டாகடர். ஜாண்.பி.நாயகம்

ஒரு பண்ணையார் தனது தோப்பில் வீடு ஒன்றைக் கட்ட முடிவுசெய்தார்.  சில பெரிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டியதிருந்தது. இரு மரம் வெட்டிகளை பணிக்கு அமர்த்தினார். காலையில் ஒன்பது மணிக்குப் பணி துவங்கியது.

ஒரு மரம் வெட்டி வந்த உடனே சுறுசுறுப்பாக மரம் வெட்டத் துவங்கினான். அடுத்தவனோ தனது கோடரியையும் ரம்பத்தையும் எடுத்து, எண்ணையிட்டு கூர் தீட்டத் துவங்கினான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இதிலேயே போயிற்று. பார்த்துக் கொண்டிருந்த பண்ணையாருக்கு எரிச்சல் வந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

மாலையில் இருவரும் வேலையை முடித்தபோது மொக்கையான ஆயுதங்களைக் கொண்டு வெட்டியவன் இரு மரங்களை மட்டுமே வெட்டி முடித்திருந்தான். கூர் தீட்டிய ஆயுதங்களால் வெட்டியவனோ நான்கு மரங்களை வெட்டி அகற்றியிருந்தான்.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன? எந்த ஒரு செயல் அல்லது தொழிலாக இருந்தாலும் அதற்கான கருவிகளை முறையாகப் பராமரித்தால் மட்டுமே விரைவாகவும் திறம்படவும் அந்தச் செயலை செய்து முடிக்க
முடியும்.

கல்விக்கான கருவி நமது மூளை.  இந்த மூளையை நன்கு பராமரித்து கூர் தீட்டினால் மட்டுமே கல்வியைத் திறம்படக் கற்க முடியும்.

மனித மூளை

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் படைப்புகளிலும் மிக மிக நுட்பமானது மனித மூளையே! நமது மூளையின் செயல்பாடுகளே நம்மைப் பிற விலங்குகளிலிருந்து உயர்வு படுத்துகிறது.

நமது கல்வி, அறிவு, ஞானம், குணநலன்கள், நினைவாற்றல், பேச்சு, செயல்கள் ஆகிய அனைத்திற்கும் மூளையே அடிப்படை.

நமது கபாலத்தின் உள்ளே பத்திரமாகப் பாதுகாக்கப்படும் இந்த மூளை குறித்த சில அடிப்படைத் தகவல்களை தெரிந்து கொள்வோமா?

எடை/ அளவு –

ஒரு சராசரி மனித மூளையின் எடை
1400 -– 1500 கிராம்கள் (1.4 Kg –- 1.5 Kg). பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளையின் எடை சுமார் 100 கிராம்கள் அதிகம்.

சராசரி ஆணின் மூளையின் அளவு –  1,274 cubic centimetres.

சராசரி பெண்ணின் மூளையின் அளவு – 1,131cubic centimetres.

இது நமது உடல் எடையில் கிட்டத்தட்ட இரண்டு சதவிகிதமாகும். ஆணின் மூளை எடையிலும் அளவிலும் பெரிதாக இருப்பதனால் ஆண் அறிவாளி என்று அர்த்தமில்லை. அறிவுக்கும் மூளையின் எடைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

உலகின் மிகப்பெரிய உயிரினமாகிய ஸ்பெர்ம் திமிங்கலத்தின் மூளையின் எடை சுமார் ஒன்பது கிலோ! ஆனால் மனிதனை விட அது அறிவுத் திறனில் கீழானது.

ஒரு குழந்தை பிறக்கும்போது மூளை முழு வளர்ச்சி அடைவதில்லை. பிறந்து ஒரு வருடத்திற்குள்,  எடை மூன்று மடங்காக உயர்கிறது. பதினெட்டு வயது வரையில் மூளையின் எடை படிப்படியாக உயர்கிறது. பதினெட்டு வயதிற்குமேல் மூளையின் எடை அதிகரிப்பதில்லை.

நாற்பது வயதிற்குமேல் மூளையின் எடை படிப்படியாகக் குறையத் துவங்குகிறது. இது சில கிராம்கள் என்ற அளவிலேயே இருக்கும்.

மூளைக்குத் தொடர்ந்து வேலை கொடுப்பவர்களுக்கு, – தொடர்ந்து புதுப் புது விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த எடைக் குறைவும் நிகழ்வதில்லை! கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் மூளைக்கு முழுநேர ஓய்வு கொடுத்துவிட்டவர்களுக்கு இந்த எடைக் குறைவு அதிகமாக இருக்கும்! மறதி நோய்கள் இவர்களை அதிகம் பாதிக்கும்.

திசு

நமது உடலின் உறுப்புகள் திசுக்களால் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு உறுப்பிலும் சில திசுக்கள் அதிகமாக இருக்கும். மூளை 60% கொழுப்பு (fat) திசுக்களால் ஆனது. நமது உடலில் உள்ள உறுப்புகளில் கொழுப்பு மிக அதிகமாக உள்ள உறுப்பு மூளைதான்!

கொழுப்புத் திசுக்களில் கொழுப்பு அமிலங்கள் சிறிய அளவிலும் நீர் பெருமளவிலும் இருக்கும்.

மூளையின் மொத்த எடையில் எழுபத்து ஐந்து சதவிகிதம் (75%) தண்ணீர்தான் உள்ளது! இதன் முக்கியத்துவம் என்ன என்பதைப் பின்னர் மூளைப் பராமரிப்பு குறித்துக் காணும்போது விளக்குகிறேன்.

சேமிப்புத் திறன் –

மூளையை ஒரு கணினிக்கு ஒப்பிடுவது வழக்கம். இதுவரையில் மனிதனால் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்களை விடவும் மனித மூளை பலமடங்கு திறமையானது.

மனித மூளையின் சேமிப்புத் திறன் கிட்டத்தட்ட 2,500,000கிகா பைட்ஸ் (gigabytes) என்று சில நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். ஐ போன் 7இன் (iPhone-7) சேமிப்புத் திறன் 256கிகா
பைட்ஸ்தான்!

ஆனால் இந்தக் கணக்கு தவறு என்பதே பெரும்பாலான நிபுணர்களின் கருத்தாக உள்ளது. நமது மூளையின் செயல் திறனில் சுமார் பத்து முதல் பதினைந்து சதவிகிதம் மட்டுமே வெளிப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்தக் கணக்கு உள்ளது.

இன்னமும் உபயோகப்படுத்தாத மீதமுள்ள செல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மூளையின் சேமிப்புத் திறன் கற்பனைக் கெட்டாத அளவில் இருக்கும்!

இரத்தவோட்டம் –

உடலின் எடையில் மூளை இரண்டு சதவிகிதமே –ஆனால் உடலில் உருவாக்கப்படும் சக்தியில் இருபது சதவிகிதம் மூளையினால் செலவிடப் படுகிறது! உடலில் மிக அதிக அளவில் இரத்த நாளங்கள் உள்ள உறுப்புகளில் மூளையும் ஓன்று.

மூளையிலுள்ளஇரத்த நாளங்களின் மொத்த நீளம் சுமார் 100,000 மைல்கள்! மூளையின் இரத்த வோட்டத்தில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அது மூளையையும் அந்தப் பகுதியால் இயக்கப்படும் உடலின் பாகங்களையும்
பாதிக்கும்.

அடுத்த இதழில் மூளையின் வெளி, உள் அமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து காணலாம். =

– தொடரும்