மதுரை. ஆர். கணேசன்

ஒரு புத்தகத்தின் பக்கங்கள் தானாக புரண்டு கொள்கிறது காரணம் யாரோ அந்தப் புத்தகத்தை எடுத்தவர்கள் இன்னும் படித்து முடிக்கப்பட வில்லையாம்..! அப்படிப் புத்தகங்களை வாசிக்கும்போது அதன் தாக்கங்கள் புத்தகங்களை சிலாகிக்க மட்டுமில்லாமல் சுவாசிக்கவும் தூண்டுகின்றன..!

“…உலகப் பதிப்புரிமை மற்றும் புத்தகத் திருநாள்…” ஏப்ரல்-23 –ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. “..வாசிப்பு..” எனும் மந்திரத்தை சொல்லித்தரும் ஒருநூலகத்தைத் தன்தோளில் சுமந்து கொள்ளும் தோழன்களாக எத்தனையோபேர் இருக்கிறார்கள். அது அவர்களது வீட்டில் புத்தக அறையாகக்கூட இருக்கலாம் அல்லது சமீப காலச் சலூன்கள் மற்றும் தங்கள் இருப்பிடங்களிலேயே “..நூலகமாக..” மாற்றியிருப்பார்கள்..!

அந்த வரிசையில் திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் வசிக்கும் தமிழக அரசு பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற க . பட்டாபிராமன் 75, தனது வீட்டில் இரண்டாவது மாடியில் “..பன்னாட்டுத் தமிழ் இதழியல் நூலகம் ..” என்ற பெயரில் நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

ஒரு சிறந்த பேச்சாளார், எழுத்தாளர் “..தமிழ் ஏடுகள் வழிகாட்டி..” உள்பட இது வரை 8 நூல்கள் எழுதியிருக்கிறார். தமிழக அரசில் சிறப்பாகப் பணியாற்றிய பட்டாபிராமனுக்கு “..அப்பழுக்கற்ற ஊழியர்..” என்கிற விருது வழங்கப்பட்டிருக்கி றது. அரிமா சங்க தலைவர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பொறுப்புக்கள், அத்துடன் அரிமா இயக்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கிறார். மேலும் “புத்தகர் விருது”, அண்மையில் ஒருவீடு ஒருநூலகம், “..தமிழ் இதழ் காப்புக் காவலர்..” போன்ற பொது இலக்கிய அமைப்புகள் மூலமாக 18 விருதுகள் மற்றும் அரிமா சங்கம் சார்பில் 90, விருதுகள் என்று விருதுப் பட்டியல் நீள்கிறது.

ஜே.சி., மற்றும் தொழிற் சங்கப் பணிகள், மற்றும் சமூதாயப்பணிகளில் முன்னின்று செயலாற்றுபவர். அரிமாவின் பல்வேறு மாவட்டங்களின் சார்பாக 2,35,000 மரக்கன்றுகள் நடுவதற்குக் காரணமான இவரது சமூதாயச் சேவைகள் மற் றவர்களுக்கு ஊக்கமூட்டுகிறது..!

மேலும் ஒருவரின் திறமையை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் பாராட்டி விழா நடத்துவதிலும் முதல் ஆளாக நிற்பதால் இவருக்கு “…பாராட்டுப் பட்டாபிராமன்..” என்ற அடைமொழிப் பெயரும் உண்டு..!

2019 ஆண்டில் தமிழக அரசால் அங்கீகரித்துள்ள இந்த நூலகத்தை மேலும் பாதுகாத்திட, பராமரித்திட பொது நூலகத்துறை சார்பாக 1,50,000 நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளாக புத்தகங்கள் சேமிக்கும் பழக்கம் கொண்ட பட்டாபிராமன் கிட்டத்திட்ட பழைய, புதிய, அறிய என்று அறுபதாயிரத்திற்கும் மேலான பத்திரிகைகள், புத்தகங்கள்
சேகரித்து வைத்திருக்கிறார். இவர் குடியிருக்கும் பகுதியில் “..நூலகவீடு..” என்றால்..? பொதுமக்கள் எல்லோர்க்கும் பிரசித்தம்..!

இந்த நூலகத்தில் உறுப்பினராவதற்கு கட்டணம் இல்லை..! “..வாசிப்பாளர்களை..” உருவாக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்களை உறுப்பினர்களாக மாற்றியிருக்கும் பட்டாபிராமன் ஒரு விபத்தின் காரணமாக நடக்கக் கொஞ்சம் சிரமப்பட்டாலும் நூலகத்திற்கு மட்டும் அடிக்கடி ஆர்வ மிகுதியால் மாடிப்படி ஏறுகிறார்…

இங்கு என்னென்ன புத்தகங்கள் இருக்கும்…? கதை, கவிதை, இசை, தமிழ் இலக்கியம், சுற்றுச்சூழல், தேசத்தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் வரலாறு, நகைச்சுவை, கணினி, பொது அறிவு, சுயமுன்னேற் றம், தன்னம்பிக்கை, மதம் சார்ந்த நூல்கள், சைவம், வைணவம், சமணம், மற்றும் பக்தி நூல்கள் என்று இங்கு பரந்தமனதாய் வீற்றிருக்கிறது.

இன்னும் ஆவணங்கள், நெசவு, தொழில்கள், நிறுவனங்கள், உணவு, போக்குவரத்து, நிதி, பங்குவர்த்தகம், பொறியியல், கட்டுமானம், பதிப்புத்துறை, மற்றும் நாளிதழ்கள், வாரம், மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இதழ்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் ஏற்றுமதி, பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த நூல்கள், மதநல்லிணக்கம், அரசியல் கட்சிகளின் இதழ்கள், ஆசிரியர் சங்க இதழ்கள், புலனாய்வு, கொள்கை விளக்கம், சிறுவர் இலக்கியம், மகளிர், மருத்துவம், நுண்கலைகள், போன்ற நூல்கள் தன்ஆயுளை வாசிப்பாளர்களின் சிந்தையில் விதைக்கிறது..!

மனித சமுதாயப் பிரச்சனைகளுக்கு மருந்தாகும் “..திருக்குறள்..” மற்றும் தமிழ், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருத நூல்கள் மற்றும் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, குவைத், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து வெளியாகின்ற 4,000 க்கும் மேலான தமிழ் நூல்கள் இருக்கின்றன.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் 1964ல் பத்திரிகைத்துறைக் கண்காட்சி ஏற்பாடு செய்து அதில் 650 பத்திரிகைகளை இடம் பெற செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..!

“..மரமின்றி மனிதனில்லை மனிதனின்றி மரம் இருக்கும் அதேபோலத்தான் புத்தகங்களும்…” எனப் பறைசாற்றும் க.பட்டாபிராமனிடம் பேசினோம்….,

“…என்னுடைய பால்ய வயது காலம்..எனது உறவினர் மளிகைக் கடைக்கு வரும் பழைய பேப்பர், புத்தகங்கள் படித்தேன்.அங்கிருந்து வாசிப்பின் சுவையை அறிந்து தொடர்ந்து புத்தகங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அப்பணி பல ஆண்டுகளாக இன்றும் தொடர்கிறது.

ஒருநூறு ஆண்டுகளுக்கும் மேலான பத்திரிகைகள் “..அத்தியாசச் சாதீன நற் போதகம்..” மற்றும் “..ஞானத்தூதன்..” பாரதியாரின் இந்தியா, திரு.வி.க.வின் தேசபக்தன், குடியரசு, லோகோபகாரி, ஆனந்தபோதினி போன்ற இதழ்கள் என்னிடம் உள்ளன.

நானும், எனது மனைவியும் நூலகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தோம் சில மாதங்களுக்கு முன்பு மனைவி காலமாகி விட்டதால் நான், பகுதி நேரமாக உதவியாளர், மற்றும் ஒரு வேலையாள் போட்டிருக்கிறேன்.,,நூலக உருவாக்கத்திற்கு 3 லட்சத்திற்கும் மேலான செலவு ஆனது..! அத்துடன் பிரதி மாதம் பராமரிப்புச் செலவு இருக்கிறது.

ஆரம்ப காலத்திலிருந்து பத்திரிகைகள் மற்றும் நூலகத்தின் மதிப்பு 10-லட்சத்திற்கும் மேல் இருக்கும்.அதைத்தவிர இன்றும் நாளிதழ், வாரம், மாதம் இதழ்கள் வாங்கிச் சேகரிக்கிறேன். அந்தக் காலத்திலேயே பத்திரிகை கண்காட்சி நடத்தியிருக்கிறேன். இடையில் தொய்வு ஏற்பட்டது.. மீண்டும் அடுத்தடுத்த ஊர்களில் நடத்த திட்டமிட்டிருக்கிறேன்.

நம்மில் எழுத்தாற்றல் திறன் எல்லோர்க்கும் வராது, அப்படிப்பட்டவர்களில் சிலர் எழுதும் புத்தகங்களே பொக்கிஷமாகும். நமது அறிவு விருத்திக்காகப் புத்தகங்கள் வாசிக்கணும். உலகின் மிகப்பெரிய அறிஞர்கள் யாவரும் தங்களுடைய கடைசிக் காலம் வரைக்கும் வாசிக்கும் பழக்கம்
இருந்திருக்கிறது.

இன்றைய சூழலில் தொலைக்காட்சி, ஊடகம், சமூக வலைத்தளங்கள் இடையே மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கம் எழுச்சி பெற வேண்டும். மாணவர் களே..! பாடப்புத்தகங்களில் இருப்பதைத் தவிர மற்ற புத்தகங்களிலும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.

ஆகவே வாசிப்புப் பழக்கம் இருந்தால் நீங்கள் எப்போதும் சோர்வடைவதில்லை..! பத்திரிகை படியுங்கள்..நூல்களை வாசியுங்கள் இவையாவும் உற்ற துணையாகவும் நல்ல நண்பனாகவும் நீடிக்கும்…” நூலகப் பணி செய்து வாசிப்பை நேசிக்க வைக்கும் திரு.பட்டாபிராமன் அவர்களை ‘ஆளுமைச் சிற்பி’ நன்றியோடு வாழ்த்துகின்றது. =