வெற்றித் திசை

ஆதவன் வை.காளிமுத்து

காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும்? என்ற கேள்வியைச் சிந்திக்கின்றோம். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்கிறோம்.

ஐந்து மணிக்கு எழாமல் விட்டுவிட்டால் என்ன செய்வது? என்ற அடுத்த கேள்வியைச் சிந்திக்கின்றோம்.

உடனே ஒரு முடிவு வருகிறது அலாரம் வைக்கலாம் என்று.

அதிகாலை எழவேண்டும் என்று சிந்திப்பது – முதல் முயற்சி

அலாரம் வைக்கலாம் என்பது – மேல் முயற்சி

அதிகாலை எழுந்துவிடுவது – செயல் வெற்றி

அதிகாலை எழவேண்டும் என்ற ஒரு சாதாரணமான செயலுக்கே சிந்தனை முயற்சி என்ற இருநிலைகள் தேவைப்படுகின்றது.

சிந்தனைதான் நம்முடைய முயற்சிக்கும் வெற்றிக்கும் அடிப்படையானது. சிந்தனைதான் நம்மை அடுத்த அடுத்த நிலைகளுக்கு நகர்த்திக்கொண்டு செல்கிறது.

காலையில் கடைக்குச்சென்று என்ன வாங்கவேண்டும்? என்று சிந்திக்கிறோம். பிறகு என்னென்ன பொருள்கள் வாங்க வேண்டும்? என்று சிந்திக்கிறோம். எந்தக்கடையில் வாங்கலாம்? என்று சிந்திக்கின்றோம். எவ்வளவு பணம் எடுத்துப்போக வேண்டும்? என்று சிந்திக்கின்றோம்.

ஆக நாம் செய்கின்ற சாதாரணமான செயல்களைக் கூட சிந்திக்காமல் செய்துவிடுவதில்லை. நம்முடைய எந்தச் செயலும் வெற்றியை நோக்கியது தானே.

குயவர் மண்ணைச் சிந்திக்கிறார். அதிலிருந்து ஒரு பொருளைச் சிந்திக்கிறார். அழகிய பானையாகிறது. பற்பல கலைப்பொருளாகின்றது மண்.

ஒரே செயலிலே பல பல புதுமைகள் பூக்கின்றது. புதியன மேலும் புதியன என அடுத்த அடுத்த பரிமாணங்களுக்கு நம்மை இட்டுச் செல்வது நமது சிந்தனைகளே!

“இலர் பலராகிய” என்று வள்ளுவர் சொல்வதைப்போல் இல்லாதவர்கள் பலராக இருப்பதன் காரணம் நோற்காததுதானே. சிந்தனையும் ஒருவித நோற்பு தானே.

நம் வறுமை, வேலையின்மை, சந்தர்ப்பம் அமையாமை, வழிகாட்டியில்லாமை என இவை அனைத்திற்கும் காரணம் என்று கேட்டுப் பார்ப்போமேயானால் விடை ஒன்று தான். அது சிந்திக்காததுதான் என்பது விடையாய் வரும்.

காலையில் எழுந்திருக்க சிந்திக்கின்ற நாம் மளிகைக் கடைக்கு செல்ல சிந்திக்கின்ற நாம் இதைவிடப் பெரிய காரியங்களுக்காகவும் பெரிய அளவில் சிந்தனையை விரிக்க வேண்டும்.

பொருளாதாரத்தைப் பெருக்குவது எப்படி? ஏன் வறுமையை வெல்ல முடியவில்லை? இப்படி சிந்திக்க வேண்டும். அதற்கு மிகச் சரியான பதில் “உழைக்கத் தயாராகு” என்பது தான்.

எனது உழைப்பிற்கான களம் எங்கே இருக்கிறது? இதற்கு யாரை அணுகுவது? என்று சிந்திக்க வேண்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டுதானே.

சரியான களமும் தளமும் அமைந்துவிட்ட பிறகு நமக்கான வேலையைப்பற்றி சிந்திக்கவேண்டும். சிலர், செக்குமாடு சுற்றி வருவதுபோல ஒரு வேலையை ஒரே மாதிரியாக எந்தவிதமான விருப்பமோ உற்சாகமோ இன்றி இது எனக்கான வேலை என்ற எண்ணத்தோடு மட்டும் செய்து கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அங்கு பணியாற்றும் நூறு பேரில் ஒருவர் அவ்வளவுதான்.

ஆனால் அந்த இடம் தான் நமது வாழ்க்கைக்கான இடம். அந்த இடத்திலிருந்தே நமது வாழ்க்கைக்கான அடுத்த கட்டத்துக்கு மாற்றி அமைக்கும் தளமாக அந்த இடத்தை நாம் அமைத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

“ஒரு வலிமையான வெற்றிகரமான மனிதன் சூழ்நிலைகளால் பாதிக்கப்படமாட்டான்; அந்தச் சூழ்நிலையில் இருந்தே தனக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கிக் கொள்கிறான்.”

“பலவீனமானவர்கள் புதிய வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். பலமானவர்கள் கிடைத்த வாய்ப்பிலிருந்தே புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.” என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் ஒரிசன் ஸ்வெட் மார்டென். இந்த இடம் இந்த வேலை எனக்கான ஓர் அற்புதமான வாய்ப்பு, இந்த வேலையை இன்னும் எப்படி அழகாக செய்ய முடியும்? இதைவிட எப்படிச் சிறப்பாகச் செய்வது? இன்னும் எப்படி விரைவாகச் செய்வது? இந்த வேலையை எப்படி ஒரு கலை அம்சமாக மாற்றுவது என்று நாம் யோசிக்க வேண்டும்.

அப்போது தான் நாம் செய்கின்ற வேலையைப்பற்றிய புதியதொரு புரிதலும், அதைச் சிறப்பாக மாற்றுவதற்கான சில நுட்பமும் கைவரவாகும்.

இப்போது எந்தப் புறமுயற்சிகளும் இல்லாமல் உங்கள் செயல்களினாலேயே பிறரால் கவனிக்கப்படும் நபராவீர்கள். பிறரின் கவனத்தை ஈர்க்கும் தன்மை உங்களுக்கு வாய்த்த பிறகு உங்கள் மேல் அதிகாரி அல்லது உங்கள் நிறுவனத்தின் கவனமும் உங்கள் மீது குவியத் துவங்கும். பிறகு சாதாரண லேபர்களோடு ஒருவராக உங்களைப் பார்க்க அவர்களுக்கே பிடிக்காது.

உங்கள் செயலும், செயல்திறனும், செயல் வேகமும், நீங்கள் கையாளும் செயல் நுட்பமும் உங்களைப்பற்றிய புதிய கருத்துக்களை அவர்களுக்குள் உருவாக்கும்.

உங்கள் நிலை மேலும் ஒருபடி உயர்ந்துவிடும். ஒரு குழுவை வேலைவாங்கும் நிலைக்கு உயர்ந்து விடுவீர்கள். அப்போதும் இதுபோதும் என்று இருந்து விடாதீர்கள்.

நீங்கள் எப்படி உங்கள் வேலையில் மிளிர்ந்தீர்களோ அப்படியே உங்கள் குழுவையும் மிளிரச்செய்ய சிந்தியுங்கள். புதிய அணுகுமுறைகளை உங்கள் சிந்தனை உங்களுக்கு வழங்கும்.

பிறகு பலகுழுக்களை வேலை வாங்கும் சூப்பர் நபராக பரிணமிப்பீர்கள். அதன்பிறகென்ன ? அந்த நிறுவனத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள்.

உங்களைப்போன்ற ஒருவரை இழக்க எந்த புத்திசாலி நிறுவனமும் விரும்பாது. பிறகு
மேலாளராக அந்த நிறுவனத்தின், இயக்குநராக, புதிய நிறுவனங்களின் தலைவராகவும் உயர்ந்து விடுவீர்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உங்களுக்கு அடித்த யோகம் (அதிர்ஷ்டம்) என்று வெறும் வாயை மெல்லுவார்கள்.

ஆனால் உங்களின் சிந்தனையும், சீரிய செயல்திறனும், உங்களின் உண்மை உழைப்புமே நீங்கள் அடைந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

“தனக்கான வாய்ப்புக்காக எப்போதும் தயாராய் இருப்பதே வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ரகசியம்” 

 

– பெஞ்சமின் டிஸ்ரேலி