சமூகப் பார்வை – 25

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு லஞ்சம், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம், மசாஜ் பார்லர் நடத்திட லஞ்சம், வீட்டுவரியைக் குறைவாக மதிப்பிட லஞ்சம், தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம், குடும்பத் தகராறு வழக்கை முடித்து வைக்க லஞ்சம், அரசு மருத்துவமனையில் ஊசி போட லஞ்சம், பிரேதப் பரிசோதனைக்கு லஞ்சம், பட்டா மாறுதலுக்கு லஞ்சம், வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்.. இவையெல்லாம் அண்மையில் நாளிதழ்களில் வெளியான லஞ்சம் தொடர்பான செய்திகளின் தலைப்புகள். நாம் உயிர்வாழ்வதற்குக் காற்று அவசியம் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், லஞ்சம் கொடுக்காமல் உயிர்வாழ்தல் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

இந்தியாவின் ரேங்க்

ஜெர்மனியின் பெர்லின் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் லஞ்சம், ஊழலை ஆய்வுசெய்து அது தொடர்பான பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான பட்டியல் இந்தாண்டு (2022) ஜனவரி இறுதியில் வெளியிடப்பட்டது. லஞ்சம் மிகவும் குறைவாக உள்ள நாடுகளுக்கு அதிக மதிப்பெண்களும், அதிக லஞ்சம், ஊழல் உள்ள நாடுகளுக்குக் குறைவான மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. 2021ஆம் ஆண்டுக்கான பட்டியலில் அதிகபட்சமாக 88 மதிப்பெண்களுடன் டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகியவை மிகவும் குறைவாக லஞ்சம் நிலவும் நாடுகள் பட்டியலில் முதலிடத்திலிருந்தன. அவற்றைத் தொடர்ந்து நார்வே, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகியவை 85 மதிப்பெண் பெற்றுள்ளன. மிக அதிக அளவில் லஞ்சம் நிலவும் நாடாக 11 மதிப்பெண்களுடன் தெற்கு சூடான் உள்ளது. அதைத் தொடர்ந்து சிரியா, சோமாலியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 40 மதிப்பெண்களுடன் 85ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ரேங்க் பாராட்டும்படியானதல்ல.

வெளிநாடுகளில் அரசு அலுவலகங்களில் அவர்கள் தங்கள் விதிமுறைகளை மீறிச் செய்வதற்கு லஞ்சம் வாங்குகிறார்கள். ஆனால் இங்கேயோ அதிகாரிகள் பலர், அவர்கள் செய்யவேண்டிய வேலைக்கே லஞ்சம் பெறுகிறார்கள் என்பதுதான் கொடுமை. அதனால்தான் நம் மக்களில் பெரும்பாலானர் அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் பெறமுடியாத நிலையில் இருக்கிறார்கள். ஏழைகள் விழிப்புணர்வு இல்லாததாலும், அரசை அதிகம் சார்ந்திருப்பதாலும் அதிகாரிகளால் சுரண்டலுக்குள்ளாகிறார்கள்.

நிர்ப்பந்திக்கப்படுகிறோம்..

பொதுவாக நம்மிடம் யாராவது லஞ்சம் கேட்டால், “கொடுக்கவே கூடாது. கேட்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனதுக்குள் கோபம் எட்டிப்பார்க்கும். ஆனால் அது பெரும்பாலான நேரங்களில் சாத்தியமில்லாமல் போய்விடும். உதாரணத்துக்கு எனக்குத் தெரிந்த சுமார் 90 வயது பெரியவர் ஒருவர் தனது சொத்தைவிற்க வெளியூர் சென்றார். அவர் அந்தச்சொத்தை 60 ஆண்டுகளுக்கு முன் வாங்கியிருந்தார். “பத்திரப்பதிவு அலுவலகத்திலோ உங்கள் கையெழுத்து ஒத்துப்போகவில்லை” என ஒருவாரம் அலைக்கழிக்கப்பட்டார். 30 வயதில் போட்ட கையெழுத்தும் தள்ளாத வயதில் போடும் கையெழுத்தும் எப்படி ஒத்துப்போகும்? உடல் நலக்குறைவுடன் வெளியூர் சென்று லாட்ஜில் தங்கிய செலவு, துணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவருக்கான செலவு, கூடவே மனவழுத்தம் என அனைத்தையும் கணக்குப் போட்டார். அந்த அலுவலக “எதிர்பார்ப்பை” நிறைவேற்றிவிட்டு பத்திரப்பதிவை முடித்துவிட்டுத் திரும்பினார். இது ஒருவகையில் நிர்ப்பந்தம் என்றே சொல்லவேண்டும். இதைத்தான் “கரப்ஷன் வாட்ச்டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்” அமைப்பின் ஆய்வு, “இந்தியாவில் லஞ்சம் கொடுத்தவர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் நிர்ப்பந்திக்கப்பட்டனர்” என்கிறது. அடிப்படை சேவைகளைப் பெறுவதற்கும் 32 சதவிகித மக்கள் லஞ்சம் தருமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் என்கிறது இந்த ஆய்வு. ஆசியாவிலேயே லஞ்சம் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது என்கிறது அந்த அமைப்பு.  

கண்டுகொள்வதில்லை

சமூக ஆர்வலர்களும், நீதிமன்றங்களும், நேர்மையான அலுவலர்களும் லஞ்சம் வாங்குவது குறித்தான கடுமையான விமர்சனங்களைச் சொன்னாலும், வாங்குபவர்கள் அது குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. “கருமமே” கண்ணாயிருக்கிறார்கள்.

“லஞ்சம் வாங்கும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒருமுறை உத்தரவிட்டது. மேலும், “ஊழலைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையில், நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்” என்றும் அந்த நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

‘‘லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படித் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும். ஆனால், அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த கருத்து பொருந்தாது. லஞ்சம் பெற்று ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளைக் கண்டித்து இந்த கருத்தைப் பதிவு செய்கிறோம்’’ என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நிர்வாக நீதிபதி கிருபாகரன், நீதிபதி புகழேந்தி அமர்வு தெரிவித்தது நினைவிருக்கலாம்.

“நாங்கள் கொண்டு வரும் நெல்லைக் கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சமாக அரசு அதிகாரிகள் பெற்று வருகின்றனர் என்பது விவசாயிகளின் குமுறல். உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாத சூழல் ஒரு பக்கமிருக்க, அந்தப் பொருட்களை விற்பனை செய்ய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வேதனையானது. தங்களது ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், பிச்சைக்காரர்களுக்குச் சமமானவர்கள்” என்றும் நீதிபதிகள் கூறியதும் உண்டு.

லஞ்சம் ஏன்?

லஞ்சம் பெற இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது தேவைக்காக லஞ்சம் வாங்குவது. மற்றொன்று சுகபோக வாழ்க்கை வாழ லஞ்சம் வாங்குவது. தேவைக்காக லஞ்சம் வாங்குபவர்களுடைய ஊதியத்தைத் தேவைக்கேற்ப உயர்த்தி வழங்கினால் அவர்கள் பெறும் லஞ்சத்தைத் தடுத்துவிட முடியும். ஆனால், வசதிகளையும் ஆடம்பரங்களையும் விரும்பி லஞ்சம் பெறுபவர்களைத் தடுக்க முடிவதில்லை.” என்கிறார் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு முன்னாள் ஆணையர் விட்டல். ஆனால் இன்றைக்கு, “தேவைக்காக லஞ்சம்” என்ற பேச்சுக்கே இடமில்லை.

இதைத்தான் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான பூரணலிங்கம் ஒரு நாளிதழில், “இறப்பு சான்றிதழுக்கோ, வாரிசுச்சான்றிதழுக்கோ கூடப் பணம் வாங்குவது தவறு என்று யாரும் நினைப்பது கிடையாது. முன்பு இருந்ததை விட தற்போது அரசுத்துறை அதிகாரிகளுக்குச் சம்பளம் அதிகமாகவே வழங்கப்படுகிறது. அரசுத் துறை பதவிகளுக்கு வந்தபிறகு மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதை விட்டுவிட்டு தனக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற கருத்தில் தான் பல அதிகாரிகள் நடக்கின்றனர்” என்கிறார்.

“கேரளாவில் ஒவ்வொரு கிராமத்திலும் லஞ்சத்துக்கு எதிராகப் போராட இயக்கங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மக்களின் விழிப்புணர்வுடன் இருக்கும் வரையில் தான் லஞ்சத்தினைத் தடுக்கமுடியும். ஊழலைக் கண்டு பிடித்து அதற்குத் தண்டனை கொடுப்பது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் லஞ்சத்தை எதிர்த்து கேள்வி கேட்பதற்காகப் பல இயக்கங்கள் உருவாக வேண்டும். இதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும்” என ஒரு பேட்டியில் கூறியிருந்தார் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்.

மக்களும் பொறுப்பு

அரசு அதிகாரிகளை மட்டுமே குறை கூறிக்கொண்டிருக்கமுடியாது. தேர்தலின்போது வேட்பாளர்களிடம் “எதிர்பார்ப்பது” நம்தவறுதானே? மக்களுக்குத் தருவதை தங்கள் முதலீடாகத்தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். அதனால்தான் நாட்டில் உள்ள 30 சதவிகித சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சட்டத்தை மீறியவர்கள் சட்டத்தை உருவாக்குபவர்களாக மாறும்போது, முதலில் பலியாவது சட்டத்தின் ஆட்சிதான். இன்றைய குறைபாடு என்னவென்றால், எதிர்க்கட்சியாகச் செயல்படும் வரை அனைவருமே ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றனர். அவர்களே ஆளும் கட்சியாக வந்துவிட்டால் அவர்களும் அதே ஊழல் வண்டியில்தான் பயணம் செய்கின்றனர்.

யாரால் முடியும்?

இதற்கு யாரால் தீர்வு காணமுடியும்? அப்துல் கலாம் 2014ஆம் ஆண்டு தாம்பரம் காஞ்சி மகாஸ்வாமிகள் வித்யா மந்திரில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஒரு சிறுவன் லஞ்சத்தை ஒழிக்க முடியாதா? என்று கேட்டான். அதற்கு அப்துல் கலாம், “இப்போது ஊழல் செய்பவர்கள் அதில் மூழ்கித் திளைத்து விட்டார்கள். அவர்களைத் திருத்த முடியாது. ஆனால் உங்களைப் போன்ற கேள்வி கேட்கும் குழந்தைகள் நினைத்தால் அதை  எதிர்காலத்தில் ஒழிக்கலாம். நான் இது வரை 15 மில்லியன் குழந்தைகளிடம் இந்த கருத்தை விதைத்து இருக்கிறேன். ஊழல் பணத்தில் ஒரு பொருள் வாங்கி கொடுத்தால் அது அப்பா ஆனாலும் அம்மா ஆனாலும் வாங்கக்கூடாது” என்றார். ஆனால், இன்றைக்கு அப்படி ஒரு சூழல் வந்தால் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு வேண்டியதை லஞ்சமாகக் கொடுத்துப் பெற்றோர் சாதித்துக் கொள்வார்கள்.

எப்படி முடியும்

நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் லஞ்சத்துக்கு எதிரான போராட்டம் நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அவை நாம் வாழும் சமூகத்தின் அடிப்படை விழுமியங்களாகக் கருதப்பட வேண்டும். லஞ்சத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். லஞ்சம் வாங்கி கைதானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். குடிமக்கள் தங்களது அத்தியாவசிய சேவைகளை எளிதில் பெறுவதற்கு ஆன்-லைன் சேவைகளை விரிவுபடுத்திட வேண்டும். அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடையதாக இருக்கவேண்டும். லஞ்சம் பெறும் அதிகாரிகள் வேலையிலிருந்தே நீக்கப்படவேண்டும். அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். கிராமம் தோறும் லஞ்சத்துக்கு எதிரான இளைஞர் இயக்கங்கள் தோன்றவேண்டும்.

லஞ்சம் வாங்குகிறவர்களே! நம் எல்லோருக்கும் பணம் தேவைதான். அதற்காக அடுத்தவரிடம்  பறித்தல் திருட்டு அல்லவா? என்னதான் கோடீசுவரராக இருந்தாலும் லஞ்சம் தர அவருக்கு வலிக்கத்தான் செய்யும். நமக்குப் பணம் அதிகம் வேண்டுமானால் கூடுதலாக உழைப்போம். இல்லையா, நம் உழைப்புக்குக் கிடைப்பதைக் கொண்டு மகிழ்வாக வாழ்வோம். பணம் மட்டும் வாழ்க்கையல்ல. லஞ்சம் வாங்கமாட்டோம் என உடனே முடிவெடுங்கள்.  வாழ்க்கை இங்கு, இப்பொழுது மட்டுமே. அதைப் பிறரின் மகிழ்ச்சிக்கானதாகவும் மாற்றிக்கொள்வோம்.=