ஐந்து ஆறைவிடப்பெரியது 22

திரு.முகில்

‘ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா. பிள்ளைங்க பசியா இருக்குது…’ அந்தப் பிச்சைக்காரப் பெண், தன் குழந்தைகளுடன் ஜகாமிஜிண்ட்ஜென் ஜேகப்ஸ் என்ற அந்தப் பணக்காரப் பெண்ணிடம் பிச்சை கேட்டாள்.

‘ச்சீ, உன்னோட பன்றிக்குட்டிகளை இழுத்துட்டு நீ இங்க கெளம்பு. உனக்கெல்லாம் எதுவும் தர முடியாது’ – என்று ஜேகப்ஸ் திமிருடன் சொன்னாள்.

‘என் குழந்தைகளைப் பன்றிகள் என்கிறாயா? உனக்கு பன்றிகளே குழந்தையாகப் பிறக்கும்’ – பிச்சையெடுத்த பெண்மணி கோபத்துடன் சாபம் விட்டுக் கிளம்பினாள். அந்தச் சமயத்தில் ஜேகப்ஸ் கர்ப்பவதியாக இருந்தாள். அவளுக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது, மனித உடலுடன், பன்றியின் தலையுடன். இது 1621-ம் ஆண்டில் டச்சு மொழியில் வெளியான கதை. இதேபோன்ற கதைகள் ஐரோப்பிய தேசங்களெங்கும் புழக்கத்தில் உண்டு. அந்தக் காலகட்டத்தில் பன்றித்தலையுடன் கூடிய பெண் வாழ்கிறாள் என்ற நம்பிக்கையும் பரவலாக இருந்தது.

அயர்லாந்தின் டப்ளின் நகரத்தில் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரிஸெல்டா ஸ்டீவன்ஸ் என்ற சமூக சேவகி, தன் வாழ்வின் பிற்பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கிரிஸெல்டாவின் முகம் பன்றிபோல மாறிவிட்டது என்று செய்தி தீயாகப் பரவியது. அதை பலருமே நம்பினார்கள். ஆனால், ஏதோ ஒரு நோயினால் முகத் தோற்றம் பாதிக்கப்பட்டதாலேயே கிரிஸெல்டா வெளியே செல்வதைத் தவிர்த்தார் என்பதே உண்மை.

1814-ம் ஆண்டில் லண்டனில் மேரிலேபோன் பகுதியில், ஒரு வீட்டில் பன்றித்தலையுடன் கூடிய ஒரு பெண் வசிப்பதாக செய்திகள் பரவியபடி இருந்தன. அந்தப் பெண்ணின் மாதிரி ஓவியங்களும் வெளிவந்தன. அந்தப் பெண்ணைக் காண பலரும் ஆர்வமும் காட்டினர். கரடிக்கோ அல்லது வேறு ஏதோ ஒரு விலங்குக்கோ முடியை மழித்து, பெண் போல உடையணிந்து, ‘பன்றித் தலையுடன் கூடிய பெண்ணைக் காண வாரீர்! வாரீர்!’ என்று கட்டணம் வசூலித்து கண்காட்சி நடத்திய கயவர்களும் அங்கே இருந்தார்கள். ‘ஒவ்வொரு காலகட்டத்திலும் பன்றித் தலையுடன் கூடிய பெண், வாழ்ந்து கொண்டே இருக்கிறாள்’ என்று 1861-ம் ஆண்டில் ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கின்ஸ் அங்கத தொனியில்  கூறியிருக்கிறார். சென்ற நூற்றாண்டில் அந்தப் பன்றித்தலை பெண் பரபரப்பின்றி காணாமல் மறைந்து போனாள்.

சரி, இந்தப் பன்றித்தலை பெண் கற்பனைக்குப் பின் இருக்கும் மனிதர்களின் உளவியல் என்ன? பன்றி என்பது அருவருப்பான விலங்கு. சேற்றிலும் சாக்கடையிலும் புரளும் மகா கேவலமான உயிரினம். ஒருவரை மிகவும் தாழ்த்திச் சொல்ல வேண்டுமென்றால் பன்றியோடு இணைத்துக் கற்பனை செய்து கீழ்த்தரமாகப் பேசலாம். இது ஐரோப்பிய தேசங்களில் மட்டுமல்ல, மனித மரபணுவிலேயே ஊறிப்போன மட்டமான விஷயம். காலந்தோறும் மனிதன், பன்றிகளை அவமானச் சின்னமாக அடையாளப்படுத்தி வருகிறான். பன்றியைக் கொண்டு தொழில் செய்யும் மனிதர்களையும் ஒதுக்கியே வைத்திருக்கிறான்.  அதையும் மீறி பன்றியானது இன்றியமையாத உயிரினமாக புவியில் தன் பங்களிப்பை அமைதியாகச் செய்து கொண்டே இருக்கிறது. நாம் இங்கே பன்றியின் உன்னதப் பக்கங்களையும் வாசிப்போம்.

பன்றிகள் வரலாறு

பருவம் வந்தால் பன்றிக் குட்டியும் நன்றாகும். பன்றிக் குட்டி ஆனை ஆகுமா? பன்றிக்குப் பல குட்டி; சிங்கத்துக்கு ஒரு குட்டி. பன்றிக்குப் பின் போன கன்றும் மலம் தின்னும். இப்படி பன்றியைச் சிறுமைப்படுத்தும் பழமொழிகளே புழக்கத்தில் உள்ளன. சூப்பர் ஸ்டார்கள்கூட ‘சிந்திக்கும் திறன் இன்றி’ பேசிய பன்ச் டயலாக்கும் பன்றியைக் குறைத்தே மதிப்பிடுகின்றன. ‘கண்ணா, பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாதான் வரும்.’ சரி, இலக்கியத்தில் பன்றி கொண்டாட்டப்பட்டிருக்கிறதா?

கேழல், ஏனம், முளவுமா, அரி, கோட்டுமா, களிறு, எய், எய்ம்மா – இவையெல்லாம் பன்றியைக் குறிக்கும் வேறு தமிழ்ச் சொற்கள். சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் காட்டுப்பன்றிகளே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பொதுவாக காட்டுப்பன்றிக்கும் நாட்டுப்பன்றிக்கும் உடல் அமைப்பிலும் முக அமைப்பிலும் வேறுபாடு உண்டு. காட்டுப்பன்றியின் வாய்க்குள் இருந்து நான்கு பற்கள் மிக நீளமாக தந்தம்போல வெளிப்புறமாக வளைந்த நிலையில் இருக்கின்றன. இந்தச் சிறப்பான ‘பல்’ அமைப்பைக் கொண்டே பல் – பன் – பன்றி என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். கெண்டுதல் என்றால் நிலத்தைக் கிளறுதல். கெண்டுதல் – கேளல் – கேழல் என்று காட்டுப்பன்றியின் செயலைக் கொண்டு அதன் பெயர் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. களிறு என்றால் ஆண் யானை. காட்டுப்பன்றியும் கரிய நிறமுடையது. அதற்கும் தந்தம் போன்ற முன்பக்கம் வளைந்த பற்கள் உண்டு. இரண்டுமே சேற்றில் புரண்டு மகிழ்பவை. ஆகவே, களிறு என்ற சொல் காட்டுப்பன்றியையும் குறிப்பிடுகிறது.

வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி – என்ற அகநானூற்று வரியானது, காட்டுப்பன்றியின் பிடரியில் இருந்த தடித்த மயிரானது மூங்கிலின் வேர்களைப் போல இருப்பதாக வர்ணிக்கிறது. இரும் பனஞ்செறும்பின் அன்ன பரூஉமயிர் சிறுகண் பன்றி – இந்த வரி, காட்டுப்பன்றியின் கண்கள் சிறியதாக நெருப்புத் துண்டம்போல இருந்ததாக ஒப்பிடுகிறது. வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் – என்ற பாடல், காட்டுப்பன்றியின் கூரிய வளைந்த தந்தமானது வஜ்ராயுதம் போலக் கூர்மையுடன் ஒளிர்வதாகக் காட்சிப்படுத்துகிறது. காட்டுப்பன்றிகள் பாய்ந்து செல்லும் காட்டாற்று நீரிலும் நீச்சல் அடித்துச் செல்லும் திறன் உடையவை. தோட்டத்தை நோக்கிக் காட்டுப்பன்றிகள் திரளான கூட்டமாக வரும்போது அவற்றைத் துரத்துவதற்காகக் காவலர்கள் ஊதிய கரிய ஊதுகொம்பின் ஓசை, குறுநரிகள் இரவிலே எழுப்பும் ஊளையோடு ஒத்திசைந்து ஒலித்தன. இப்படி அகநானூறு எங்கும் காட்டுப்பன்றிகள் மண்ணைக் கிண்டித் திரிகின்றன.

காலம் காலமாக காட்டுப்பன்றிகள் உணவுக்காக வயல்களைச் சேதப்படுத்துவதும், மனிதன் அதை விதவிதமாக வேட்டையாடுவதும் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சங்கத் தமிழன் காட்டுப்பன்றிகளை வேட்டைநாய்களின் உதவியுடன் வேட்டையாடி இருக்கிறான் என்று செய்தி சொல்கிறது நற்றிணை. விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி புழைதொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் என்ற மலைபடுகடாம் வரி, ‘அடார்’ என்ற ‘பொறி’ குறித்து செய்தி சொல்கிறது. தினை விளைந்த வயல்களைக் காட்டுப்பன்றிகள் அழிப்பதால், அவை செல்லும் சிறிய வழிகள்தோறும், புகுந்து மாட்டிக்கொள்ளும்படி கற்பலகையாலான அடார் என்னும் பொறிகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வழியில் இரவு நேரங்களில் கூத்தர்களாகிய நீங்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்பொறியில் நீங்கள் மாட்டிக் கொண்டால் கொல்லப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறது இந்த பாடல்.

காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதற்காக வெட்டிய பெரிய பள்ளங்களுக்குள் பழங்குடியினர் ஒளிந்திருந்து அவற்றின் வரவினை எதிர்பார்த்துக் காத்திருந்ததாக பெரும்பாணாற்றுப்படையில் காட்சி விரிகிறது. குழி தோண்டி, அதற்குள் கூரிய ஆயுதங்களைப் பதித்து, குழி மீது வலை விரித்துக் காவலர்கள் காட்டுப்பன்றிக்காகக் காத்திருந்தார்கள். அப்போது குழிக்குள் விழுந்த காட்டுப்பன்றிகளின் மரண ஓலத்தை மதுரைக்காஞ்சி விவரிக்கிறது.

காட்டுப்பன்றிகள் மட்டுமன்றி, சங்கத்தமிழர்கள் வீடுகளில் வளர்த்து வந்த நாட்டுப்பன்றிகள் குறித்த செய்திகளும் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. பறழ்பன்றி பல்கோழி உறைகிணற்றுப் புறச்சேரி – என்ற பட்டினப்பாலை வரிகள், சங்கத்தமிழர்கள் வீட்டில் வளர்த்த பன்றிக்குட்டிகளுடன் கோழிகளும் ஆடுகளும் உறைகிணற்றினை உடைய புறச்சேரியில் விளையாடின என்கிறது. கள்ளைக் காய்ச்சிய பெண்கள் பாத்திரங்களைக் கழுவி ஊற்றிய நீரானது வழிந்துசென்ற பள்ளத்தில் உண்டாகிய சேற்றிலே ஆண் பன்றியானது தனது துணையுடனும் குட்டிகளுடனும் தங்கிவிட்டது. அரிசிமாவு போன்ற உணவுகளை நாள்தோறும் அவற்றுக்கான குழியிலிட்டனர் என்று பெரும்பாணாற்றுப்படை காட்சிப்படுத்துகிறது. பன்றிகள் இருந்த இடங்கள் இலக்கியத்திலும் சேரிகளாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

உலகமெங்கும் பல்வேறு புராணங்களில் பன்றி அவதாரக் கடவுள்கள் நிறைந்து கிடக்கிறார்கள். Moccus என்ற செல்டிக் கடவுளின் போருக்காகவும் வேட்டைக்காகவும் வணங்கப்பட்டவர். அவரது வாகனம் காட்டுப்பன்றி. Babi ngepet என்பது இந்தோனேஷியர்களின் நம்பிக்கையில் காட்டுப்பன்றியாக உலவும் சாத்தானின் வடிவம். Fengxi என்ற பன்றி வடிவ அசுரர், மழைக்கடவுளாக சீனப் புராணங்களில் வலம் வருகிறார். இதே கடவுள் ஜப்பானிலும் உண்டு. சீன நாட்காட்டியில் உள்ள 12 விலங்கு ராசிகளில் பன்றியும் ஒன்று. பன்றி வருடத்தில் பிறந்தவர்கள் அமைதி, வீரம், அறிவு, வேட்கை ஆகிய குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன ஜோதிடத்தின் கணிப்பு.

இஸ்லாமிய மதமும், யூத மதமும் பன்றி இறைச்சியை ஏற்பதில்லை. இந்து மதத்தில் எல்லோரும் பன்றி இறைச்சியை விரும்புவதில்லை. பண்டைய ரோமானியர்கள் கடவுள் டயானாவுக்கு பன்றியைப் பலியிடும் வழக்கம் இருந்திருக்கிறது. பண்டைய எகிப்திலும் பன்றி பலி கொடுக்கப்பட்டிருக்கிறது. நம் மண்ணில் சிறு தெய்வ வழிபாட்டில் மழை வேண்டி பன்றிகளை வேட்டையாடுவதோ, பலி கொடுப்பதோ இன்றும் வழக்கமாகத் தொடர்கிறது.

தசாவதாரங்களில் மூன்றாவது வராகம் என்ற பன்றி அவதாரம். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரண்யாட்சன் என்ற அசுரருடன், வராக அவதாரத்தில் விஷ்ணு, ஆயிரம் ஆண்டுகள் போர் செய்தார். அவனைக் கொன்றுவிட்டு, பூமிப்பந்தை தூக்கிக் கொண்டு வந்து மீண்டும் சூரியக் குடும்பத்தில் வைத்தார் என்கின்றன புராணக்கதைகள். விஷ்ணுவின் வராக அம்சத்தின் வடிவமாக வராகி என்ற காட்டுப்பன்றியின் முகம் கொண்ட தேவி வழிபாடும் மேற்கொள்ளப்படுகிறது. வியாழன் பகவானின் கோபத்திற்கு ஆளான பன்னிரு வெள்ளாளர்கள் பன்றிக் குட்டிகளாக ஆனார்கள். தாயின்றி இருந்தமையால், பசியால் வாடினர். சிவபெருமான், தாய்ப்பன்றியாக வடிவெடுத்து அவர்களது பசியைப் போக்கினார் என்று எட்டாம் திருமுறையில் மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். இப்படியாக இந்து மதப்புராணங்களில் இறைவனே பன்றி வடிவத்தில் அவதரிப்பதை அவமரியாதையாகக் கருதவில்லை. ஆனால், மனிதர்கள் பன்றியை வைத்துத் தொழில் செய்பவர்களை என்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.