இளைஞர் உலகம்
உறவு


பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588

சட்டை முகத்தினரின் பொதுவான குணநலன்களைப் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் அவர்களின் நற்பண்புகள் பற்றி காண்போம்.

  1. மென்மையான உணர்வுள்ளவர்

அசட்டை முகத்தவரிடம் அழுமுகத்தினரின் பண்பும் இருப்பதால் இவர்கள் தொட்டால் வாடுவது போன்று மென்மையான இயல்பைக் கொண்டிருப்பர். வாழ்வில் ஒரு சிறு ஏமாற்றம் கூட இவர்களை, இவர்களது வாழ்வை அதிகமாகப் பாதித்துவிடும். இதற்கு இரவீந்திரநாத் தாகூரின், “கிராமத்து அஞ்சல்காரர்” (The Village Postman) என்ற சிறுகதையில் வரும் ரதன் என்ற கதாபாத்திரம் நல்ல எடுத்துக்காட்டு.

கல்கத்தா நகரத்து அஞ்சல் அலுவலகம் ஒன்றில் பணிசெய்து கொண்டிருந்த அஞ்சல்காரர் ஒருவர் உலப்பூர் என்ற கிராமத்துக்கு மாற்றலாகிறார். கல்கத்தாவில் இருந்த எந்த வசதியும் அங்கில்லை. அவருடைய அஞ்சல் அலுலகத்தில் மொத்தம் இரண்டு அறைகள் மட்டுமே இருந்தது. தபால்களை ஓர் அறையிலும் தனது துணிமணிகளை அடுத்த அறையிலும் வைத்து பணிசெய்ய வேண்டியிருந்தது. நொந்துபோன தபால் அலுவலருக்கு அங்குள்ள பட்டிக்காட்டு நபர்களுடன் பழகுவது கடினமாகிறது.

இந்த நிலையில்தான் இவருக்கு சிறு, சிறு உதவிகள் செய்ய ரதன் என்ற சிறுமி முன்வருகிறாள். அவள் ஓர் அனாதை என்றறிந்த தபால்காரர் அவள் மீது பரிவு கொள்கிறார். மாலை வேளைகளில் கல்வியறிவற்ற அந்தஅனாதை சிறுமிக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுக்கிறார். சில மாதங்களில் அவள் நன்கு கற்று தேர்ச்சியடைந்து, எழுதப் படிக்க தெரிந்து கொள்கிறாள்.

ஒருநாள் தபால் அலுவலர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் நிலை ஏற்படுகிறது. இப்போது ரதன் ஒரு தாய்போல் உடனிருந்து உதவி செய்கிறாள். அந்த இடத்திலுள்ள காலநிலை தனக்கு ஒத்துவராததால் தபால்காரர் வேறு இடத்திற்கு மாற்றல் கேட்கிறார். ஆனால் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. எனவே இவர் தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்ப முடிவு செய்கிறார்.

இந்த முடிவை ரதனிடம் தெரிவித்தபோது ரதன் அஞ்சல் அதிகாரியிடம் “என்னையும் உங்களோடு கூட்டிப் போவீர்களா?” என ஏக்கத்துடன் கேட்கிறாள். ஆனால் தபால் நிலைய அதிகாரியோ, “அதெப்படி முடியும்?” எனக் கூறி சிரிக்கிறார். ஆனால் அந்த சிறுமியால் இந்தப் பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; ஜீரணிக்க முடியவில்லை. அவளை சமாதானப்படுத்த அவரது சம்பளப் பணத்தை அவர் அவளை விட்டுப் பிரியும் போது அவளிடம் நீட்டுகிறார். அவள் பணத்தை ஏற்க மறுத்துவிடுகிறாள். அழுதுகொண்டே சென்றுவிடுகிறாள். அவளுடைய மென்மையான இயல்பை அவர் புரிந்துகொள்ளவில்லை என இரவீந்திரநாத் தாகூர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். அசட்டை முகத்தினரின் இந்த இயல்பு ஓர் நற்குணம் எனக் கூறுவதன் காரணம் இந்த இயல்பு படைப்பாளிகளுக்கு, குறிப்பாக கவிஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். டிசம்பர் 18-ஆம் நாள் வள்ளலார் அடிகளது விழாவை கொண்டாடுகின்றோம். அவர்தான், “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என எழுதியவர்.

  1. சேவை மனப்பான்மை உடையவர்

அசட்டை முகத்தினர் பிறருக்கு சேவை செய்வதில் ஆர்வம் மிக்கவர்கள்; ஆசையுடையவர்கள்.

அகிலம் போற்றும் அன்னை தெரசாவைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் கொல்கொத்தாவின் லொரேட்டா கன்னியர் மடத்தில் இருந்த தொடக்கக் காலத்தில் ஒரு சாதாரணப் பள்ளி ஆசிரியையாக இருந்தவர். ஒரு நாள் வீதியில் செல்லும் போது தெருவில் அனாதையாக எறும்புகளால் கடியுண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தொழு நோயாளி ஒருவரைக் காண்கிறார். மனித உயிரை மதித்த அவர் அந்த நோயாளியை முதலில் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் தனியார் மருத்துவமனைக்கும் எடுத்துச் செல்கின்றார். இரண்டு மருத்துவமனைகளும் அந்த எலும்பும் தோலுமாக குற்றுயிராகக் கிடந்த நோயாளியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அடுத்து என்ன செய்வதென்று அன்னை தெரசா கையை பிசைந்து கொண்டிருக்கையில், அன்னையின் கண்முன்னே அந்த நோயாளி துடிதுடித்து இறந்துவிடுகிறார். இதைக்கண்ட அன்னை தெரசா தனது ஆசிரியப் பணியை துறந்துவிட்டு குஷ்டரோகிகளை, அனாதைகளை, கைவிடப்பட்டோரை, ஆதரவற்றோரை அன்பு செய்யும் அரவணைக்கும் பணிதான் தனது பணி என எண்ணி அப்பணிக்கு தன்னை அர்ப்பணிக்கிறார்கள். அன்பின் பணியாளர் சபை (Sisters of Charity) என்ற பிறர் சேவை சபையை ஆரம்பிக்கிறார்கள். வெறும் 5 ரூபாயோடு தொடங்கப்பட்ட இச்சபை இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.

“பிறருக்காக தன்னை ஒருவன் இழக்கும் போதுதான் அவன் தான் யார் எனக் கண்டுகொள்கிறான்” என்கிறார் தேசப் பிதா மகாத்மா காந்தி அவர்கள். “பிறருக்காக சேவை செய்யும் போது இந்த பூமி என்ற அறையில் நாம் தங்குவதற்கான வாடகைப் பணத்தைக் கொடுக்கிறோம்” என்கிறார் பிரபல குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி.

சில மாதங்களுக்கு முன்பு சிறைச்சாலைக் கைதிகளை சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போது அந்த சிறைச்சாலையை நிர்வகிக்கும் சிறைக் கண்காணிப்பாளர் அங்குள்ள கைதிகளுக்கு ஓர் உரையாற்றினார். அதில் அவர் பிறருக்காக சேவை செய்பவர்களை, தன்னலம் மறந்து தியாக வாழ்வு வாழ்கிறவர்களை உலகம் கொண்டாடும் எனக் கூறி அதற்கு எடுத்துக்காட்டாக மகாத்மா காந்தியடிகள், இயேசு கிறிஸ்து போன்றோர்களைப் பற்றி பேசினார். அசட்டை முகத்தினரின் இந்தப் பண்பு இவர்கள் சமூகத்தில் பேரும் புகழும் அடையச் செய்யும்.