சமூகப் பார்வை – 38
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்
நம் மனதைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் மலைக்கு உண்டு. அவற்றின் கம்பீரம் நம்மை வியக்க வைக்கும். அதிலுள்ள வனவிலங்குகள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மலையின் அமைதி நமக்கு இதமளிக்கும். நிலம், நீர், கடல் குறித்து அவ்வப்போது பேசும் நாம், மலைகள் குறித்து அவ்வாறு பேசுவதில்லை. காரணம் அது எந்த வகையிலும் நமக்குத் தொந்தரவு தருவதில்லை. ஏதோ தொலைவில் தெரியும் பச்சை பசேலான பகுதிகள் என்ற நினைப்போடு கடந்து சென்றுவிடுவோம். ஆனால், மலைகள் நம் தேவையில் பெரும்பாலானவற்றைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது.
முக்கியத்துவம்
“ஆதிகாலம் முதற்கொண்டு மலைகள் மனிதரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றன, அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கின்றன. தேவைகளை அளித்து வருகின்றன.” என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) செயற்குழு இயக்குநர் கிளாஸ் டோப்ஃபர் குறிப்பிடுகிறார் உண்மைதான்.
மலைகள் மனித வர்க்கத்தின் நலனுக்கானவை. உலக நிலப்பரப்பில் 27 சதவிகிதம் மலைகள். உலக மக்கள்தொகையில் 12 சதவிகிதத்தினருக்குத் தேவையான வாழ்விடத்தினை மலைகளே வழங்குகின்றன. உலக மக்களில் 45 சதவிகிதத்தினர் அதன் வளங்களை நம்பியிருக்கின்றனர். நம்முடைய மிகப் பெரிய ஆறுகளுக்கும் நீர்த்தேக்கங்களுக்கும் மலைகளே ஊற்றுமூலம். உலகில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான தூயநீரானது மலைகளிலிருந்தே கிடைக்கின்றது. உலக மக்கள்தொகையில் பாதிப் பேர் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இமாலயம்-காரகோரம்-பாமீர்-திபெத் பகுதிகளில் இருக்கும் பெரிய மலைத் தொடர்களில் பெய்யும் மழையைச் சார்ந்தே வாழ்கின்றனர்.
மேலும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் முக்கிய வாழ்விடமாக மலைகள் உள்ளன. இயற்கைச் சீற்றங்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கவும், சுத்தமான காற்றை நாம் சுவாசிப்பதற்கும் மலைகள் நமக்குத் தேவை. மலைகள் ஒரு நாட்டுக்கு இயற்கை அரண்களாக உயர்ந்து நிற்கின்றன. “அறியப்பட்டிருக்கும் நிலவாழ் தாவரங்களிலும், முதுகெலும்புள்ள விலங்கினங்களிலும் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை இந்தப் பூமியின் மலையிலுள்ள இரண்டு சதவிகித வனப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன” என்று சூழலியலாளர்கள் கணக்கிட்டுள்ளதாக நேஷனல் ஜியோக்ராபிக் பத்திரிகை சொல்கிறது. அழியும் ஆபத்திலிருக்கும் எண்ணிலடங்கா உயிரினங்கள் மலைகளையே சார்ந்திருக்கின்றன. உலகின் மிக முக்கியமான உணவுப் பொருட்களில் சில, மலைகளில் வளரும் காட்டுச் செடிகளின் மூலமாகவே கிடைக்கின்றன. மலை, மலைப்பாக உள்ளதா?
இந்தியாவில்
இந்தியாவின் பெரிய மலைத்தொடர்கள் என்று பார்த்தால் இமயமலைத்தொடர், இமயமலைக்கு வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ள காரகோரம் மலைத்தொடர், பர்வன்சால் மலைத்தொடர், இந்தியாவின் மத்தியப்பகுதியில் அமைந்துள்ள விந்திய சாத்பூரா மலைத்தொடர், ஆரவல்லி மலைத்தொடர், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்குத் தொடர்ச்சி மலை தொடர் எனப் பட்டியலிடலாம்.
தமிழகத்தில்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் குஜராத் மாநிலத்தில் தபதி நதியிலிருந்து தொடங்கி மகாராஷ்டிரா, கோவா,கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. இம்மலைத்தொடர் உயிர்பன்முகத்தன்மை கொண்டது. இங்குச் சுமார் 5000 வகையான தாவரங்கள், 139 வகையான பாலூட்டிகள், 508 வகையான பறவையினங்கள், 179 வகையான இருவாழ்விகள், 250 வகையான ஊர்வனங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. உலகின் வளங்கள் நிறைந்த பகுதிகளுள் மேற்கு தொடர்ச்சிமலையும் ஒன்றாகும். 2012ஆம் அண்டு உலகின் பாரம்பரியமிக்க இடமாக இம்மலைத் தொடரை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இம்மலைத் தொடரில் அமைந்துள்ள உயரமான சிகரங்கள் தொட்டபெட்டா (2620மீ) மற்றும் முக்கூர்த்தி (2540மீ) ஆகியவை ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரியில் தொட்டபெட்டா என்ற இடத்தில் இணைகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள முக்கிய மலைகள் எனப் பார்த்தால் நீலகிரி மலை, ஆனைமலை, பழனிமலை, கொடைக்கானல் மலை, குற்றால மலை, மகேந்திரகிரி மலை, அகத்தியர் மலை, ஏலக்காய் மலை போன்றவற்றைச் சொல்லலாம். மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும் போது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலையிலுள்ள முக்கிய மலைகள் பட்டியலில் சவ்வாதுமலை, கல்வராயன்மலை, சேர்வராயன்மலை, பச்சைமலை, கொல்லிமலை, ஏலகிரிமலை, பர்வதமலை, சித்தேரி மலை போன்றவை இடம் பெறுகின்றன.
பாதிப்பு
காலநிலை மாற்றங்கள், அதனால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் போன்ற இயற்கைக் காரணங்களாலும்; சுற்றுச்சூழல் மாசடைதல், சூழல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொள்ளாத, திட்டமிடப்படாத வளர்ச்சிப்பணிகள் போன்ற செயற்கை காரணங்களாலும் மலைகள் பாதிப்புக்குள்ளாகின்றன. “விவசாயம், வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் வசதிகளின் முன்னேற்றம், போன்றவற்றால், மலையிலுள்ள காட்டுப் பகுதிகள் படுவேகமாக அழிந்து வருகின்றன” என்று ஐக்கிய நாடுகளின் சமீபத்திய செய்தி அறிக்கை ஒன்று விவரிக்கிறது. அது மட்டுமில்லாமல் புதிய ஆய்வு ஒன்று, உலகில் உள்ள பழமையான மலைகளின் உயரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகக் கூறுகிறது.
மலைகளை மனிதன் நாசப்படுத்துவதால் ஏற்படுகிற பாதிப்புகளை நாம் இப்போதே அனுபவித்து வருகிறோம். பெரும் வெள்ளம், நிலச்சரிவுகள், தண்ணீர் பற்றாக்குறை ஆகியவை இதன் சில அறிகுறிகளே. மலைகளை நம்பி வாழும் உயிரினங்கள், தண்ணீரை வழங்கிவரும் காடுகள் ஆகியவை அழிவின் கரங்களில் இருக்கின்றன.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற நகரங்கள் மலையின் மீது உள்ளன. அங்கு விதிமுறைகளை மீறி எழும் பல அடுக்குமாடி கட்டடங்களாலும், சரியாகத் திட்டமிடப்படாத வளர்ச்சித் திட்டங்களாலும் மலைச்சரிவும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன.
கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கல்குவாரிகளையும், மண்குவாரிகளையும் செயல்பட அனுமதித்ததும், ஹோட்டல்களையும், ரிசார்ட்களையும் கட்டியதும் சூழல் கெடுவதற்கும், பெரும் வெள்ளம் ஏற்பட்டுப் பேரழிவு ஏற்படுவற்கு முக்கியக் காரணமாகும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேரள வெள்ளத்தின்போது குற்றஞ்சாட்டினர்.
மலையில் ஏற்படும் அழிவு சமதளப் பகுதியில் வாழும் நம்மையும் பாதிக்கும் என்பதனை மறந்துவிடக்கூடாது. “மலையில் நடக்கிற காரியங்கள் தாழ்ந்த நிலப்பகுதிகளிலும் நன்னீர்ப் பகுதிகளிலும் கடலிலும் உள்ள உயிரினங்களைப் பாதிக்கின்றன.” என்கிறார் கிளாஸ் டோப்ஃபர். எனவே விழிப்புணர்வு தேவை.
அதேப்போல் மலையில் வாழ்கிற பழங்குடியினர் நலனில் நாம் அக்கறைக் கொண்டதேயில்லை. இந்தியாவில் மட்டும் 645 வகைப் பழங்குடியினர் உள்ளதாகவும் அதில் தமிழகத்தில் மட்டுமே 36 வகைப் பழங்குடியினர் வாழ்வதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் அதிக அளவில் பழங்குடியினர் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மலைவாழ் பழங்குடியினருக்கு எனத் தனிப்பட்ட நாகரிகம், தொன்மையான கலாசாரம், மொழி, பழக்க வழக்கங்கள் உண்டு, அவர்களின் மொழிகள் மெல்ல மெல்ல அழிந்துவருகின்றன. “ஒவ்வொரு கண்டத்திலுமுள்ள கண்காணாத பரந்த இடங்களை, அவ்வளவாகப் பாதிக்கப்பட்டிராத அத்தகைய உறைவிடங்களைப் பாதுகாப்பதில் வல்லவர்கள் பழங்குடியினர் மட்டுமே” என்று உவர்ல்ட் வாட்ச் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஆலன் தேண் டர்னிங் விவரிக்கிறார். மலைவாழ் மக்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்கின்றனர்.
அடுத்த 30 வருடங்களுக்காகத் திட்டமிடப்பட்டிருக்கும் சாலைகள், சுரங்கங்கள், நிலத்தடி குழாய்கள், அணைகள் மற்றும் சில வளர்ச்சிப் பணிகளும் உலகின் 25 சதவிகித மலைப் பிரதேசங்களை ஆபத்திற்குள்ளாக்கி இருக்கின்றன. ஏற்கெனவே மாதவ் காட்கில், கஸ்தூரிரங்கன் ஆணையங்கள் அளித்த அறிக்கைகள்படி மேற்குத் தொடர்ச்சி மலையின் வனப்பரப்பு குறைந்துள்ளது,
“சமவெளிப் பிரதேசங்களின் தண்ணீர்த் தொட்டி’ என்று வர்ணிக்கப்படும் மலைகள் காப்பாற்றப்படவேண்டும். “உலகின் மலைப் பிரதேசங்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு வளங்களைத் தொடர்ந்து வாரி வழங்கும்படி பார்த்துக் கொண்டால்தான் அனைவரும் பயனடைய முடியும்.” என்கிறது ஐ.நா.
என்ன செய்யலாம்
“மலைகளில் ஏறிப் பார், அவை உனக்குக் கதைகள் சொல்லும். மரக்கிளைகள் வழியே கதிரவனின் கதிர்கள் பாய்கையில் இயற்கையின் அமைதி உன் உள்ளத்தை ஊடுருவிச் செல்லும். தென்றல் உன்னைத் தாலாட்டும், பெருங்காற்று தன் சக்தியைக் காட்டும். இலையுதிர் காலத்தில் உதிரும் சருகுகளைப் போல் உன் கவலைகள் எல்லாம் மறைந்துவிடும்.” அமெரிக்க எழுத்தாளர் மற்றும் இயற்கை அறிவியலாளர் ஜான் முயிர் சொன்ன வார்த்தைகள் இவை.
மலைகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு, மாணவர்களுக்கு இன்னும் சரியான புரிதலை நாம் ஏற்படுத்தவில்லை. மலைகள் தான் நம் வாழ்வின் ஆதாரம் எனச் சொல்லிக் கொடுக்கவேண்டும். மலையேறுதல் பயிற்சியினை மாணவர்களுக்கு அளிக்கலாம். பாதுகாப்பான மலைப்பகுதிகளுக்கு மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் சென்று அதன் வளங்களைக் கண்முன்னே கொண்டு வரலாம்.
எதிர்காலச் சந்ததியினருக்காக மலையின் சுற்றுச்சூழலையும், கலாச்சாரங்களையும் அவற்றின் இயற்கையான நிலையில் பாதுகாத்தல் அவசியம். மலைப்பகுதியில் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் தொடர்புடைய சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்கலாம். அதே நேரத்தில் மலைப்பயணத்தின் போது அங்கு பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த கண்ணாடி பாட்டில்களை போட்டுவிட்டு வரக்கூடாது.
“சூழலியல் அமைப்பு பற்றிய பழங்குடியினரது அறிவு, நவீன அறிவியலின் நூலகங்களில் புதைந்துள்ள அறிவுக்குச் சமம்” என்றும் சொல்கிறார் ஆலன் தேண் டர்னிங். அவர்களின் மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்களை ஆவணப்படுத்தவேண்டும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நம் வாழ்வு கம்பீரமாக நகர்வதற்கு மலைகளைப் பாதுகாத்தல் அவசியம்.
(டிசம்பர் 11 ஆம்
பன்னாட்டு மலைகள் நாள்)