரமில்லை “. திட்டமிட்டவருக்குக் கூட நேரமில்லை. எல்லோருக்கும் 24 மணி நேரம்தான் என்ற போதும், பலருக்கு ஏனோ, அவர்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் கூட நேரமில்லாது போகின்றது. என்னப்பா, நல்லா இருக்கியா? என்று கேட்டால், ‘நேரம் சரியில்லை’ என்று கோள்களை குறை சொல்லும் மனப்பான்மையை இன்றைய சமூகத்திடம் அதிகம் காண்கின்றோம். வீடுகளில் நடக்கும் பிரச்சனைகளுக்குக்கூட கோள்களின் மீது பழியைப் போட்டு, மனித மனவிகாரங்களை களையப்பார்க்கும் அற்ப சாக்குகளை அறிகின்றோம். மனித முயற்சிகளை மழுங்கடிக்கக் கூடியனவற்றை அகற்றும் அவசர அறுவை சிகிச்சை இன்றைய உடனடித் தேவையாக உள்ளது. பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் அவரின் பிறந்த நாளே சிறப்பான நாளாக கருதக்கூடிய சிந்தனையை ஆழப் பதியச்செய்திட வேண்டும். ஏனெனின் பலரின் அளப்பரிய ஆற்றல்கள், நாள், நேரம், காலம், போன்ற போலிக் கணக்குகளால் அவர்கள் உள்ளேயே உருக்குலைந்து போவதையும் பார்க்க முடிகின்றது.
- பிறந்த நேரம் சரியில்லை
- நட்சத்திரம் சரியில்லை
- நிறம் சரியில்லை
- இந்த இராசிக்கு என்ன செய்தாலும் முன்னேற முடியாது
- இந்த பணிக்குத்தான் இன்னார் பொருந்த முடியும்
- இன்ன வயதில் இவருக்கு இன்னின்ன நடக்கும்
- இன்னின்னப் பரிகாரங்கள் செய்தால் மட்டுமே ஆக்கங்கள் கூடும்.
என்பன போன்ற தீயனைய எதிர்மறை வார்த்தைகளால் பலரின் பண்பட்ட திறன்கள் புலப்படாமலே புதைந்துவிடுகின்றது. இதற்குத் தீர்வாக மனிதரிடையே ஆக்கப்பூர்வமான எண்ணங்களின் வீரியத்தை உணர்த்திடச் செய்திடல் வேண்டும். கோள்களில் இல்லை வாழ்க்கை வளர்ச்சியானது, கொண்ட கொள்கைகளில்தான் மனித உயர்ச்சி உள்ளது என்ற வீரிய எண்ணத்தை, மனித சமுதாயத்தின் நாடி நரம்புகளில் குருதியில் கலந்திட வேண்டும். மேலும் வாழ்க்கையில் சிக்கல்களுக்குள் சிதைந்து போகாது, சிக்கல்களுக்குள் தீர்வு காணவல்ல வல்லாண்மை நுட்பத்தை உணர்த்திடச் செய்யும் கல்வி முறையை மாணவர்களின் மனங்களில் நடவுசெய்திட வேண்டும். மேலும் எல்லாவற்றையும் விட சப்பானியர்கள் போல உயிரினும் மேலான நேர உணர்வை வாழ்க்கையில் உயிர்நாடியாகப் பாவிக்கக்கூடிய பண்பட்ட நுண்ணறிவினை ஒவ்வொரு மாணவ மாண்பினிடத்தும் செழித்தோங்கச் செய்திடல் வேண்டும். ஏனெனில் நேரவுணர்வுடன் வாழும் மனிதனால் மட்டுமே மூடநம்பிக்கைகளைப் புறந்தள்ளி முயற்சி முதன்மையுடன் வாழக்கூடிய பெற்றிமைக்குணமானது மனதினில் உரமுற்றிருக்கும்.
இன்றைய உலகினில் சொல்லித்தருவதைவிட ஒருவரை உன்னிப்பாகக் கவனித்து கற்றுக்கொள்ளக்கூடிய வகைமைகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. இதன்வழி நேரவுணர்வின் தகைமைகளை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்திடும் வகையில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள். பணியிடங்கள் ஆகியன தவமுனைப்புடன் ஆற்றுப்படுத்திட வேண்டும். இவ்வாறான நேரவுணர்வு தன்மையால் மட்டுமே மனிதகுலம் ஒழுங்குக் கலையின் அருமைகளை முழுவதுமாகப் பெற்றிடக்கூடிய இயல்பினை இயற்கையாகப் பெறுகின்றது எனலாம். இதனையே,
“நேரம் தவறாமை மிகவும் அதிகப் பயன்தரக் கூடிய ஒரு பழக்கம். அதற்கு நீங்கள் பழகிவிட்டால், வாழ்க்கையை அது எவ்வளவு சுலபமாக்கி விடுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.” என்ற அறிஞர். டான் வார்தான் அவர்களின் பொன் வாக்கினை அறியும் போது, நேரவுணர்வினைப் பழக்கமாக்கி வாழ்க்கையாக்கிவிடும் நுட்பம் எளிதாகக் கைக்கூடும். இங்கு கைக்கடிகாரங்களை அழகிற்காகப் பயன்படுத்துவதையே அறியமுடிகின்றது. ஆனால் சப்பானியர்கள் 96 சதவீதம் பேரின் கைக்கடிகாரங்கள் அனைத்தும் ஒரே நேரத்தைக் காட்டும் துல்லிய ஒன்றாகப் பயன்படுத்தும் அருமையை அறியமுடிகின்றது. இத்தன்மைக்கு மெருகூட்டம் வகையில் திட்டமிடுதலை ஒருவர் வகைப்படுத்தும் போது, நேரவுணர்வானது எண்ணங்களை செயலாக்கும் செவ்விக்குத் துணைபுரிவாதாக அமைகின்றது. இதனையே,
“ஏதோ ஒன்றைத் தொடங்கி வைப்பதன் மூலமாக எதிர்காலத்தை நிகழ்காலத்துக்குள் கொண்டு வருவதற்குத் திட்டமிடல் உதவுகின்றது” என்ற சான்றோர் ஆலன் லேக்கின் முன்வைப்பு திட்டமிடுதலின் முக்கியத்துவத்தை நமக்குப் புலப்படுத்துவதை உணரமுடிகின்றது.
“If you fail to Plan you are planning to fail” என்ற மேலாண்மை வாசகமும் திட்டமிடத் தவறுவதனால் எய்தக்கூடிய ஏதங்களை நயப்படுத்துகின்றது. மேலும், திட்டமிட்டவுடன் சற்றும் தாமதியாது, ஒருவர் உடனே அவற்றினைச் செயலாற்ற வேண்டிய இன்றியமையாமையை வலியுறுத்துகின்றது. தாமதமாக்கும் ஒவ்வொரு நொடியும் நம்மிடமுள்ள நேரவுணர்வினைக் கவரக்கூடியக் கள்வனாக உள்ளது.
“Procrastination is the thief of time” என்ற வாசகமும் உடனே ஆற்றவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றது. திருக்குறளில் “காலமறிதல்’’ (49) என்ற அதிகாரம் முழுமையும் நேரவுணர்வின் அவசியத்தை மிக நுணுக்கமாகக் கூறுவதை உணரமுடிகின்றது.
“அருவினை என்ப உளவோ” (குறள் 483)
“ஞாலம் கருதினும் கை கூடும்” (குறள். 484)
போன்ற மேற்குறித்த குறள் தொடர்களானது, நேரவுணர்வுடன் செயல்படுபவருக்கு இயலாத செயல் என்பது ஒன்றுமில்லை என்றும், அவர்களால் உகந்த நேரவுணர்வுடன் செயல்படுகின்ற திறத்தால் இந்த உலகத்தையே வசமாக்கும் வல்லாண்மையானது வயப்படும் என்று ஆணித்தரமாக அறுதியிடுவதை அறியமுடிகின்றது.
இவ்வகையான் நேரவுணர்வானது உடைமையாகும் போது,
- மனித மனங்கள் ஓர் ஒழுங்குக்குள் உட்படுகின்றது
- எதனையும் திட்டமிட்டு ஆற்றவேண்டும் என்ற வகைமைக் கோட்பாடு வலுப்பெறுகின்றது
- திட்டமிட்டதை தாமதியாது செய்திட வேண்டும் என்ற செயலுணர்வு செழிப்புறுகின்றது
- எதனையும் எய்திட முடியும் என்ற நம்பிக்கையுணர்வு நலமுறுகின்றது
- குறித்த நேரத்தில் ஆற்றும் வழி மன இறுக்கம் அகலுகின்றது
- மனதில் படபடப்பு, உடல் அசதி, போன்ற சுகவீனங்கள் அகன்று எதனையும் தெளிவுடன் பழுதின்றி செய்யக்கூடிய திறமானது உறுதியாகின்றது
- அனைவராலும் மதிக்கப்படக்கூடிய மாண்புநிலை வாய்க்கின்றது.
எல்லாவற்றிருக்கும் சிகரம் வைத்தாற்போன்று, மூடப்பழக்கங்களுக்கு சாவுமணியாக, கோள்களைக் கோள் சொல்லாது, முயற்சிகளுக்கு முதன்மைதரக்கூடிய சுறுசுறுப்புணர்வுகள் நேர மேலாண்மை வழியாக உச்சம் பெற்றிருக்கும். ஏனெனின் நேரவுணர்வு என்பது கடிகார முட்களை மட்டும் பார்ப்பதல்ல, வாழ்க்கையில் இலக்குகளை உறுதியாகத் திட்டமிட்டு அதனை அடைவதற்காக குறுகிய கால அடைவு (short term , within 1 year), இடைக்கால அடைவு (mid term plan 1 to 3 Years). நீண்ட கால அடைவு (Long term plan within 5 years) என்றவழி முறைப்படுத்தி அதனை எண்ணியவாறு எய்தும் ஆக்கக் கலையாகும். இதன்வழி குடிப்பெருமைக்கு வந்துற்ற மாசுகளும் மறைந்தே போவதுடன்,
“one cannot be regimented by the planets” என்ற செகப்பிரியரின் உறுதிப்பாடும்
“குடிசெய்வார்க்கு இல்லை பருவம்” (குறள்.1028)
என்ற குறள் தொடரும் மனித வாழ்க்கைக்கு முயற்சியின் அருமையை பதிவுசெய்வதுடன் கோள்களைப் பழிசொல்லக்கூடிய புன்மைகளுக்கு தீர்வு தருகின்றது.