ஐந்து ஆறைவிடப் பெரியது 21

திரு.முகில்
உலகில் ஒரு தீவு முழுக்க, பாம்புகள் மட்டுமே வசிக்கின்றன. இன்னொரு தீவில் பாம்புகளே இல்லை. இரண்டு தீவுகளும் எங்கிருக்கின்றன என்பதை பாம்பு ஊர்ந்து செல்லும் கட்டுரைப் பாதையில் பார்த்து விடலாம். ஆங்காங்கே பாம்பும் நம்முடன் நேரடியாகவே சில உண்மைகளைக் கக்கப் போகிறது. பயம் வேண்டாம்.
‘நல்ல’ பாம்புதான். தொடரவும்.
உலகின் மனிதனுக்கும் மூத்தவை பாம்புகள். முன் தோன்றிய மூத்தக் குடி சர்ப்பக் குடிதான். அதனால்தான் என்னவோ, பாம்பென்றாலே மனிதர்களுக்கு நடுக்கம் உண்டாகிவிடுகிறது. மனிதன் ஏகப்பட்ட மூட நம்பிக்கைகளை பாம்பின் மீதுதான் திணித்து வைத்திருக்கிறான். காரணம், பாம்பின் விஷம் மீதான பயம். பயமே பக்தியாகவும் உருமாறி புராணங்களெங்கும் பாம்பு படமெடுக்கிறது. உலகின் நாகரிகங்கள், கலாசாரங்கள், மத நம்பிக்கைகள் ஒவ்வொன்றிலுமே பாம்பு ஹிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
‘குகுள்கான்’ இது மயன்கள் வழிபட்ட மனித முகமும் பாம்பின் உடலும் கொண்ட தெய்வம். பாம்பாகப் பிறந்த சிறுவன் குகுள்கான். அவனது சகோதரி ஒரு குகையில் வைத்து குகுள்கானை வளர்த்து வந்தாள். பெரிய பாம்பாக வளர்ந்த பின், அவளால் அவனுக்குப் போதிய இரை கொடுக்க முடியவில்லை. ஆகவே குகுள்கான் கிளம்பி கடலுக்குச் சென்றான். பூமியில் நில அதிர்வு உண்டானது. நான் கடலில்தான் இருக்கிறேன் என்பதை சகோதரிக்கு உணர்த்த ஒவ்வொரு ஜூலையிலும் குகுள்கான் அதிர்வுகளை, நில நடுக்கத்தை உருவாக்குவதாக ஒரு நம்பிக்கை.
ஃபிஜி தீவின் புராணக் கதைகளில் விவசாயத்துக்கு உதவும் பாம்புக் கடவுளின் பெயர், ரதுமைபுலு (Ratumaibulu)
ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அருள்பாலிக்கும் நாகக்கடவுள் டம்பல்லா. பண்டைய எகிப்தின் புராணங்களில் ஊர்ந்து செல்லும் பாம்புக் கடவுள் நெஹெப்காவ்
(Nehebkau) எமனைப் போல நெகட்டிவ் இமேஜ் கொண்டவரும்கூட. ரோமானியர்கள் வழிபட்ட பாம்புக் கடவுள்களில் ஒருவர் கிளைகோன். மெசபடோமியர்கள், கடவுளின் தூதுவராகச் சொல்லி வழிபட்ட பாம்பு வடிவம் நிரா. ஜிம்பாப்வே பழங்குடிகளின் சர்ப்பக் கடவுள் நியாமி நியாமி (Nyami Nyami) சீன புராணத்தில் வரும் பாம்பு வடிவம் கொண்ட பேரரசர் Fuxi. இப்படி உலகின் துருவப்பகுதிகள் தவிர, கண்டங்கள்தோறும் பாம்பு மீதான பக்தியும், பாம்புக் கடவுளர்களின் புராணக் கதைகளும் நிறைந்து கிடக்கின்றன.
மேற்குலக ராஜ்ஜியங்களின் பார்வையில் இந்தியா என்றாலே ‘பாம்புகளின் தேசம்’ என்ற இமேஜ்தான் பல நூற்றாண்டுகளாக நிலவியது. இங்கு மத நம்பிக்கைகளோடும் கலாசாரத்தோடும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன பாம்புகள். பரமசிவன் கழுத்தில் நிரந்தரமாகவே குடி கொண்டிருக்கிறது வாசுகி. இதுவே புராணத்தில் பாற்கடலையும் கடைந்தது. விஷ்ணுவின் படுக்கையாக இருப்பது ஆதிசேஷன். கிருஷ்ணன், யமுனை நதியில் வாழ்ந்த காளிங்கன் பாம்புடன் மோதி, வீழ்த்தி அதன் மீது நடனமாடினார். வடக்கில் வழிபடப்படும் பாம்புக் கடியிலிருந்து காப்பாற்றும் / பாம்புகளின் கடவுள் மானஸா தேவி. துளு மக்கள் மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் ‘நாகாராதனை’ வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். தென்னிந்தியாவெங்கும் அம்மன் வழிபாட்டில் பாம்பு என்பது தவிர்க்க முடியாதது. நாக வழிபாடு என்பது பண்டைத் தமிழர்களின் இயற்கை வழிபாடோடு இணைந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.
பாம்புக்கு பால் வார்ப்பது
பாம்பு வாய்ஸ்: ‘பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்’னு பழமொழி சொல்றீங்களே, எங்களுக்குப் பால் புடிக்கும்னு யாரு கெளப்பி விட்டது? புற்றுக்கு பால் ஊத்திக்கிட்டே இருக்கீங்க? உயிரியல் ரீதியா பார்த்தீங்கன்னா எங்க உடம்புல பால்ல இருக்குற லாக்டோஸ்ங்கிற சர்க்கரைப் பொருளை ஜீரணிக்குற அளவுக்கு திறன் இல்ல. அப்படியே தெரியாத்தனமா நாங்க பாலை குடிச்சுட்டா அதுக்கப்புறம் ஜீரணக்கோளாறால படுற பாடு இருக்கே, அதை ஒரு பாம்பா இருந்தா மட்டுந்தான் புரிஞ்சுக்க முடியும்.
ஆதாமையும் ஏவாளையும் ஆசைப்படத் தூண்டிய சாத்தானின் வடிவமாகவே பாம்பு கருதப்படுகிறது. பெரும்பாலும் கிறிஸ்தவம் தீமைகளின் அடையாளமாகவே பாம்பை உருவகப்படுத்துகிறது. புனிதர் பேட்ரிக், அயர்லாந்தில் உள்ள பாம்புகளை எல்லாம் வெளியேற்றினார். ஆகவே, அங்கே இப்போதும் பாம்புகள் இல்லை என்று கதை உண்டு. பாம்பு என்பது தீவினைகள் நிறைந்த விலங்கு என்று இஸ்லாமும் நெகட்டிவ் ஒளி பாய்ச்சுகிறது. தீங்கிழைக்கக்கூடிய ஐந்து விலங்குகள் என்று பாம்பு, நீர்க்காகம், வெறிநாய், எலி, பருந்து ஆகியவை மார்க்கத்தில் பட்டியலிடப்பட்டள்ளன.
பௌத்தத்தில் பாம்புகள் புனிதமானவை. புத்தர் ஞானம் பெறும் வேளையில் உண்டான இடைஞ்சல்களிலிருந்து அவரைக் காப்பாற்றிய பாம்பு நாகலிஞ்சா. பாம்புடன் கூடிய புத்தர், நாக புத்தர் என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக பாம்பு சட்டையை உரிப்பது என்பது மறுபிறவியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பாம்பு தன் வால் பகுதியைக் கவ்வியபடி இருக்கும் வட்டமான பாம்பு ஓவியங்கள் (Ouroboros), நித்திய நிலையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆக, தத்துவங்களிலும் பாம்புகள் டாக்டர் பட்டமே பெற்றிருக்கின்றன.
உலகளவில் தோராயமாக 3600 பாம்பு வகைகள் உள்ளன. அவற்றில் 600 வகைகள் விஷமுள்ளவையாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 230 வகைப் பாம்புகள் உள்ளன. அவற்றில் சுமார் 50 வகை பாம்புகள் மட்டுமே விஷம் கொண்டவை. தமிழ்நாட்டில் சாரைப்பாம்பு, நீர்ச்சாரை, வெள்ளிக்கோல் வரையன், பச்சைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளிப் பாம்பு ஆகியன எண்ணிக்கையில் அதிகம் காணப்படுகின்றன. ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டைப் பாம்பு ஆகியன இந்தியாவில் உள்ள அதிக விஷம் கொண்ட பாம்புகள்.
பாம்பு வாய்ஸ் : மனுசங்களைக் கடிக்குறதுங்கிறது எப்பவும் எங்க நோக்கம் கிடையாது. சுமார் ஆறு அடி நீளம் இருக்குற எங்க வெயிட் ஒன்னு, ரெண்டு கிலோதான் இருக்கும். எழுபது கிலோ உள்ள ஒரு மனுசன் எங்களைத் தெரியாம மிதிச்சுட்டா, வலி எப்படி இருக்கும்! அப்போ பயந்து, பாதுகாத்துக்கறதுக்காக கடிக்குறதுதான். எங்களை அடிக்க வந்தாலும் கடிக்கப் பார்ப்போம். மனுஷங்க பார்வைல படாம ஒதுங்கி எங்க வாழ்க்கையை பிரைவசியோட வாழுறதுதான் எங்களோட விருப்பம். புரிஞ்சுக்கோங்க.
இந்தியாவிலேயே, ஆசியாவிலேயே அதிக விஷம் கொண்ட பாம்பு, ராஜ நாகம்தான் (King Cobra). உலகில் வாழும் அதிக நீளம் கொண்ட விஷப் பாம்பு என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதன் சராசரி நீளம் 13 அடி. 19 அடி வரையிலான ராஜ நாகம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற பாம்புகளையே விழுங்கி வாழும் வகை இது. அடர்ந்த காடுகளில் மட்டுமே காணப்படும் இது, மனிதர்களோடு இருப்பதை விரும்புவதே இல்லை. தன் இரையைத் தவிர வேறெதையும் தாக்கவும் நினைப்பதில்லை. எதிரி, தன்னைத் தாக்க நினைத்தால் மட்டுமே இவை நிமிர்ந்தெழுந்து ஆக்ரோஷத்துடன் சீறி, நஞ்சைப் பாய்ச்சுகின்றன.
ராஜ நாகத்தால் சீண்டப்பட்ட மனிதன் சில நிமிடங்களிலேயே கோமா நிலைக்குச் சென்று, மரணத்தைத் தழுவிவிடுவான். ஆப்பிரிக்க யானைகூட ராஜ நாகம் சீண்டினால் மூன்று மணி நேரத்தில் இறந்துவிடும். முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பாம்பு வகை இது. முட்டைகளைப் பாதுகாக்க காய்ந்த இலைகளைக் கொண்டு ராஜ நாகம் அமைக்கும் கூட்டை AI கொண்டுகூட மறு உருவாக்கம் செய்ய இயலாது. தி கிரேட் ஆர்கிடெக்ட் கோப்ரா!
இண்லேண்ட் தைப்பன், ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த வகைப்பாம்பே உலகிலேயே மிக அதிக நஞ்சு கொண்டது. இது சீண்டினால் 6 – முதல் 45 – நிமிடங்களுக்குள் மரணம் உண்டாகலாம். பொதுவாக பாம்பின் விஷம் என்பது செறிவான புரோட்டீன்களால் ஆன பொருள்.
இது நியூக்ரோ டாக்ஸிஸ் எனப்படுகிறது. மனித உடலுக்குத் தேவையான புரதம் எப்படிக் கிடைக்கிறது? அது நாம் உண்ணும் உணவிலிருந்து, வயிற்றில் செரிமானம் செய்யப்பட்டு, நம் உடலுக்குத் தேவையான மற்றொரு பொருளாக மாற்றப்பட்டு, தேவையற்றவை அகற்றப்பட்டு பின்பே ரத்தத்தில் கலக்கிறது. ஆனால், பாம்பு கடிப்பதால் அந்தப் புரதம் என்னும் நஞ்சானது, ரத்தத்தில் நேரடியாகக் கலப்பதால், உடலில் இயல்புநிலை சீர்குலைந்து, திசுக்களும் கல்லீரலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு மனிதனுக்கு இறப்பு நேரிடுகிறது.
அதே சமயம் பாம்பின் நஞ்சு, பல்வகை மருத்துவத்திலும் உதவுகிறது. Anti Venom என்றழைக்கப்படும் இது, வலி நிவாரணம், மூட்டு தசை மற்றும் புற்றுநோய்க்கான மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. விஷத்தை மருந்தாக்குவதற்காக, அதனைப் பணமாக்குவதற்காகவே, விஷம் கொண்ட மனிதர்கள் பாம்புகளை வேட்டையாடுவதும் தொடர்ந்து நடந்துதான் வருகிறது. பாம்புத் தோலுக்கான கள்ள வணிகச் சந்தையும் பெருமதிப்புடையது.
பாம்பு வாய்ஸ் : நாங்க ரொம்ப காலத்துக்கு யாரையும் கடிக்காம இருந்தா, எங்க உடம்புல சேர்ந்துக்கிட்டே இருக்குற விஷமெல்லாம் அப்படியே நாகமணிக்கல்லா மாறிடுமாம். இது விஷத்தை விட கொடுமையான பொய். எங்க உடம்புல உள்ள விஷம், மனுஷங்களுக்குச் சுரக்குற எச்சில் மாதிரியான விஷயம்தான். அதை நீண்ட காலத்துக்கு சேகரிச்சு வைக்கவெல்லாம் முடியாது. அதனால யாராவது நாகமணி, நாகமாணிக்கம்னு சொல்லி எதையாவது ஒரு கல்லை விக்க வந்தாங்கன்னா, ஏமாந்துடாதீங்க. போலீஸ்கிட்ட புடிச்சுக் கொடுங்க!
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.