சாதனையாளர் பக்கம்

மதுரை ஆர். கணேசன்

ல்வியிலும் வாழ்க்கையிலும் பூக்கும் ஒவ்வொரு பருவங்களிலும் கற்றுக்கொண்ட படிப்பினைகள் மாணவர்களிடமிருந்து வெளிப்படுகிறபோது புரிந்து விடும் இவர்கள் எதிர்காலத்தின் தூண்களாக பிராகாசிப்பார்கள் என்று..!

அத்தகைய மாணவர்களிடம் துளிர்க்கும் திறமை, நம்பிக்கை, மற்றும் தன்னம்பிக்கையைத் தூண்டி விட்டு ஊக்குவிப்பவர்களே ஆசான்களாகவும் மாறியிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக “..எழுதுக எனும் அமைப்பு புத்தகப் புரட்சிக்கு..” களப்பணியாற்றியிருக்கிறார்கள் அதற்கே முதலில் பாராட்ட வேண்டும்..!

தூர்தர்ஷன் பொதிகையின் செய்தி வாசிப்பாளரும் நெறியாளருமான கவிஞர் விஜயகிருஷ்ணன் ஒரு கூட்டத்தில் மாணவர்களிடம் உரையாற்றும் போது “..படிப்பாளிகள் படைப்பாளர்களாக உயரவேண்டும் என்று பேசிய சிந்தனையின் விளைவாக உருவானதே  எழுதுக…” அமைப்பு ஆகும்.

சமூக ஆர்வலர்கள் ம.த.சுகுமாரன் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர் வே.கிள்ளிவளவன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘எழுதுக’ அமைப்பில் வே.லாவண்யா, ச.திவ்யா, சு.பாலச்சந்தர், ம.பூங்குழலி உள்ளிட்ட பலர் ஒருங்கிணைப்பாளர்களாகத் தங்களது பணிகளையும் கடந்து, மாணவர்களுக்குள் நிறைந்திருந்த அசாத்திய எழுத்துத் திறமையை வெளிக்கொணரச் செய்திருக்கிறார்கள்..!

“..தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்து 50வழிகாட்டி ஆசிரியர்கள் உதவியுடன் 150 நாட்களில் 120 பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 150 இளம் படைப்பாளர்கள் எழுதி ஒன்பது பதிப்பாளர்கள் பதிப்பித்த 150 புத்தகங்களை முன்னாள் தமிழகத் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்களால் சென்னையில் ஒரே மேடையில் வெளியிட்டு இருக்கிறார்கள் என்பதே எழுதுக அமைப்பின் பிரம்மாண்ட சாதனையாகும்..”

இதற்கு பக்க பலமாக நின்றவர்கள் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மின்னணுப் பொறியாளர்கள், வங்கியாளர்கள், விவசாயிகள், காவல் மற்றும் மருத்துவத்துறையினர், நூலகர்கள், பட்டதாரி இளைஞர்கள், இல்லம் தேடிக்கல்விப் பணியாளர்கள், இல்லத்தரசிகள் என்று ‘எழுதுக’ மூலம் நற்பணியில் ஈடுபட்டு உழைத்தவர்கள் பலர். இவர்கள் மாணவர்களிடம் உள்ள ஆர்வத்தைத் தூண்டி புத்தகம் எழுத வழிகாட்டிகளாக செயலாற்றினார்கள் என்பது பாராட்டுக்குரியது..!

“எழுதுக” குறித்து முதன்மை அமைப்பாளர்கள் மற்றும் செயல் வல்லுநர்கள் கவிஞர் விஜயகிருஷ்ணன், ம.த.சுகுமாரன், வே.கிள்ளிவளவன் ஆகியோர் பகிர்ந்து கொண்டதிலிருந்து…,

“…நம்முடைய மாணவர்களை செம்மைப்படுத்துவதன் மூலம் நமது நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்களிப்பை நம்மால் வழங்க முடியும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு இப்பணியில் இணைந்தவர்களின் ஈடுபாடும், உழைப்புமே ‘எழுதுக’ எனும் அமைப்பு செயல்பட  காரணமானது.  

‘எழுதுக’ அமைப்பின் நோக்கமே மாணவர்களின் அறிவாற்றல் மற்றும் படைப்புத்திறனை முழுமையாக வெளிக்கொண்டு வந்து புத்தகம் படிப்பவர்களை புத்தகம் படைப்பவர்களாக உருவாக்கி உயர்த்துவதே ஆகும். இதன் மூலம் புத்தகங்கள் நிறைந்த, வாசிப்பு மிகுந்த அறிவாற்றலில் உயர்ந்த பாரத நாடாக உலக அரங்கில் நம் தேசம் சிறந்து விளங்கும்.

2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘எழுதுக’ அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதுமிருந்து புத்தகம் எழுத ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி  வழங்கி அவர்களில் 100 மாணவர்களை ஆளுக்கொரு புத்தகம் எழுத வைத்துப் படைப்பாளராக முதல் முறையாக உருவாக்கினோம்.

100 புத்தகங்களும் 2021ல் சென்னை தலைமைச் செயலக அரங்கில் பத்மபூஷன் சிவதாணுபிள்ளை அவர்களின் முன்னிலையில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் முன்னாள் குடியரசு தலைவர் மேதகு ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்து வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில் அப்துல்கலாம் அறக்கட்டளை நிறுவனர் சேக்தாவுத் உள்பட பற்பல பிரபலங்களும் புத்தகப்படைப்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

இப்பணியின் தொடர்ச்சியாக நமது நாட்டின் 75ஆவது சுதந்திர தினப் பவள விழாவைக் கொண்டாடும் வகையிலும், தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையிலும்  புத்தகம் எழுத ஆர்வமுள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் பயிற்சியளித்து மலர்ந்த 150 புத்தகங்களை  கடந்த அக்டோபரில் முனைவர் வெ.இறையன்பு அவர்களால் சென்னையில், ஒரே மேடையில் வெளியிட்டு இளம் நூலாசிரியர்களை  உருவாக்கியுள்ளோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்திய நிகழ்வில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் என்பது ‘எழுதுக’ அமைப்பின் மிகச்சிறப்பாகும்…”

பா.தமிழ்ச்செல்வி பட்டதாரி ஆசிரியை, அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை, காஞ்சிபுரம்,

“…புத்தகம் எழுத ஆர்வம் உடைய அனைவரும் ‘எழுதுக’ இயக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனும் தகவல் முதலில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தின் கிராமம், நகரம், மலைப்பகுதிகள், அயல்நாடுகள் என அனைத்து இடங்களிலிருந்து 605 நபர்கள் பதிவு செய்தனர். அவர்களின் எழுதும் ஆற்றலை அறிய மாதிரிக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப எழுதச் சொல்லியிருந்தோம்.

எழுதும் திறமை மற்றும் கருத்தினை அளவுகோலாக வைத்து 250 நபர்கள் புத்தகம் எழுதத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழிகாட்டுவதற்காக வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இணைய வழி வாயிலாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று இறுதியில் 156பேர் அவரவர் இருப்பிடங்களிலிருந்தே  புத்தகங்களை எழுதி அனுப்பி வைத்தார்கள். புத்தக வெளியீட்டு விழாவின் போது தான் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர்.

ஒவ்வொருவரும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், புதினங்கள், புதிர்கள் என்று, தம் படைப்புகளைப் பார்த்த பொழுது மிகவும் வியப்பாக இருந்தது. அவர்களுடைய எழுத்து நடை மிகவும் சிறப்பாக இருந்தது. ஊற்று நீரானது தோண்டத்தோண்ட பொங்கி மேலெழுவது போல, படைப்பாளர்கள் எழுத எழுத அவர்களுக்குள் இருந்த எழுத்தாற்றல் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

நானும் இப்பணியில் ஈடுபட்டது மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் வழங்குகின்றது. சமூகத்திற்கு ஒரு பயனுள்ள செயலைச் செய்த ஆத்ம திருப்தி ஏற்பட்டுள்ளது. புத்தகங்களின் மலர்ச்சி தேசத்தின் எழுச்சி என்றால் அது மிகையில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்..”

த.தாராதேவி B.A.Public
administration, முதலாம் ஆண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி,

“..எனக்கு சொந்த ஊர் வெண்ணவால்குடி, புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கியில் தற்போது வசிக்கிறேன். நான் என்னுடைய முதல் நாவல் புத்தகத்தை எழுதுக இயக்கத்தின் உதவியுடன் “..குரோனஸ்..” என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.

அறிவை விட கற்பனை மிகமுக்கியம். ஏனெனில் ‘‘அறிவு குறைவாக உள்ளது, அதேசமயம் கற்பனை உலகம் முழுவதையும் தழுவியது’’ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது போல என்னுடைய புத்தகம் எனது கற்பனையின் வெளிப்பாடு.

இன்றைய சூழலில் இந்த உலகத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விதமாகவும், அனைவரும் விரும்பும் விதமாகவும் எழுதியுள்ளேன். என் நாவலில் உலவும் அனைத்துக் கதாபாத்திரங்களோடு தாங்களும் பயணிப்பது போல இதைப் படிப்பவர்கள் உணர்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த புத்தகம் எழுதுவதற்கு வாய்ப்பை வழங்கிய இயற்பியல் ஆசிரியர் ஜான்சன், பதிப்பகத்தார் மற்றும் ‘எழுதுக’ இயக்கத்தின் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்..”

தி.ஜனப்பிரியா B.Sc.,இயற்பியல், முதலாம் ஆண்டு, கிறித்துவக்கல்லூரி சென்னை,

“…எனக்கு, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது நான் எழுதிய புத்தகத்தின் பெயர் “..அறிவியல் கதைகள்…

‘எழுதுக’ அமைப்பு ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ஐயாவிற்குச் சமர்ப்பணம் செய்த நூறு புத்தகங்களில் என்னுடைய புத்தகமும் ஒன்று என்று நினைக்கையில் பெருமிதம் அடைகிறேன்.

எவ்விதம் கதையை சிந்தித்து, உருவாக்கி, எழுத வேண்டும் என்று எனக்கு கற்றுத் தந்த விஜயராணி அம்மாவிற்கும் வாய்ப்பளித்த ‘எழுதுக’ அமைப்பிற்கும் நன்றி  கூறிக்கொள்கிறேன்..”

பூ.டில்லிராணி 12ஆம் வகுப்பு, இராணி அண்ணாதுரை மகளிர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்,

“..நான் 11ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் கோடை விடுமுறை ஆரம்பித்தது, அப்போது எனக்குள் எழுந்த கேள்வி, இந்த விடுமுறையை எப்பொழுதும் போல் வீணாகத்தான் செலவிடப் போகிறோமா? அதற்கு பதில் என்னிடம் இல்லை?

ஆனால், இதோ உங்கள் எழுத்துத்  திறமையை வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு என ‘எழுதுக’ இயக்கத்தின் மூலமாக “..புத்தகம் எழுதலாம் வாங்க..” என்று ஒரு செய்தி என்னுடைய வேதியியல் ஆசிரியர் அன்புச்செல்வி மூலம் அறிந்தேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி என்னுடைய எழுத்துத் திறமையை வெளிக்கொண்டு வரநினைத்தேன் அதற்கேற்ப குறுகிய காலத்தில் நிறையப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன் எனக்குள் வாசிப்புப் பழக்கமும் அதிகரித்தது.

நான் பள்ளியில் கட்டுரைப் போட்டியில் பங்கேற்பதுண்டு. அப்பொழுது கட்டுரையை இணையத்தில் தேடுவேன். இப்பொழுது நானே “..மாணாக்கர்களின் கனவு உலகமாகுமா கல்வி? என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை தான்  நான் படைத்த புத்தகம் எனக்கே வியப்பாக உள்ளது எனது வழிகாட்டி ஆசிரியர் தேன்மொழி மற்றும் எழுதுக அமைப்பிற்கும் மகிழ்வுடன் நன்றி சொல்லிக் கொள்கிறேன்…”

இளம் பருவத்திலேயே எழுதும் திறமையை ஊக்கப்படுத்தி, ஒவ்வொருவரையும் ஒரு எழுத்தாளராக உருவாக்கிச் சாதனை படைத்துள்ள ‘எழுதுக’ அமைப்பினரையும், அதன் நிர்வாகிகளையும், அனைத்துப் படைப்பாளர்களையும் ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்திப் பாராட்டுகிறது.  =