முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 01

‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர்

1947-ஆம் ஆண்டு சூலை மாதம், டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் தலைமை வகித்தார். இந்த நூற்றாண்டு விழாவுக்கு தொழிலதிபர்கள், முன்னணித் தலைவர்கள் பலர் வந்திருந்தார்கள்.

விழாவில் பேசிய துணைவேந்தர், தமிழகத்தில் கல்லூரிக் கல்விக்கு தேவை அதிகம் இருப்பதையும், மாணவர்கள் பலருக்கு கல்லூரிகளில் இடம் இல்லாதிருப்பதையும் எடுத்துக்கூறியதோடு, தொழிலதிபர்கள் கல்லூரிகளைத் தொடங்கவும், நிதியுதவி செய்யவும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்தக் கூட்டத்தில் ஒருவராக பங்கேற்ற, முப்பத்தெட்டு வயதே நிரம்பியிருந்த, டாக்டர் அழகப்பா செட்டியார் எழுந்து, நிதி உதவி தருவதாகவும், காரைக்குடியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் தொடங்கலாம் என்றும் முன்வந்தார். 1947-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11-ஆம் நாள் அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் தொடங்கினார் டாக்டர். அழகப்பா செட்டியார். வாக்குக் கொடுத்த ஐந்தே வாரத்தில் கல்லூரி தொடங்கப்பட்டது.

அன்னிபெசன்ட் நூற்றாண்டு விழாவில் ஒரு பெரிய திருப்புமுனை, அழகப்பா செட்டியாரின் வாழ்வில் ஏற்பட்டது. காரைக்குடியில் கல்லூரி ஆரம்பித்ததோடு, கல்வி நிலையங்களைத் தொடர்ந்து வளர்த்தெடுக்க தாராளமாக நன்கொடைகளை அவர் வழங்கினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்திருந்த நேரம். ஒரு நாள் நள்ளிரவில் கல்கத்தா நகரில் தங்கியிருந்த நேருவைச் சந்திக்கின்றார் அழகப்பா செட்டியார். அப்போது இந்தியாவில் மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கிட ஒன்றிய அரசு சிந்தித்துக் கொண்டிருந்தது. நள்ளிரவு நேரம் தன்னைத் தேடிவந்த அழகப்பா செட்டியாரிடம் “என்ன காரணம்?” என்று ஆர்வமுடன் கேட்டார் நேரு.

நேருவிடம், ஒன்றிய அரசு தொடங்கவுள்ள, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை, தனது சொந்த ஊரான காரைக்குடியில் தொடங்குமாறும், அதற்கு முந்நூறு ஏக்கர் நிலத்தையும், 15 இலட்சம் ரூபாய் பணத்தையும் நன்கொடையாகத் தருவதாகவும் கூறினார். இப்படி ஒரு சிறந்த நன்கொடையும், வாய்ப்பும் கிடைக்கப் பெற்றதால், மகிழ்ந்த நேரு அதற்கு ஒப்புதல் தருகின்றார்.

இன்று இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான காரைக்குடி CECRI (Central Electro Chemical Research Institute) 1948-ஆம் ஆண்டு சூலை 25-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்திய அளவிலான ஏழாவது நிறுவனமாகவும், தமிழகத்தில் அமைந்த ஒன்றிய அரசின் இரண்டாவது நிறுவனமாகவும் இது அமைந்தது. இதன் கட்டடம் மற்றும் செயல்பாட்டின் திறப்பு விழா 1953-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 14-ஆம் தேதி அன்றைய துணை ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விழாவில் சர்.சி.வி. ராமன் உள்ளிட்ட ஒன்பது நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள்  கலந்துகொண்டனர் என்பது வரலாற்று நிகழ்வு ஆகும்.

ஒரு சமயம், மும்பையில் ஒரு நட்சத்திர ஓட்டலுக்குச் ெசன்றிருந்தார் அழகப்பா செட்டியார். அங்கே, தங்குவதற்கு அறை இருக்குமா? என்று வரவேற்பறையில் கேட்டார். அவரது எளிமையான தோற்றத்தைக் கண்ட ஓட்டல் அலுவலர், ‘இடம் இல்லை’ என்று கூறியதும், சற்று யோசித்த அழகப்பா செட்டியார், “அப்படியா, இந்த ஓட்டல் விலை என்ன?” என்று கேட்டார். ஆம், அந்த ஓட்டலையே விலைக்கு வாங்கிவிட்டார்.

சாதனை மனிதர்

அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்த, காரைக்குடி நகருக்கு அருகிலிருந்த கோட்டையூர் என்ற கிராமத்தில் ராமநாதன் செட்டியார், உமையாள் ஆச்சிக்கு மகனாகப் பிறந்தவர் அழகப்பா செட்டியார்.

பள்ளிக் கல்வியை காரைக்குடியில் முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். அப்போது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்திலும் ஈடுபட்டார்.

மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கே இந்திய சிவில் சர்வீஸ் படிப்புக்கு விண்ணப்பித்தார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அப்படிப்பில் இடம் கிடைக்கவில்லை. எனவே, சார்ட்டட் வங்கி பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். அந்த வங்கியில் வங்கிப் பணிக்குப் பயிற்சி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

பின்பு இலண்டனில் சட்டம் படிக்கச் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். அதாவது மேலை நாட்டில் வழக்கறிஞர் பட்டம் பெற்ற முதல் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவராகப் போற்றப்பட்டார். தொடர்ந்து 1933-ஆம் ஆண்டு விமானம் ஓட்டும் விமானிக்கான சான்றிதழ் பெற்றார்.

பின்பு இந்தியாவுக்குத் திரும்பி 1934-இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். ஆனால், வழக்கறிஞர் தொழிலைவிடத் தன் இன மக்கள் ஆர்வமுடன் செய்து வந்த வணிகத்தின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

வெளிநாட்டில் இரப்பர் தோட்டமும், கர்நாடகா கூர்க்கில் கவுரிஸட்டா தோட்டத்தையும் வாங்கினார். சிங்கப்பூரிலும் தன் தொழிலுக்கான இடம் வாங்கினார். கேரளாவில், கொச்சியில், ‘கொச்சி டெக்ஸ்டைல்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 2500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆலையில் பணிபுரிந்தார்கள்.

இந்தப் பகுதிக்கு ‘அழகப்பா நகர்’ என்றே பெயரிடப்பட்டது. அப்பகுதியில் வாழ்ந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கான கல்வி மற்றும் பிற வசதிகளைச் சிறப்பாகச் செய்து கொடுத்தார் அழகப்பா செட்டியார். தொடர்ந்து பல தொழிற்சாலைகள், ஆலையைத் தொடங்கி செல்வச் செழிப்பில் உயர்ந்தார் அழகப்பா செட்டியார்.

1947-ஆம் ஆண்டு ‘ஜுபிடர் ஏர்வேஸ்’ என்ற விமான நிறுவனத்தை எட்டு விமானங்களுடன் தொடங்கினார். இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முன்னோடி என்று போற்றப்பட்டார். குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சேவையை வழங்கிட விரும்பினார். ஆயினும் ஆரம்பத்தில் அரசின் சேவைகளுக்காக விமானங்களை இயக்க வேண்டியிருந்தது. தொழில் மற்றும் வாழ்க்கைப் பாதையில் மாபெரும் முன்மாதிரி மனிதராக அழகப்பா செட்டியார் திகழ்ந்துள்ளார். இவரது வாழ்க்கைப் பதிவுகளை ‘A Beautiful Mind’ என்ற நூலில் இவரது பேரன் ராமநாதன் வைரவன் என்பவர், சிறப்பாகத் தந்துள்ளார்.

டாக்டர் RM. அழகப்பா செட்டியாரின் கொடைகள், பண்புகள்

‘வள்ளல் அழகப்ப செட்டியார்’ என்பது தமிழகம் அறிந்த ஒரு மொழி. அழகப்ப செட்டியார் அவர்கள் கல்விக்கு வழங்கியுள்ள நன்கொடைகளை, இன்று கணக்கிட்டுப் பார்த்தால் பல ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களாக அவை அமைகின்றது என்பது அவரது பெருந்தன்மைக்கும், அளவற்ற ேசவைக்கும் எடுத்துக்காட்டாகும்.

இவரது கொடையுள்ளம் 1947-ஆம் ஆண்டிலிருந்து பலமடங்காக மாறியது. தனது நாற்பது வயது முதல் இறந்த 49 வயது வரை அள்ளி, அள்ளிக் கொடுத்த வள்ளலாகத் திகழ்ந்துள்ளார் டாக்டர் அழகப்பா செட்டியார்.

*       1947-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்டது அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

*       1948-ஆம் ஆண்டு காரைக்குடியில், சிக்ரி (CECRI) என்ற மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் காரைக்குடி நகரின் அடையாளமாக இன்று திகழ்கின்றது. அன்று அழகப்பா செட்டியார் வழங்கிய முன்னூறு ஏக்கர் நிலம், பதினைந்து இலட்சம் பணம் என்பது இன்றைய மதிப்பில் பல நூறு கோடிகள் ஆகும்.

*       1943-ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவிட ஒரு இலட்சம் நன்கொடை தந்துள்ளார்.

*       காரைக்குடியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார் அழகப்பா செட்டியார். ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரிகள் வரை அமைந்த வளாகமாக அது அமைந்தது.

*       சென்னையில் இயங்கிவரும் மேதை ராமானுஜம் எண்ணியல் கழகத்தைத் தொடங்கினார்.

*       மகாத்மா காந்தியின் பரிந்துரைப்படி, சென்னையில் தக்கர் பாபா வித்யாலயாவைத் தொடங்கினார்.

*       சென்னை வேப்பேரியில் பெண்கள் தங்கும் விடுதி கட்ட பல ஆயிரம் நன்கொடை தந்துள்ளார்.

*      கோட்டையூரில் உயர்நிலைப்பள்ளி கட்டவும், நகர உட்கட்டமைப்புக்காகவும் இலட்ச ரூபாய்களுக்கு மேலான நன்கொடை வழங்கினார்.

*      சிதம்பரத்திலுள்ள, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்க ஐந்து இலட்ச ரூபாய் தந்துள்ளார்.

*      சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் தொழில்நுட்பக் கல்லூரியைத் தொடங்கிட பெரும் தொகையை வழங்கினார். அந்தத் தொகையால் தொடங்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிக்கு ‘அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி’ (ACTECH) என்று பெயர் சூட்டப்பட்டு, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வருகின்றது.

*      1948-ஆம் ஆண்டு புதுடெல்லியில் தென்னிந்திய கல்விச் சங்கம் தொடங்கிட உதவினார்.

*      மதுரை லேடி டோக் கல்லூரிக்கு நிதியுதவி தந்தார்.

*      கொச்சியில் மகப்பேறு மருத்துவமனை கட்டவும், மாணவர்கள் படிக்கவும், காலை உணவுத் திட்டத்துக்கும் பல இலட்ச ரூபாய் நன்கொடை தந்துள்ளார்.

முன்மாதிரி மனிதர்

அவர் வாழ்ந்த காலத்தில் ஆரம்பப் பள்ளி, மாதிரிப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி எல்லாம் காரைக்குடியில் தொடங்கப்பட்டது. ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வி முதல் அனைத்துக் கல்வியும் கிடைக்கும் ஒரு பல்கலைக்கழகம் காரைக்குடியில் அமைய வேண்டும் என்று கனவு கண்டார். அந்தக் கனவு 1985-ஆம் ஆண்டு நிறைவேறியது. ‘அழகப்பா பல்கலைக்கழகம்’ உருவாகி இன்று இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு வாழ்வு தந்து கொண்டு இருக்கின்றது.

டாக்டர் அழகப்பா செட்டியார் இசையார்வம் கொண்டவர். 1940-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தில் நடைபெற்ற முதல் தமிழிசை மாநாட்டிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். 1956-ஆம் ஆண்டு அழகப்பா இசைப் பள்ளியைத் தொடங்கினார்.

டாக்டர் அழகப்பா செட்டியார் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்று 1952-ஆம் ஆண்டில் ‘பாவ் நகர் ஸ்டேடியம்’ என்ற ஒன்றை அழகப்பா நகரில் உருவாக்கினார். இந்த இடத்தையும் அவர் அதிகம் நேசித்தார்.

டாக்டர் அழகப்பா செட்டியார் நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்டவர். இரயில் பயணிக்கும் போது ஒரே இரவில் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்து விடும் பழக்கம் கொண்டவர். விமானப் பயணங்களின் போதும் வாசிப்பை நேசித்தவர். மிகச்சிறப்பாகச் சொற்பொழிவு ஆற்றுபவர். ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமை மிக்க பெருமகனாகத் திகழ்ந்தவர். அவரது பேச்சில் நகைச்சுவையுணர்வும் மிகுந்து காணப்பட்டது என்று புகழப்பட்டவர்.

உடல்நலக் குறைபாட்டால் வாழ்நாள் முழுவதும் அவர் கஷ்டப்பட்டாலும், விடாமுயற்சியுடனும், தீராத ஆர்வத்துடனும் சாதனைகள் நிகழ்த்தியவர். திட்டமிடல், செயல்படுதல், வெற்றி பெறல் என்ற நிலைகளில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அவரது வாழ்க்கை அமைந்திருந்தது.

உயர்ந்த தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், பண்டிட் ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராசர், மூதறிஞர் இராஜாஜி அவர்களுடன் நெருங்கிப் பழகியவராகவும், அவர்களது மதிப்பினைப் பெற்ற மாமனிதராகவும் விளங்கியவர். ஜவஹர்லால் நேரு அவர்களால் ‘பொதுநலவாதி’ என்று புகழப்பட்டவர்.

1943-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், 1944-ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகமும் டாக்டர் பட்டம் வழங்கி அழகப்பா செட்டியாரைக் கௌரவித்தன. 1957-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி குடியரசுத் தலைவரால் ‘பத்மபூஷன் விருது’ அவருக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக 1937-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் ‘நைட்ஹுட்’ என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு அந்தப் பட்டத்தை அவர் புறக்கணித்தார்.

கல்வி மேம்பட, பல நூறு கோடிகளை வழங்கிய அழகப்பா செட்டியாரின் பெயரில் பல்கலைக்கழகம், தொழல்நுட்பக் கல்லூரிகள், பல பள்ளிகள் இன்று தமிழகத்தில் உள்ளன. தொழில் மற்றும் வணிகத்தால் கிடைத்த செல்வத்தை விற்று, அவற்றால் அடைந்த இலாபத்தை எல்லாம் தமிழக மாணவர்களின் கல்விக்கு ஈந்த, மிக உயர்ந்த மனிதராகத் திகழ்கின்றார் டாக்டர். அழகப்பா செட்டியார். இவரது வாழ்க்கை வரலாறும், அர்ப்பணிப்பு மிகுந்த நோக்கங்களும் திரைப்படமாக வரவேண்டும். வளரும் தலைமுறையினருக்கு, நமது தேசத்தை வளர்த்தெடுத்த அழகப்பா செட்டியார் போன்ற பெருமகன்களின் வரலாறும், வாழ்வும் பாடமாக அமைய வேண்டும்.

ஐம்பது ஆண்டுகளே வாழ்ந்தாலும், அயராத உழைப்பால், பரந்த உள்ளத்தால், ஆயிரம் ஆண்டுகளுக்கான விதையை விதைத்து, மரமாக்கிச் சென்ற மாபெரும் மனிதர் தான் டாக்டர். அழகப்பா செட்டியார். 2007-ஆம் ஆண்டு அவரது பெயரில் தபால் தலையும் வெளியிடப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

“கோடி கொடுத்த கொடைஞன்
குடியிருந்த வீடும் கொடுத்த
விழுத்தெய்வம்
தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்
அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு”

என்று பாடப்பெற்ற வள்ளல் அழகப்பச் செட்டியார், தான் வாழ்ந்த அரண்மனை போன்ற இல்லத்தையே பெண்கள் கல்லூரிக்காக வழங்கிய வள்ளல். காரைக்குடியை ‘கல்விக்குடியாக’ மாற்றிய வள்ளல் டாக்டர். அழகப்பா செட்டியார். தமிழ்மண் பெற்ற பொக்கிஷம். மாநிலம் போற்றிய மாமனிதர். வரலாறாக வாழவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த முன்மாதிரி. வாழ்க்கை மனித குலத்திற்கு உள்ளவரை வள்ளலின் பெயரும் வரலாற்றில் இருக்கும்.