இளைஞர் உலகம்

உறவு

பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப்
தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588

சட்டை முகத்தினரின் குணநலன்களில் பொதுவானவற்றைப் பார்த்து வருகிறோம். இதுவரை 10 பண்புகளை அறிந்தோம். மீதமுள்ளவற்றை இந்த இதழில் காண்போம்.

  1. தங்கள் தேவைகளை நிறைவு செய்ய தவறுவோர்

அசட்டை முகத்தினர், அழுமுகத்தவரின் பண்புகள் மற்றும் சிரிமுகத்தவரின் பண்புகள் கொண்டவராகையால், இந்த இரண்டு இயல்புகளையும் பிரதிபலிப்பார்கள். எடுத்துக்காட்டாக அழுகை முகத்தினரிடம் தன்னம்பிக்கை இராது. ஒருமுறை முயற்சி செய்து தோற்றுவிட்டால், அதோடு நின்றுவிடுவார்கள். தொடர் முயற்சி இராது. மாணவர்களுக்கு, வாலிபர்களுக்கு தூண்டுரை கொடுக்கும் போது, “முயற்சி செய்; முயற்சி செய்; முயற்சியில் வெற்றி கிடைக்கும் வரை முயற்சியைக் கைவிடாதே” எனக் கூறுவோம். இத்தகைய விடாமுயற்சி இல்லாததால் அசட்டைமுகத்தினர் தங்கள் தேவைகளை நிறைவேற்ற எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவது கடினம்.

“எங்கள் குடும்பத்தின் மரபணுவிலே தோல்விதான் தொற்றிக் கொண்டிருக்கிறது” எனக் கூறிய வாலிபரிடம், “அவர்களது மரபணு இருக்கட்டும், நீ கடும் முயற்சி செய்தாயா?” எனக் கேட்டோம்.

நிகழ்ச்சி

ஒருவர் விபத்தில் கால் செப்பு பகுதியிலுள்ள பந்து போன்ற அமைப்பு உடைந்து போனது. எனவே புதிய செயற்கைப் பந்தை, பொருத்திப் பார்த்த போது, அந்த பந்து, சரியாக அதன் குழிக்குள் விழாததால், அது மற்ற எலும்போடு உரசி, உரசி ஆபரேசனுக்குப்பின் கடுமையான வலியால் அவதியுற்றார். மருத்துவரிடம் இதனைக் கூறிய போது அவர் சில மாதம் இப்படித்தான் இருக்கும் எனச் சொல்லிவிட்டார். ஃபிசியோதெரபி செய்தவராலும் ஒன்றும் இயலாத நிலை. சுமார் ஒரு வருடம் வேதனையில் துடித்த அவரால் கைத்தடி ஊன்றினாலும் சரியாக நடக்க இயலவில்லை. இரவு தூக்கமில்லை.

இந்நிலையில் அசட்டைமுகத்தவராயிருந்தால் இவர் இனி நமக்கு இதுதான் கதி என அந்நிலையோடு நின்றிருப்பார். ஆனால் இவர் வேறு வேறு மருத்துவமனைகளை நாடினார். காரணம் இவருக்கு முதலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், “நீங்கள் காலமெல்லாம் கம்பு ஊன்றித்தான் நடக்க வேண்டியிருக்கும்” எனக் கூறிவிட்டார். மருத்துவத்தில் குறிப்பாக இப்படிப்பட்ட சமயங்களில் இரண்டாவது மருத்துவரின் கருத்தைக் (second opinion) கேட்பது நல்லது என்பர். திருப்தியில்லாத நிலையில் 3-ஆவது மருத்துவரைக் கூட நாடலாம்.

இவரை பரிசோதித்த இன்னொரு எலும்பு முறிவு மருத்துவர், “இன்னொரு அறுவை சிகிச்சை செய்தால் நீங்கள் நடக்கலாம்” என நோயாளியை நம்ப வைத்தார். எனவே இரண்டாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. காரணம் முதல் மருத்துவர் காலில் வைத்த கம்பியை எடுக்க இந்த மருத்துவர் கடும் பாடுபட்டார்.

சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், இன்று அவர் கைத்தடி துணையில்லாமல் நடக்க முடிகிறது. முன்பு கம்பி ஊன்றி நடந்தபோது இவரை “ஊனமுற்றவர்” எனக் கூறியவர்கள், இப்போது இவர் நடப்பதைப் பார்த்து வியந்தனர். இதனால் தான் வள்ளுவர்,

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்”

எனக் கூறினார். இவர் அசட்டைமுகத்தவராக இருந்திருந்தால் இன்றுவரை அவர் குறைகள் நிறைவாக்க முடிந்திருக்காது. இன்றும் அவர் கைத்தடி ஊன்றித்தான் நடந்து கொண்டிருப்பார். எனவே முயற்சி விசயத்தில் மனந்தளராது சோர்ந்து போகாமல் தொடர் முயற்சியை மேற்கொண்டு தான் எடுத்த காரியத்தில் அசட்டை முகத்தினர் வெற்றி பெற வேண்டும்.

  1. எளிதில் பழகாதவர்போல் எதிலும் ஆர்வமில்லாதவர் போல் வெளியில் தெரிவார்கள்.

ஆனால் உண்மையில் இவர்கள் உறவுக்காக, பாசத்துக்காக, அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள்.  பிரிந்த குடும்பங்களை ஒன்றுசேர்க்க குடும்ப ஆற்றுப்படுத்தலுக்காக நாங்கள் செல்வதுண்டு. ஒருமுறை சில மாதங்களாகப் பிரிந்து இருந்த ஒரு கணவனையும் மனைவியையும் தனித்தனியே சந்திக்க நேர்ந்தது. இருவரும் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள். எனவே முதலில் கணவனை சந்தித்த நாங்கள், பின்னர் மனைவி குடும்பத்தினரையும் சந்தித்தோம். இருவரும் மாறி, மாறி மற்றவர்மேல் குறை கூறினார்களேயன்றி, தங்கள் குறைகளை ஒத்துக்கொள்ளவில்லை. அந்த பெண்ணும், பெண் வீட்டாரும் எக்காரணம் கொண்டும் அந்த மனிதனிடம் சேர்ந்து வாழமுடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். இனி பேசி பயன் இல்லை என்று 2-ஆவது சுற்றுப் பேச்சை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்.

ஆனால் எக்காரணம் கொண்டும் இந்த கணவனோடு வாழமாட்டேன் என அடம்பிடித்த மனைவி எங்களிடம் ஆள் அனுப்பி, “ஏன் ஒரு சுற்றோடு பேச்சு வார்த்தையை முடித்துவிட்டீர்கள்” எனக் கூறி தொடர்ந்து முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இப்போது அவர்கள் திரும்பவும் இணைந்து வாழ்கின்றனர் எனவே அசட்டைமுகத்தினரது வெளி நடைமுறையை வைத்து இவர்களை எடை போடக் கூடாது.

  1. மனந்திறந்து பேசாதவர்கள்

அசட்டைமுகத்தினரின் ஆழ்மனதில் புதைந்துள்ளதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். காரணம், இவர்கள் தனது உளக்கிடக்கையை பிறரிடம் கூறமாட்டார்கள். இதுவும் இவர்களிடம் உள்ள அழுமுகத்தவர் பண்பின் தாக்கமாகும்.

காதலில் விழுந்த கல்லூரி மாணவியை ஆற்றுப்படுத்துனரிடம் கொண்டு வந்தார்கள். அவளது அக்காள்தான் அவளை கூட்டி வந்திருந்தார். மாணவி ஆற்றுப்படுத்தினரிடம் எதுவும் பேசவில்லை. இறுதியில் ஆற்றுப்படுத்தினர் காதல் பற்றி, “காதல் ஒரு சொறி, சிரங்கு. சொறிய, சொறிய சுகமாகத்தானிருக்கும்; சொறியாமல் இருக்கவும் முடியாது; ஆனால் அது ஆறாதப் புண்ணாகிவிடும்” எனச் சொன்ன போது, மாணவி வாய் திறந்தாள். அதன்பிறகு நடந்த உரையாடலில் படிப்பா, காதலா எனக்கேட்டு, படிப்பு தான் முன்னுரிமை பெற வேண்டியது என்பதை உணர்ந்ததால் தொடர்ந்து படித்து முன்னேறினாள். அதனால் தான் “காதலிக்க தயங்கலாம்; ஆனால் காதலித்தால் அதைச் சொல்ல தயங்கக்கூடாது” என்பார்கள்.

  1. மேலோட்டமான உறவு

அசட்டை முகத்தவர் சிரிமுகத்தவரின் பண்புகளும் உடையவர் என்பதால் சிரிமுகத்தவரின் “நுனிப்புல் மேயும் தன்மை” இவரிலும் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆர்ப்பரிப்போடு காதலிப்பார்கள். ஆனால் சில நாட்களில் ஆரவாரம் அடங்கிவிடும். ஆடை மாற்றுவதுபோல ஆட்களை மாற்றுவார்கள்.

ஒரு கல்லூரி பேராசிரியை தனது மாணவி ஒருவரின் செயலைப் பார்த்து அதிர்ந்து போனார். பஸ்ஸில் ஏறிய மாணவி அங்கிருந்த ஒரு வாலிபனிடம் சிரிக்க, சிரிக்க பேசினாள். அவனது ஊர் வந்ததும் அவன் இறங்கிப் போய்விட்டான். இப்போது அவள் வேறொருவனிடம் பல்லைக் காட்ட ஆரம்பித்தாள். இவனும் நன்கு பேசி சிரித்து இவள் நம்மைத்தான் உண்மையாக காதலிக்கிறாள் என்ற பிரம்மையோடு அவனது இடம் வந்ததும் இறங்கினான். இப்போது மாணவி தனது காந்தக் கண்களை இப்போது இன்னொரு வாலிபன் மீது திருப்பினாள். சிறிது நேரத்தில் இந்தப் பெண்ணும் இறங்கி சென்றுவிட்டாள். “ஒருவேளை கொஞ்ச தூரம் அதிகமாக பயணித்தால் இன்னொரு வாலிபனையும் வளைத்து அவனையும் இவள் காதலிப்பதாக மனப்பால் குடிக்க வைப்பாள்” என்றார் அந்தப் பேராசிரியை. எனவே அசட்டை முகத்தினர் உறவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..=