வாழ்வியல் திறன்கள்

முனைவர். திருக்குள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப்பயிலரங்கம்

உலகத்தில் உள்ள சில நாடுகள் மிக உயர்ந்த முன்னேறிய நாடுகளாகவும், பல நாடுகள் வறிய நிலையில் உழல்வதையும் செய்திகள் வாயிலாக அறியமுடிகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் எவர் காரணமாக இருக்கமுடியும் என்றால், அந்நாட்டினை வழிநடத்திச்செல்லும் தலைவன் என்றபோதும், அடிப்படையில் தலைவனுக்குரிய தகுதிமைகளை உய்த்துணர்ந்து அவனைத் தேர்ந்தெடுக்கும் பொதுமக்களே எனத் தெளியலாம். ஒரு நாட்டை ஆள்பவரின் கடமைகளை வரையறுக்கும் சட்டவிதிகள், எவரைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிப்பதில்லை, ஏனெனின் மக்களின் அடிப்படை உரிமையான சுதந்திரமாக சிந்தித்து செயல்படும் நிலைப்பாடுகளில் சட்டத்தின் கூறுகள் எள்ளளவும் ஊடுருவுவதில்லை .

          காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்                                                      (குறள்.386)

மேற்குறித்த குறளில், ஒரு நாட்டின் தலைவனானவன் எளிதில் எவராலும் அணுகக்கூடியவனாகவும், பிறரை வருத்தி வாட்டும் கடுமையான சொற்களைப் பயக்காதவனாகவும் திகழவேண்டும் எனகிறது. தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற உந்துதலில் வீதிதோறும், இல்லந்தோறும் வந்து, மக்களோடு மக்களாக இணைந்து வாக்குகளை இறைஞ்சுபவர்கள், தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அந்த தொகுதி மக்களுக்கு வாக்களித்தனவற்றை செயல்படுத்தினார்களா? என்பதும், குறைந்தது அவர்களை அத்தொகுதி மக்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளார்களா? என்பதும் சிந்திக்கத்தக்கதாக உள்ளது. மேலும் செய்ய இயலாத காரியங்களையாவது, முறையாக மனம்பட நயம்பட வெளிப்படுத்துகிறார்களா? என்றால் அதுவும் இல்லை. மக்களின் குறைகளை அவர்கள் சொல்லாமலே குறிப்பறிந்து செயல்படுத்துபவராகத் திகழ்பவரே ஆளுமைக்குரியவராவர்.

      “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

(குறள்.388)

முறைசெய்து என்ற சுட்டு மக்கள் நலத்திட்டங்களை அவர்களவிலேயே அறிந்து, குறிப்பறிந்து தக்க நேரத்தில் செயல்படுத்தும் தலைவரையே மக்கள் இறைவனாகப் பாவித்து வணங்குவார்கள் என்று குறள் உறுதிபடுத்துகிறது.

“The leader must be everything that he desires his subordinates to become. Men think as their leaders think and men know unerringly how their leaders think”

தன்னிடம் உள்ளவர்களின் நன்னடத்தையை விரும்பும் தலைவர்கள், தாங்களும் அவ்விதமே முன்மாதிரியாகத் திகழ்தல் வேண்டும். தலைவர்களின் எண்ண ஓட்டத்தை தவறின்றி சரியாகக் கணிக்கக்கூடியவர்கள் மக்கள். ஏனெனின் மக்களும் தலைவனின் எண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள்.

ஆகவே தலைமைப்பண்புகளை உடைமையாக்கி யவர்களால் மட்டுமே தங்களுக்கும், சார்ந்த நாட்டிற்கும் ஆக்கங்களை ஆற்ற முடியும்

      “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்

(குறள்.466)

          எவையெல்லாம் நாட்டின்கண் செய்யத்தக்கன என்றும், எவையெல்லாம் செய்யக்கூடாதன என்பதனையும், தெளிவாகத் தேர்ந்து அத்தகு செயல்களையே எண்ணத்துணிக கருமம் என்றவழி சோர்வின்றி ஆற்றுதல் வேண்டும்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

(குறள்.738)

          வாக்குறுதிகளாக இலவசங்களை இயம்பாது, ஒரு நாட்டிற்கு இலக்கணமாக அமையவேண்டிய அடிப்படைக் கட்டமைப்புகளை வரையறுக்கின்றார் திருவள்ளுவர்.

          முதலாவதாக அந்நாட்டில் “பிணியில்லாத சூழல் உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் ஆரோக்யமாக அனைத்து மருத்துவ நலன்களைகளையும் எவ்விதப் பாகுபாடின்றி பெற்றிருத்தல் வேண்டும். மருத்துவ வசதிகளை பொதுவுடைமையாக அரசே ஏற்று நடத்தும் போதுதான் பாகுபாடுகள் களையப்பெற்று, மருத்துவத்தை வியாபாரமாக்கும் இழிநிலை இல்லாது ஒழியும். இரண்டாவதாக, செல்வநிலை பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும், மக்கள் அனைவருக்கும் உழைப்பதற்கான வழிகளையும், சுரண்டப்படாத நிலைகளையும் உறுதிசெய்திட வேண்டும், மூன்றாவதாக, தன்னிறைவான விளைச்சல்வழி, எந்நாட்டையும் கையேந்தாத நிலை அமைந்திடல்வேண்டும். நான்காவதாக, மகிழ்ச்சிக் குறியீடு அனைவரும் பெற்ற நாடாக உருவாக்கம் பெற்றிடல் வேண்டும். “தனியொருவனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம்” என்ற மகாகவியின் உணர்ச்சியானது, அனைவருக்கும் உரியது கிட்டவில்லையெனின், நாடன்று, உலகினையே சாடுவோம் என்று புரட்சிகனலாக வெடிப்பதை அறியமுடிகின்றது. நிறைவாக, நல்ல பாதுகாப்பினை நல்கிடல் இன்றியமையாதது என்கிறார்.

மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழல் உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும். இன்று காவல் நிலையங்களுக்கு சென்று புகார் தந்திட மக்கள் அஞ்சும் போக்கினை காணமுடிகின்றது. மக்களுக்கு விழிப்புணர்வினைத் தந்து, “no one is above law” “சட்டத்தின்முன் அனைவரும் சமமானவர்” என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்தி அனைவரும் எளிதில் அணுகக்கூடிய சூழலை உருவாக்கம் செய்திடல் வேண்டும். மேலும், நீதித்துறையானது “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்”(குறள்.118) எவரின் தலையீடுமின்றி சுதந்திரமாகச் செயல்படக்கூடிய சட்டச்சீர்மை நிலையை மக்களுக்கு உண்டாக்கித்தரவேண்டும். ஏனெனின் பொதுமக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்களேயாகும். “Last resort of common man is judiciary”

மேற்குறித்த அனைத்தும் ஒரு நாட்டின்கண் அமைந்துள்ள போதும்.

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு
                                                             (குறள்.740)

மக்கள் நாட்டின்கண் இலங்கும் இயற்கை மற்றும் செயற்கை நலன்களை எவ்விதப் பாகுபாடின்றி துய்த்திட நல்ல அமைதியான அரசியல்சூழலானது இன்றியமையாததாகும். எனவே தன்னையும் அறவழி நெறிபடுத்தி சார்ந்த மக்களையும் நடுவுநிலைமையுடன் வழிநடத்தும் சிறந்த அரசமைவு அமைந்திடல் வேண்டும். அப்படி அமையப்பெற்ற அரசமைவில்தான், ஆளுமையில் இருப்பவர்கள்,

தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்

                                                                                          (குறள்.293)

என்றும் நடுவுநிலைமையில் திகழ்தல்

நாட்டு நலன்களை தங்கள் நலமாகப் பேணுதல்

உள்ளதளவிலும் தவறுகளை எண்ணாதிருத்தல்

நேர்மையை வாழ்வியலாக்குதல்

நம்பகத்தன்மையை செயல்வழி உறுதிசெய்தல்

மக்களுக்காகவே தாங்கள் என்றவழி எளிமையுடன் ஆளுதல்

தவறுகள் தலைப்படின் பொறுப்பேற்று விலகுதல்

என்ற கோட்பாடுகளை உறுதிகளாகக் கொண்டு செயல்படுவார்கள்.

மேற்குறித்த வாய்மை வீறுகளைக் கொண்டவர்கள் தலைமை ஏற்றிடின் மக்களாட்சி மாண்புறும். ஒரு சாதாரண பொருளை வாங்குவதற்கு பல விளம்பரங்களையும், கடைகளையும் நாடுகின்ற மக்கள் ,தங்களை ஆளக்கூடியவர்கள் ‘ஆட்சியாற்றிட பொருத்தமானவர்களா? என்பதனை நன்றாகக் கணித்து தேர்ந்திடின் மக்களுக்கான வளங்கள் பல்கிப்பெருகும்,

அனைவருக்கும் உகந்த சூழல் இயல்பாகும்.