வெற்றியோடு விளையாடு!  – 13

டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

சைப்படும் அத்தனைக்கும் தேவையான தகுதியை நீ வளர்த்துக் கொள்!” என்று தனது மாணவர்களிடம் கூறி, வெற்றியடைய விரும்புபவர்களுக்கு இந்த உலகமே காத்திருக்கிறது  என்று மாணவர்களை உற்சாகப்படுத்துகிறார் முனைவர் அன்பரசு. மன்னார்குடி தேசிய மேனிலைப்பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியர்.

‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு’ என்னும் முதுமொழியை மாற்றி ஓடு மீனையும் பிடிக்க வேண்டும்,  உறுமீனையும் ருசிக்க வேண்டும்’  என ஆர்வமூட்டுகிறார்.

‘‘அம்மா ரூபாவதி ஆசிரியர், அதனால் எனக்கும் ஆசிரியராக வேண்டும் என்பதுதான் லட்சியம். அப்பா சச்சிதானந்தம்  உர நிறுவனத்தில் உதவி மேலாளர்.நான் இயற்பியல் பாடத்தை தேர்ந்தெடுக்க காரணமானவர் என் ஆசிரியர் நாகேஸ்வரன்’’ என்று கூறுகிறார் அன்பரசு. 

பள்ளிப் பருவத்தில் இருந்தே  பேச்சு, கட்டுரை, பாடல் என மேடையேறிய இவருக்கு  சிவப்பு கம்பளம் விரித்து காத்திருந்தது கல்லூரி. கல்லூரிக் காலத்திலேயே கலை விழா தொடங்கி,  வட்ட, ஒன்றிய, மாவட்ட,  பல்கலைக்கழக,மாநில அளவிலான கம்பன் கழகம் வரை பேசிப் பரிசுகள் பெற்றுள்ளார்.

எழுத்திலும் சளைத்தவர் இல்லை.  கல்லூரியில்  படிக்கும் போதே பிரபல தமிழ் வார இதழில் மாணவ நிருபராகப் பணியாற்றினார். 

அலுமினியம் ஆக்ஸைடு நானோ துகள்களை, ஆய்வு செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். கணிப்பொறி, தட்டச்சு, கராத்தே என பல கலைகளும் தெரியும். படித்து முடித்த பிறகு
பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி கிடைத்தது. ‘படித்த பள்ளியிலேயே பணியாற்றுவது பெரும் பேறு’ என்கிறார்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆசிரியர் இயக்கங்களில் ஒன்றான தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மன்னார்குடி வட்ட செயலாளராக பொறுப்பு வகித்திருக்கிறார். அப்போது மாவட்டத்தில் இவர் போகாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளே இல்லை. சர்வதேச ஜேசீஸ் சங்கத்திலும்  36 ஆண்டுகள் பழமை வாய்ந்த “ஜேசிஐ மன்னை’ அமைப்பிலும் பொறுப்பு வகித்தவர்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கைப் பயிற்சிகளை நடத்தி இருக்கிறார். இதுவரை 41 முறை ரத்த தானம் செய்துள்ளார்.

 தனது பெரும் முயற்சியால் பள்ளியில் தேசிய மாணவர் படை அமைப்பை உருவாக்கி  5 TN பட்டாலியன் கடற்படை என்சிசி அலகில் பயிற்சி அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். பள்ளியின் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளராகவும்,  அறிவியல் மன்ற பொறுப்பாசிரியராகவும் செயல்பட்டு சட்ட விழிப்புணர்வு, தண்ணீர் விழிப்புணர்வு, உளவியல், தற்கொலைத் தடுப்பு, வான் இயற்பியல், மின்னணுவியல் உள்ளிட்ட கருத்தரங்கங்களை நடத்தி வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மன்னார்குடி கிளைத்தலைவராக பொறுப்பேற்று அறிவியல் பணிகள் செய்து கடந்த 10 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியராய் இருந்து மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து மாவட்ட,  மாநில, தேசிய அளவில் மாணவர்களை பரிசு பெற செய்து அறிவியல் மனப்பான்மையை வளர்த்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் நடைபெறும் அறிவியல் கண்காட்சி மற்றும் வினாடி வினா போட்டிகளுக்கு நடுவராகச் செயலாற்றி வருகிறார்.

2018 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் 11,12 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் மாநில கருத்தாளராக பயிற்சி பெற்று மற்ற இயற்பியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி இருக்கிறார்.

 தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் நான் முதல்வன் திட்டத்திலும் உயர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சியிலும் கருத்தாளராக உள்ளார்.

‘‘தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மண் உயிர்க்கெல்லாம் இனிது’’ என்னும் குறளுக்கு ஏற்ப தன்னிடம் பயிலும் மாணவர்களை தனது சொந்த மாணவர்களாக கருதி அறிவிற் சிறந்தவர்களாக உருவாக்குவதே தன் நோக்கம் என்கிறார்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே வெற்றியாளரின் அடையாளம் இல்லை. சமூகத்தின் அன்பை சம்பாதிப்பதும் வெற்றியாளரின் அடையாளம்தான்.  அப்படிப் பார்த்தால் இவர் மாபெரும் வெற்றியாளர்.

மண் பயனுற வாழ்ந்து வரும் டாக்டர்.எஸ். அன்பரசு அவர்களின் பணி சிறக்க ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.