சாலுமரத திம்மக்கா

எழுத்தாளர், முகில்

இயற்கையை அன்னை என்றுதான் நாம் அழைக்கிறோம். இது நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ‘இயற்கை அன்னையின்’ நிஜக்கதை.

கர்நாடகாவின் பெங்களூருக்கு அருகிலிருக்கும் ஹுளிகல் கிராமத்தைச் சேர்ந்த சாலுமரத திம்மக்கா, மிகச்சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். வறுமையுடனேயே வளர்ந்தவர். தொடர்ந்து பள்ளிக்குப் போகும் வாய்ப்பெல்லாம் வாய்க்கவில்லை. எனவே சிறுவயதிலேயே அங்கே இருந்த குவாரி ஒன்றில் கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

திம்மக்காவின் பதின்ம வயதில் அவருக்குத் திருமண ஏற்பாடு நடந்தது. சிக்கையா என்பவரே மாப்பிள்ளை. வயல்களுக்குக் கூலி வேலைக்குச் செல்லுவதோ அல்லது ஆடு, மாடுகளை மேய்ப்பதோதான் சிக்கையாவின் வேலை. திருமணத்துக்குப் பிறகு அவருடன் சேர்ந்து திம்மக்காவும் விவசாயக் கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

திருமணம் ஆகிப் பல வருடங்கள் உருண்டோடின. அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. கோயில், குளம், விரதம் என்று எதுவுமே பலன் கொடுக்கவில்லை. ஊரே தூற்றியது. குறிப்பாக திம்மக்காவை வார்த்தைகளால் குத்திக் கிழித்தனர். அதற்காக மனம் வெம்பி அழுதார். வசவுப் பேச்சுகள் திம்மக்காவைத் தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டின. ஆனால், யார் என்ன பேசினாலும் தன் கணவர் தன்னை விட்டுக்கொடுக்கவில்லை என்பது திம்மக்காவுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

சிறு வயதில் ஒருமுறை திம்மக்காவைப் பாம்பு கடித்தது. பிழைத்தது மறுபிழைப்பு. அப்போது பாம்பு கடித்ததன் பின்விளைவாகவே தனக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்று திம்மக்கா நம்பினார். கணவரது மாறாத பாசம் அவருக்குத் தெம்பூட்டியது. நமக்கென்று வாரிசு உருவாகவில்லை என்றால் என்ன. இந்த மண்ணுக்கென புதிய வாரிசுகளை உருவாக்குவோம் என்று இருவரும் முடிவெடுத்தனர். மரங்களை நட முடிவெடுத்தனர்.

திம்மக்கா முதன் முதலாக ஆலமரக்கன்று ஒன்றைத் தனது கிராமத்திலேயே நட்டார். அதற்கு தினமும் நீர் ஊற்றிப் பராமரித்தார். அது வேர்பிடித்தது. துளிர்விட்டு வளர ஆரம்பித்தது. திம்மக்காவுக்கு அளவிடா முடியா ஆனந்தம். பெற்ற பிள்ளை ஒன்று கண் முன்னே வளர்வது போலத்தான் அந்த ஆலமரக்கன்றைப் பார்த்துப் பார்த்து பராமரித்தார். அந்தக் கன்று தோளுக்கு மேலே வளர்ந்து, நிழல் தர ஆரம்பித்தபோது திம்மக்காவின் மனத்தில் மேலும் மேலும் ஆலமரக்கன்றுகளை நட வேண்டும் என்ற லட்சியம் வேரூன்றியது.

எதற்காக ஆலமரம்? இந்துக்களின் வழிபாட்டில் ஆல், அரசு, வேம்பு ஆகிய மூன்று மரங்களுக்கும் முக்கிய இடமுண்டு. ஆலமரமும் அரசமரமும் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்பது அறிவியல்பூர்வமாக ஆராயப்பட்டு வருகிறது. அதையேதான் முன்னோர்கள் இந்த மரங்களுக்கு மலட்டுத்தன்மையைப் போக்கும் சக்தி உண்டு என்று கூறினர். திம்மக்காவும் அந்த வார்த்தைகளை நம்பினார். எனவே ஆலமரக்கன்றுகளைக் கையில் எடுத்தார். வருங்காலத்தில் இந்த ஆலமரங்கள் தன் சமூகத்துக்கு உதவும் என்று நினைத்தார்.

திம்மாக்காவும் சிக்கையாவும் ஆலமரக் கன்றுகளை உருவாக்கினர். முதலில் பத்து ஆலமரக் கன்றுகளை நட்டனர். அடுத்த வருடத்தில் பதினைந்து. அதற்கடுத்த வருடத்தில் இருபது ஆலமரக்கன்றுகள்.

சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால், அவற்றை வளர்க்க அவர்கள் தினமும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டியதிருந்தது. மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் சிறு சிறு குட்டைகளை உருவாக்கினார்கள். அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கி வைத்தனர். கோடைகாலத்தில் அந்த நீரை மரங்களுக்கு ஊற்றிப் பயன்படுத்தினர். தண்ணீர்ப் பஞ்சம் மிகுந்து ஊரே வறண்டுபோன காலங்களும் வந்தன. குடிநீருக்காகச் சில மைல்கள் தள்ளிச் செல்ல வேண்டியதிருந்தது. அந்தக் கடினமான சூழலிலும் திம்மக்கா தளரவே இல்லை. குடத்துடன் நடந்தே சென்று நீர் எடுத்து வந்து மரக்கன்றுகளுக்கு ஊற்றினார். அதற்காகத் தினமும் பலமுறை, பல மைல்கள் நடக்க வேண்டியதிருந்தாலும் அவர் சலித்துக் கொள்ளவில்லை. சிக்கையாவும் தன் வேலைகளுக்கிடையில் உதவி செய்தார். ஆலமரக்கன்றுகள் நீரின்றி வாட அவர்கள் விடவே இல்லை. ஆம், அவை அவர்களது குழந்தைகள் அல்லவா!

ஒருமுறை தண்ணீர் எடுக்கச் சென்ற திம்மக்கா, உடைந்த குடத்துடனும், கை, கால்களில் ரத்தக் காயத்துடனும் வந்து நின்றார். ‘என்னாச்சு?’ என்று பதறிப்போய் சிக்கையா கேட்க, ஓவென்று அழுதார் திம்மக்கா. கீழே விழுந்து குடம் உடைந்ததற்காக அழவில்லை. ‘மரத்துக்கு ஊற்ற முடியாதபடி, ஒரு குடம் நீர் வீணாகப் போய்விட்டதே’ என்றுதான் கண்ணீர் சிந்தினார்.

ஏதாவது ஒரு கன்று வேர் பிடித்து வளர இயலாமல் பட்டுப்போனால் திம்மக்காவும் சிக்கையாவும் துடித்துப் போய்விடுவார்கள். யாராவது ஒருவர் அந்த மரக்கன்றுகளைச் சேதப்படுத்திவிட்டால் இருவரும் கொதித்து நிற்பார்கள். அவர்கள் நட்ட ஆலமரக்கன்று ஓரளவுக்கு வளர்ந்து நிற்கும் காலம் வரை அவற்றைப் பாதுகாப்பதுதான் இருவருக்குமான பெரிய சவாலாக இருந்தது. வயல்காட்டில் வேலை செய்த நேரம்போக, மீதி நேரத்தை ஆலமரங்களுக்காகவே செலவு செய்தார்கள். அன்புடன் அந்த மரங்களுடன் உட்கார்ந்து பேசவும் செய்தார்கள். ஆம், அவை கிளைகளசைத்துக் கதைகள் கேட்டன!

அவர்கள் நட்ட ஆலமரங்கள் சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக நிழல்பரப்பி நிற்பதைக் காணும்போது இருவருமே தங்கள் பிறவியின் அர்த்தத்தை உணர்ந்தார்கள். ஆம், எங்களது பிள்ளைகள் இந்த ஊருக்கே பலன் தருகின்றன என்று மகிழ்வோடு
கூறினார்கள்.

1991-ல் சிக்கையா இறந்து போனார். திம்மக்கா வருத்தப்பட்டு உட்காரவில்லை. துணைக்கு எங்கள் ஆலமரப் பிள்ளைகள் இருக்கின்றன என்று மேலும் ஆலமரக்கன்றுகளை நடும் பணியினைத் தொடர்ந்தார். பசுமை ஆர்வலர்கள் திம்மக்காவுக்கு உதவி செய்யத் தொடங்கினார்கள். சில அமைப்புகள் திம்மக்காவின் பசுமைப் பணியினைக் கௌரவித்து விருதுகள் வழங்கின. திம்மக்கா குறித்த செய்திகளை பத்திரிகைகள் வெளியிட்டன. பின் அரசும் அவரது பணியினை கௌரவித்தது. அந்த மரங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியை அரசே எடுத்துக்
கொண்டது.

ஹூளிகல் – கூடுர் நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் நாலு கிலோ மீட்டர் தொலைவுக்கு திம்மக்கா தன் கணவர் காலத்திலும், அதற்குப் பின் தனியாகவும் நட்டு வளர்த்த ஆலமரங்களின் உத்தேச எண்ணிக்கை 380. ஆம், சுமார் 80 ஆண்டுகால உழைப்பு அதன் பின் இருக்கிறது. அவை அந்தப் பிரதேசத்தையே குளுகுளுவென்று வைத்திருக்கின்றன. அந்தப்பகுதியின் காற்றின் தரம் அவ்வளவு அருமையாக இருக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை அந்தப் பிரதேச மக்கள் வாழ்வதற்கான ஆதாரமாக அந்த ஆலமரங்கள் விளங்குகின்றன. தவிர, ஒவ்வொரு ஆலமரத்திலும் நூற்றுக்கணக்கான பறவைகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

‘எங்கள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு தேவைப்பட்டது. நாங்கள் மரங்களை நட ஆரம்பித்தோம். அதன் மூலம் சமூகத்தில் ஓர் அங்கீகாரம் பெறலாம் என்று நினைத்தோம். இன்று அந்த மரங்கள் என்னை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கின்றன’ என்கிறார் திம்மக்கா.

சாலுமரத என்றால் வரிசையாக நிற்கும் மரங்கள் என்று அர்த்தம். சாலுமரத திம்மக்கா என்றுதான் கர்நாடக மக்களால் இவர் அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய மக்கள் இவரை ‘மரங்களின் தாய்’ என்று போற்றுகின்றனர். இந்திய அரசின் தேசியக் குடிமகன் விருது, ஹம்பி பல்கலைக்கழகம் வழங்கிய நடோஜா விருது, கர்நாடக கல்பவல்லி விருது, இந்திரா காந்தி விருது, காட்ஃப்ரே பிலிப் விருது உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்திய, சர்வதேச விருதுகளை திம்மக்கா பெற்றிருக்கிறார்.

2019-ல் பத்ம விருதும் திம்மக்காவுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றுக்கு Thimmakka’s Resources for Environmental Education என்று பெயரிடப்பட்டுள்ளது அவரது சேவைக்குக் கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரம். பிபிசி வெளியிட்ட உலகின் 100 மகத்தான சாதனைப் பெண்கள் பட்டியலில் திம்மக்காவும் இடம்பெற்றிருக்கிறார்.

தன் ஊருக்கு குடிநீர்த்தொட்டி அமைத்துக் கொடுத்திருக்கும் திம்மக்காவுக்கு இலவச மருத்துவமனை ஒன்றைக் கட்ட வேண்டும் என்ற கனவும் இருக்கிறது. இந்தியாவின் முக்கியமான சுற்றுச்சூழல் ஆர்வலராகத் திகழும் ஆலமரங்களின் அன்னையான திம்மக்காவின் தற்போதைய வயது 109.