சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 18

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
இன்றைக்கு 2400 – ஆண்டுகளுக்கு முன்பு அரச குடும்பம், பிரபுக்கள் குடும்பம் மற்றும் உயர்குடி மாணவர்களைக் கொண்ட ஒரு கல்வி நிலையத்தில், ஆசிரியர் தன் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘‘மாணவர்களே, நீங்கள் எதிர்காலத்தில், நாட்டையோ, மாநிலத்தையோ நிர்வாகம் செய்யப் போகிறீர்கள், அப்போது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்?’’ என்பதே அக்கேள்வி. ஆசிரியர் கேள்வி கேட்டதும், எல்லா மாணவர்களும் ‘‘குருவே, சிக்கலான பிரச்சினை வரும் போது, உங்களிடம் வந்து ஆலோசனை பெறுவோம்’’ என்றார்கள். குரு அமைதியாக இருந்தார்.
அப்போது ஒரே ஒரு மாணவன் ‘‘குருவே, பிரச்சினை வருகின்ற போது, அது என்ன பிரச்சினை, எதனால் வந்தது என நான் சிந்திப்பேன். அப்போது என் சிந்தனையில் என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறதோ, அதைச் செய்வேன்’’ என்றான். குரு அவனிடம், ‘‘சபாஷ்’’ என்று கூறி பாராட்டினார். அந்தக் குரு தான் தத்துவஞானி அரிஸ்டாட்டில், அந்தப் பதிலைக் கூறிய மாணவன் தான் அலெக்ஸாண்டர் என்று பின்னாளில் புகழ்பெற்ற பேரரசர். உலகில் ‘The great’ அதாவது ‘மகா’ என்ற வார்த்தை தரப்பட்ட ஒரே மன்னராகத் திகழ்ந்தவர் மகா அலெக்ஸாண்டர். அவரை உருவாக்கிய ஆசிரியர் தான் அரிஸ்டாட்டில்.
தத்துவம் தோன்றியது
உலகின் முதல் தத்துவக் கோட்பாடு கிரேக்கத்தில் உதித்ததாக இருக்கலாம் என்று வரலாறு கூறுகின்றது. கிரேக்கத்தைச் சார்ந்த சாக்ரடீஸ் தான் முதல் தத்துவஞானி. இவர் தன் மாணவர்களுக்குப் பல போதனைகளைத் தந்தார். அவரோடு சென்ற, பயணித்த மாணவர்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டார்கள். ‘‘தன்னை அறிவதே முதல் அறிவு’’ என்று பறைசாற்றியவர். இவரது தத்துவக் கருத்துகளில் முரண்பட்டதால், கிரேக்க தேசத்து அரசனால் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.
இந்த சாக்ரடீஸின் அன்பு மாணவராக வளர்ந்தவர் தான் பிளேட்டோ. ‘அகாடமி’ என்று சொல்லக் கூடிய உலகின் முதல் கல்வியகத்தை உருவாக்கினார். இவர்தான் இரண்டாம் தத்துவஞானி. சாக்ரடீஸ் சொன்ன கருத்துகளை எல்லாம் மாணவர்களுக்குப் போதித்தார். சாக்ரடீஸ் மற்றும் பிளேட்டோ இருவரும் உலகினை ஏதோ ஒரு புறவெளி ஆட்சி செய்கிறது என்ற கருத்தில் திடமாக நின்று போதித்தார்கள். ‘ஆன்மா’ என்ற ஒன்று மனிதரைக் கட்டுப்படுத்துகிறது என்பதே இவர்களின் தத்துவமாக அமைந்தது.
கி.மு.384 – ஆம் ஆண்டு பண்டைய சுத்தாகுரா நகரின் செல்சிதிசிலில் பிறந்தார் அரிஸ்டாட்டில். தந்தை நிக்கோமாக்கசு அரசருக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர். மாசிடோனிய மன்னர் அமயிந்தாசின் தனிப்பட்ட மருத்துவர். எனவே ஒரு செல்வச் செழிப்பான குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்தார் அரிஸ்டாட்டில். இவரது தந்தை தன் மகனுக்கு மருத்துவம் சார்ந்த உயிரியல் பாட அறிவை வழங்கினார். தன் மகன் பெரியவனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு, அவரது 17 – ஆம் வயதில் பிளேட்டோவின் கல்விக் கழகமான அகாடமியில் சேர்த்துவிட்டார்.
அங்கே இருபது ஆண்டுகள் பிளேட்டோவின் கல்வியகத்தில், பிளேட்டோவுடன் பல கருத்துகளை விவாதித்தும், சிந்தித்தும் தன்னை வளர்த்துக் கொண்டார்.
பிளேட்டோ தன் கல்வியகத்திலேயே அறிவிற் சிறந்த மாணவனாக அரிஸ்டாட்டிலைக் கருதினார். ஆனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதாவது உலகம் புறவெளியால் ஆளப்படுகிறது என்ற கருத்தை பிளேட்டோ சொன்னார். அரிஸ்டாட்டில் அதற்கான காரண காரிணங்கள் இவ்வுலகிலேயே உள்ளன என்று விவரித்தார். பிளேட்டோ தன் கருத்துகளில் முரண்பட்ட அரிஸ்டாட்டிலை வெறுக்கவில்லை.
அன்போடே நடத்தினார். பிளேட்டோ இறந்ததும் அகாடமியின் தலைவராக அரிஸ்டாட்டில் வரலாம் என்று எண்ணிய போது, அதன் தலைவராகப் பிளேட்டோவின் சகோதரி மகன் வந்துவிட்டதால், அரிஸ்டாட்டில் அகாடமியிலிருந்து வெளியேறினார்.
கிரேக்கம் கண்ட தத்துவ மும்மூர்த்திகள் என்ற அழைக்கப்பட்ட சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரில் அரிஸ்டாட்டில் உலகம் உயர்ச்சி பெற வழிவகுத்த தத்துவ ஞானியாவார்.
பிளேட்டோவின் அகாடமியிலிருந்து வெளியேறிய தருணம் இரண்டாம் பிலிப் மன்னன் தன் மகன் அலெக்ஸாண்டருக்குக் கல்வி கற்பிக்க வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும், தன் தந்தை பணிசெய்த அதே மாசிடோனியாவுக்குப் பயணப்பட்டார் அரிஸ்டாட்டில்.
மிகச்சிறந்த ஞானமுள்ள மாணவனாகத் திகழ்ந்தார் அலெக்ஸாண்டர். மூன்று ஆண்டுகள் ெசன்ற நிலையில் இரண்டாம் பிலிப் தன் மெய்க்காப்பாளன் ஒருவனால் கொல்லப்பட, அலெக்ஸாண்டர் மன்னராக முடிசூட்டினார். தன் தந்தையின் ஆசைப்படி உலகையே வெல்ல வேண்டும் என்று பெரும் படையுடன் கிளம்பிய அலெக்ஸாண்டர் பத்து ஆண்டுகள் உலகின் பல நாடுகளை ெவன்று வந்தார்.
‘லைசியம்’ என்னும் அறிவாலயம்
தன் மாணவன் அலெக்ஸாண்டர் மன்னராகி உலகை வெல்லக் கிளம்பிய காலகட்டத்தில் தனக்கென ஒரு கல்விக்கூடத்தை ஆரம்பித்தார் அரிஸ்டாட்டில். அதற்கு லைசியம் (Lyceum) என்று பெயர் சூட்டினார். இந்தச் சொல்லுக்கு ‘அறிவாலயம்’ என்பது பொருள். உலகில் முதன்முதலில் தொடங்கிய பல்கலைக் கூடமாக அது திகழ்ந்தது.
இயற்கையிலேயே எதையும் ஆராய்ந்து தெளிய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருந்தவர் அரிஸ்டாட்டில். தந்தை தனக்குக் கற்றுக்கொடுத்த உயிரியல் பாட அறிவைக் கொண்டு உயிருள்ள பறவைகள், விலங்குகள், மீன்கள் என்று ஊர்வன, நடப்பன, பறப்பன அனைத்தையும் கொண்டு வந்து ஆய்வு மேற்கொண்டார்.
இன்றைக்கு 2400 – ஆண்டுகளுக்கு முன்பு பல விலங்குகளை சிறு சிறு பாகங்களாக வெட்டி அதன் உள் தோற்றம், அமைப்பு என்று பலவற்றை ஆய்வு செய்து சிறு சிறு குறிப்புகளாக எழுதினார்.
அக்காலத்தில் மக்கள் யானையின் கால் ஒரே எலும்பினால் ஆனது என்றும் அதனால், அது மடக்க இயலாதது என்றும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் யானையின் கால்களைக் கூறுபோட்டு ஆய்ந்து அது மாறுபட்ட எலும்புகளைக் கொண்டுள்ளது என்று நிரூபித்தார் அரிஸ்டாட்டில். ஐநூறுக்கும் மேற்பட்ட மிருகங்களை ஆய்வு செய்துள்ளார் அரிஸ்டாட்டில். 125 – வகை மீன்களையும், பூச்சிகளையும் ஆய்வு செய்தார்.
ஒரு சிறிய வகைச் சுறாமீனை பற்றி ஆராய்ந்து தன் நூலில் விளக்கியுள்ளார். அந்த மீன்
19 – ஆம் நூற்றாண்டில் தான் அறிவியல் அறிஞர் களால் கண்டறியப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு அரிஸ்டாட்டிலின் ஆய்வினை முற்றிலும் ஒத்திருந்தது. இதுவே அரிஸ்டாட்டிலின் விலங்கின ஆராய்ச்சிக்குப் பெரும் எடுத்துக்காட்டாகும்.
‘உயிரியல்’ என்ற ஒரு பாடத்தை முதன்முதலில் உருவாக்கியவர் அரிஸ்டாட்டில். எனவே தான் அவரை ‘உயிரியலின் தந்தை’ என்றும், ‘விலங்கியலின் தந்தை’ என்றும் அழைக்கின்றனர்.
பொருள்களின் இயக்கம் பற்றியும் அதிக ஆய்வினை மேற்கொண்டார் அரிஸ்டாட்டில். உலகமெங்கும் படையெடுத்துச் சென்ற அலெக்ஸாண்டர் ஒவ்வொரு நாட்டிலும் தனக்குக் கிடைத்த நூல்களையும், அறிவுத் திரட்டுகளையும் அரிஸ்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார். அரிஸ்டாட்டிலின் கல்விக்கூடமான லைசியத்துக்கு ஏராளமான பொருளுதவி செய்தார் அலெக்ஸாண்டர். உலக வரலாற்றில் ஒரு அரசர், மாணவர் தன் ஆசிரியருக்கு உதவி செய்து ஆய்வினை வளர்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேசமயம் குருவுக்கும், மாணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடும் இருந்தது. அலெக்ஸாண்டர் தன்னைக் கடவுளின் பிரதிநிதியாகக் கருதினார். எனவே எல்லா மக்களும் தனக்கு அடிமை என்று கருதினார். அரிஸ்டாட்டில் இதனை ஆதரிக்கவில்லை.
‘லைசியம்’ என்னும் அறிவாலயத்தைக் கட்டமைப்பதில் அரிஸ்டாட்டில் அதிக அக்கறை காட்டினார். தினமும் காலை நேரத்தில் கடினமான தத்துவப் போதனைகளைத் தேர்ந்து எடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் கற்றுத் தருவார். மதிய உணவுக்குப் பின்பு ஒரு பெரிய அரங்கில் பின்தங்கிய மாணவர்களும் கலந்துகொண்ட போதனை வகுப்பை நடத்தினார்.
பேச்சுக்கலையை வளர்ப்பதில் மிகுந்த கவனம் ெசலுத்தினார், அரிஸ்டாட்டில். இந்தப் பேச்சுக்கலையும், மற்றவர்களை அணுகும் முறைகளும் அலெக்ஸாண்டருக்கு மிகவும் உதவியது. மிக முக்கியமாக சிறந்த சொற்களைக் கையாளக் கற்றுக் கொடுத்தார் அரிஸ்டாட்டில்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.