வாழ்வியல் திறன்கள்

முனைவர் திருக்குறள் பா. தாமோதரன்
நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம்

லகில் ஒரு மனிதனின் மதிப்புக்கூட அவனிடமுள்ள பொருளின் அளவை வைத்துதான் என்ற எழுதப்படாத உண்மை அனைவரும் அறிந்தது.

“பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்” (குறள்.751)

என்ற வள்ளுவ வாக்கும் அரண்செய்வதாக உள்ளது. ஆனால் அந்த மதிப்புக்கூட்டும் பொருளை அனைவரும் பணியின் வழியே ஈட்டுகிறோம். ஒருவருக்கு பணிகிடைப்பது என்பது அரிதான செய்தியாகவுள்ளது. நன்றாகப் படித்துப் பட்டங்கள் பல பெற்ற நிலையிலும் 13 இலட்சம் பேர் எழுதும் அரசாங்கத் தேர்வுகளில் 3000 மூவாயிரம் பேருக்குத்தான் பணி கிடைக்கின்றது. இன்றும் பலர் உகந்த பணியின்றி வாழ்க்கையின் தேக்கத்தில் இருப்பதை அறிகின்றோம். ஆனால் பல கடின முயற்சிவழி பணியைப் பெற்றவர்கள் நிறைவுடன் பணிசெய்கின்றார்களா? என்றால் அதற்கு கிடைக்கும் பதில் நம்மை திகைக்க வைக்கின்றது.

  1. தெரியாமல் இந்தத் துறையில் மாட்டிக்கொண்டேன்
  2. அலுவலகச் சூழல் மிக மோசம்
  3. அதிக பணிச்சுமை
  4. பணியைக் கற்றுக்கொடுப்பவர்கள் எவருமில்லை
  5. பணியைச் செய்பவருக்கே பணி அதிகம் தருகின்றார்கள்
  6. அலுவலக நேரத்திற்கும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது
  7. எல்லாம் என் விதி

எனப் பலப்பட புலம்புவர்கள் தொகையைக் கண்ணுற முடிகின்றது. கிடைத்தப் பணியில் நிறைவுறாது, எதிரான சூழலைக் காரணங்களாகக் கொள்பவர்கள் எப்படி மக்கள் பணியைத் திறம்பட ஆற்ற முடியும். மேலும் மன இறுக்கத்துடன் ஆற்றுகின்ற பணியால் மனச்சிதைவுகள் ஏற்பட்டு அதன்வழி பல உடல் சார்ந்த நோய்களும் ஏற்படக்கூடும். கூர்ந்து கவனித்து பொறுமையுடன் அணுகினால் ஒவ்வொரு எதிரான சூழல்களிடையேயும் ஒரு சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் நுணுக்கமான தேவைகளாவன:

  1. உன்னிப்பாக சூழலைக் கவனித்தல்
  2. உணர்ச்சிப்பூர்வமாக சிந்திக்காமல், அறிவுப்பூர்வமாய் அணுகுதல்
  3. ஆரோக்யமான விமர்சனங்களாய் இருப்பின் தனிப்பட்ட தவறுகளைத் திருத்திக் கொள்ளுதல்
  4. நாளும் தனிப்பட்ட தொழில் சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ளுதல்
  5. பண்பட்ட நண்பர்களைத் தக்க வைத்துக்கொள்ளுதல்
  6. அனைவருடனும் கலந்து பழகும் தன்மையைப் பெருக்கிக்கொள்ளுதல்
  7. ஒவ்வொரு பின்னடைவிலும் மனம் நைந்திடாது, எழுச்சி கொண்டு முயற்சி செய்தல்.

இவ்வழி சில தன்னூக்க மேலாண்மைநிறைக் கோட்பாடுகளுடன் செயல்படும் போது தன்னம்பிக்கையும், பணியில் நிறைவும் இயல்பாகும். ஒரு பணியில் சேர்வது இக்காலச்சூழலில் மிகவும் கடினம். எனவே, அப்பணியைப் புனிதமாகக் கருதி பணியாற்ற வேண்டியது பணிசெய்வாரின் தலையாயக் கடமையாகத் திகழ வேண்டும். நம் பணியால் பல மக்களுக்கு நன்மைகளும் தீர்வுகளும் கிடைக்கின்றன, அதன்வழி அவர்களும் அவர்தம் குடும்பத்தாரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள் என்பதுதான் பணிசெய்வாருக்கான மகிழ்ச்சியாகும்.

பலனைப் பெறுபவர்களின் உள்ளார்ந்த நன்றி நவிலல் புனித வரமாக உருப்பெற்று ஆற்றியவருக்கு நீங்கா இன்பத்தைத் தரும் என்பதுடன், எத்துணைப் பணத்தாலும் வாங்க முடியாத நிம்மதி என்ற பெருமிதத்தை தந்திடும். எல்லாவற்றிருக்கும் மேலாக நல்ல உடல்நிலையும் தக்க வைப்பது எளிதாகின்றது. அண்மையில் இயற்கை எய்திய உச்சநீமன்ற கிருஷ்ண அய்யர் அவர்கள் தன்னுடைய 99 வயதில் கூட பொதுமக்களுக்கான உதவிகளை பொங்கும் ஆர்வத்துடன் செய்தார் என்பதனை நாடறியும். பக்கம் 6. தினத்தந்தியில் தேதி 9.9.2022 வெள்ளியன்று கண்டு மகிழ்ந்த செய்தியானது. “ரெயில்வே தொழிற்சங்க பணிகளை 106 வயதிலும் சுறுசுறுப்பாக செய்யும் கண்ணையா” என்பது. அவர் தன்னுடைய 106வது வயதில் வடகிழக்கு ரெயில்வே மஸ்தூர் தொழிற் சங்கத்தின் செயலளராக 61வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரின் வாழ்க்கை நீட்சியைப் பற்றி கேட்டபோது, அவரின் பதிலானது, “ஒழுக்கம், உத்வேகம், தார்மீக வலிமைதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு மத்தியில் இருக்கும்போது எப்போதும் உற்சாகமாக இருப்பதாக உணருகிறேன்.

‘‘என்.இ, ஆர்.எம்.யு. அலுவலகம்தான் எனது வீடு அவ்வமைப்பின் உறுப்பினர்கள்தான் எனது குடும்பம்” என்று உரத்தநிலையில் பதிவுசெய்கின்றார். சிந்திக்கும் போது அவரின் வாசகங்களில் வெற்று வார்த்தைகளில்லை. ஒவ்வொரு சொல்லையும் வாழ்க்கையாக்கிக் காட்டிய மேதைமைத்தன்மை வெளிப்படுவதை உய்த்துணரமுடிகின்றது. மேற்குறித்த இரு சான்றோர்கள் வழி ஒவ்வொருவரும் பணியைச் சுமையாகக் கருதாமல் சுகமாகக் கருதி உயிர்ப்புடன் பணியாற்றும் போது,

  1. இலக்குகள் தெளிவாகும்.
  2. மனச்சுமைகளுக்கு இடமில்லை
  3. மற்றவர்களுக்காகத் தொண்டாற்றுபவரின் மனங்களில் கவலைக்கு இடமிருக்காது
  4. எப்போதும் உற்சாகம் தொற்றிக் கொண்டிருக்கும்
  5. உடல் சார்ந்த பலவீனங்களும் இல்லாமல் போகும்
  6. வாழும் வாழ்க்கைக்கு ஒரு பொருளார்ந்த நிறைவு கிட்டும்
  7. வாழும் நாள் வரையிலும் அவரின் இருப்பால் உலகம் உன்னதமுறும்.

எனவே இன்று முதல் நன்றியுடன் கிடைத்த பணியை களிப்புடன் ஆற்றுவோம். மக்கள் நலனுக்காக உழைப்பவர்களுக்கு என்றுமே நிலைத்த இன்பம் உறுதியாகும். =