முனைவர். திருக்குறள். பா. தாமோதரன்

இன்றைய உலகியல் சூழலில், பலவித நோய்த்தாக்க அச்சங்கள் மனிதர்களை நசித்துக் கொண்டிருப்பதை அறிந்து அறிவியல் உலகமும், அற உலகமும் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கின்றன. ‘எதனைத் தின்றால் பித்தம் தீரும்?’ என்று பலவித சோதனைகளை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான மருத்துவவியலார் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

சீனாவில் ேவர்க்கொண்ட இக்கொடிய வைரஸ் இன்று இத்தாலி, செர்மனி நமது இந்தியா என 200 நாடுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செய்து மனித உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றது. “நோய்நாடி நோய்முதல் நாடி” என்ற குறள்வழி நோய்க்கான மூலத்தை ஆய்ந்த போதும், அதுதணிக்கும் “வாய்நாடி” என்ற தீர்க்கும் வழிமுறைகளாவன கிட்டுவதற்கு அரியவொன்றாக உள்ளது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்களையும் மூத்த வயதினரையும் இக்கொடிய வைரஸ் அதிகமாகத் தாக்குவதாகப் புள்ளிவிவரங்கள் உறுதிபடுத்துகின்றன.

அதிகமாக இவ்வைரசால் தாக்குண்ட சீன நாடு, இந்நோய்க்கான அறிகுறிகளைத் துல்லியமாகப் பட்டியலிட்டு இன்று உலகப் பார்வைக்கும் விழிப்புணர்வுக்கும் வகைசெய்துள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா, சீன நாடு மிகத் தாமதமாக இவ்வைரசின் தாக்கத்தை வெளிப்படுத்தியதே, பெரும் சீரழிவுகளுக்குக் காரணமாக உள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வைரசின் தாக்கத்தை 3 மாதங்களுக்கு முன்னரே வெளிப்படுத்தியிருந்தால் இத்தனைப் பரவல்களும், உயிர்ச்சேதங்களும் நிகழ்ந்திருக்காது என்கிறது. அமெரிக்காவின் இவ்வெளிப்பாட்டின் உண்மைத் தன்மையை எவரும் அறியோம். ஆனால் மனிதகுலம் எத்தகைய உயர்விலும், அறிவியல் உச்சத்திலும், எந்நேரத்திலும், எச்சமயத்திலும், எந்நிலையிலும், எதனையும் அலட்சியப்படுத்தாது. உருவுகண்டு எள்ளாது, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற செய்தி சுனாமித் தாக்கத்திற்குப்பின் மீண்டுமொருமுறை உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.

“இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு” (குறள் 531)

கொடிய சினத்தினைவிட, மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் போது, செய்யக்கூடியனவற்றை முன்கூட்டியே செய்யாது அலட்சியமாயிருப்பது, பன்மடங்குத் தீமையைத் தப்பாது விளைக்கும் என எச்சரிக்கின்றார் திருவள்ளுவர்.

உலகம் எத்தகு சூழலிலும்,

  • ஒவ்வொரு நிகழ்வினையும் கூர்ந்து நோக்க வேண்டும் (Indepth observance in every untoward incidents).
  • அதற்கான தக்க காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் (to unearth the cause of the problems).
  • எங்கிருந்து உருவாக்கம் பெற்றுள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும் (to ascertain the origin of the problem).
  • எவ்வெவ்வழிகளில் எதிர்ெகாள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் (to enunciate appropriate ways to face the problems).
  • உரியவர்களின் உதவியை எவ்விதத் தன்முனைப்பும் இன்றி நாட வேண்டும் (to seek the facilitation from all quarters without egoistic attitude).
  • மனிதன் மட்டுமின்றி மண்ணுயிர்களும் போற்றப்பட வேண்டும் என்ற உயர்நலத்தில் உறுதிகொள்ள வேண்டும் (Not only humans, all the beings on the earth planet to be treated in earnest ways).
  • உலகிலுள்ள அனைத்து வேற்றுமைகளையும் கடந்து, எந்த நாட்டில் இழப்புகள் நேர்ந்தாலும் உடன் உதவக்கூடிய பண்பாட்டுணர்வுடன் உலகினர் முனைய வேண்டும் (Forgetting all the differences, the world community with the gracious heart must strive to resolve the loses and facilitate the afflicted countries).

மேற்குறித்த பொருண்மைகளைச் செயலாக்கும்போது, உலகமே ஒரு குடும்பமாகத் திகழ்ந்து எதனையும் எதிர்கொள்ளும் ஆற்றலை இயல்பாகப் பெற்றிடும். ஆனால், இன்று நம்மிடையே தடை உத்தரவு என்றதும், உடனே பாய்ந்து சென்று கடையிலே உள்ள பெரும்பாலான பொருட்களைத் தேவையின்றியும் வாங்கிக் குவித்து, பின்னர் அதனை எவருக்கும் பயனின்றி குப்பையில் போடும் குன்றிய மனப்பான்மை அதிகமாகவே உள்ளது. தாங்களே துய்க்க வேண்டும் என்ற தன்னல எண்ணங்களே மனிதனை எல்லா நிலையிலும் துன்பத்திற்கு உள்ளாக்குகிறது என்ற அழுத்தமான வாழ்வியலை புரிந்து கொண்டவருக்கு என்றும் நிம்மதியின்றி துன்பமில்லை.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ (குறள் 322) என்ற உலக வாழ்க்கையின் அறநிலை சமனியத்தை தெளிவுறச் சொன்னவர் திருவள்ளுவர். மனித குலம் தாங்களே இப்பூமியின் வளங்களை நுகரவேண்டும் என்ற பேரவாவில் செயல்படுவதாலேயே இயற்கையின் சீற்றத்திற்கும், பலவித புதிய நோய்வகைத் தாக்கங்களிற்கும் ஆளாவது கண்கூடாக உள்ளது. எனவே,

“இன்பம் இடையறாது ஈண்டும் அவாவெனும்
துன்பத்துள் துன்பம் கெடின்” (குறள் 369)

என்ற பொதுமறையின் செய்தக்க  விழுமியங்களை (performing imperative values) வாழ்வியலாக்கும் போது,  தான்மட்டுமே வாழப்பிறந்தவன் என்ற பேரவா விலக்குப் பெற்று, இயற்கையின் துயரின்றி வாழக்கூடிய மாறாத இன்பம் இயல்புறும். மேலும் பிற உயிர்களைப் போற்றி வாழும் மனப்பாங்கு பண்பட்டிருக்கும் போது, எவரும் தத்தம் உயிர்களுக்காக அச்சப்படக்கூடிய பேதைமையுணர்வானது அறவே இல்லாதொழியும்.

எனவே மண்ணுயிர்களையும் போற்றி, இயற்கையோடு இயன்றளவு இயைந்து வாழக்கூடிய கடப்பாடுகளை உறுதிக்கோட்பாடுகளாக மதித்துப் போற்ற முற்பட வேண்டும். இவ்வண்ணம் பல்லுயிர் ஓம்பும் கோட்பாடுகளை அனைவரும் மேற்கொள்ளும்போது, எதிர்பாராது ‘நெஞ்சு அதிர’ தாக்கக்கூடிய எவ்வகைத் துன்பங்களும் மனிதகுலத்திற்கு அறவே இராது என்று உறுதியாகக் கொள்ளலாம்.