வழிகாட்டும் ஆளுமை – 16
திரு. நந்தகுமார் IRS
ஒருமுறை நானும், என் நண்பர்களும் இரவு உணவு அருந்தலாம் என்று ஓர் உணவு விடுதிக்குச் சென்றோம். அங்கு மிகவும் வெளிச்சம் மங்கலாக, குறைவாக இருந்தது. எப்போதுமே இது போன்ற பெரிய விடுதிகளில் எல்லாம் வண்ண வண்ண விளக்குகளால், வெளிச்சம் மிகுந்து காணப்படும். ஆனால் நாங்கள் சென்ற அந்த உணவு விடுதியிலோ அதுபோன்ற வண்ண விளக்குகள் எல்லாம் இல்லாமல், மிகவும் மங்கலாக, ஒளி குறைந்து இருந்தது. என் நண்பனோ “என்னடா இவ்வளவு மங்கலாக இருக்கிறது. என் இலையில் இருப்பதை சாப்பிடுவதற்கு பதிலாக, பக்கத்தில் உள்ள சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டு விடுவேன் போலயே, அப்புறம் என்னிடம் சண்டைக்கு வரக்கூடாது” என்று கிண்டலாகச் சொன்னான். நானும் யோசித்தேன், ஏன் இவ்வளவு வெளிச்சங்கள் இல்லாமல் மிகவும் மங்கலான ஒரு சூழ்நிலையில் வைத்திருக்கிறார்கள்? என்று.
‘‘பின்னர் தான் எனக்கு தெரியவந்தது வெளிச்சம் குறைவாக இருக்கும் பொழுது நம்முடைய விழித்திரை நன்கு விரிவடைந்து செயல்படுமாம். நம்முடைய பார்வைக்கு தெளிவு இன்னும் கூடுதலாகக் கிடைக்குமாம். இது மேலும் பல எச்சரிக்கைகளை நமக்கும், நமது மூளைக்கும் விடுக்குமாம். இந்த விழித்திரை அகலமாக்கப்பட்டு வெளிச்சம் கம்மியாக இருக்கக்கூடிய அந்த சூழ்நிலையில் எதிரில் இருக்கக்கூடிய அந்த பிம்பமானது நமக்கு அழகாகத் தெரிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் தான் வெளிச்சங்கள் குறைவாக இருக்கின்ற சூழ்நிலைகள், நமக்கு பல எச்சரிக்கைகளை விடுகின்றன. அதனால்தான் திரைப்படங்களில் கதாநாயகன் வில்லன்களை தாக்குவதற்கு வெளிச்சங்கள் மிகுந்த இடத்தில் தான் தாக்குவார்கள், சண்டையிடுவார்கள். அது பார்வை உணர்வை மிகவும் குறைத்து விடுமாம். மேலும் நாம் வாகனங்களில் செல்லும் பொழுதும் எதிரில் வரக்கூடிய வாகனத்தில் மிகவும் அடர்த்தியான ஒரு ஒளி நம்முடைய கண்களுக்கு பட்டால் நாம் சிறிது நிமிடம் கண்களை படப்பட என்று அடித்து விடுவோம். இது பார்வை உணர்வைச் சற்று குழப்பிவிடும். அதுபோல நம்முடைய பார்வை உணர்தலில், காட்சி உணர்தலில் சிதைவு ஏற்படுகிறது.
இது போன்ற வெளிச்சம் மிகவும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. பல விபத்துக்கள் நிகழ்வதற்கும் இதுவே காரணம். நம்முடைய விழித் திரை நன்றாக விரிந்து அகலமாக வேண்டும். அப்படி இருந்தால் தான் நன்கு நம்மால் இயங்க முடியும். சரியான தூக்கம் இல்லாமல், அதிக நேரம் வெளிச்சத்தில் நம்முடைய கண்களை ஈடுபடுத்திக் கொண்டால் நிச்சயமாகப் பல சிக்கல்களுக்கு நாம் ஆளாகுவோம். நீண்ட நேரம் நம்முடைய விழித்திரைக்கு பல வேலைகளை கொடுத்து விட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அது நம்முடைய கட்டுப்பாட்டைக் கூட இழக்கலாம். என்ன நடக்கிறது என்பதைக் கூட நாம் அறியாமல் சில நேரம் அந்த நிலைமைக்குச் சென்று விடுவோம்.
இது நம்முடைய மூளைக்கு பல தகவல்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கும். நாம் ஒரு இடத்திற்கு சென்றால். இது நல்ல இடமா? கெட்ட இடமா? என்பதை இந்தப் பார்வை உணர்தலின் மூலமாக அறியலாம். ஏன் மனிதர்களைச் சந்திக்கும் பொழுதும் இவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை ஆராய்வதற்கும் இந்த திறன் நமக்குப் பயன்படும். அதனால்தான் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான நிறங்கள் பிடிக்கும், அவர்களுக்கு பிடித்தமான அந்த நிறங்களைப் பார்க்கும் பொழுது சுயமாகவே ஒரு இன்பத்தை, ஒரு அமைதியை கொடுக்கும்.
பல பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு இளஞ்சிவப்பு (Pink) நிறம் மிகவும் பிடித்த நிறமாக இருக்கும். ஏன் என்றால், மிகவும் மென்மையான ஒரு நிறம். அது அவர்களுக்கான ஒரு மனப்பாங்கை, ஒரு அணுகுமுறையை கொடுக்கும். இந்த காட்சி உணர்தலால் பலர் ஏமாறக்கூடிய சூழ்நிலையும் உண்டாகின்றன. ‘‘பார்வையிலேயே நான் ஏமாறிவிட்டேன், பார்த்தவுடனே பிடித்து விட்டது’’ என்றெல்லாம் கூட சொல்வார்கள். இது நம்முடைய மூளைக்கு பல விழிப்புகளை அனுப்புகின்றன. இந்த விழிப்பை, இந்த எச்சரிக்கையை முறையாக பயன்படுத்திக் கொண்டவர்கள் வாழ்க்கையில் சிறக்கிறார்கள்.
அதனால்தான் போக்குவரத்து சமிக்கையில் பச்சை நிறம் வந்தவுடன் செல்லலாம் என்று அர்த்தம், பச்சை நிறம் ஒரு மென்மையான நிறம். அது நமக்குப் பல நல்ல நேர்மறையான எண்ணங்களைத் தரக்கூடிய நிறம். மஞ்சள் ஒரு எச்சரிக்கை விடுக்கும். அதேபோல சிவப்பு. இந்த நிறத்திற்கு அலை நீளம் அதிகம், எனவே அது எவ்வளவு தூரத்தில் நாம் வந்து கொண்டிருந்தாலும் நமக்கு அந்த எச்சரிக்கையைத் தரும். எனவே நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய பல விஷயங்களை நாம் புரிந்து கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் இந்தக் காட்சி உணர்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நாம் பொய் சொன்னால் கூட, நம்முடைய கண்கள் உண்மையை மட்டுமே வைத்திருக்கும். ‘‘என் கண்களைப் பார்த்துப் பேசு’’ என்று கூட சொல்வார்கள். வார்த்தைகள் சரளமாக வந்தால் கூட கண்களில் அந்த பொய் நன்றாகப் பிரதிபலிக்கும். இதை முறையாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் மிகப்பெரிய ஆளுமையாக மிளிர்வார்கள். எனவே உங்களின் காட்சி உணர்தல் பல விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுக்கும். கூர்ந்து கவனிப்பதற்கும் வழி வகுக்கும். இதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் வாழ்க்கையில் சாதிப்பார்கள். எனவே, அனைவரும் நல்ல பார்வை உணர்தலை பயன்படுத்தி வாழ்க்கையில் சிறப்பாகப் பயணியுங்கள். உங்கள் வாழ்க்கை வெளிச்சமயமாகும், வண்ணமயமாகும். வாழ்த்துகள்!!! =