வாழ்வியல் திறன்கள்
முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்
உலகில் பிறக்கும் அனைவருக்கும் உரிமையுடன் வாழ்வதற்கு உரிமை உண்டு. அதேபோன்று பிறர் உரிமையைப் பறிக்காது வாழவேண்டிய கடமையும் உள்ளது. ஆனால் இன்றைய செய்திகளில் அதிகமாக இடம்பெறுவது உயிர்க் கொலைகள் எனலாம்.
ஆயுதங்களால் கொல்வது, விஷம் வைத்து கொல்வது, இரயில்முன் தள்ளி விட்டு கொல்வது, என பலவகைகளில் தங்களுக்கு எதிரானவர்களைக் கொல்லுகின்ற போக்கினை அதிகமாக அண்மைக் காலங்களில் காணமுடிகின்றது. உறவுகளில் ஏன் இந்த வன்முறைகள்? தீர்த்துக்கட்டும் அளவிற்கு தீராத பிரச்சனைகள் உள்ளனவா? எதிரானவர்களை எல்லாம் கொன்றுவிடுவது மட்டும்தான் தீர்வாக முடியுமா?
உலக உள்ளங்கள் சிந்திக்க வேண்டிய உடனடிக் கடமை இன்றுள்ளது.
“இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்” (குறள்.858) மாறுபாடு குணநிலைகளால் மட்டுமே தீவிரவாதப் போக்குகள் எழுகின்றன. எனவே மாறுபாடுகள் களையப்படும் போது நல்ல ஆக்கங்கள் விளையும். தீராத கோபத்தாலும், உடனடி வெறுப்புணர்வுகளாலும் எடுக்கப்படும் அவசர முடிவுகளே தீராத துன்பங்களைச் சேர்த்து விடுகின்றன. இவ்வழி பாதிப்புகள் உள்ளானவருக்கு மட்டுமின்றி பாதிப்பினை ஏற்படுத்தியவருக்கும் தீராத பழியும் தண்டனைகளும் உண்டாவதுண்டு. உறவுகள் அன்பின் இழைகளால் மட்டுமே கட்டப்படுகின்றன. அன்புணர்வு அகலும் நிலையில் மட்டுமே இதுபோன்ற எதிர்வினைகள் இடம்பெறுகின்றன. எனவே எவரும் தனக்கு எதிரான சூழல்களில் பொறுமை காத்து செயல்பட வேண்டியது முக்கியமாகும்.
- நம்பிக்கையுடன் பிரச்சனையை அணுகுதல்
- மனதில் வன்ம உணர்வு தோன்றாமல் காத்தல்
- எத்தகைய பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்று நம்புதல்
- உடனடியாக எதிர்வினை ஆற்றாது பொறுத்தல்
- கோபத்தில் எதிர்மறை வார்த்தைகளைத் தவிர்த்தல்
- எவர்மீது தவறு என்பதைவிட எது சரி என்பதைக் கூறுதல்
- எத்தகையப் பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்று நம்புதல்
என்றவழி மேற்குறித்த நேர்மறையான அணுகுமுறைகளினால் உடனடி எதிர்விளைவுகளாவன இல்லாமல் போகின்றன. உயிர்சேதங்கள் முற்றிலும் தவிர்க்கப்படும். கற்காலம் கடந்து சனநாயகம் வாழுங்காலத்தில் இதுபோன்ற உயிரைப் பறிக்கக்கூடிய வன்செயல்களை வேரொடு களையவேண்டிய பொறுப்பும் கடமையும் அனைத்துச் சான்றோர்களுக்கும் உண்டு. மேலும் தத்தம் உயிர்களை மாய்த்துக்கொள்ளும் மடமைகளும் இன்றைய காலகட்டத்தில் பெருகி வருவதையும் அறியமுடிகின்றது. ஆன்லைன் சூதாட்டத்தால் பணமிழப்பு, காதலில் தோல்வி, பணிச்சுமை, நோய்த்தீவிரம், மனச்சிதைவு என்பது போன்ற பல இன்மை நிலைகளாலும் தற்கொலைகள் நிகழ்கின்றன.
அரிய பிறப்பான மனிதப்பிறப்பு என்பதே ஒருவற்கு கிடைத்த மிகப்பெரிய பேறு. இம்மனிதப்பிறப்பின் மகத்துவத்தை உணராது பிற உயிர்களைக் கொல்வதும், தன்னையே மாய்த்துக்கொல்வதும் வாழ்வியல் அறத்திற்கு முற்றிலும் எதிரான செயல்களாகும். ஏன் மனித மனங்கள் இதுபோன்ற அத்துமீறிய அவச்செயல்களில் ஈடுபடுகின்றன? என்பதனை எண்ணிப்பார்க்கும் போது,
- வாழ்வில் எவ்வித உயர்நோக்கும் இல்லாது இருப்பதும்
- தன்னுடைய உண்மையான திறன்களை அறியாது இருப்பதும்
- தனக்கு மட்டுமே என்ற சுயநலப் ேபாக்குகளுடன் இருப்பதும்
- உடனடித் தீர்வுகளில் மட்டுமே கவனமுடன் இருப்பதும்
- எல்லாவற்றிற்கும் பிறரிடம் குறைகாணும் மனப்பான்மையுடன் இருப்பதும்
- அவசர முடிவுகளில் நம்பிக்கைக் கொண்டு இருப்பதும்
- நல்லவர்களின் நட்பில் இல்லாது இருப்பதும்.
என்ற மேற்குறித்த இன்மைக் கூறுகளால் தான் பிறரை மாய்ப்பது, தன்னையே மாய்த்துக்கொள்வது என்ற இருநிலை அவலங்கள் அகிலத்தில் அரங்கேறுகின்றன எனலாம்.
அறிவுடையார் எல்லாம் உடையார் (குறள்.430)
என்ற திருக்குறள்வழி சிந்திக்கும் போது, வழிமுறைகள் இல்லாத தீர்வுகள் இல்லை என்று உறுதியுடன் கூறலாம். சமயோகித புத்தியை பயன்படுத்தும் போது அனைத்திற்கும் தீர்வு என்பது இயல்பான ஒன்றாக உருப்பெறுவது உறுதியாகின்றது. அறிவுடன் பொறுமையாகச் சிந்திக்கும் போது மனங்கள் பதட்டமின்றிச் செயல்படுவது உறுதியாகும். பதட்டமில்லாத மனங்களால் மட்டுமே தீர்வுகளை தன்னுள்ளே கண்டெடுக்கக்கூடிய அறிவுநிலைகள் எழுச்சியுற்று ஏற்றம் பெறும். எனவே, எதிரான சூழ்நிலைகளில் இனித் தீர்வுகளுக்கு எவ்வித வழிகளும் இல்லை என்று எண்ணாத சமநிலை மனம் வாய்க்கப்பெறுவதுடன், அனைத்திற்கும் தீர்வுகள் உண்டு என்ற உடன்மறைச் சிந்தனைகளும் இயல்பூக்கம் பெற்றிடும், மேலும் மீட்சி எண்ணங்கள் மலர்வதையும் செயலாக்கம் பெறுவதையும் உணரமுடியும். எனவே,
மனத்தடுமாற்றங்காலங்களில், பொறுமைக் காத்து,
- நான் வாழப்பிறந்தவன்
- என்னைப் போன்றே பிறரையும் பாவிக்கின்றேன்
- எண்ணங்களே அனைத்திற்கும் அடிப்படைஎன்பதால் நாளும் உயர்ந்தவைகளையே எண்ணுகின்றேன்
- எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்கின்றேன்
- அனைத்திற்கும் உற்ற தீர்வுகள் உண்டு என்பதை முழுமையாக நம்புகின்றேன்
- என்னால் என்சார்ந்த துறைக்கு ஆக்கம் சேர்க்க முடியும் என்று செயல்படுகிறேன்
- மனஉறுதியால் அனைத்தும் சாத்தியம் என்பதால் துடிப்புடன் மகிழ்ச்சியுடன் உள்ளேன்.
என்றவழி தன்னூக்கத் தகவுடை எண்ணங்களை மேவி வாழ்கின்றவருக்கு பிற உயிர்களைப் பறிக்கும் – தன்னுயிரினை மாய்த்துக்கொள்ளும் அறிவற்றச் செயல்பாடுகள் அறவே எழாது என்று உறுதிகூறலாம். =