வெற்றித் திசை
முத்து ஆதவன் வை.காளிமுத்து
ஒரு பெரியவர் வெள்ளியாலான வெற்றிலைப் பெட்டி ஒன்று வைத்திருந்தார். அதில் எப்போதும் ஐம்பது வெற்றிலைகளாவது இருக்கும். ஒவ்வொரு முறை வெற்றிலை போடும்போதும் இரண்டு வெற்றிலைகளை எடுப்பார். அந்த இரண்டு வெற்றிலைகளில் நுனிப்பகுதி அழுகி கருகிப் போயிருக்கும். அந்த அழுகிய கருகிய வெற்றிலையை விரல் நகத்தால் கிள்ளி எறிந்து விட்டு பிறகு சுண்ணாம்பைத் தடவி பாக்கை வைத்து மடித்து வெற்றிலை போடுவார்.
அடுத்த நாள் வெற்றிலை பாக்கு போடும்போது அடுத்த இரண்டு வெற்றிலை அழுகிப்போயி ருக்கும். அந்த இரண்டு வெற்றிலைகளையும் முன்பு போலவே அழுகிக் கருகிய பகுதியைக் கிள்ளி எறிந்துவிட்டு வெற்றிலை போடுவார். வெற்றிலைப் பெட்டி என்னவோ வெள்ளிப்பெட்டி தான் ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் போட்டது அழுகிய வெற்றிலையையே.
அவர் என்ன செய்திருக்க வேண்டும் பெட்டியைத் திறந்தவுடன் அழுகிய வெற்றிலையைத் தூக்கி தூர எறிந்துவிட்டு அடுத்து உள்ள இரண்டு நல்ல வெற்றிலைகளை எடுத்துப் போட்டிருக்க வேண்டும்.
நாமும் அப்படித்தான் இருக்கிறோம். இது வீணாய்ப்போய்விடும், அது வீணாய்ப்போய்விடும் என்று எந்த வீணாய்ப்போனதையும் வீசி எறியாமல், வீணாய்ப்போனதை வீணாய்ப்போனது என்ற சிந்தையே இல்லாமல், அவற்றையே நுகர்ந்து நாம் நம்மையே வீணாக்கிக்கொண்டிருக்கிறோம்.
ஆக வாழ்க்கையில் எது வீணான பொருள் என்று அடையாளம் காண வேண்டும். எந்தப் பொருளையும் வீணாக்காமல் உபயோகம் உள்ளதாகப் பயன்படுத்தும் நுட்பத்தையும்,அவ்வாறான விழிப்புணர்வையும் பெறும் வழிவகைகளைச் சிந்திக்க வேண்டும்.
கிடைத்தற்கரிய பொன்னான நேரங்களை எல்லாம் எப்படி வீணாய்க் கழிக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையை பொருளுள்ள வாழ்க்கையாக மாற்றி தற்காலத்திற்கும், தற்சூழலுக்கும் ஏற்றவாறு எப்படி நம்மை தகவமைத்துக் கொள்வது? என்பதை காலந்தாழ்த்தாது சிந்தித்து நமக்கு தாமே சில கட்டளைகளையும், சுயகருத்தேற்றங்களையும் வரையறுத்துக் கொண்டு வாழ்க்கையை வளமாக்க முனைப்போடு செயல்பட உறுதியேற்போம்.
சுய கருத்தேற்றம்
* நான் என்பது என்னுடைய எண்ணங்களும், சிந்தனைகளுமேயாகும்.
* இதுவரை என்னை உயர்த்தியதும், என்னைத் தாழ்த்தியதும் என்னுடைய எண்ணங்களும், சிந்தனைகளுமே!
* நான் உயர வேண்டும் என்றால் என் சிந்தனையை உயர்த்த வேண்டும் என்பதை திட்டமாக உணர்ந்து கொண்டேன்.
தொடர வேண்டிய சிந்தனைகள்
- மேலானவற்றையே சிந்திப்பேன், உயர்ந்தவர்களையே சந்திப்பேன்.
- எண்ணங்களை மேன்மைப்படுத்தும் ஆன்றோர் உரைகளை அடிக்கடி கேட்பேன்.
- அறிவுக்குச் செறிவு தரும் நூல்களைத் தேடித் தேடிப் படிப்பேன்.
- வாழும் வகையை நன்றாக வரையறுத்துக் கொள்வேன்.
- அவசியமானவற்றையே வாங்குவேன், பயன்படுத்துவேன்.
- எனக்குத் தேவையானவற்றை என் சுய சிந்தனையைக் கொண்டே தேர்ந்தெடுப்பேன்.
- பிறரின் எண்ணத் தூண்டல்களையும்,பிறரின் சிந்தனைக் குறுக்கீடுகளையும் முற்றிலும் தவிர்ப்பேன்.
- எனது வாழ்க்கைக்கு எது தேவையோ அவற்றை நானே சிந்திப்பேன்,தேர்ந்தெடுப்பேன்.
- பொருளற்ற,பொருத்தமற்ற ஆடம்பரங்களை அறவே தவிர்ப்பேன்.
- கேளிக்கை மற்றும் பொழுதுபோக்குகளில் பயனும், பண்பாட்டுக் கூறுகளும், பகுத்தறிவும் இருந்தால் மட்டுமே பங்கெடுப்பேன்.
- எதையும் கடனாகவோ, தவணையாகவோ வாங்கும் பழக்கத்தை முயற்சியோடு தவிர்த்திடுவேன்.
- ஒரு போதும் பிறரின் வாழ்க்கையோடு எனது வாழ்க்கையையோ, பிறரின் நிலைப்பாட்டோடு என் நிலைப்பாட்டையோ பொருத்திப் பார்த்து உயர்வு, தாழ்வு மனநிலையை அடைய மாட்டேன்.
- என்னுடைய இன்றைய நிலைமையே தனித்துவமும், மதிப்பும் மிக்கது என்பதை மறவேன்.
- குடும்பத்திலும் சரி, வெளியிலும் சரி யாருடனும், எதற்காகவும் முரண்பாடு கொள்ள மாட்டேன்.
- பொருத்தமில்லாத இடங்களில் என்னை நானே மென்மையாக விடுவித்துக் கொள்வேன்.
- பிறரின் கருத்துக்களுக்கு உடனடியாக கண்டனமோ, எதிர்க் கருத்தோ தெரிவிக்க மாட்டேன்.
- கோபத்தின் கொடுமைகளையும், விளைவுகளையும் அனுபவத்தினால் அறிந்தே வைத்திருக்கிறேன். எனவே முடிந்தவரையில் கோபம் கொள்ளாத மனநிலையையும், அதற்கான பயிற்சிகளையும் முயற்சியோடு மேற்கொள்வேன்.
- பொறுமையின் பெருமைகளை
ஆன்றோர்வழி கேட்டிருக்கிறேன்,நூல்கள்வழி படித்திருக்கிறேன் ஆனாலும் அவற்றை வாழ்வில் கைக்கொள்வது சவாலாகவே உள்ளது.இருப்பினும் எவ்வகையிலாவது எந்நிலையிலும் பொறுமை என்னும் பெருங்குணத்தை கடைப்பிடிக்க உறுதியேற்கிறேன்.
19.”இன்னா செய்தார்க்கும் இனியவே செய்க” என்ற திருவள்ளுவரின் வாய்மொழியை
என் வாழ்வின் மெய்மொழியாக்க முயல்வேன்.
- யாரையும், எதற்காகவும் வெறுக்கமாட்டேன்.என் பார்வையில்,என்னளவில் எல்லோரும் நல்லோரே என்ற கொள்கை வழி நிற்கும் நேற்நிறை
உணர்வை வளர்த்துக்கொள்வேன்.
அன்புடையீர், இவ்வாறான நல்ல சிந்தனைகளை தொடர்ந்து சிந்திப்பதின் மூலம் அவைகள் நம் ஆழ்மனத்தில் பதிந்து அவைகளே நம் எண்ணங்களாக மீண்டும்,மீண்டும் பிரதிபலிக்கும்.
அதன் மூலம் நம் செயல்கள் யாவும் நற்செயலாய் மலரும். அதன் விளைவுகளும் நன்மையும், மகிழ்வும், தரத்தக்கதாக அமையும்.
இவ்வாறான பழக்கங்களே நம் வழக்கமாகிப் போனால் நம் வாழ்வு மிகப் பயனுள்ளதாகவும், பொருளுள்ளதாகவும் அமையும் என்பதில் என்ன ஐயம்? இந்த எண்ணங்களும்,உறுதிப்பாடும் நம்மை ஒருபோதும் தாழ்த்தாது.மேலும் நம்மை மென்மேலும் மிகச்சிறந்த உயர் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதை உணர்வோம்; தெளிவோம்; உயர்வோம்; வெற்றி நம் விரல் நுனியில்!=