’ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் – டாக்டர். மெ. ஞானசேகர்

அமெரிக்க நாட்டின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்தவர்கள் செவ்விந்திய மக்கள். ஆண்டாண்டு காலமாக இயற்கையோடு வாழ்ந்து, அறியப்படாதிருந்த அமெரிக்கக் கண்டத்தில் வசித்து வந்தவர்கள். கொலம்பஸ் போன்ற சிலரால் அமெரிக்கக் கண்டம் அடையாளம் காணப்பட்டு அந்தப் பெரும் நிலப்பரப்பில் குடியேறினார்கள் ஐரோப்பியர்கள்.

இப்படிக் குடியேறிய ஐரோப்பிய வெள்ளையர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை எழில் கொஞ்சும் வளம் பொருந்திய அமெரிக்கக் கண்டத்தை அமெரிக்க நாடாக மாற்றினார்கள். தொழிற்சாலைகளும், நிறுவனங்களும், கல்விக்கூடங்களும் வளர்ந்து பெருகின. பூர்வீகமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அம்மண்ணில் வாழ்ந்து வந்த செவ்விந்தியப் பூர்வகுடி மக்கள் வதைக்கப்பட்டனர்.

அவர்களது காடுகளும், மலைகளும் அழிக்கப்பட்டன. 1854-ஆம் ஆண்டில் அந்தச் செவ்விந்தியர்களிடம் இருந்த ஏறக்குறைய இருபது இலட்சம் ஏக்கர் நிலத்தை அமெரிக்க அரசாங்கம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டாலர் பணம் கொடுத்துப் பெற்றது. உண்ைமயில் அந்த நிலங்களைத் தர செவ்விந்தியர்களுக்குச் சற்றும் விருப்பம் இல்லை. ஆனால், அதிகாரம், ஆதிக்க வர்க்கம் ‘அந்த இடம் வேண்டும்’ என்று நிர்ப்பந்திக்கும் போது வேறு வழியின்றி அதைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

அவர்களது சிவப்பிந்தியத் தலைவரின் பெயர் சியாட்டில், இன்று வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரின் பெயர் சியாட்டில் தான். இந்தச் சியாட்டிலை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ப்ராங்க்ளின் பியர்ஸ் என்பவரது பிரதிநிதியான கவர்னர் ஐசக் ஸ்டீவன்ஸன் சந்தித்தார். அந்த நிலத்தைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் போது சியாட்டில் பேசியது இங்கே கவனிக்க வேண்டியதாகும்.

விகடன் பிரசுரத்தில் வெளியான ‘இந்திய வானம்’ என்னும் நூலில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இச்சம்பவத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார். சியாட்டில் இவ்வாறு பேசுகின்றார். “வெள்ளையர்களால் எங்கள் வாழ்வு முறையைப் புரிந்துகொள்ள முடியாது. பூமி மனிதனுக்கு உரிமையானது அல்ல; மனிதன் தான் பூமிக்கு உரிமையானவன். பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். வானத்தையோ, பூமியையோ விற்கவோ, வாங்கவோ எவ்வாறு இயலும்? அந்த எண்ணமே எங்களுக்குப் புதிரானது. விலங்குகள் இல்லாமல் மனிதன் எப்படி வாழ்வான்? எல்லா விலங்குகளும் இந்தப் பூமியில் மறைந்து போய்விடுமானால், கொடூரமான தனிமையில் மனிதன் இறந்து போய்விடுவான். விலங்குகளுக்கு நேர்வது நாளை மனிதனுக்கும் நேரிடும்.

எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையே. நீரின் முணுமுணுப்பு என் தந்தையினுடைய குரல். எங்கள் காலடியில் உள்ள நிலம் எம் மூதாதையரின் சாம்பல். இதை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். இந்தப் பூமி எங்களின் தாய் என நாங்கள் நம்புவதை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நதிகள் எங்கள் சகோதரர்கள். அவர்கள் எங்கள் தாகத்தைத் தீர்க்கிறார்கள். எங்கள் படகுகளைச் சுமக்கிறார்கள். எங்கள் குழந்தைகளின் பசியாற்றுகிறார்கள். நாங்கள் உங்களுக்கு எங்கள் நிலத்தை விற்றால், நதிகள் எங்களுக்கும் உங்களுக்குமான சகோதரர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். அதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவும் வேண்டும்.

அது மட்டும் அல்லாமல், நீங்கள் எந்த ஒரு சகோதரனிடமும் காட்டும் கருணையை நதிகளிடமும் காட்ட வேண்டும். வெள்ளையர்கள் உருவாக்கிய நகரங்களில் அமைதியே இல்லை. வசந்த காலத்து இலைகள் உதிர்வதைக் கேட்கவோ, பூச்சிகள் தங்களது சிறகுகளை உரசிக் கொள்ளும் ஓசையை அறியவோ சாத்தியம் இல்லை. நகரங்களின் குழப்பமான ஓசைகள் செவியை அவமதிப்பதாகத் தோன்றுகிறது.

சிவப்பு மனிதர்களுக்கு அதாவது செவ்விந்திய மக்களுக்கு, காற்று மிகவும் மதிப்புடையது. ஏனென்றால் எல்லா உயிர்களும் பகிர்ந்து கொள்வது ஒரே சுவாசத்தைத் தான்; விலங்கும் மரமும் மனிதனும் ஒரே சுவாசத்தைத்தான் சுவாசிக்கிறார்கள். வெள்ளை மனிதர்கள், தாம் சுவாசிக்கும் காற்றை அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை” என்று வருத்தமுடன் தன் வேதனைகளை வெளிப்படுத்தினார்.

சியாட்டில் என்னும் செவ்விந்தியர் 165-ஆண்டுகளுக்கு முன்னால் பேசிய இந்த வார்த்தைகளைத் திரும்பவும் ஒருமுறை வாசித்துப் பார்த்தால் இவற்றின் ஆழம் நமக்குத் தெரியும். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நமது முன்னோர்கள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படிதான் வாழ்ந்திருக்கிறார்கள். “எல்லா ஊரும் எங்கள் ஊர்தான். எல்லோரும் எங்கள் உறவுகள்தான்.” எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தைகள். இங்கே சியாட்டில் பூமியைத் தாயாகவும், நீரின் உயிரோட்டத்தைத் தந்தையாகவும், நிலங்களை மூதாதையர்களின் சாம்பலாகவும், நதியைச் சகோதரராகவும் பாவிப்பதை யோசித்துப் பார்ப்போம். நதிகள் எங்கள் குழந்தைகளுக்குப் பசியாற்றுகிறார்கள்.

நதிகள் இல்லைேயல் விவசாயம் ஏது? விவசாயம் இல்லையேல் உணவு ஏது? காய், கனி என்று எவையும் நமக்கு எப்படிக் கிடைக்கும்? ஆனால் இன்று நதிகள் எல்லாம் குப்பை, கூளங்களால் நிரப்பப்படுகின்றன. சாக்கடைகள் ஓடுவதற்கு என்றே சில நதிகளை மாற்றம் செய்துவிட்டோம். நதிகள் சங்கமிக்கும் அந்தக் கடலின் கதியும் இதைவிட மோசம். பிளாஸ்டிக் கழிவுகளால், அதை உண்ணும் மீன்களால் இயற்கை அழிவுக்குக் காரணமாக இருக்கின்றோம்.

எல்லா மூச்சும் ஒன்றே!

சிவப்பிந்தியத் தலைவர் சியாட்டில் அற்புதமான ஒரு செய்தியைச் சொல்லுகின்றார். “எங்களுக்குக் காற்று மிகவும் மதிப்புடையது; ஏனென்றால் எல்லா உயிர்களும் பகிர்ந்து கொள்வது ஒரே சுவாசத்தைத் தான்; விலங்கும் மரமும் மனிதனும் ஒரே சுவாசத்தைத்தான் சுவாசிக்கிறார்கள்.” என்ன அற்புதமான வரிகள்! கொரோனாத் தொற்று உருவாகி நாம் அல்லோகலப்படும் இச்சூழலில் காற்று மூலம் இந்தத் தொற்று பரவாது என்ற செய்திதான் இன்று நம்மில் 99.9% மக்களை உயிரோடு வைத்திருக்கிறது.

இந்தக் காற்றினால் உருவாகும் ஒரே சுவாசத்தை விலங்குகளும், மரங்களும், மனிதர்களாகிய நாமும் பகிர்ந்து கொண்டு வாழ்கின்றோமே, ஒருவேளை இதற்குப் பாதிப்பு ஏற்பட்டால் என்ன நிலை உருவாகும்? அந்த மனிதர் அற்புதமாகக் கேட்கிறார் : “இந்த பூமிக்கு மனிதன் உரிமை கொண்டாட முடியாது; ஆனால் பூமி தான் மனிதனுக்கு உரிமை கொண்டாட முடியும்.” எவ்வளவு ஆழமான உண்மை!

இன்று மனிதர்களின் ஆசை அளவுகடந்து செல்கிறதே. பூமி முழுவதையும் தனதாக்கிக் கொள்ளக் கூடச் சிலருக்கு விருப்பம் உண்டு. நல்லவேளை அந்த முயற்சிகள் முடிவு பெறுவதற்கு முன்பே அந்த மனிதர்கள் மண்ணுக்குள் சென்றுவிடுகிறார்கள். நமது மூச்சு என்பது ஒவ்வொரு உயிரோடும் கலந்து செல்கின்ற ஒன்றுதானே.

நாம் வெளியிடும் மூச்சை அடுத்தவர் ஒரு சூழலில் உள்ளே இழுக்கத் தானே வேண்டும். அதேபோல அடுத்தவர் வெளிவிடும் மூச்சை நாமும் உள்ளே இழுக்கத்தானே வேண்டும்; இல்லையில்லை என்று சொல்லி அதைப் பைகளில் அடைத்துக்கொண்டு நம்மால் வாழ முடியுமா? இயற்கையாகச் சுவாசம் இல்லை; செயற்கைச் சுவாசம் தான் அனைவருக்கும் என்றால், இந்தப் பூமியில் மனித இனம் நிலைத்திருக்குமா? என்பதுதான் கேள்வி. மூச்சுக்காற்று எனக்கு மட்டுமல்ல என்று சொல்லும் போது இவ்வுலகில் நாம் மனிதர்களுக்கு இடையே வேறுபாடு காண்பதும் தவறு தானே என்கிறது இயற்கை. மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் தானே!

தாவரங்கள், மரங்கள், விலங்குகள் போல மனிதர்களும் இப்பூமியின் பிள்ளைகள் தானே. அதனால்தான் ‘பாரதி’ “காக்கை, குருவி எங்கள் சாதி, கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று பரவசமாகிப் பாடினார். விலங்குகள் இல்லாமல் மனிதன் எப்படி வாழ்வான்? என்று கேட்கிறார் சியாட்டில். தொடர்ந்து, வசந்த காலத்து இலைகள் உதிர்வதைக் கேட்கவோ, பூச்சிகள் தங்கள் சிறகுகளை உரசிக் கொள்ளும் ஓசையை அறியவோ நகரங்களில் சாத்தியம் இல்லை என்கிறார் சியாட்டில்.

எவ்வளவு உணர்வுப் பூர்வமான வார்த்தைகள். விலங்கினங்கள் இல்லாமல் தாவரங்கள் இல்லை; தாவரங்கள் இல்லாமல் விலங்குகள் இல்லை; பூச்சிகள் இல்லாமல் மரங்களும் இல்லை; மரங்கள் இல்லாமல் பூச்சிகளும் இல்லை; இவைகள் எதுவுமே இல்லாமல் மனிதன் இல்லை. ஆனால் மனிதன் மட்டும் தன்னைத் தாவரங்களிடமிருந்தும், விலங்குகளிலிருந்தும் தனிமைப்படுத்தும் நோக்கில் அவற்றை கொன்றழிக்கின்றான். தாவரங்களும், விலங்குகளும் ஒன்றுக்கொன்று கொடுத்து உதவுகின்றன. ஆனால் இந்த வியாபாரத்தில் வரவு, செலவுக் கணக்குகள் இல்லை. இவற்றை மனிதனுக்கு இலவசமாகக் கொடுக்கின்றன. மனிதன் நன்றியே இல்லாமல் நச்சுக்காற்றைத் தருகின்றான்.

மண்ணை அழிக்கும் நெகிழிகளைப் போடுகின்றான். சியாட்டில் எடுத்த உடனே சொல்லும் வார்த்தைகள் “பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். வானத்தையோ, பூமியையோ விற்கவோ, வாங்கவோ எவ்வாறு இயலும்? அந்த எண்ணமே எங்களுக்குப் புதிரானது.” அதாவது இதுவரை நாங்கள் சிந்திக்காதது என்கிறார் சியாட்டில். நமக்கும், இயற்கைக்குமான உறவினை ஒரு கணம் இன்று சிந்தித்துப் பார்த்தால் இயற்கை தந்த வளங்களைக் கொண்டே அந்த இயற்கையைத் தினம் தினம் அழித்து வருகின்றோம். ஏழைகளின் உழைப்பைப் பெற்றுக்கொண்டே அவர்களை நசுக்கிவிடுகின்றோம். அப்பாவி மக்களின் ஓட்டுகள் மூலம் பதவி ெபற்றுக்கொண்டே அவர்களது வாழ்வாதாரமான விவசாயத்தை அழிக்கத் திட்டம் தீட்டுகின்றோம்.

இவை எல்லாம் மனிதன் தன் செயல்களில் முரண்பட்டு நிற்பதன் விளைவைத் தான் காட்டுகின்றது. கணியன் பூங்குன்றனார் தனது பாடலில், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்… என்று தொடங்கி இறுதியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே” என்று முடிக்கின்றார். அதாவது ஒருவரைப் பெரியவர் என்று நாங்கள் வியக்கவும் இல்லை; பிறிதொருவரை சிறியவர் என்று இகழ்வதை எண்ணிக்கூடப் பார்க்கவில்லை என்று பாடுகின்றார். இதன் மூலம் எல்லோரும் அவரவர் நிலையில் உயர்ந்தவரே என்ற சமத்துவத்தைப் பற்றி உணர்ந்து எழுதுகின்றார். அன்பே வழியாகும்! இந்தச் சமத்துவ மனநிலை, உள்ளச் சமநிலை பெற்று மற்றவர்களை ஏற்று வாழ்வது எவ்வாறு நிகழும்? என்பதற்குப் பதில் ‘அன்பே’ என்பதுதான் ஒரே வழி. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற தத்துவத்தை உலகமெங்கும் எடுத்துச் செல்ல நமக்கு உதவும் ஒரே ஆயுதம் ‘அன்பு’ தான். ஆம், அன்பிருக்கும் இடத்தில் அமைதி நிலவுகின்றது.

அன்பிருக்கும் இடத்தில் அறியாமையும், பகைமையும் மறைகின்றது. அன்பு உள்ளங்களை இணைக்கின்றது. வெறுப்பு மனிதனைப் பிளக்கின்றது. சுயநலம் மனிதனைச் சிதைக்கின்றது. ஆனால் ‘அன்பு’ இவையெல்லாம் ஓடிமறைந்திடுமாறு செய்து மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒரு இளைஞன் ஒரு வயதான பாட்டியின் பழக்கடையில் தினமும் வீட்டிற்கான பழங்களை வாங்கிச் செல்வான்.

ஆனால், ஒவ்வொரு நாளும் பழங்களை வாங்கிய பின்பு ஒரு பழத்தை எடுத்துப் பாட்டியிடம் கொடுத்துப் ‘பழம் புளிக்கிறதே’ என்று ருசி பார்க்கச் சொல்லுவான். பாட்டியும் அதைச் சுவைத்துவிட்டு ‘இனிப்பாகத்தானே இருக்கிறது’ என்று கூறுவார். ஆனால் இளைஞன் எதுவும் சொல்லாமல் போய்விடுவான். ஒரு நாள் இளைஞன் தன் மனைவியோடு பழக்கடைக்கு வந்தான். அன்றும் பழங்களை வாங்கிய பின்பு ஒரு பழத்தைப் பாட்டியிடம் கொடுத்து “புளிக்கிறதே” என்றான். பாட்டியும் சுவைத்துவிட்டு ‘இனிக்கிறதே’ என்று கூறினாள். இதைக் கவனித்த அவர் மனைவி வீடு திரும்பும் வழியில் “பழம் நன்றாகத்தான் இருக்கிறது; ஏன், பாவம் அந்தப் பாட்டியிடம் புளிக்கிறதாகக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள். அவன் தன் மனைவியிடம், “பழம் புளிக்கவில்லை என்று எனக்குத் தெரியும். பாவம், அந்தப் பாட்டி பழங்களை விற்கிறார். ஆனால் அவர் ஒரு பழத்தையும் சாப்பிடுவதில்லை.

எனவே, அவரிடம் தினமும் ஒரு பழத்தை இப்படிக் கொடுத்துச் சாப்பிடுமாறு செய்துவிடுகிறேன்” என்றானாம். இப்படிக் கணவனும், மனைவியும் பேசிக்கொண்டு சென்ற போது, பழக்கடையின் பாட்டிக்கு அடுத்த கடைக்காரர், “நான் தினமும் அந்த இளைஞனைப் பார்க்கிறேன். அவன் தினமும் உன்னைக் குறை கூறுகிறான். ஆனாலும் நீ அவனுக்கு வழக்கத்தைவிடக் கூடுதலாகவே பழங்களைக் கொடுக்கிறாயே, ஏன்?” என்று பாட்டியிடம் கேட்டார்.

பாட்டி அவரிடம், “அவன் என்னைக் குறை கூறவில்லை. குறை சொல்வது போல நடித்து என்னைத் தினமும் ஒரு பழமாவது சாப்பிட வைத்துவிடுகிறான். தினமும் என்னிடம் குறை கூறுபவன், என் கடைக்கே தினசரி வந்து பழங்கள் வாங்குவானா? அவன் என்மீது காட்டும் அன்பினைக் காணும் போது எனது தராசு அவன் பக்கம் அதிகப் பழங்களோடு சாய்ந்துவிடுகிறது” என்று கூறினாள். அடுத்த கடைக்காரருக்கு உண்மை புரிந்தது. உண்மையான அன்பு என்பது இப்படிப்பட்டதுதான்.

எதிர்பார்ப்பு இல்லாமல் ஒருவரை ஒருவர் நேசிப்பது என்பது எவ்வளவு சுகமானது. என் நாடு, என் மக்கள், என் இனம், என் மொழி, என் சாதி என்று நாம் நம்மையே பிளவுபடுத்திக் கொண்டு செல்லும் காலம் மறைந்து உலகிலுள்ள எல்லா மக்களும் ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகள் என்று எண்ண வேண்டும். ஆம், இந்தப் பூமித்தாயின் வயிற்றில் பிறந்துள்ள பிள்ளைகள் என்ற உணர்வு பெறவேண்டும்.

இந்த உணர்வைப் பெற இயற்கையோடு ஒன்ற வேண்டும். இயற்கையில் இணைந்து சங்கமிப்பதன் அடையாளமாக ‘அன்பு’ என்ற பண்பு எல்லோர் உள்ளத்திலும் உருவாக வேண்டும். இதை உணர்ந்து அன்பென்னும் ஒளியை உலகமெல்லாம் பரவச் செய்தால் எல்லா ஊரும் நமது ஊராக இருக்கும். எல்லோரும் நம் உறவினர்களாக இருப்பார்கள்.