தன்னம்பிக்கைத் தொடர்-3
சமூகப் பற்றாளன் ஞானசித்தன்
வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன.
வெற்றியாளர்கள் எந்த வேலையை கொடுத்தாலும் சரி அவர்கள் அலுப்பும் சலிப்பும் சிறிதும் கொள்ளாமல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பதற்காக தேனியைப்போல மிகவும் சுறுசுறுப்போடு செயல்படுவார்கள். ஆனால், தோல்வியாளர்களோ எந்த வேலையைக் கொடுத்தாலும் சரி உடனே அலுப்பும் சலிப்பும் கொள்வார்கள்.
சோம்பலைத் துணைக்கு வைத்திருப்பார்கள். வேண்டா வெறுப்பாக விரக்தி மனப்பான்மையோடு செயல்படுவார்கள். வெற்றியைப்பற்றி எள்ளளவும் கவலைப் படமாட்டார்கள் .
யாராவது கேள்வி கேட்டால் அது சரியில்லை, இது சரியில்லை, நேரம் சரியில்லை, செல்வாக்கு இல்லை, உதவி செய்வதற்கு யாருமில்லை, என்னை தூக்கிவிட யாருமே முன்வரவில்லை, கையில் பணமில்லை, பிறரிடம் சென்று நிற்பதற்கு மனமில்லை, வசதியில்லை, வாய்பில்லை என்று ஏதாவது ஒரு காரணத்தை அல்லது அதற்கான பதிலைத் தயாராக வைத்திருப்பார்கள்.
எனவே இக்கட்டுரையை படிக்கும் நீங்களும்
வெற்றியாளராக வேண்டுமானால் வாழ்வில் சாதித்த சரித்திரம் படைத்த சாதனையாளர்களின் நெருக்கடியான சூழ்நிலைகளை, இக்கட்டான தருணங்களை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல சங்கடமான தருணங்களை, இக்கட்டான நேரங்களை, அசிங்கங்களை, அவமானங்களை, இச்சமூகத்தின் ஏளனங்களை, உதாசீனங்களை கடந்துதான் வெற்றியென்ற கனியை பறித்தார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அந்த வகையில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்வில் அவரது இளம்வயதில் நிகழ்ந்த கசப்பான தருணம் பின்வருமாறு…
செட்டி நாட்டிலிருந்து சினிமாக் கனவுகளுடன் பதினாலு வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர்.
அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார் கவிஞர். நள்ளிரவு, போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது.
காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினாலு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.
“”படு… படுக்கணும்னா நாலணா குடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருந்திருக்கிறார் கண்ணதாசன். அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி’ என்ற சொந்தப் படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.
நள்ளிரவு ஷூட்டிங். ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வரவேண்டும். ஏழு கார்களை நிற்கவைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர், பிள்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் இன்று என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.
எங்கு அவமதிக்கப்பட்டாரோ, அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்… இது புரிந்தால் வெற்றி நிச்சயம்…
அப்துல் கலாம் அய்யா கூறியது போல கசப்பான தருணங்கள்தான் மனிதனின் இனிப்பான வாழ்க்கைக்கு அடித்தளம் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்….
அய்யன் திருவள்ளுவர் கூறிய உள்ளுவதெல்லாம் உள்வுள்ளல் என்பதைக் கவியரசு கண்ணதாசன் அவர்கள் மனதில் வைத்துச் செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெற்றது போல நீங்களும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதை மனதில் நிறுத்தி நாளும் உழைக்க வேண்டும்.!!!
இந்தப் பாடலின் வரிகள் நமக்கு ஊக்கமாகட்டுமே!
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா…