ஒரு சிறப்பு நேர்காணல்
நேர்காணல்: கவிஞர் திரு.ஏகலைவன் – 98429 74697
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர்.
ஒரு மனிதன் உழைத்துச் சேமித்த பொருட்களைக் கொண்டு, தன்னைச் சுற்றியுள்ள ஏழை எளிய மக்களும் வாழ்வில் உயர்வடைய வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தோடு அதனைக் கொடையாகக் கொடுத்து உதவுகையில் பெறக்கூடிய மகிழ்ச்சியென்பது அளப்பரியதாகத் திகழக்கூடியது என்று சொல்லலாம்.
ஏனென்றால், இல்லாதவருக்குக் கொடுப்பதால் கொடுப்பவரும், பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் பெருமகிழ்வடைவர். அவ்வாறில்லாமல் “எச்சில் கையால் காக்காய் கூட ஓட்டாதவர்” என்று சொல்லப்படுவதைப் போல ஈகைக்குணம் தொலைத்து பொருள் வளத்தைப் பாதுகாத்து, கடைசியில் ஒருநாள் கயவர்களிடம் இழந்து விடுவது மிகக் கொடியது. அப்படியொரு நிலை ஏற்படுவதற்கு முன்பாகத் தானாகவே தான தர்மங்கள் செய்து, தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்வித்து வாழலாமே என்பது தான் வள்ளுவப் பெருந்தகையின் வாக்காக அமைந்து நம்மை சிந்திக்கச் செய்கிறது.
எனினும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவப் பெருந்தகை இத்தகைய உயரிய கருத்தைச் சொல்லியிருந்தாலும் கூட, எத்தனை பேர் அதனை முழுமையாக உள்வாங்கி, தங்களால் இயன்றதை இந்தச் சமுதாயத்துக்குச் செய்கின்றனர் என்று பார்க்கிறபோது தான் மக்களின் யதார்த்த மனநிலையைப் புரிந்து கொள்ள
முடியும்.
ஏனெனில், கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்கிற ரசிகக் கண்மணிகளும், கோவிலில் நெய்விளக்கு ஏற்ற பொருளுதவி செய்யும் பக்தகோடிகளும் கூட, தன் சக மனிதன் பாடுபடும்போது, வெறுமனே பார்வையிட்டபடியே செல்லக்கூடிய பார்வையாளனாகத் திகழ்கிறான்.
ஆனால், அவர்களிலிருந்து மாறுபட்டு தன் வாழ்வை இயலாதவர்களைச் சுற்றியே அமைத்துக் கொண்டவராகத் திகழ்கிற மாற்றுத்திறனாளியான திரு.மணிகண்டன் அவர்களைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்ளத் தொடர்ந்து வாசியுங்கள். “வழிகாட்டி மணிகண்டன்” பொதுவாக மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்ளவும், போட்டிமிகு உலகியல் வாழ்வில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும், இந்தத் தடைகளையெல்லாம் கடந்து, தன்னை வளர்த்துக் கொண்டதோடு, தன்னிலும் கீழான நிலையுடைய சக மனிதர்களான மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர், அரசுப்பள்ளி மாணவர்கள் போன்றோரையும் கைதூக்கி விடும் விதமாக சமூக ஆர்வலராகச் செயல்படுபவர்.
மதுரை மாநகரின் பொதுப்பிரச்சினைகளை கையிலெடுத்து தீர்த்துவைக்கும் “வழிகாட்டி மனிதர்கள்’ எனும் சமூகநல அமைப்பின் நிறுவனராக செயலாற்றும் இவரின் வாழ்க்கை இதோ உங்கள் கரங்களில்…
- உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தினர் பற்றியும் சொல்லுங்கள்…?
என் பெயர் கா.மணிகண்டன். அப்பா பெயர் கு. காசி விஸ்வநாதன். அம்மா பெயர் கா.கமலா. 1981ல் பிறந்த எனக்கு தற்போது முப்பத்தெட்டு வயதாகிறது. எனக்கு ஒரு அண்ணனும், ஒரு அக்காவும் உள்ளனர். சிறுவயதில் இருந்தே என்னை மிகவும் செல்லமாக அன்பை அள்ளிக் கொடுத்து வளர்த்தனர். எனது பன்னிரண்டாம் வயதில் அப்பா காலமானார். அதன்பின்னர் எனது அண்ணன் என்னை நல்லபடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது வரை அவரும், எனது அண்ணி மற்றும் அவர்களின் இரண்டு மகன்களும் எனது பொதுநலப் பணிகளுக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருந்து வருகின்றனர். அம்மா எனக்கான உணவுத் தேவைகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார். எனது அக்காவும், மாமாவும் என் மீது மிகுந்த அன்பு கொண்டு எனது செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.
- உங்களுக்கு உடற்குறை எந்த வயதில், எப்படி ஏற்பட்டது? அதன் விளைவாக நீங்கள் அடைந்த நிலை பற்றி சொல்லுங்கள்? உங்கள் கல்வி நிலை பற்றிய விவரங்களை வாசகர்களோடு பகிர்ந்து
கொள்ளுங்களேன்…
நான் பிறந்த உடனேயே எனது கால்கள் மாறுபட்டு இருப்பதைக் கண்டறிந்தனர். எனது தந்தையார் இருந்தவரை எனது கால்களை குணப்படுத்த பல மருத்துவர்களிடம் முயற்சித்தார். அச்சமயத்தில் பல்வேறு அறுவைச் சிகிச்சைகளும் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து எனது அம்மாவும் பலதரப்பட்ட மருத்துவ முறைகளைக் கையாளும் மருத்துவர்களிடம் என்னைத் தூக்கிச் சென்றார். பின்னர் எனது அண்ணனும் ஓமியோபதி உட்பட சில மருத்துவர்களை அணுகினார்.
ஆனாலும், இவை ஏதும் பலனளிக்காத நிலையில் உடற்பயிற்சி மருத்துவரின் (பிசியோதெரபி) பயிற்சியே ஊன்றுகோல் வைத்து நடக்க உதவியது. சிறுவயதில் நன்றாகப் படிக்கக்கூடியவன் என்பதால், பள்ளி நேரத்திற்கு இடையில், எனது அம்மா அருகில் உள்ள மருத்துவமனை அழைத்துச் சென்று உடற்பயிற்சி கொடுக்க பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு அனுமதி வழங்கியிருந்தனர்.
எனினும், வளர வளர வெளியிடங்களில் பல மனிதர்களின் கேலி கிண்டலுக்கும், பரிதாபங்களுக்கும் ஆளான சூழலில் மன உளைச்சலால், படிப்பின் மீது கவனம் சிதறி பத்தாம் வகுப்பு தோல்வியோடு என் கல்வி முயற்சிகள் முடிவுக்கு வந்தன.
- “வழிகாட்டி மனிதர்கள்” என்கிற சமுதாய நலன் நாடும் தன்னார்வ தொண்டமைப்பின் நிறுவனராக இருக்கிறீர்கள். எப்படி, எப்போது வந்தது சமூகப்பணி குறித்த ஆர்வம்?
பள்ளிப் படிப்பின் தோல்வியால் கூட்டுக் குடும்ப நிறுவனத்தை வந்தடைந்தேன். தொடர்ந்து என் மீதான பரிதாபங்கள் என்னை பாடாய்ப்படுத்திய நிலையில் கணினியைக் கற்றேன். கணினியில் அடிப்படை மட்டுமே கற்றாலும், அதிலும் எனது ஈடுபாட்டால் ஆற்றலை வளர்த்துக் கொண்டேன். அந்த திறமைகளை நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும், வளர்ச்சிக்கும் பயன்படுத்தினேன்.
இந்த நிலையில் ஏற்பட்ட என் வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் நான் செயலற்ற மனிதனாக நடத்தப்பட்டது என் மனதில் உச்சகட்ட துன்பத்தை ஏற்படுத்தியது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்குப் பிறகு, என்னை செயலற்ற மனிதனாகப் பார்த்தவர்கள் கண் முன்னே சாதனை மனிதனாக உருவெடுக்க முடிவு செய்தேன்.
சமூகத்தின் பார்வையே ஒவ்வொரு தனி மனிதனின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதாக உணர்ந்தேன். நமது செயல்பாடுகள் நம்மையும் அடையாளப்படுத்த வேண்டும். அதே சமயம் சமூகத்தின் பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். பலருக்கும் பயன்பட்டு வாழ வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான சரியான வழியைத் தேர்வு செய்து சமூக ஆர்வலராக உருவெடுத்தேன். அதன் தொடர்ச்சியாகப் பல வரலாற்று வழிகாட்டிகளின் வழியில் எனக்கான தனித்துவத்தோடு பொதுநலன் சார்ந்து சேவையாற்றும் வகையில், “வழிகாட்டி மனிதர்கள்” அறக்கட்டளையைத் தொடங்கினேன்.
- வழிகாட்டி மனிதர்கள் அமைப்பின் சார்பில் இதுவரை செய்துள்ள சமூகப்பணிகள் பற்றி…? பயனாளிகளின் தோராயமான எண்ணிக்கையை-த் தர இயலுமா? என்னென்ன விதமான பயன்பாடுகளை அடைந்துள்ளனர்?
வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை மூலம் பொது இடங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை சீரமைப்பு, கழிவு நீர் கசிவு, சுகாதாரத் தேவைகள், குடிநீர் வீணாவது தடுப்பு, பகலில் மின்சார விரயம் போன்ற பல்வேறு பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் உட்பட பல அரசு அதிகாரிகளுக்கு நேரிலும், இணைய தளம் மூலமும் மனுக்களை வழங்கியிருக்கிறோம். அந்த முயற்சிகளில் பலவற்றில் சிறப்பான தீர்வுகள் கிடைத்துள்ளன.
வைகை நதியின் சீரமைப்புக்காகவும், அதில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும், சுற்றுச்சுவர் எழுப்பவும் பல முறை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் அவர்களுக்கான உணவு, உடை போன்றவை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு பொது இடங்களில் நிறைய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பசுமைப் பணிகளில் ஈடுபடும் பல்வேறு அமைப்புகளுக்கு மரக்கன்றுகளும், மண்வெட்டி, மண்தட்டு போன்றவையும் தந்து ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது.
பல அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கணினி மற்றும் சிறப்புத்திறன் வகுப்புகளுக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை ஊக்கப்படுத்தி, பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல அரசுப் பள்ளிகளில் மாணவ சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளில் மக்கள் நலனுக்காகச் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்கப்படுத்தி, பாராட்டு விழா நடத்திச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் நலன் சார்ந்து பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து பல விழிப்புணர்வுக் கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் சுயமான வாழ்வாதாரம் பெற ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நமது அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் முயற்சிகளால் பலனடைந்தோர் ஏராளம்.
- பொது இடங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக கோரிக்கை மனுக்களை அனுப்புவதாகச் சொல்லியிருந்தீர்கள்… இதுபோன்ற சமூகச் செயல்களில் பொதுமக்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
மக்கள் பொது இடங்களில் அவர்களின் பார்வையில் தென்படக்கூடிய குறைகளைப் பற்றி, “அப்படி இருக்க வேண்டும். இப்படி இருக்க வேண்டும்…’’ என்று தங்களுக்குத் தாங்களே நினைத்துக் கொள்வதும், அருகில் இருப்பவரிடம் குறை பேசுவதும் மட்டுமே வாடிக்கையாக
உள்ளது .
அதை விடுத்து அதை சரி செய்ய அரசு நிர்வாகத்தின் மூலம் நாம் முயற்சிக்க வேண்டும் என்கிற எண்ணம் குறைவாகவே இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இன்றைய நவீன காலகட்டத்தில் நம்மிடமுள்ள அலைபேசியில் சாலை சீரமைப்பு, கழிவுநீர் கசிவு, குடிநீர் வீணாவது, மின்சாரம் வீணாவது உள்ளிட்டவற்றை படம்பிடித்து, தங்கள் பகுதி அரசு நிர்வாகம் சார்ந்த எண்களை தெரிந்து வைத்துக்கொண்டு, அவற்றுக்கு அனுப்பினால் அதற்கான உடனடி அல்லது குறிப்பிட்ட காலத்தில் தீர்வுகள் கிடைப்பது உறுதி.
மேலும் தகுந்த அலைபேசி எண் கிடைக்காத பட்சத்தில் WWW.GDP.TN.GOV.IN என்கிற அரசு இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பகுதியையும், எந்தத் துறைக்கான கோரிக்கை என்பதையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தேர்வு செய்து டைப் செய்து அனுப்பினால், குறிப்பிட்ட சில நாட்களில் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, குறைகள் சரிசெய்யப்பட்டு, உரியவருக்கு அலைபேசியில் தெரிவிக்கப்படும்.
எனவே, இதுபோன்ற பொதுநலன் சார்ந்த முயற்சிகளைச் செய்வதில் பொதுமக்களும் முனைப்பு காண்பிக்கலாம் என்பது
ஆலோசனை.
- சமூகப்பணியில் ஈடுபடுபவர்கள் அங்கீகாரங்களை எதிர்பார்த்து ஈடுபடுவதில்லை என்பது உண்மைதான். எனினும், இந்தச் சமுதாயம் உங்களுக்கு வழங்கியுள்ள அங்கீகாரங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
நமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் வகையில் புதுச்சேரி உட்பட தமிழகத்தின்
பல்வேறு ஊர்களில் பல அமைப்புகள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் இளைய தேசம் அமைப்பின் “சிறந்த தன்னம்பிக்கையாளர் விருது’, சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் “சேவைச் செம்மல் விருது”, JCIUUNIOR CHAMBER INTERNATIONAL வழங்கிய “Outstanding Young Person விருது”, பாரதி யுவகேந்திரா அமைப்பின் “சேவா ரத்னா விருது” உட்பட மேலும் பல விருதுகள்
வழங்கப்பட்டுள்ளன.
இவையனைத்தையும் விட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எனது நற்பணிகளைத் தொடர்ந்து முகநூலில் பார்த்து வரும் பல இளைஞர்களில் இருபதுக்கும் அதிகமானோர் பல நேரங்களில் என்னைத் தொடர்பு கொண்டு, “வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த நான் உங்கள் செயல்பாடுகளைப் பார்த்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். மனம் மிகவும் உற்சாகமாக இருக்கிறது’’ என்று தெரிவிக்கின்றனர். இதனையே நான் பெற்ற மிகப் பெரிய விருதாக உணர்கிறேன்.
- ஒரு சமூக அக்கறையாளராக உங்களிடம் ஒரு கேள்வி. சமீபகாலமாக உறவுகளால் கைவிடப்படும் முதியோரின் எண்ணிக்கை மிகுதியையும், அதன் நெருக்கடியையும் இந்தச் சமுதாயம் சந்திக்கிறது. இந்த சங்கடமான சூழலைக் கடந்து, இளைய சமுதாயம் தன் பொறுப்பையுணரக்கூடிய நிலை எப்போது உருவாகுமென நினைக்கிறீர்கள்?
உண்மைதான். முதியோர்கள் கைவிடப்படுவது மற்றும் அவமதிக்கப்படுவது போன்ற காரணங்களால் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக நிரம்பி வருகின்றன. இளைஞர்களின் அவசர உலகமாக தற்போதைய சூழல் மாறி வருகிறது என்பதே இதற்குக் காரணமாகிறது.
மேலும் நவீனம், தொழில்நுட்பம் போன்ற வசதிகளால் உறவுகளில் நெருங்கிய மன பரிமாற்றங்கள் இல்லாத சூழலில்
முதியோர்களை அலட்சியப்படுத்தும் போக்கு மேலும் தீவிரமாக உள்ளது. முதியோர் இல்லங்களை அடிக்கடிப் பார்வையிட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை என்னால் முடிந்த வரையில் செய்து கொடுத்து, அவர்களோடு உரையாடி நேரம் கழிப்பவன் நான். அந்த வகையில் அவர்களின் துயரங்களையும், எண்ணவோட்டங்களையும் என்னால் ஆழ்ந்து
உணரமுடிகிறது.
இன்றைய இளைஞர்களே நாளைய முதியோர்கள் ஆவார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களோடு உறவை நெருக்கமாக்கிக் கொண்டு தங்கள் வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டிகளாக அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
- பொதுவாக சமுதாயப்பணி என்பது பல்வேறு சவால்களைக் கொண்ட பணி. அந்தப் பணியில் நாம் நல்லதையே செய்தாலும், திட்டுவதற்கென்று ஒரு கூட்டம் வரும்… களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டிய நிலையேற்படும். அப்படியான சூழல்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
உண்மைதான். “உனக்கு எதற்கு இந்த வேலை?” என்று சொன்னவர்களே அதிகம். தொடக்கத்தில் நான் பொது இடங்களில் அடிப்படைத் தேவைகளுக்காக மனுக்களை அனுப்பிய போது வீட்டில் அனைவரும் பயந்து தொடர்ந்து எச்சரித்தனர். பின்னர் அதன் மூலமாக பல்வேறு பிரச்சனைகளில் தீர்வுகள் கிடைத்தபோது சமாதானம் அடைந்தனர்.
அதேபோல முதியோர் நலன் உட்பட பல நற்பணிகளில் ஈடுபாடு கொண்டதால், அதன் மூலம் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றதும் முழுமையாக ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே வேளையில் ஆரம்பத்தில் குறை சொல்லலும், கேலியும் செய்த மற்றவர்கள் இன்று பார்க்கும் இடமெல்லாம் பெருமையாகப் பேசுகின்றனர். அதிலும் அவர்கள் பகுதிகளில் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளைக்கூட என் மூலம் மனுவாக அனுப்பச் சொல்வதை நினைக்கையில் கொஞ்சம் வேடிக்கையாகத்தான்
இருக்கிறது.
- தென்மாவட்டங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளிடம் அரசின் உதவிகள் குறித்து எந்தளவு விழிப்புணர்வு உள்ளதாக நினைக்கிறீர்கள்?
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின்
சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. ஆனால், பல மாற்றுத்திறனாளிகள் மாத உதவித்தொகை பெறுவதை மட்டுமே அவர்களுக்கான அரசுதவியாக நினைக்கின்றனர். இதைத் தவிர அவர்களுக்கான உபகரணங்கள் உட்பட பல்வேறு சலுகைகள் பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது. எனவே, அந்தத் தெளிவு இன்னும் மிகுதியாக வளரவேண்டும் என்பது என்
ஆலோசனை.
மேலும், தற்போது வரை பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக வந்து செல்லும் வகையிலான சறுக்குப் பாதைகள் அமைப்பது பற்றிய செயல்பாடுகளும் குறைவாகவே உள்ளது. எனவே, வழிகாட்டி மனிதர்கள் அமைப்பின் சார்பில் அதற்கான கோரிக்கைகளையும் அரசிடம் தொடர்ந்து செய்து வருகிறோம். இத்தகைய விஷயங்களில் சக மாற்றுத்திறனாளிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பது என்
ஆலோசனை.
- நட்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அவசியமானது. அந்த வகையில் உங்கள் நண்பர்கள் பற்றியும், சமூகப் பணியில் அவர்களின் துணையிருப்பு பற்றியும் சொல்லுங்கள்….
நட்பை ஏற்படுத்திக் கொள்வது எனக்கு மிகவும் பிடித்த அணுகுமுறை. எனது துவக்கப்பள்ளி நண்பன் பாலாஜியோடு முப்பது ஆண்டுகளுக்கு மேல் கடந்து இன்று வரை நட்பில் பயணிப்பது எனக்குக் கிடைத்த வரம் என்றே நினைக்கிறேன். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பனாக மட்டுமல்ல பல நேரங்களில் நல்ல வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில தினங்கள் அவரோடு செல்லும் பயணங்களே என் எண்ணங்களை அவ்வப்போது
புதுப்பிக்கிறது.
மேலும், சமூக ஆர்வலராக பயணிக்கும் போது பொதுநலன் சார்ந்த பல நண்பர்களின் அறிமுகம் உலகின் மீதான பார்வையை விரிவுப்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு சிலர் தோளோடு தோள் நின்று பொதுத் தொண்டில் ஈடுபடும்போது நமது உற்சாகம் அதிகரிக்கிறது. அந்தவகையில் நட்பைப் பரிபூரணமாக உணர்ந்தவனாக சொல்கிறேன்… ஒவ்வொரு மனிதனுக்கும் நட்பு மிக அவசியமானது.
- இந்த சமூகப் பணிகளுக்கான பொருளாதாரத் தேவைகளை எப்படி ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்?
சமூகப் பணிகளுக்காக நான் யாரிடமும் இதுவரை தேடிச் சென்று நன்கொடை கேட்டதில்லை. மிகப் பெரும்பாலும் எனது சுய வருமான சேமிப்பு மூலமாகவே நற்பணிகள் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் எனது நற்பணிகளைத் தொடர்ந்து பார்த்து வரும் நண்பர்களும், உறவினர்களும் தாங்களாகவே முன்வந்து நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.
அவர்களைப் பொருத்தவரை பொது நலனில் அவர்களால் நேரடியாக செயலாற்ற முடியாத சூழலில் நம் மூலமாக அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைப்பதால் அதனை ஏற்றுக் கொள்கிறேன். அதேபோல முக்கியமான நற்பணிகளில் அவர்களின் பெயர்களையும் வெளியிட்டு நன்றி தெரிவிக்கிறேன்.
- இன்றைய இளைய தலைமுறைக்கு உங்கள் ஆலோசனைகள்?
நமக்கான தேவை எதுவோ அதுவே சக மனிதர்கள் அனைவருக்குமானது என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டாலே போதுமானது … ஒவ்வொரு இளைஞனுக்கும் மிகச் சிறந்த எதிர்காலம் உண்டாகும் என்று நம்புகிறேன். அதுமட்டுமின்றி அவர்களால் மற்றவர்களுக்கும் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர முடியும்.
அந்த வகையில் எனது எதிர்காலத் திட்டமாக பொது நலன் சார்ந்த சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கான நல்ல வழிகாட்டுதலைக் கொடுத்து மனிதமும், இயற்கையும் செழிக்க நமது பங்களிப்பாக வழிகாட்ட வேண்டும் என்பதையே எண்ணியிருக்கிறேன். மாண்புமிக்க செயல்களைச் செய்து நற்தொண்டாற்றும் திரு.வழிகாட்டி மணிகண்டன் அவர்களை ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழ் மனமார வாழ்த்துகின்றது. =
திரு.மணிகண்டன்
அவர்களை வாழ்த்திட,
கைபேசி – 97916 55104