சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –19

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
முதல் மின்னணுத் தொலைகாட்சியின் தந்தை
ஃபார்ன்ஸ்வொர்த் என்ற அந்த மாணவர் ரிக்பீ உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு பன்னிரண்டாம் வகுப்பில் நடத்தப்படும் வேதியியல் வகுப்புகளில் கலந்துகொள்ள ஆர்வம் அதிகம் இருந்தது. வேதியியல் ஆசிரியர் ஜஸ்டின் டோல்மேனைச் சந்தித்து அனுமதி கேட்டார். ‘‘ஒன்பதாம் வகுப்பு மாணவனை பன்னிரண்டாம் வகுப்பில் அனுமதிக்க முடியாது; காரணம் அதற்கு முன்னுள்ள பாடங்கள் தெரியாமல் உன்னால் புரிந்துகொள்ள முடியாது’’ என்று சொல்லிவிட்டார்.
ஆர்வம் மிகுந்த அந்த மாணவர் பள்ளியின் தலைமையாசிரியரைச் சந்தித்துத் தன் விருப்பத்தைக் கேட்ட போது, அவரும் மறுத்துவிட்டார். எனவே அந்த மாணவர் தன்னுடைய ஒன்பதாம் வகுப்பு ஆசிரியரிடம் தனக்கு முடிக்க வேண்டிய எல்லாப் பாடங்களையும் விரைந்து தருமாறு கேட்டார். அனைத்தையும் முடித்து சிறந்த மதிப்பெண் எடுத்ததால், பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள வேதியியல் பாடத்தைப் படித்துத் தன் தகுதியை வகுப்பு ஆசிரியரிடம் காட்டினார்.
ஒன்பதாம் வகுப்பிலேயே இவ்வளவு திறமையோடு படிக்கும் மாணவனுக்குப் பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் வகுப்புக்கு அனுமதிக்கலாம் என்று வகுப்பு ஆசிரியர் தலைமையாசிரியரிடம் பரிந்துரைத்தார். ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மீண்டும் வேதியியல் ஆசிரியர் ஜஸ்டின் டோல்மேனைச் சந்தித்து தான் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள பாடங்களைப் படித்துவிட்டதை எண்பித்தார். அசந்துபோன டோல்மேன் தலைமையாசிரியரிடம் சொல்லிவிட்டு ஃபார்ன்ஸ்வொர்த் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு அனுமதி வழங்கினார். வகுப்பில் கலந்துகொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைவிட அறிவியல் அறிவில் சிறந்துள்ளதைக் கண்டு அந்த மாணவருக்கு உதவிட, மகிழ்வோடு முன்வந்தார்.
ஃபிலோ டி ஃபார்ன்ஸ்வொர்த்
லூயிஸ் எட்வி்ன் ஃபார்ன்ஸ்வொர்த் மற்றும் செரீனா தம்பதியருக்கு ஐந்து குழந்தைகளில் மூத்த மகனாக 19, ஆகஸ்ட் 1906 – ஆம் ஆண்டில் பிறந்தார் ஃபிலோ டி ஃபார்ன்ஸ்வொர்த். குழந்தைப் பருவத்திலிருந்தே இயந்திரங்கள் மீதும், அதன் பாகங்களை ஆராய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
1918- ஆம் ஆண்டில் எட்வின் தனது குழந்தைகளோடு தன் உறவினர் ஒருவரின் பண்ணை வீட்டுக்குக் குடிபெயர்ந்தார். அந்த உறவினர் வீட்டின் ேமல் அறையில் அறிவியல் சார்ந்த பல இதழ்களும், புத்தகங்களும் நிரம்பிக் கிடந்தன. இந்தப் புத்தகங்களில் ஆர்வத்தைக் கொடுத்த ஃபிலோ, தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்ஸாண்டர் கிரகாம் பெல், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற உயர்ந்த அறிஞர்களின் வாழ்க்கை மற்றும் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் எல்லோரும் வழக்கமாக எழும் நேரத்துக்கு முன்னதாக காலை நான்கு மணிக்கே எழுந்து மேலறையில் இருந்த புத்தகங்களைப் படிப்பதில் கவனம் செலுத்தினார். வாசிக்க வாசிக்க அவர் மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றார். அந்த வீட்டிற்கு வந்ததும், அங்கிருந்த புத்தகங்கள் அனைத்தும் தனக்குக் கடவுள் தந்த பரிசு என்று மகிழ்ந்தார்.
அவர்களது வீடு 240 – ஏக்கர் அளவு கொண்ட ஒரு பண்ணைக்குள் இருந்தது. அவரது வீட்டிற்கும், பண்ணைக்கும் அங்கிருந்த மின்னியற்றி தான் மின்சாரம் உற்பத்தி செய்து கொடுத்தது. ஆனால், அது அவ்வப்போது பழுதுபடுவதும் வேலைகள் தடைபடுவதும் நடந்தது. பழுதடைந்த மின்னியற்றியைச் சரிசெய்ய ஆட்கள் வரும்போது அவர்கள் அருகிலேயே நின்று என்ன செய்கிறார்கள்? என்று ஃபிலோ ஃபார்ன்ஸ்வொர்த் கவனித்தார். இரண்டு, மூன்று தடவை அவர் இவ்வாறு பார்த்த போது ‘என்ன செய்கிறார்கள்?’ என்பது புரிந்துவிட்டது.
ஒருநாள் அந்த மின்னியற்றி மீண்டும் பழுதானது. அப்போது பழுது பார்ப்பதற்கு வீட்டில் பண வசதியும் இல்லை. எனவே ஃபார்ன்ஸ்வொர்த் தன் அப்பா மற்றும் மாமாவிடம் தானே அதைச் சரிசெய்ய அனுமதி தருமாறு கேட்டார். பன்னிரண்டு வயதுச் சிறுவனால் இது முடியுமா? என்று வீட்டிலிருந்த மற்றவர்கள் கேலி செய்து சிரித்தார்கள். ஆனால் அவரது தந்தை ‘சரி முயற்சி செய்’ என்று கூறினார். வீட்டிலிருந்த அனைவரும் ஃபிலோ செய்வதைக் கண்காணித்தனர். சிறிது நேரத்தில் மின்னியற்றி வேலை செய்தது. தந்தை தன் மகனைத் தட்டிக் கொடுத்ததோடு, அணைத்துக் கொண்டார்.
அடுத்த மாதம் வீட்டிலிருந்த கையால் இயக்கும் சலவை இயந்திரத்தை, ஒரு மின்சாரக் கருவியுடன் இணைத்துவிட்டார் ஃபிலோ ஃபார்ன்ஸ்வொர்த். இப்போது துணி துவைப்பது மிக எளிதாகிவிட்டதால் அம்மாவும், வீட்டிலிருந்த அனைவரும் ஃபிலோவைப் பாராட்டினார்கள். தினமும் நான்கு மணிக்கு எழுந்து புத்தகங்களை வாசிப்பதும், சிந்திப்பதும் தனக்கு முக்கியம் என்று கூறி அதைச் செயல்படுத்தி வந்தார் ஃபார்ன்ஸ்வொர்த்.
கண்டுபிடிப்பின் முதல் பொறி
ஒரு சமயம் தனது பண்ணையில் உருளைக்கிழங்கைப் பயிரிடுவதற்காக உழுது கொண்டிருந்தார் ஃபிலோ. அப்போது முதலில் ஒரு வரிசையில் குதிரை மூலம் உழுதுவிட்டு, அடுத்த வரிசையில் உழுதார். அப்போது முதலில் உழுத வரிசையில் ஆழமான பள்ளங்கள் இருப்பதைக் கண்டார். அப்போது ஏதோ ஒரு அதிர்ச்சி தோன்றியவராக அப்படியே அமர்ந்துவிட்டார். அவரது எண்ணத்தில் தொலைகாட்சி வந்தது. அங்கே வரிவரியாக எலக்ட்ரான் கற்றைகளை அனுப்பினால் ஒரு உருவத்தைக் கொண்டு வரலாம் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. தன் எண்ணத்தைத் தந்தையிடம் தெரிவித்தார். அவரது தந்தைக்கு அவ்வளவு தொழில்நுட்ப அறிவு இல்லை. இருப்பினும் தன் மகனிடம், ‘‘மகனே உன் யோசனை அருமையாக உள்ளது. இதனை வெளியே சொல்லிவிடாமல் இரகசியமாக வைத்து முயற்சியைத் தொடர்ந்து ெசய். வெற்றி ெபறுவாய்’’ என்று கூறினார். காரணம், அந்தக் காலத்தில் பலரும் கண்டுபிடிப்புகளுக்காக போட்டி போட்டு கொண்டிருந்தார்கள். ஃபிேலாவும் தன் யோசனையை ரகசியமாக வைக்க எண்ணிக் கொண்டார்.
இந்தத் தொலைகாட்சிக்கான கனவினை அவர் பெற்றது உழுத உருளைக்கிழங்குத் தோட்டத்தில் தான். தன் சிந்தனை சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். அப்போது வயது 13 மற்றும் 14 தான். அதன் ஆர்வமிகுதியால் தான் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்த ஃபிலோ ஃபார்ன்ஸ்வொர்த். தன்னை பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் வகுப்பில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார்.
வேதியியல் ஆசிரியர் ஜஸ்டின் டோல்மேனுக்கு ஃபிலோவை நன்கு பிடித்துப் போயிற்று. எனவே வகுப்பு முடிந்த பின்பும் ஃபிலோவுக்கு வேதியியல் பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். ஒருநாள் ஃபிலோ ஃபார்ன்ஸ்வொர்த் மட்டும் ஒரு வகுப்பறையில் ஆசிரியருக்காகக் காத்திருந்தார். தனது கற்பனைகளை எல்லாம் கரும்பலகையில் நிரப்பியிருந்தார். கரும்பலகையில் அந்தக் கற்பனை எப்படிச் சாத்தியமாகும் என்பதற்கான அனைத்துச் சூத்திரங்கள், வரைபடங்கள் என்று அனைத்தையும் எழுதி நிரப்பிக் கொண்டிருந்தார். அது முடியும் தருவாயில் வகுப்பில் நுழைந்த வேதியியல் ஆசிரியருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அப்போது ஃபார்ன்ஸ்வொர்த் தன் சிந்தனை, அதற்கான திட்டம் அனைத்தையும் அந்த ஆசிரியரிடம் விவரித்தார். மாணவனின் அபார அறிவைக் கண்டு வியந்த டோல்மேன், ஃபிலோவிடம் ‘‘நிச்சயம் உன்னால் இந்த யோசனையில் ெவற்றி பெற முடியும்’’ என்று வாழ்த்தினார். ஃபிலோ தான் கரும்பலகையில் வரைந்த அனைத்தையும் ஒரு தாளில் வரைந்து, தன் ஆசிரியரிடம் கொடுத்தார். மேலும் அந்தத் திட்டத்தை யாரிடமும் கூறவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சி நடந்த போது ஃபிலோவின் வயது பதினான்கு. பிற்காலத்தில் மின்னணுத் தொலைகாட்சிக்கான உரிமம் பெற ஃபிலோ முயன்ற போது, வேறு சிலரும் அதற்கு உரிமை கொண்டாடினர். அப்போது வழக்காடு மன்றம் சென்று மிகப்பெரிய போராட்டத்தை ஃபார்ன்ஸ்வொர்த் சந்தித்தார். அந்தச் சமயத்தில் ஃபிலோவின் வேதியியல் ஆசிரியர் ஜஸ்டின் டோல்மேன், ஃபிலோ தனக்குக் கொடுத்திருந்த தாளின் மாதிரியைக் காண்பித்ததின் மூலம் பிலோவின் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.
கனவு செயலான விதம்
பள்ளிப் படிப்பை முடித்ததும் இராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சியைப் பெற்றார் ஃபார்ன்ஸ்வொர்த். அமெரிக்கக் கடற்படைக்கு விண்ணப்பித்த அவருக்குக் கடற்படையில் வேலை கிடைத்தது. அந்த அகாடமியின் தேர்வில் நாட்டின் அளவில் இரண்டாவது உயர் மதிப்பெண் பெற்றிருந்தார். அதேசமயம் தனது மனதில் தொலைகாட்சித் திட்டத்தை ஓடவிட்டுக் கொண்டேயிருந்தார். இராணுவத்தில் தங்கிவிட்டால் வேறு யாராவது தொலைகாட்சித் திட்டத்தில் முந்திக்கொள்வார்கள் என்றும் சிந்தித்தார்.
இந்த அகாடமியில் சேர்வதற்கு முக்கியக் காரணமே, ஃபார்ன்ஸ்வொர்த்தின் தந்தை இறந்ததுதான். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் தன் குடும்பப் பொறுப்பைக் கவனிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. எனவேதான் கடற்படையில் சேர்ந்தார். ஆனால் அங்கேயே தங்கிவிடக்கூடாது என்று எண்ணியதால், தந்தையில்லாத குடும்பத்தின் மூத்த மகன் என்ற காரணத்தைக் காட்டி இராணுவத்திலிருந்து வெளியேறினார்.
ஃபிலோ பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சேர்ந்தார். அவரது கல்லூரி வாழ்க்கை மிகவும் வறுமையில் தொடர்ந்தது. ஒரு தூய்மைப் பணியாளராகப் பணிசெய்தும், கல்விக்கான கடன்களை வாங்கியும் முதலாண்டை முடித்தார்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் எவ்வளவு செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியுமோ, அவ்வளவு ஆர்வமுடன் தெரிந்துகொண்டார். ஒலியோடு சேர்த்து ஒளியையும் அனுப்பிப் பரப்புவதற்கான யோசனைகளைத் தன் ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொண்ட போது, இதனைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தனர். இதெல்லாம் அறிவுக்கு மீறியது மற்றும் சாத்தியப்படாது என்றே சிலர் கூறினர்.
இதுபற்றி பின்னாளில் அவரிடம் கேட்ட போது, அவர் கூறிய பதில் அற்புதமானது. ‘‘பேராசிரியர்கள் என் யோசனைகளை நிராகரித்த போது நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். நான் கூறிய விஷயங்களை யாராவது ஒருவர் புரிந்துகொண்டு எனக்கு உதவலாம் என்று ஆவலோடு சொன்னேன். அவர்கள் என்னிடம் நம்பிக்கையின்மையைத் தான் பதிலாகத் தந்தார்கள். ஆனால் அதையே நான் நேர்மறையாக எடுத்துக் கொண்டு எப்படியும் என் மனஓட்டத்தை, கனவை நனவாக்குவேன் என்று மேலும் மேலும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டேன்’’ என்று கூறினார். எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தைகள். ஒரு மனிதர் தன் ஆழ்ந்த சிந்தனையில் எழுந்த ஒரு எண்ணத்துக்கு வடிவம் தந்து வெற்றி பெறலாம் என்று எண்ணிவிட்டால், அவரது உறுதியால் அதை அடையமுடியும் என்பதற்கு ஃபார்ன்ஸ்வொர்த் நல்ல உதாரணம்.
இரண்டாம் ஆண்டு பல்கலைப் படிப்பு முடிந்த போது, ஃபிலோவின் வீட்டில் கடும் வறுமை தாண்டவமாடியது. சில நாட்கள் உணவு கிடைக்காமலும் கஷ்டப்பட்டார். குடும்பச் சூழ்நிலையை புரிந்து கொண்டு தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.
சால்ட்லேக் சிட்டி என்ற நகரில் இருந்த ‘கம்யூனிட்டி செஸ்ட்’ என்ற ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் மூலம் தனக்குச் சிலரின் தொடர்பு கிடைக்கும் என்று நம்பினார்.
ஒரு மாலைப் பொழுதில் அந்த அறக்கட்டளையின் நிறுவனர்களான ஜார்ஜ் ெவர்சன் மற்றும் லெஸ்ஸீ கோரெல்லுடன் தேனீர் அருந்தும் வாய்ப்புக் கிடைத்தது. 19 வயதான ஃபார்ன்ஸ்வொர்த் ஏன் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியவில்லை என்பது பற்றியெல்லாம் பேசிய போது, தனக்கென்று ஒரு கனவுத் திட்டம் உள்ளதையும், அதற்கான முதலீட்டாளர்களைத் தேடுவதாகவும் ஃபிலோ தெரிவித்தார். அப்போது ஃபார்ன்ஸ்வொர்த்தின் பேச்சில் ஆர்வமாகி என்ன தொழில்நுட்பம், கனவு? என்று கூறுமாறு கேட்க, ஃபிலோ எல்லாவற்றையும் அவர்களிடம் சொன்னார். அவர்களுக்கு இந்த அறிவியல் ஞானம் இல்லையென்றாலும், ஃபார்ன்ஸ்வொர்த்தின் ஆர்வத்தில் நம்பிக்கை ஏற்பட்டது. அவர்கள் மனதில் இந்தத் திட்டம் வெற்றி பெறும் என்ற எண்ணமும் உதித்தது. அச்சமயம் ஃபிலோ அவர்களிடம் இதனை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று இரகசியம் காக்கச் சொன்னார்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.